தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

A05113l4-3.4 இலக்கியச் சான்றுகள்

3.4 இலக்கியச் சான்றுகள்

    மொழி வரலாற்றை அறிய இலக்கியங்கள் உதவுகின்றன.
தொல்காப்பியத்தில் காணப்பட்ட கூறுகள் சங்க இலக்கியத்திலும்
காணப்படுகின்றன. சில மாற்றங்களைத் தவிரச் சங்க இலக்கியத்
தமிழ் முழுக்க முழுக்கத் தொல்காப்பியத் தமிழே ஆகும்.

    சான்றாக, வகரம் உ, ஊ, ஒ, ஓ என்னும் உயிர்கள் தவிர
ஏனைய எட்டு உயிர்கேளாடு சேர்ந்து மொழிக்கு முதலில் வரும்
என்கிறது தொல்காப்பியம். அவ்வாறே, சங்க இலக்கியத்தில்,

வடுகர் - நற்றிணை 212
வாடை - நற்றிணை 5
விரல் - அகநானூறு 34
வீரர் - அகநானூறு 36
வெகுளி - பொருநராற்றுப்படை 172
வேந்தன் - அகநானூறு 24
வையை - மதுரைக்காஞ்சி 356

என்று வந்திருப்பதைச்     சொல்லலாம். பத்துப்பாட்டும்
எட்டுத்தொகையும்
சங்க காலத் தமிழ்மொழி அமைப்பைச்
சுட்டுகின்றன. நாலடியார் உள்ளிட்ட பதினெண் கீழ்க்கணக்கு
நூல்கள் சங்கம் மருவிய காலமாகிய களப்பிரர் காலத்
தமிழ்மொழி அமைப்பைப் புலப்படுத்துகின்றன. தேவாரம்,
திருவாசகம், நாலாயிரத்திவ்விய பிரபந்தம்
முதலான நூல்கள்
பல்லவர் காலத் தமிழ் மொழியமைப்பை விளக்குகின்றன.
கம்பராமாயணம், பெரியபுராணம்
முதலியன சோழர் காலத்
தமிழ்மொழி வரலாற்றைச் சுட்டிக் காட்டுகின்றன. பிள்ளைத்தமிழ்,
உலா, குறவஞ்சி, பரணி முதலியனவற்றின் மூலம் நாயக்கர் காலத்
தமிழ்வரலாறு அறியலாம். புதினங்கள், சிறுகதைகள் இக்கால
மொழி வரலாற்றை அறியச் சான்றுகளாகின்றன. விளக்கமாக,
தனித்தனிப் பாடங்களாகவே நீங்கள் இவற்றைப் படிப்பீர்கள்.
இவற்றின் வரிவடிவம் ஒலிப்பு     முறையைக் காட்டப்
போதுமானதாக இல்லை.


    பேச்சு வழக்கில்     அமைந்த     இலக்கியங்களும்
முக்கியமானவைதாம். கட்டபொம்மன் கும்மி, ஐவர்ராஜாக்கள்
கதை, இராமப்பய்யன் அம்மானை, சிவகங்கை சரித்திரம்,
பொன்னுருவி மசக்கை
போன்றவை பேச்சு வழக்கில்
அமைந்தவை. சான்றாகப் பதினேழாவது நூற்றாண்டுப் பேச்சுத்
தமிழைப் பற்றி இராமப்பய்யன் அம்மானை மூலம் அறியலாம்.

பேச்சுத் தமிழ்
பொருள்
அடைக்காய்
- பாக்கு
வெள்ளிலை
- வெற்றிலை
சம்பாரம்
- சாக்கு
விதனம்
- செய்தி
மன்னாப்பு
- மன்னிப்பு
கலனை
- சீனி

பேச்சு நடையில் எழுதப்படும் இலக்கியங்களும் மொழி
வரலாற்றை அறிய உதவும். ஜெயகாந்தனின் சினிமாவுக்குப்
போன சித்தாளு
நாவல் சென்னைப் பேச்சு வழக்கில்
எழுதப்பட்டுள்ளது. நீல. பத்மநாபனின் தலைமுறைகள்
என்னும் நாவல், குமரி மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினர்
பேச்சு வழக்கில் உள்ளது. அந்தந்த வட்டாரப் பேச்சுத் தமிழ்
அமைப்பை அறிய இவை உதவுகின்றன.


    நாட்டுப்புற இலக்கியங்கள் பொதுமக்களிடையே தமிழ்மொழி
எங்ஙனம் கையாளப்படுகிறது     என்பதைக்     காட்டும்
கண்ணாடிகளாக உள்ளன. அவை பேச்சு மொழியில் அமைபவை.
நூறு பக்கத்தில் விளக்க வேண்டிய செய்திகளை ஓர் உவமை
அல்லது பழமொழி சில சொற்களிலேயே விளக்கி விடும்.
நாட்டுப்புறக் கதைகள், பழமொழி, உவமை, விடுகதை, இசை
சேர்ந்த தாலாட்டு, ஒப்பாரி, காதல் பாடல், தொழில்பாடல்,
குழந்தைப் பாடல், தெய்வப் பாடல்
என்று யாவும் பேச்சுத்
தமிழையும், தொன்மைக் கால வரலாற்றின் எச்சங்களையும்
புலப்படுத்தும் சான்றுகளாக உள்ளன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 04:47:03(இந்திய நேரம்)