Primary tabs
4.4 சிறுகதை மொழி
கவிதையல்லாத உரைநடை இலக்கியங்களில் உணர்ச்சி
மொழி கையாளப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சூழலை -
தனிமனித வாழ்வின் ஒரு நாள் சம்பவத்தை அல்லது வாழ்வின்
கூறு ஒன்றை விளக்குவது சிறுகதை. அளவில் சிறியது. எனவே
அச்சிறிய வடிவத்திற்குள் விரைவாகக் கருத்தைச் சொல்லும்
ஆசிரியர்கள் இவ்வுணர்ச்சி மொழியில் தகுந்த கவனம்
செலுத்தினால்தான் கதை சிறக்கும்; வெற்றி பெறும்.
4.4.1 ஜெயகாந்தனின் மொழி நடை
சிறுகதை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்ற
ஜெயகாந்தனின் நடையில் மொழி சார்ந்த இரு கூறுகளைக்
காண இயலும்.
(1) விவரிப்பு நடை மூலம் செயல்களையும்
உரையாடல்களையும் கூறுதல்.
(2) வினா விடை முறையில் இடையில் பல கருத்துகளைக்
கூறிச் செல்லல்.
இதற்கு அவரது ஒருபிடி சோறு என்ற கதையிலிருந்து சில
பகுதிகளைக் காணலாம்.
சேரிப் பகுதியில் வாழும் ராசாத்தி தன் ஒரே மகனுடன்
வாழ்கிறாள். கணவன் இல்லை. வேலை கிடைக்கும்போது
வேலையையும், வேலை இல்லாத போது வறுமை காரணமாக
விபச்சாரத்தையும் மேற்கொள்பவர்கள் இப்பகுதியில் உள்ள சேரி
மக்கள். இவள் மகன் சிறுவன் மண்ணாங்கட்டி. இவன் பக்கத்து
வீட்டு மாரியாயி தன் கணவனுக்கென்று வைத்திருந்த சோற்றைத்
திருடித் தின்று விடுகிறான். ராசாத்திக்கும் மாரியாயிக்கும்
வாய்ச்சண்டை வலுக்கிறது. சிறுவன் ஓடி விடுகிறான். சிறிது
நேரத்தில் கர்ப்பிணியான ராசாத்தி மூன்று நாளாய்ச்
சாப்பிடாததால் துடிக்கிறாள். வேலைக்கு அவசரமாகச் செல்லும்
மாரியாயி அரிசி கொடுத்துக் கஞ்சி காய்ச்சிக் குடிக்கச்
சொல்லிவிட்டுப் போகிறாள். மிகத் துன்பப்பட்டு, அதைக்
காய்ச்சிக் குடிக்கப் போகும் வேளையில் மகன் வந்து தனக்குத்
தருமாறு பிடுங்குகிறான். கஞ்சி கொட்டி விடுகிறது. அதில் ஒரு
கை அள்ளிக் கொண்டு ஓடி விடுகிறான். வயிற்றுவலி அதிகமாகி
உயிரற்ற குழந்தையைப் பிரசவித்து இறக்கும் நிலைக்கு
வருகிறாள் ராசாத்தி. தன் மகனை ஒருபிடி சோற்றுக்கு அடித்து
விட்டோமே என்று வருந்தியவாறே இறக்கிறாள். தன் தாய்
இறந்துவிட்டதைக் கண்ட சிறுவன் அதே நாளில் தன் தாயை
நினைத்துத் தனியே வருந்திக் கொண்டிருக்கிறான். பக்கத்து
வீட்டு மாரியாயி சாப்பிடச் சொல்லித் தேற்றிச் சோறு
தருகிறாள். ஒருபிடி சோற்றைப் பார்த்துத் தாயை நினைக்கிறான்.
அடைத்து வைத்திருந்த துக்கம் பீறிட வாய்விட்டு அழுகிறான்.
இக்கதையில் ஆரம்பத்தில் மண்ணாங்கட்டியை விவரிப்பு
நடையில் அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். தொடர்ந்து வரும்
பகுதி வினா விடையுடன் கூடிய விவரிப்பு நடையில்
அமைகிறது.
“இப்பொழுது மண்ணாங்கட்டிக்கு ஏகக் குஷி. ஏன்
தெரியுமா? அடுத்த அடுப்பிலிருந்து சோற்றைத் திருடித் தின்ற
எக்களிப்புதான்.”
இதேபோன்று வாசகனின் மனத்தில் தோன்றக்கூடிய
ஐயங்களை ஊகித்து அவற்றைக் கேள்வியாக்கிப் பதிலும்
தந்து எழுதுகிறார். மாரியாயி, ராசாத்தி இருவரின் வாக்குவாதம்
அமையும் விவரிப்புப் பகுதி அம்மக்களின் வாழ்க்கை
எப்படிப்பட்டது என்பதைச் சொல்லுகிறது. ராசாத்தியின் வயிற்று
வலி பற்றிக் கூறியவுடன், சண்டையை மறந்துவிட்டு மாரியாயி
உதவுதல் காட்டப்படுகிறது. தன்னிடம் இருக்கும் அரிசியைக்
கஞ்சி காய்ச்சிக் கொடுக்க முடியாத தன் நிலையை, லாரி நிறைய
விறகு வந்து நிற்பதைக் காட்டிச் சொல்கிறாள். தான்
சம்பாதிக்கப் போக வேண்டிய கட்டாயத்தையும் மாரியாயி
கூறுகிறாள். உடனே காட்டப்படும் விவரிப்பு நடை கலந்த பகுதி
பின்வருமாறு:
“அரிசி இருக்கா?” என்று தலையை நிமிர்த்தி எழுந்து
உட்கார்ந்து கொண்டாள் ராசாத்தி.
“இருக்கு.... ஒன்னால கஞ்சி காய்ச்சிக்க முடியுமா?”
“ஓ!...... அதெல்லாம் முடியும்....... சீக்கிரம் கொண்டா”
ராசாத்தி என்ற பாத்திரத்தின் உணர்ச்சி வேகம், கதை வளர்ச்சி,
பாத்திர இயல்பு முதலியவற்றை ஒரு சேர இப்பகுதி எடுத்துக்
காட்டுகிறது. அரிசி இருக்கா? என்ற கேள்வியின் வேகம்
இம்மக்களின் வறுமை என்ற கருத்தை ஆழமாகப்
புலப்படுத்துகிறது. ஒருபிடி சோற்றுக்காக இம்மக்கள் படும்
அவலம், சாராசரிக் கீழ்த்தட்டு மக்களின் வாழ்வில்
வயிற்றுப்பாடு என்ற அவலம் விளைவிக்கும் இன்னலை இக்கதை
சரியாகப் புலப்படுத்துகிறது என்றால் இதற்கு ஜெயகாந்தனின்
விவரிப்பு நடை, வினாவிடை நடை, தகுந்த சொல்லாட்சி,
சுருக்கம் போன்ற மொழிசார்ந்த கவனமே காரணம் எனலாம்.