Primary tabs
5.4 மேலை நாட்டு மொழிச் சொற்கள்
மேற்குக் கடல் வழியாகவும், தமிழ்நாடு தன் வாணிபத்தைத்
தொடர்ந்தது. இங்கிருந்து பல பொருள்கள் மேலை
நாடுகளுக்குச் சென்றன. அவற்றால் தமிழ்ச் சொற்கள் அங்கே
பரவ வழி ஏற்பட்டது. அந்த நாடுகளில் இருந்தும் சில
சொற்கள் தமிழில் கலந்தன. வாணிபம் மட்டும் அன்றி,
பிற்காலத்தில் படையெடுப்பு, சமயம், ஆட்சி முதலியவை
காரணமாகவும் பெருமளவு சொற்கள் தமிழில் கலந்தன.
• கிரேக்கம்
கிறித்து பிறப்பதற்கு முன்னரே கிரேக்கர்களும்
உரோமர்களும் தமிழர்களுடன் நேரடித் தொடர்பு
கொண்டிருந்தனர். பெரிபுளுஸ் (Periplus)
என்னும் நூல் மற்றும்
தாலமி, பிளினி ஆகியோர் எழுதிய நூல்களிலிருந்து இதனை
அறிகிறோம். மத்திகை, சுருங்கை, கன்னல், ஓரை ஆகிய
சொற்கள் கிரேக்க மொழியினின்று வந்தவை. குருசு (Cross)
என்பது இலத்தீன் மொழிச் சொல்லாகும்.
• ஹீப்ரு (எபிரேயம்)
கிறித்தவப் பாதிரியார்கள் மூலம் ஹீப்ரு மொழிச் சொற்கள்
தமிழில் புகுந்தன. ஏசு, யூதர், சாலமன் முதலிய சொற்கள்
ஹீப்ரு மொழிலிலிருந்து வந்தவை.
• அரபு மொழி
அரபு மொழி முஸ்லிம்களின் சமய மொழியாகும்.
திருக்குர்ரான் இம்மொழியில் உள்ளது. தமிழ்
முஸ்லீம்களுக்காகப் புதிய குறியீடுகளும் அடையாளப்
புள்ளிகளும் தமிழ் வரிவடிவத்தில் சேர்க்கப்பட்டு
எழுதப்பட்டுள்ளன. அதனை அச்சுத்தமிழ் என்றனர்.
இஸ்லாமியர் சிலர் அரபுத் தமிழிலும் நூல் எழுதினர். அரபு
மொழி வரிவடிவத்தில் தமிழ்ச் சொற்களை அப்படியே
எழுதுவதுதான் அரபுத் தமிழ் எனப்பட்டது. முஸ்லிம்களின்
பேச்சுத் தமிழில் அரபு மொழியின் சட்ட, சமுதாயச் சொற்கள்
காணப்படுகின்றன. பெர்சியன் உருது மொழிகள் வழியாகவும்
அரபுச் சொற்கள் தமிழில் புகுந்தன.
வசூல், தபா, ரஜா, இமாம், இலாக்கா, பிஸ்மில்லா,
உருசுகாயம், ஜேப்பி, சைத்தான், தாக்கீது, தவாலி, நகரா,
மக்கர், மகால், இசும், சுன்னத்து, ஆஜர், இரிசால்,
மௌஸ், முகாம், முசாபர், முன்ஷி, மொபசல், மஹார்,
யுனானி, லாயக்கு, ரத்து, ரஜா, ஹிக்கிம், ஷராப், ஜப்தி,
ஜபர்தஸ்து, ஜாமீன், தணிக்கை, மகசூல், முசாபயு, ஜில்லா,
கொசுவர், சுன்னி (முஸ்லிம்களில் ஒரு பிரிவு) முதலியவை
தமிழில் புகுந்த அரபிய மொழிச் சொற்களாகும
• பெர்சியன் (பார்சி)
இந்தி, உருது வழியே பெர்சியன் சொற்கள் தமிழில்
புகுந்தன. தமிழுக்கு வந்த பெர்சியச் சொற்களில்
பெரும்பாலானவை ஆட்சித்துறைச் சொற்கள். சமயம்
சார்ந்தனவும் வழிபாடு சார்ந்தனவுமான சில சொற்களும்
புகுந்துள்ளன.
டபேதார், டவாலி, திவான், முகர், ரவாணா, ரஸ்தா,
ஜாகீர், சர்தார், ஹவல்தார், தர்க்கா, நமாஸ், லங்கர்,
கானா முதலியன சான்றுகள். அங்கூர், சால்வை, துக்கான்,
ஷோக், சிப்பந்தி, லுங்கி, ரசீது, ஷால், அவுல்தார், சமீன்,
மாலீசு, முகூர், ரஸ்தா போன்ற சொற்களும் தமிழில்
புகுந்தன. தயார், சுமார் ஆகிய இரு சொற்களும் பிறமொழிச்
சொற்கள் என்று கூறமுடியாத அளவிற்குத் தமிழ்மொழிச்
சொற்களாகவே இன்று புழக்கத்தில் உள்ளன.
• துருக்கி
துருக்கி மொழியிலிருந்து துப்பாக்கி போன்ற சொற்கள்
தமிழில் வந்து சேர்ந்தன.
• போர்ச்சுகீசியம்
மேலை நாட்டார் 15 ஆம் நூற்றாண்டிலிருந்தே
இந்தியாவிற்கு வரத் தொடங்கினர். முதலில் இந்தியாவிற்கு
வந்தவர்கள் போர்ச்சுகீசியர்கள். அவர்கள் கொண்டு வந்த
பொருள்கள் பறங்கி என்ற முன்னொட்டுடன் சுட்டப்படுவதை
இன்றும் காணலாம். பறங்கிக்காய், பறங்கிச் சக்கை
முதலியன சான்றுகள். ஊர்ப் பெயர்களிலும் பறங்கி மலை,
பறங்கிப் பேட்டை என இருத்தலைக் காணலாம். பறங்கி
என்ற சொல் Frank
என்ற சொல்லினின்று வந்தது. கடுதாசி,
பேனா, வாத்து, சா(தேநீர்), இலஞ்சி, திராவி, அலமாரி,
மேசை, சாவி, ஆயா, அன்னாசி, கோப்பை, பீப்பாய்,
வராந்தா, கிராதி, கொரடா, ஏலம், சன்னல், மேஸ்திரி,
தோசை, பிஸ்கோத்து, புனல் (funnel),
பொத்தான்,
தம்பாக்கு (தாமிரமும் துத்தநாகமும் கலந்த ஒன்று) போன்ற
சொற்கள் சான்று.
• டச்சு (டானிஷ்)
போர்ச்சுகீசியர்களுக்குப் பிறகு கிழக்கிந்தியக் கம்பெனி
மூலமாக இந்தியாவிற்கு வணிகத்தின் பொருட்டு வந்தவர்கள்
டச்சுக்காரர்கள். கழிவறையைக் குறிக்கும் கக்கூஸ் என்ற சொல்
kakhuis என்னும் சொல்லிலிருந்து
வந்தது. துட்டு என்னும்
சொல் duit என்னும்
டச்சு நாணயம் என்ற பொருள் தரும்
சொல்லில் இருந்து வந்ததாகும். பப்ளிமாஸ், உலாந்தா,
தோப்பு போன்ற சொற்கள் தமிழில் வந்து புகுந்தன.
• பிரெஞ்சு
பாண்டிச்சேரி பிரெஞ்சு இந்தியாவின் தலைமை இடமாக விளங்கிற்று.
பாண்டிச்சேரி பிரெஞ்சு நாகரிகத்தின்
சின்னமாக விளங்குகின்றது. ஆனந்தரங்கப் பிள்ளை
நாட்குறிப்பு தமிழிலுள்ள பிரெஞ்சுச் சொற்களை நமக்கு
எடுத்துக்காட்டுகிறது. போத்தல், ஆசு (சீட்டுக்கட்டு),
லாந்தர், தம்பூர், ரோஜு வடி, லோந்து, கும்பினியான்,
கம்யூன்கள், டாக்குத் துரை, ஆஸ்பத்திரி, பீரோ, ஆனிசு, உச்சே, காப்பித்தான்,
கப்பே, குழுசியார், திருங்கு,
நொத்தாரிசு, பத்தாயி, பொர்மா போன்றவை தமிழில்
கலந்த பிரெஞ்சுச் சொற்களாகும்.
• ஆங்கிலம்
பதினேழாம் நூற்றாண்டிலிருந்தே கிழக்கிந்தியக் கம்பெனி
மூலமாக இந்தியாவுடன் வாணிகம் செய்தவர்கள் ஆங்கிலேயர்.
பின்னர் 200 ஆண்டுகள் நம்மை அவர்கள் ஆண்டதன்
விளைவாக எல்லாத் துறைகளிலும் ஆங்கிலம் செல்வாக்குப்
பெற்றது. தமிழில் கலந்து தமிழ்ச் சொற்களாகவே மாறி விட்ட
பல ஆங்கிலச் சொற்கள் உள்ளன. ஒரு காலத்தில்
வடசொற்களைக் கலந்து பேசியது போல, இன்று கற்றவர்
பேச்சில் ஆங்கிலச் சொற்கள் அளவின்றிக் காணப்படுகின்றன.
ஆங்கிலம் கல்லூரி, பல்கலைக் கழகங்களில் பயிற்று மொழியாக
இருப்பதனாலும் எண்ணற்ற ஆங்கிலச் சொற்கள் தமிழில்
புகுந்துள்ளன.
கோர்ட், காலரா, சோப்பு, சினிமா, ஷாப், டஜன்,
டிக்கெட், போலீஸ், பஸ், ஸ்டாண்டு, பில், பேப்பர்,
பங்களா, பென்சில், மோட்டார், மீட்டிங்கு, உயில், ஏக்கர்,
ஓட்டல், கேசு, ஈரங்கி (Hearing),
நம்பர், பிராமிசரி, லீவு
போன்றன சான்றுகள்.