Primary tabs
மகாராஷ்டிரத்தில் இருந்து நாடகக் கம்பெனிகள் வந்து
தமிழ்நாட்டில் நடித்துப் புதுவழி காட்டிய பின் தமிழ்நாடகத்தில்
சில சீர்திருத்தங்கள் ஏற்பட்டன. இசையே நாடகத்தில்
பெரும்பங்கு வகித்த நிலை இக்கம்பெனிகளின் தாக்கத்தால்
மாறியது. “பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய நாடகங்கள்
பல ஏட்டுப் பிரதிகளாகவே இருந்து மறைந்தன. அச்சாகி
வெளிவந்த நாடகங்களும் ஒரு நூறு இருந்தன. அவற்றுள்ளும்
பல மறைந்து போயின” என்கிறார் மு.வ. எனினும் இந்த
நூற்றாண்டில் தோன்றிய மிகச் சிறந்த படிப்பதற்குரிய
நாடகமாக மனோன்மணீயம் விளங்குகிறது. இக்காலத்தில்
இசை ஆதிக்கம் பெற்ற இசைநாடகங்களும், கீர்த்தனை
நாடகங்களும் புகழ்பெற்றன. அவற்றை இனிக் காண்போம்.
4.8.1 சுந்தரம் பிள்ளை

பிள்ளை
சுந்தரம் பிள்ளை (1855-1897) தமிழில் தரமான
நாடகங்கள் இல்லாததை உணர்ந்து
மனோன்மணீயம் என்ற நூலை இயற்றினார்.
தம் நாடக நூலுக்கான கதைக்கருவை லார்ட்
லிட்டன் எழுதிய மறைவழி (The Secret Way)
என்ற நூலிலிருந்து எடுத்துக் கொண்டார்.
தமிழ்நாட்டு வாழ்க்கையை ஒட்டித் தம்
நூலை இயற்றினார்.
“பாண்டிய அரசன் சீவகனின் மகள் மனோன்மணி.
சீவகனின் அமைச்சன் குடிலன் தீயவன். நல்லெண்ணம்
கொண்ட சுந்தர முனிவர் சீவகனின் குலகுரு. பக்கத்து
நாடாகிய சேரநாட்டுப் புருடோத்தமனுக்கு மனோன்மணியை
மணக்கும் விருப்பமுண்டு. தன் மகனுக்கு மனோன்மணியை
மணமுடிக்க வேண்டும் என்பது குடிலனின் ஆசை. எல்லைப்
பிரச்சனை காரணமாகப் பாண்டியனுக்கும் சேரனுக்கும் போர்
மூள்கிறது. போரிலே தோல்வி கிட்டப் போகிறது என்ற நிலை
ஏற்படும்போது அமைச்சன் மகனுக்கு மாலையிடத் துணிகிறாள்
மனோன்மணி. அதுவும் தன் தந்தையின் கவலையினால்.
நள்ளிரவில் திருமண ஏற்பாடு நடக்கிறது. அப்போது
குடிலனை விலங்கிட்ட சேர அரசன் அங்கே வருகிறான். தான்
கனவில் கண்ட காதலனான, சேர அரசனுக்கே மனோன்மணி
மாலை இடுகிறாள். குடிலன் சூழ்ச்சியை மன்னன் உணர்கிறான்”
என்பது மனோன்மணீயத்தின் கதை.
இலக்கியமாக இன்றுவரை படிப்பதற்கு மட்டும்
பயன்படுத்தப்பட்டு வரும் செய்யுள் நாடகம்
மனோன்மணீயம். மாணவர் முதல் புலவர்கள் வரை
அனைவரும் பாராட்டும் தமிழ் வாழ்த்துப் பாடல் (நீராருரங்
கடலுடுத்த) இந்நூலில் உள்ளதே. தமிழ் மக்கள் வழங்கும்
பழமொழிகளும், சிறந்த தமிழ் நூலின் கருத்துகளும் இந்நூலில்
உள்ளன. வேதாந்த, சித்தாந்தக் கருத்துகள் நாடகப்
பாத்திரங்கள் வாயிலாக வெளியிடப்பட்டு உள்ளன. நாடகத்துள்
நாடகம் எனப்படும் வகையில் இந்த நாடகத்துள் சிவகாமி
சரிதம் என்ற குறுநாடகம் உள்ளது. நாட்டுப்பற்றை ஊட்டும்
வகையில் சீவகனின் பேசும் வீரவுரை ஒவ்வொருவர்
உள்ளத்திலும் நாட்டுப்பற்றை எழுப்பும்.
4.8.2 கோபால கிருஷ்ண பாரதி
இசைக்கலைக்கு உரிய பாட்டு வடிவங்கள் சில,
இலக்கியத்தில் பழங்காலத்திலேயே புகுந்தன. முழுதும்
கீர்த்தனையாலே ஆகிய இலக்கியங்கள் பத்தொன்பதாம்
நூற்றாண்டில் இயற்றப்பட்டன. பெரிய புராணத்து அடியார்
சிலருடைய வாழ்க்கையைப் போற்றிக் கீர்த்தனைகளாகிய
இசைப்பாடல்கள் பாடினார் கோபால கிருஷ்ண பாரதி.
திருநீலகண்ட நாயனார் கீர்த்தனை, இயற்பகைநாயனார்
சரித்திரக் கீர்த்தனை, நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
என்பவை அவை. இந்நூல்கள் பலர்க்கு வழிகாட்டியாய்
அமைந்தன. நந்தனார் சரித்திரக் கீர்த்தனை நாடு
முழுவதும் பரவி, மக்களின் உள்ளத்தைக் கவர்ந்தது.
இதனாலேயே பாரதியாரும் தம் பாடல்கள் சிலவற்றின் மெட்டு
நந்தனார் சரித்திரக் கீர்த்தனையின் இன்ன மெட்டு என்று
குறிப்பிடுகிறார். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை,
கோபாலகிருஷ்ண பாரதியே பாடல்களையும் உருக்கமாகப்
பாடுவதைக் கேட்டு விட்டுச் சிறப்புப் பாயிரம் தந்தாராம்.
நந்தனார்