தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A0514-தமிழ் உரைநடை வளர்ச்சியின் பின்புலம்

6.5 தமிழ் உரைநடை வளர்ச்சியின் பின்புலம்

    ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர்த் தமிழ்ச் சமூகத்தில்
மாற்றங்கள் நிகழ்ந்தன. புதிய சமூக அமைப்பிற்குச் செய்யுள்
இலக்கியத்தை விட உரைநடை வளர்ச்சியே ஈடுகொடுத்து வந்து
உள்ளது. இதைக் கீ்ழ்வருமாறு பகுத்துக் காணலாம்.

    • நிர்வாகத் தேவை
    • மதப் பிரச்சாரம்
    • பத்திரிகைத் துறை வளர்ச்சி
    • கல்வி வளர்ச்சி

6.5.1 நிர்வாகத் தேவையும் உரைநடையும்

    கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆங்கிலேய
அரசு ஆண்டது. புதிய நிர்வாக முறை அறிமுகம் செய்யப்
பெற்றது. இதனால் கடிதத் தொடர்புகள், கணக்கேடுகள்,
பட்டியல்கள் என எல்லாம் மாற்றம் பெற்றன. இத்தேவைகளைச்
செய்யுள் வடிவ மொழி நிறைவு செய்யாது. பழைய
உரைநடையின் வளர்ச்சி அல்லது மாற்றம் நிர்வாகத்
தேவையை நிறைவு செய்தது. இதனால் தமிழ் உரைநடை
வளர்ச்சி விரைவு பெற்றது.

    ஆங்கிலேய அரசு 1835 இல் அச்சகம் அமைக்க அனுமதி
வழங்கியது. இதுவரை பாதிரிமார்கள் மட்டுமே அச்சகம் நிறுவி
இருந்தனர். அரசின் புதிய ஆணையால் அச்சகம், அதை
ஒட்டிய தமிழ் உரைநடை இரண்டும் வளர்ந்தன. இந்நிலையில்,
1849 இல் ஆறுமுக நாவலர் சென்னையில் அச்சகம்
நிறுவினார். தமக்கெனத் தனி உரைநடையை வளர்த்தெடுத்தார்.

    ஆங்கிலேய அரசு மேலும் ஒரு வகையில் தமிழ்
உரைநடை வளர்ச்சிக்குத் துணை புரிந்து உள்ளது. 1812 இல்
சென்னைக் கல்விச் சங்கம் (The College of Fort St.
George)
அரசால் நிறுவப் பெற்றது. இதனால் நூல் நிலையம்,
புத்தக விற்பனை நிலையம், அச்சகம் ஆகிய துறைகள்
வளர்ந்தன. இதனால் தமிழ் உரைநடையும் வளர்ச்சி பெற்றது.

6.5.2 சமயப் பிரச்சாரமும் உரைநடையும்

    தத்துவ போதக சுவாமிகள், வீரமாமுனிவர்,
ஞானப்பிரகாச சுவாமிகள்
ஆகிய மூவருமே கிறித்தவ
மதத்தைத் தமிழகத்தில் பரப்பினர். இந்தச் சமயம் பரப்பும்
முயற்சிக்காக அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டதுதான்
உரைநடை. அதிலும் மக்களின் பேச்சு வழக்கில் உரைநடையை
எழுதியதன் நோக்கம் சமயம் பரப்பும் முயற்சிதான் எனலாம்.

    இதே போன்று ஆறுமுக நாவலரின் உரைநடைப்
படைப்புகளுக்கும் சமயம் பரப்புவதே நோக்கமாக இருந்தது.
பாதிரிமார்களுக்கு எதிராக நாவலர் பிரச்சாரம் செய்தார்; சைவ
சமயத்தைப் பரப்பினார். பேச்சு வழக்குக்கு எதிரான எளிய
செவ்விய தமிழ் உரைநடையைக் கட்டமைத்தார்.

    ஆக, உரைநடை வளர்ச்சியில் மதப் பிரச்சாரம் முன்னிலை
வகித்தது எனலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 05:17:50(இந்திய நேரம்)