தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A051411-மொழியில் மாற்றம்

1.1 மொழியில் மாற்றம்

    உலக மொழிகள் அனைத்தும் தோன்றிய நாள் முதல்
இன்று வரை பல்வேறு மாற்றங்களைப் பெற்று வருகின்றன.
இம்மாற்றம் மொழியில் பேச்சு நிலையிலும் நிகழ்கின்றது;
எழுதும் நிலையிலும் நிகழ்கின்றது. பேச்சு மொழியில் நிகழும்
மாற்றத்தால் கிளைமொழிகள் (Dialects) உருவாகின்றன.
எழுத்து மொழியில் நிகழும் மாற்றத்தால் அம்மொழியில் புதிய
வரிவடிவங்கள் தோன்றுகின்றன. இதைக் கீழ்வருமாறு
வரைகோடு இட்டுக் காட்டலாம்.

    

    இந்தப் பொது இயல்புக்கு உட்பட்டதாகவே தமிழ்
மொழியும் திகழ்கின்றது. தமிழ் மொழியின் பேச்சு வழக்கிலும்
எழுத்து வழக்கிலும் பல்வேறு மாற்றங்கள் காலம் தோறும்
நிகழ்ந்துள்ளன.

    இந்தப் பாடம் தமிழ்மொழியின் எழுத்து வழக்கில்
நிகழ்ந்துள்ள வரிவடிவ மாற்றங்களைத் தொகுத்தளிக்கின்றது.
இதன்வழி, தமிழ் வரிவடிவங்கள் காலந்தோறும் மாற்றம்
பெற்று, இன்றைய நிலையை அடைந்த வரலாற்றை
அறிந்துகொள்ள இயலும்.

1.1.1 பேச்சு மொழியில் மாற்றம்

    ஒருவருக்கு ஒருவர் நேர் நின்று கருத்தை வெளிப்படுத்தப்
பயன்படுத்தும் ஒலி வடிவிலான குறியீட்டைப் பேச்சு மொழி
என்று குறிப்பிடுகின்றோம். இன்றைய அறிவியல் உலகில் பல
ஆயிரக்கணக்கான மைல்களுக்கு இடையே வாழ்பவர்களிடம்
தொடர்பை உருவாக்கும் மொழியாகவும் பேச்சு மொழி
திகழ்கின்றது.

• பேச்சு மொழியும் எழுத்து மொழியும்

    பேச்சு மொழி உள்ளத்து உணர்ச்சியின் தூண்டுதல்களை
இயல்பாக வெளிப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. எழுத்து
மொழியில் தொடர் அமைப்பு இருப்பதைப் போன்றே பேச்சு
மொழியிலும் தொடர் அமைப்புக் காணப் பெறுகின்றது.
ஆனால் எழுத்து மொழியின் தொடர் அமைப்பின்
அளவைவிடப் பேச்சு மொழியின் தொடர் அமைப்பின் அளவு
சிறியது. பேச்சு மொழித் தொடர் அமைப்பில் சராசரியாக 3 1/2
சொற்கள் இடம் பெறுவதாக மீடர் என்னும் அறிஞர்
குறிப்பிடுகின்றார். பேச்சு மொழியின் இந்த இயல்புகளால்
இதில் எளிமை, தெளிவு, சுருக்கம் முதலானவை இயல்பாக
இடம் பெற்றுள்ளன எனலாம்.

• ஒலிப்பு முறை

    ஒரு பேச்சு மொழிக்கு உரிய ஒலிப்பு முறை
அம்மொழியைப் பேசும் மக்களிடையே ஒத்த தன்மையதாக
அமைவது இல்லை ; வாழும் இடச் சூழலுக்கு ஏற்ப மாறுபட்டு
அமைகின்றது. அதாவது ஒரு மொழிக்கு உரிய ஓர் எழுத்தை
அல்லது சொல்லை அம்மொழி பேசும் மக்கள் அனைவரும்
ஒரே முறையில் ஒலிப்பது இல்லை , சொல்வது இல்லை. இந்த
இயல்பால் ஒரு மொழிக்கு உள்ளேயே பல்வேறு
கிளைமொழிகள் உருவாகி விடுகின்றன.

• கிளைமொழி

    Dialect என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு உரிய
தமிழாக்கமாகக்     கிளைமொழி என்னும் சொல்லைப்
பயன்படுத்துகிறோம். ஒரு மொழியின் பேச்சு வழக்கில்
காணப்பெறும் ஒலி வேறுபாடுகளின் தனித் தன்மையால்
கிளைமொழி உருவாகின்றது. இதனால் கிளைமொழியைத் தனி
ஒரு மொழியாக நாம் குறிப்பிடுவது இல்லை.

    தமிழகத்தில்     தொல்காப்பியர்     காலத்திலேயே
கிளைமொழிகள் வழக்கில் இருந்துள்ளன. தமிழ் மரபு இலக்கண
அறிஞர்கள் கிளை மொழியைத் திசைச்சொல் என்று
குறிப்பிடுகின்றனர். பண்டைத் தமிழகத்தில் 12 வகையான
கிளைமொழிகள் வழக்கில் இருந்துள்ளன. இதற்கான
விளக்கத்தைத் தொல்காப்பியத்தின் உரைகள்வழி நாம் அறிந்து
கொள்ளலாம். தற்காலத்தில் காணப் பெறும் கிளைமொழி
வகையாக நான்கினைக் குறிப்பிடுகின்றனர். அவை,

    (1) வட்டாரக் கிளைமொழி (Regional Dialect)
    (2) சமூகக் கிளைமொழி (Social Dialect)
    (3) சாதிக் கிளைமொழி (Caste Dialect)
    (4) காலக் கிளைமொழி (Temporal Dialect)

என்பன ஆகும்.

1.1.2 எழுத்து மொழியில் மாற்றம்

    எழுத்து மொழிக்குப் பேச்சு மொழியே அடிப்படையாக
அமைகின்றது. மக்கள் பேசும் மொழிக்கு ஏற்ற வரிவடிவத்தை
உருவாக்கிக் கொண்டு எழுதப் பெறும் மொழி வழக்கை
எழுத்து மொழி என்று குறிப்பிடுகின்றோம். இதனால் பேச்சு
மொழியை ஓடும் ஆறு என்பர். எழுத்து மொழியை அதில்
மிதக்கும் பனிக்கட்டி
என்பர்.

• காலம் கடந்து வாழும் தன்மை

    பேச்சு மொழியை விட எழுத்து மொழியின் ஆயுட்காலம்
மிகுதியாகும். குறிப்பிட்ட மொழியைப் பேசும் மக்கள் கூட்டம்
அழிவுறும் போது அம்மொழியும் அழிந்து விடுகின்றது.
ஆனால் அவர்களால் எழுத்து மொழியில் உருவாக்கப் பெற்ற
இலக்கியங்கள், இலக்கணங்கள், கல்வெட்டுகள் ஆகியவை
எல்லாம் காலம் கடந்தும் நிற்கின்றன; உதவுகின்றன. சில
நேரங்களில் பேச்சு மொழியில் நிகழும் மாற்றங்களால்
அம்மொழி முற்றுமாக மற்றொரு மொழியாகத் திரிந்து
விடுவதும் உண்டு. இந்த நிலையிலும் அந்த மொழியின்
இயல்பைக் காலம் கடந்தும் காப்பாற்றுவது அம்மொழியின்
எழுத்து மொழியே ஆகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 05:11:06(இந்திய நேரம்)