Primary tabs
6.6 பல்துறைத் தமிழ்
இன்று தமிழ், அறிவியல் தமிழ், மருத்துவம், கணினியியல்,
நாட்டுப்புறவியல், இதழியல் எனப் பன்முகம் கொண்டுள்ளது.
அரசியல் தமிழ், பொருளியல் தமிழ், சட்டத் தமிழ்,
நூலகத்தமிழ், வேளாண் தமிழ், சுவடித் தமிழ், திரைத்தமிழ்,
தொலைக்காட்சித் தமிழ் எனத் தமிழ் வழங்கும் துறைகளும்
தற்காலத்திற்கேற்ப வளர்ந்துள்ளன.
• மருத்துவம்




சித்த மருத்துவம் பற்றிச் சுவடிகளிலிருந்து பல நூல்கள்
தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வழி வெளிவந்துள்ளன. தமிழ்த்
தாவரங்கள் மூலிகைகளாக வாழ்க்கைக்கு எவ்வாறு
பயன்படுகின்றன என்பதை முருகேச முதலியாரின்
பொருட்பண்பு நூல் - பயிர் வகுப்பு குணபாடம் என்ற நூல்
விளக்குகிறது. கண்மருத்துவம், அகத்தியர் வைத்திய
காவியம் 1500 என்ற பதிப்பு நூல்களும் குறிப்பிடத்தக்கன.
சித்த மருத்துவ நூல்கள் 1249 வந்துள்ளன எனத் தமிழ்ப்
பல்கலைக் கழகம் குறிப்பிடுகின்றது.
• கணினியியல்
அறிவியல் வளர்ச்சியால் நமக்குக் கிடைத்த சிறந்த சாதனம்
கணினி. இணையம் உலகத்தை நம் வீட்டுக்குள்ளேயே கொண்டு
வருகிறது. இக்கணினியில் தமிழ்ப் பயன்பாடு குறித்து
அறிந்து கொள்ள ஏராளமான நூல்கள் வந்துவிட்டன. கணினி
என்றால் என்ன, அதை இயக்குவது எப்படி, நமக்கு வேண்டிய
வசதிகளை எப்படிப் பெறுவது என்றெல்லாம் கூறும் நூல்கள்
வெளியிடப்பட்டுள்ளன.