Primary tabs
5.0 பாட முன்னுரை
ஒரு மொழி பேசும் மக்கள் மற்றொரு மொழி பேசும்
மக்களுடன் தொடர்பு கொள்ளும் போது ஒரு மொழியிலுள்ள
சொற்கள் மற்றொரு மொழியில் கலத்தல் இயல்பாகும். மொழித்
தொடர்பு என்பது பொதுவாக மொழி வரலாற்றில் தவிர்க்க
முடியாதது. ‘கடன் வாங்கல்’ (Borrowing)
என்ற முறையில்
எல்லா மொழிகளுமே பிற மொழிகளிலிருந்து சொற்களைக்
கடன் வாங்கிக் கொள்ளுகின்றன. எந்த நாடுமே மற்றொரு
நாடுடன் தொடர்பு கொள்ளாமல் தனித்து வாழ்வதற்கு
வாய்ப்பில்லை என்பதால் இத்தகைய மொழிக் கலப்பு என்பது
ஒத்துக் கொள்ளப்படுகிறது. மேலும் மொழி வளர்ச்சியடைதல்
என்பது கடன் வாங்கலின் அடிப்படையாலும் நிகழ்கிறது
என்கின்றனர் மொழியியல் பேராசிரியர்கள். பிற
மொழிகளிலிருந்து கடன் வாங்குதல், ஒப்புமையாக்கம் போன்ற
முறைகளில் பிற மொழிகளிலிருந்து சொற்களைப் பெருக்கிக்
கொள்வதால் ஒரு மொழியில் புதிய சொற்கள் உருவாகின்றன.
இவ்வகையில் இப்பாடம் தமிழில் பிற மொழிக் கலப்பு ஏற்பட்டு
வந்துள்ள நிலையையும், பிற மொழிகளில் தமிழ் மொழி கலந்து
வந்திருக்கின்ற நிலையையும் எடுத்துரைக்கின்றது.
• மொழிக் கலப்பு ஏன்?
நம்மிடம் இல்லாத புதிய பொருள்களை (புதிய
கண்டுபிடிப்புகள் காரணமாக) நாம் பிற நாட்டாரிடமிருந்து
பெற்றுப் பயன்படுத்தும்போது அப்பொருள்களுக்குரிய
பிறமொழிச் சொற்களையும் பயன்படுத்துகிறோம். குறிப்பிட்ட
ஒரு துறையில் ஒரு மொழி சிறப்புப் பெற்றிருந்தால்
அம்மொழியில் அத்துறையைக் கற்கும்போது அத்துறை சார்ந்த
பிற மொழிச் சொற்கள் நம்மொழியில் இடம் பெறுகின்றன.
அரசியல், சமயம், வணிகம் காரணமாகத் தொடர்பு
கொள்ளும்போது தொடர்பு கொள்ளப்படுகின்ற பிறநாட்டுச்
சொற்கள் நம் மொழியில் இடம் பெறுகின்றன. எனவே,
• புதிய பொருட் பயன்பாடு
• குறிப்பிட்ட துறையைக் கற்றல்
• அரசியல், சமயம், வணிகம் காரணமாகத் தொடர்பு
என்ற மூன்று காரணங்கள் மொழிக் கலப்பிற்கு
அடிப்படையாகின்றன. தமிழில் சமண, பௌத்த சமயக்
கருத்துகள், சொற்கள் புகுந்தன. தமிழகத்தில் நாயக்கர்,
இசுலாமியர், ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களில் அவர்தம்
மொழிச் சொற்கள் தமிழில் புகுந்தன.