Primary tabs
4.2 கதைமாந்தர்
கதை நிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்பவர் கதை மாந்தர்கள் ஆவர். காப்பியங்களில் ஒருவர்க்கு மேற்பட்ட கதை மாந்தர்கள் உள்ளனர். கதை மாந்தர்களைத் தலைமை மாந்தர், துணைமாந்தர் என இருவகைப்படுத்தலாம்.
பூங்கொடிக் காப்பியத்தின் தலைமை மாந்தராக, கதைத் தலைவியாகத் திகழ்பவள் பூங்கொடி ஆவாள். பிற மாந்தர்கள் அனைவரும் துணைமாந்தர் எனப்படுவர்.
காப்பியத் தலைவி பூங்கொடி காப்பியத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை காப்பியத்துள் இடம்பெறுகிறாள். காப்பியக் களங்களாக உள்ள மணிநகர், கடல்நகர், வேங்கைநகர் ஆகிய முந்நகர்களுக்கும் சென்று, தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபடும் கதைத் தலைவியாகப் பூங்கொடி உள்ளாள்.
அழகும் இளமையும் உடைய இலட்சியப் பெண்ணாகப் பூங்கொடி படைக்கப்பட்டுள்ளதால் அவள் பல இன்னல்களையும் இடர்ப்பாடுகளையும் எதிர் கொள்கிறாள். அன்னை அருண்மொழியாலும் மலையுறையடிகளாலும் அவள் இலட்சியப் பெண்ணாக உருவாக்கப்பட்டு, பெருநிலக்கிழாரின் அன்பாலும் ஆதரவாலும் ஈர்க்கப்படுகிறாள். தான் உயிராகப் போற்றிய மொழியுரிமைக் காப்பிற்காக நடத்திய அறப்போராட்டத்தில் சிறைப்பட்டு நோய்வாய்ப்பட்டு இறுதியில் உயிர்துறக்கிறாள். எந்தப் போராட்டமும் பெண்களின் பங்கினைப் பெறும்போதுதான் முழுமை பெறுகிறது என்பதற்கு இந்தக் காப்பியம் சான்றாகிறது. பூங்கொடிக் காப்பியத்தின் நடுநாயகமாக விளங்க, அவளை அருண்மொழி, மலையுறையடிகள்,கோமகன், வஞ்சி, பெருநிலக்கிழார், கோனூர் வள்ளல், சண்டிலி முதலிய காப்பிய மாந்தர்கள் சுற்றி வருகின்றனர்.
மொழி
உணர்வு
இளமையிலேயே தந்தை வடிவேலுவை இழந்த பூங்கொடி, தாயின் அரவணைப்பாலும் மலையுறையடிகளின் அறிவுரையாலும் தமிழ்ப் பணியைத் தலைமைப் பணியாகக் கொண்டு சமுதாயத் தொண்டாற்றுகின்றாள்
அவள் தோழி தாமரைக் கண்ணி பூங்கொடியைப் பற்றிக் கூறுபவை பூங்கொடியின் தமிழ் உணர்வினையும் தமிழ்ப் பணியையும் எடுத்துரைக்கின்றன.
மொழிவளம்
பெறவும் மூடச் செயலால்
இழிநிலை யுற்றோர் எழுச்சி பெறவும்
தொண்டுகள் ஆற்றும் தூயவள்....
மேம்படு தமிழே மேவிய மூச்சாய்
வாழும் குறிக்கோள் வாழ்வினள்
(கடல்நகர் புக்க காதை, 17 - 23)
இதில், தமிழே உயிர் மூச்சாகக் கருதி வாழ்பவள் அவள் என்று ஆசிரியர் சுட்டுகிறார்.
மனத்திண்மை
கோமகன் என்பவன் தமிழ்ப்பணி புரிவதாகத் தன்னைக் காட்டிக்கொண்டு பூங்கொடியின் காதலைப் பெற முனைந்தான். அவனுக்குப் பூங்கொடியின் பாட்டி வஞ்சி உதவ முன்வந்தாள். பூங்கொடியைக் கோமகன் வேங்கை நகர்க்கும் பின்தொடர்ந்தான். பூங்கொடி தன் வாழ்க்கைக் குறிக்கோளை அப்பொழுது அவனிடம் வெளிப்படுத்தினாள்.
உள்ளத்து
எழூஉம் உணர்ச்சிகள் அடக்கி
உள்ளம் துறந்தேன் உலகம் துறந்திலேன்
எள்ளத் தனையும் எழுச்சியில் விழாஅது
தெள்ளத் தெளிந்து திருமணம் ஒரீஇ
இனமும் மொழியும் ஏற்றமுற்று ஓங்க
மனம்வைத்து உழைத்திட வாழ்வு கொடுத்துள்ளேன்
(கோமகன் மீண்டும் தோன்றிய காதை, 284 - 289)
தான் கொண்டுள்ள குறிக்கோளிலிருந்து கொஞ்சமும் நெகிழாத் தன்மை கொண்டவள் என்பதனை இக்கூற்று வெளிப்படுத்துகிறது. அவள், தான் வாழ்க்கையைத் துறக்கவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில், இல்லறத்தில் ஈடுபட்டு வாழும் இல்வாழ்க்கையை அதாவது திருமணவாழ்க்கையை மட்டும் விட்டுவிடுவதாகவும் குறிப்பிடுகிறாள். மாறாகத் தமிழ் மொழியும் தமிழ் இனமும் சிறப்படைவதற்குரிய வாழ்க்கையை வாழ்வேன் என்று குறிப்பிடுகின்றாள். தன்னை விரும்பி, தன்னை வாழ்க்கைத் துணையாக்கி வாழ விரும்பும் கோமகனிடம், தன் குறிக்கோளை மிகவும் உறுதியாக எடுத்துக் கூறுகிறாள். இது அவளது மன இயல்புகளை மிகவும் சிறப்பாகக் குறிப்பிடுகிறது.
பன்மொழிப் புலமை
தாமரைக் கண்ணியும் விபுலானந்தரும் கூறியபடி ஆங்கிலம், கன்னடம், மலையாளம் முதலிய பன்மொழிகளில் பூங்கொடி பயிற்சி பெற்றனள். தமிழ்த்தூதுக் குழுவில் இடம் பெற்று அயல்நாடுகளுக்குச் சென்றாள். அயல்நாடுகளில் உள்ள தமிழறிஞர்களின் துணையோடு தமிழின் தொன்மையையும் நீர்மையையும் எடுத்துரைத்தாள். சான்மார், கமிலர், உருதின் முதலிய அறிஞர்களை அயல்நாட்டுப் பயணத்தில் சந்தித்தாள். அச்சந்திப்புகளில் அவள் தேடித் தொகுத்த ஏடுகளினால் புதுப்புது நூல்களை எல்லாம் தமிழுக்குத் தந்தாள்.
பொருளியல்
நூலும் புதுப்புதுப் படைப்பும்
அறிவியல் நூலும் அருங்கவித் திரட்டும்
உளநூல் நிலநூல் உண்மைத் தத்துவம்
பலவர லாறும் படைத்தனள் தமிழில்,
(அயல்நாடு சென்றுவந்த காதை, 148 - 151)
பூங்கொடிக் காப்பியத்தின் இரண்டாவது காதையாகிய ‘பழியுரை காதையி்ல்’ மலையுறையடிகள் அறிமுகமாகிறார். அருண்மொழியின் கணவன் வடிவேல் பகைவரால் கொலை செய்யப்பட, வாடி வருந்திய அவளுடைய வருத்தம் நீங்க ஆறுதல் கூறி அவளைத் தமிழ்த் தொண்டு செய்ய ஆற்றுப்படுத்தினார். வெருகன் என்பவனால் கற்பை இழந்த அல்லி என்னும் வேதியர் குலப்பெண்ணை அரவணைத்துக் கொண்டார். அவர் குறளகப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
பூங்கொடியிடம் அன்பு
பூங்கொடிக்கு மீனவன், எழிலி ஆகியோரின் வரலாற்றை எடுத்துக் கூறி அவளைத் தமிழிசைப் பணியில் ஈடுபடுத்திய பெருமை மலையுறையடிகளையே சாரும்.
கோமகன் கொலை காரணமாகப் பூங்கொடி சிறைப்பட்டாள் என்பது அறிந்து வருந்தி அருண்மொழியோடு மலையுறையடிகள் வேங்கை நகர்க்கு வந்தமையால் பூங்கொடிபால் அவர் கொண்ட அன்பு எத்தகையது என்பதை அறியலாம். பூங்கொடி மலையுறையடிகள் பற்றிக் கூறியன :
இவரே
எளியனை இத்துறைப் படுத்தினர்
கவலை தவி்ர்ந்திட நல்வழி காட்டினர்
தாயின் மனமும் தந்தையின் நிலையும்
ஏயும் பெருமகன் எம்முயர் தலைவர்
(கிழார்திறம் அறிந்த காதை, 89 - 92)
(எளியன் = எளிமையானவள் ; ஏயும் = பொருந்திய)
அயல்நாடு செல்லும் தமிழ்த்தூதுக் குழுவில் பூங்கொடி இடம் பெறுவதால்,
புதுமைக்
கலைகள் தமிழில் பூக்கும்
அருமைத் தமிழும் அவ்விடை மலரும்
(அயல்நாடு சென்று வந்த காதை, 30 - 31)
(அவ்விடை = அவ்விடம்)
என்று அவள் மீதுள்ள அன்பினாலும் நம்பிக்கையினாலும் மலையுறையடிகள் இவ்வாறு கூறுகின்றார்.
மன உறுதி
முத்தமிழ் மாநாட்டில் மலையுறையடிகள் ஆற்றிய சொற்பெருக்கு, சுந்தரம்பிள்ளையின் மனோன்மணீயம் நாடகத்தில் வரும் பாண்டியமன்னன் புருடோத்தமனின் வீரவுரையை ஒத்தது. மலையுறையடிகள் நிகழ்த்திய உரை :
ஆருயிர்
கொடுப்பது அறப்போர் ஆகும்
வேறுயிர் எடுப்பது மறப்போர்
ஆகும்
அதனதன் பெற்றிமை அறிகதில் அம்ம !
முதற்போர் புரிய முனைந்தனம் இன்றே
போரெனில் உயிர்பல போதலும்
இயல்பே,
சீரிய இப்பெரும் போரினில் புகுவோம்
யாரென யாரென இயம்புதிர்
இன்றே
இருப்பதும் ஓருயிர் இறப்பதும் ஓர்முறை
தடுத்திட ஒல்லுமோ? சாவதும் ஒருதலை
விடுக்கும்அவ் ஓருயிர் வீணிற்
செலவிடாது
அடுத்தநம் தாய்மொழி அரியணை வீற்றிடத்
தொடுத்திடும் போரில் விடுத்திடத் துணிக
துணிவோர் எவரோ அவரே வருக
!
துணிவிலர் ஆயின் தொலைவில் செல்க
(அறப்போர் நிகழ்த்திய காதை, 139 - 152)
(தில் = விழைவு என்னும் பொருள்தரும் இடைச்சொல்)
சமுதாய உணர்வு
தாய்மொழி காக்கும் போரில் ஈடுபாடு கொண்ட மலையுறையடிகள் பல்வேறு சமூகப் பணிகளையும் மேற்கொண்டிருந்தார். பல அமைப்புகளையும் நடத்தி வந்தார்.கல்விக் கழகம் அமைத்தார். படிப்பகம் நிறுவினார். கவிஞர் பலர் உயிர் காத்த கொடை வள்ளல். மங்கையர் வாழ்வில் புதுமை மலர அரிவையர் மன்றம் அமைத்தார். குறளகம் கண்டார்.
மலையுறையும் மறைமலையும்
மலையுறையடிகள் என்னும் பாத்திரம் தனித்தமிழ் மலையாம் மறைமலையடிகளை நினைவுபடுத்துவதாகும்.
மலையுறையடிகள் பிறர்க்கு உதவும் நன்னெஞ்சம் உடையவராய், பொதுப்பணிகள் பலவற்றைத் தாமே முன்னின்று நடத்தியதை அறியலாம்.
பூங்கொடிக் காப்பியத்தில் அமைந்துள்ள ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரம் பெருநிலக்கிழார் ஆகும். இக்காப்பியத்தில் இருபதாவது காதையாகிய ‘பெருநிலக்கிழார் வாழ்த்திய காதை’யில் அவர் முதன்முதலில் குறிக்கப்படுகிறார்.
இசை ஈடுபாடு
மாளிகையில் எப்போதும் இசைமுழக்கம் ஒலித்த வண்ணம் இருந்தது என்பதால் அவர்க்கு இசைக் கலையின் பால் இருந்த ஈடுபாடு தெரிகிறது. பூங்கொடியின் இசைத்திறனைக் கூறக்கேட்டு அவளைத் தம் மாளிகைக்கு அழைத்துச் சிறப்பித்தார். அவள் அவர்க்குத் தமிழிசையின் நுட்பம் எல்லாம் தெரிவித்தாள். மேலும் முத்துத்தாண்டவர், அருணாசலக்கவி, வேதநாயகர் முதலியோர் பாடிய தமிழிசைப் பாடல்களை எல்லாம் பாடி அவரை மகிழ்வித்தாள். அப்பாடல்களில் பெருநிலக்கிழார் தம் உள்ளத்தைப் பறிகொடுத்தார்.
பூங்கொடியுடன் நட்பு
தம் பெருமாளிகையின் ஒரு பகுதியை நூல்நிலையம் அமைக்கப் பூங்கொடிக்கு விட்டுக் கொடுத்தார். பூங்கொடி, கோமகன் கொலையுறச் சிறையகம் புகுந்தாள். அவள் சிறையிலிருந்து விடுதலை பெற்றதும் பெருநிலக்கிழார் தம் மனையிலேயே அவளைத் தங்குமாறு வேண்டினார். இளமைப்பருவத்தில் இழந்த தம் மகளை ஒத்துப் பூங்கொடி இருந்ததால் அவளைத் தம் மகளாகவே கருதினார்.
பூங்கொடிக் காப்பியத்தில் பெருநிலக்கிழார் என்னும் பாத்திரம் துணைப் பாத்திரமாயினும் காப்பியத் தலைவியின் தமிழிசைக்கும் நூலக அமைப்பிற்கும் துணையான பாத்திரம் எனில் அது மிகையன்று.
‘தாமரைக்கண்ணி தோன்றிய காதையில்’ கவிஞர் முடியரசன் தாமரைக்கண்ணி என்னும் கதை மாந்தரை அறிமுகப்படுத்துகிறார். கோமகனைக் கண்டு அஞ்சிய பூங்கொடியை மணிநகரிலிருந்து கடல் நகர்க்குக் கொண்டு சேர்த்த பெருமை தாமரைக்கண்ணியையே சாரும்.
தமிழ் உணர்வு
தாமரைக் கண்ணி தமிழ் உணர்வு உடையவள். அவள் வருகை தமிழ் வாழ்த்தோடு தொடங்குகிறது.
தமிழ்மொழி
வாழ்க
! வாழ்க !....
உலக மொழியுள் உயர்ந்தாய்’ என்கோ !
அலகிலாக் காலம் கண்டாய்
என்கோ !
சங்கம் வளர்த்தாய் சான்றோர் பலரால்
பொங்கும் புதுநூல் பூண்டாய் என்கோ
ஆயிரம் பகைதாம் ஆர்ப்பரித் துறினும்
தூவென இகழ்ந்து தோள்வலி காட்டி
எழிலரசு ஓச்சும் தமிழே
என்கோ”
(தாமரைக்கண்ணி தோன்றிய காதை, 130 - 138)
(அலகிலா = அளவில்லாத ; ஆர்ப்பரித்து = ஆரவாரித்து; தூஎன = இகழ்ச்சிக் குறிப்பு; தோள்வலி = தோளின் வலிமை; எழில் = அழகு, ஓச்சும் = செலுத்தும்.)
பூங்கொடியிடம் அன்பு
தாமரைக்கண்ணி, கோமகன் பூங்கொடியிடம் காதல் கொண்டுள்ளதை அறிந்தவள். கோமகனே பூங்கொடியைத் தொடரும் சூழல் உள்ளதால் படிப்பகத்திலிருந்து தெருவழியே செல்லாமல் பொழிலின் பின்புற வழியாகச் செல்ல அறிவுரை கூறினாள். அவ்வழியாகச் செல்லின் சுடுகாடு இடைப்படும் என்பதைக் கூறினாள். சுடுகாட்டு வழியே செல்லப் பூங்கொடி அஞ்சினாள். தாமரைக்கண்ணி பேயென ஒன்றில்லை எனக் கூறிப் பூங்கொடியையும் அல்லியையும் ஊக்கப்படுத்தினாள்.
பூங்கொடியைத் தொடரும் கோமகனுக்கு
நின்னை
நயவாப்
பெண்டிரை நாடுதல் சிறுமதிச்
செயலாய் முடியும், சிந்தித்து ணர்க.
(கடல்நகர் புக்க காதை, 30 - 31)
(நயவா = விரும்பாத)
என்று அறிவுரை கூறி அவளை விடுவித்தாள். பூங்கொடியின் மீதுள்ள அன்பினால் இவ்வாறு அறிவுரை கூறி உதவி செய்தாள்.
கல்விப்பணி
கோமகன் பூங்கொடியை அடைதற் பொருட்டுப் பாவலர் படிப்பகம் ஒன்றை ஏற்படுத்திப் போலியாகப் பொதுப் பணி செய்வதைத் தாமரைக்கண்ணி அறிந்து அதனைப் பூங்கொடிக்குத் தெரிவித்தாள்.
பூங்கொடி பன்மொழிப் பயிற்சி பெறவேண்டிய தேவையை உணர்ந்து அவளுக்கு அதை உணர்த்திய பெருமை தாமரைக்கண்ணியையே சாரும்.
தாமரைக்கண்ணி தான் கற்ற தொல்காப்பியப் பெருநூலைப் பூங்கொடிக்குக் கற்பித்தாள்.
பூங்கொடி என்னும் காப்பியத் தலைவியின் ஆளுமை முழுமையுறத் தாமரைக்கண்ணி ஆற்றிய பணி சிறப்புடையதாகும்.