தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A051414-தமிழ் எழுத்து வடிவங்கள்

1.4 தமிழ் எழுத்து வடிவங்கள்

    பண்டைக் காலத் தமிழகத்தில் ஓலைச் சுவடி, நடுகல்,
கல்வெட்டு, செப்பேடு ஆகியவற்றில் தமிழ்மொழி எழுதப்
பெற்று வந்துள்ளது. இவற்றில் காலத்தால் முற்பட்ட ஓலைச்
சுவடிகள் கிடைக்கப் பெறவில்லை; அண்மைக் காலத்திற்கு
உரியவையே கிடைத்துள்ளன. ஆனால் பல நூறு ஆண்டுகள்
பழமை     வாய்ந்த     கல்வெட்டுகளும் செப்பேடுகளும்
கிடைத்துள்ளன. அவற்றில் தமிழ் மொழியை எழுதப்
பயன்படுத்திய எழுத்து வடிவங்களைத் தமிழி, தமிழ்,
வட்டெழுத்து
என்று பெயரிட்டு அழைக்கின்றோம்.

1.4.1 தமிழி எழுத்து வடிவம்

    தமிழ் மொழியின் தொன்மையான எழுத்து வடிவங்களை
அறிந்து கொள்ளக் குகைக் கல்வெட்டுகள் பெரிதும்
உதவுகின்றன. இக்கல்வெட்டுகளில் எழுதப் பெற்றுள்ள எழுத்து
வடிவங்களுக்குப் பெயரிடுவதில் இருவேறு கருத்துகள்
நிலவுகின்றன. ஒரு சிலர் தமிழி என்று குறிப்பிடுகின்றனர்.
வேறு சிலர் தமிழ்-பிராமி என்று குறிப்பிடுகின்றனர்.

• குகைக் கல்வெட்டும் பிராமியும்

    இந்தியாவின் வடபகுதியில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில்
அசோகன் ஆட்சி புரிந்தான். இவன் ஆட்சிக்காலத்தில் பிராமி
என்னும் எழுத்து வடிவங்கள் அங்குப் பயன்படுத்தப்
பெற்றுள்ளன. தமிழகக் குகைக் கல்வெட்டுகளும் இதே
காலத்துக்கு உரியவை ஆகும். இந்தக் குகைக் கல்வெட்டு
எழுத்து வடிவங்களுக்கும் வடநாட்டில் பயன்படுத்தப் பெற்ற
பிராமி எழுத்து வடிவங்களுக்கும் சிற்சில ஒற்றுமைகள் உள்ளன.
இதனால் பிராமி என்னும் பொது எழுத்து வடிவில் இருந்து
தமிழ்நாட்டில் குகைக் கல்வெட்டு எழுத்துகள் உருவாகின,
வடநாட்டில் பிராமி எழுத்துகள் உருவாகின என்பர்.
இக்கருத்தின் அடிப்படையில் வடபிராமி, தென்பிராமி என்று
பெயரிட்டு அழைப்பதும் உண்டு. தமிழகக் கல்வெட்டு அறிஞர்
ஐராவதம் மகாதேவன் குகைக் கல்வெட்டு எழுத்து
வடிவங்களைத் தமிழ்-பிராமி என்று பெயரிட்டு அழைப்பார்.

• தமிழின் தனித்தன்மை

    தமிழகக் குகைக் கல்வெட்டு எழுத்துகள் வடஇந்திய பிராமி
எழுத்துகளில் இருந்து சிற்சில நிலைகளில் வேறுபடுகின்றன.
அவ்வேறுபாடுகள் தமிழின் தனித்தன்மைக்கு உரியவை ஆகும்.
இந்த வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு தமிழி என்று
தனிப்பெயர் இடுதலே சிறப்புடைத்து என்பார் கல்வெட்டு
அறிஞர் நாகசாமி. இவர் தம் கருத்துக்கு அரணாக இரு
சான்றுகளை எடுத்துக் காட்டி விளக்குகின்றார்.

    கி.மு. முதல் நூற்றாண்டைச் சார்ந்த சமவயங்க சுத்த
என்னும் நூலில் 18 வகையான எழுத்துகளின் பெயர்கள்
பட்டியல் இடப்பெற்று உள்ளன. அவற்றுள் தமிழி என்பதும்
ஒன்று.

    பிராகிருத மொழியினர் தமிழ் எழுத்துகளைத் தமிழி,
திராவிடி
என்று குறிப்பிடுகின்றனர். திராவிடி என்பது
பிற்காலப்     பெயர்.     இப்பெயர்     கி.பி.5,6     ஆம்
நூற்றாண்டுகளுக்குரிய நூலாகக் கருதப் பெறுகின்ற லலித
விஸ்தாரம்
என்னும் நூலிலேயே இடம் பெற்றுள்ளது.

    எனவே குகைக் கல்வெட்டு எழுத்துகளைத் தமிழி என்றே
குறிப்பிடுவோம். தமிழி எழுத்து வடிவங்களைக் கீழே இடம்
பெற்றுள்ள படத்தில் காணலாம்.

1.4.2 தமிழ் எழுத்து வடிவம்

    எந்த ஒரு மொழிக்குரிய எழுத்து வடிவமும் தொடக்கக்
காலத்தில் ஓவிய எழுத்து வடிவமாகவே அமைந்திருக்கும்
என்று கருதுவது பொதுமரபு. ஓவிய எழுத்தின் படிமுறை
வளர்ச்சி நிலைகளாக அசை எழுத்து முறை, ஒலியன் எழுத்து
முறை இவற்றைக் கருதுவர். ஆனால் முன்பு நாம் படித்த தமிழி
எழுத்து வடிவங்கள் தொடக்கத்தில் இருந்து வளர்ந்து வந்த
நிலையை அறியப் போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. இதே
போன்று தமிழி எழுத்துக்குரிய அடுத்த கட்ட வளர்ச்சியையும்
அறிய முடியவில்லை.

• உருமாற்றங்கள்

    கி.பி.மூன்றாம் நூற்றாண்டு அளவில் தமிழி எழுத்து
வடிவங்களில் உருமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அம்மாற்றங்கள்
இரண்டு     பிரிவுகளைத்     தோற்றுவிக்கும்     வகையில்
அமைந்துள்ளன. ஒன்று தமிழ் என்று அழைக்கப்படும்
எழுத்துகளின் தொடக்கமாக அமைகின்றது. மற்றொன்று
வட்டெழுத்து என்று அழைக்கப்படும் எழுத்துகளின்
தொடக்கமாக அமைகின்றது. அதாவது தமிழகத்தில் குறிப்பிட்ட
சில பகுதிகளில் தமிழ் எழுத்து எழுதப் பெற்று வந்துள்ளது.
வேறு சில பகுதிகளில் வட்டெழுத்து எழுதப் பெற்று
வந்துள்ளது.

• தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும்

    பாண்டிய     மன்னர்களின்     ஆட்சிப்     பகுதியில்
தமிழ்மொழியை எழுத வட்டெழுத்து வடிவம் பயன்படுத்தப்
பெற்றுள்ளது. அதே காலத்தில் பல்லவர்களும் சோழர்களும்
ஆட்சி செய்த பகுதியில் தமிழ் எழுத்து வடிவங்களில்
தமிழ்மொழி எழுதப் பெற்றுள்ளது. மன்னர்களுக்கு இடையே
நிகழ்ந்த போர்களின் விளைவான ஆட்சி பரவலினால்
வட்டெழுத்தில் எழுதும் முறை தமிழகம் முழுவதும்
பிற்காலத்தில் பரவியுள்ளது.

    தமிழ் எழுத்து, வட்டெழுத்து ஆகியவற்றிற்கு இடையே
எழுத்து எண்ணிக்கை நிலையில் வேறுபாடு இல்லை.
எழுத்துகளை     எழுதும்     முறையில்தான்     வேறுபாடு
காணப்பெறுகின்றது. இரு எழுத்து வடிவங்களுக்கும் உரிய
வரிவடிவ அட்டவணைகளின் வாயிலாக இதனை அறியலாம்.

1.4.3 வட்டெழுத்து வடிவம்

    தமிழகத்தில்     தமிழ்     மொழியை எழுதுவதற்குப்
பயன்படுத்திய வட்ட வடிவமான எழுத்துகளை வட்டெழுத்து
என்று     குறிப்பிடுகின்றோம். வட்டெழுத்து என்பதை
வெட்டெழுத்து என்று குறிப்பிடுபவர்களும் உள்ளனர்.
கற்களில் வெட்டப் பெற்ற எழுத்துகள் என்பதால்
வெட்டெழுத்து என்று குறிப்பிட்டு, அது வட்டெழுத்தாகத்
திரிந்தது என்பவரும் உள்ளனர். ஆனால் வட்டெழுத்துகளை
வட்டம் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடும் வழக்கம்
இருந்துள்ளது. எனவே வட்ட வடிவ எழுத்துகளை வட்டெழுத்து
என்றனர் என்னும் கருத்தே ஏற்புடையதாக அமைகின்றது.

    மலையாள மொழி பேசப் பெற்ற பகுதிகளிலும்
வட்டெழுத்துகள் பயன்படுத்தப் பெற்றுள்ளன. இதனால்
தெக்கன்     மலையாளம்,     நாநாமோன     என்று
வட்டெழுத்துகளை வேறுபெயர்களிட்டுக் குறிப்பிடுவதும் உண்டு.

    இதுவரை தமிழ் வரிவடிவ வளர்ச்சியைத் தமிழி, தமிழ்,
வட்டெழுத்து ஆகிய எழுத்துகள் வழி அறிந்தோம். தமிழ்
வரிவடிவம் நூற்றாண்டு தோறும் வளர்ச்சி பெற்று
வந்துள்ளதைக் கீழ்வரும் அட்டவணை வழி அறிந்து
கொள்ளலாம்.

    அட்டவணையில் தென்னக பிராமி தமிழி என்றே
குறிப்பிடப்பட்டு உள்ளது. அட்டவணையின் நடுவில் தமிழி
எழுத்துகள் அளிக்கப் பெற்று உள்ளன. இரண்டு பக்கங்களில்
வட்டெழுத்துகளும் தமிழ் எழுத்துகளும் நூற்றாண்டு வாரியாக
வளர்ந்த முறை குறிப்பிடப் பெற்று உள்ளது. அதில் தமிழ்
எழுத்துகள் இன்றைய வடிவ வளர்ச்சியை அடைந்து
உள்ளதைக் கூர்ந்து பாருங்கள். அந்த அட்டவணை இதோ.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 05:11:36(இந்திய நேரம்)