Primary tabs
3.0 பாட முன்னுரை
மக்கள் ஊடகங்களின் வளர்ச்சி இன்று வியப்பூட்டும்
அளவில் உள்ளது. செய்தித்தாள்கள் (நாளிதழ்கள்), வார, மாத
இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையப்
பதிப்புகள் என்று பல்வேறு வகைகளில் வளர்ச்சி பெற்று
மக்களுக்குச் செய்திகளைத் தருவனவாக இவ்வூடகங்கள்
விளங்குகின்றன. இவற்றை அச்சு ஊடகங்கள் (Print
Media),
மின்னணு ஊடகங்கள் (Electronic
Media) என இருபெரும்
பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
இப்பல்வேறு ஊடகங்கள் மக்களுக்குச் சொல்லும்
கருத்துகள் மற்றும் செய்திகள் மிகப் பல. அரசியல், சமுதாயம்,
இலக்கியம், விளையாட்டு, தத்துவம், சமயம் இவை சார்ந்த பல
செய்திகளை மக்களுக்கு அறிவித்து மக்களைச் சிந்திக்கச்
செய்கின்றன. இவ்வுள்ளடக்கங்களைத் தெரிவிப்பதற்கு
இவ்வூடகங்கள் மொழியைக் கையாளும் திறம் தெளிவாக
அமைய வேண்டும். அப்போதுதான் மக்களிடம் அவை
தெரிவிக்கும் கருத்துகள் சென்று சேரும். மொழியைக்
கவனமாகப் பயன்படுத்திக் கருத்துகளைத்
தெரிவிக்கவில்லையெனில் மக்கள் இவ்வூடகங்களோடு தொடர்பு
கொள்வதை விட்டு விடுவர். எனவே பல்வேறு ஊடகங்களின்
கருத்துத் தெரிவிப்பில் மொழியின் பங்கு யாது, பல்
ஊடகங்களின் தமிழ் எத்தகைய அமைப்பு உடையது என்பன
குறித்த செய்திகள் இப்பாடப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.