தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

சோழர் கால ஓவியங்கள்

4.4 சோழர் கால ஓவியங்கள்

பல்லவ, பாண்டியர் அளவுக்குச் சோழர்கள் ஓவியக் கலையில்
ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. கட்டடக் கலையிலும்
சிற்பக் கலையிலும் சிறந்து விளங்கிய சோழர்கள் ஓவியக் கலையில்
சிறப்புற்று இருக்கவில்லை; அல்லது சோழர் காலத்தில்
வரையப்பட்ட ஓவியங்கள்     நமக்குக்     கிடைக்காமலும்
போயிருக்கலாம். தற்பொழுது நமக்குக் கிடைத்த சோழர்
காலத்தைச் சேர்ந்த ஓவியம் தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள
ஓவியம் மட்டுமே.

4.4.1 பெரிய கோயில் ஓவியம்

இந்த ஓவியத்தை     முதன்முதலாகக் கண்டுபிடித்தவர்
அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர்
எம்.எஸ்.கோவிந்தசாமி ஆவார். இந்த ஓவியத் தொகுதியின்
மேல் நாயக்கர் காலத்தில் வேறு ஓவியம் தீட்டப்பட்டிருந்தது.
தொல்லியல் துறையினர் நாயக்கர் கால ஓவியங்களை இரசாயன
முறைப்படி அகற்றினர். பின்னரே அடியிலிருந்த இவ்வழகு
ஓவியங்கள் வெளியுலகிற்குத் தெரியவந்தன.

தஞ்சைப் பெரிய கோயில் பிரகார உட்சுவர்களின் மேற்கு
மற்றும்     வடக்குப்     பக்கங்களில்     இவ்வோவியங்கள்
இடம்பெற்றுள்ளன. மேற்குச் சுவரில் கயிலைக் காட்சி
தீட்டப்பட்டு உள்ளது.

  • கயிலைக் காட்சி


  • சிவபெருமான் தட்சிணா மூர்த்தியாக அமர்ந்த நிலையில்
    தீட்டப்பட்டுள்ளார். அவருக்கு முன்னே நாட்டிய மகளிர்
    நடனம் ஆடுகின்றனர். சிவபெருமான் அந்நடனத்தைக் கண்டு
    ரசிப்பது போல் புன்முறுவல் பூக்கிறார். சிவ கணங்கள், திருமால்
    போன்றோர் இசைக் கருவிகளால் இசை எழுப்புகின்றனர்.
    இக்காட்சிக்கு அருகில் பைரவர் தம் வாகனமான நாயுடன்
    தீட்டப்பட்டுள்ளார். இதன் கீழே சேர மன்னரான சேரமான்
    பெருமாள்     நாயனார் வெண்குதிரையிலும் சுந்தரமூர்த்தி
    நாயனார் வெள்ளை யானை மீதும் கயிலைக்கு விரையும்
    காட்சி வரையப்பட்டு உள்ளது. கயிலாயத்திற்கு வரும் இவர்களை
    வரவேற்கப் பலர் காத்திருக்கின்றனர். அரச பரம்பரையைச்
    சேர்ந்த பக்தர்கள் அமர்ந்திருப்பது போலும் வரையப்பட்டுள்ளது.
    கைலாயத்தை அடைந்து சுந்தரரும் அவரது தோழர்
    சேரமானாரும் இறைவனைக் கைகூப்பித் தொழுகின்றனர்.
    சிவபெருமானும் பார்வதி தேவியும் தம் அடியவர்களான
    அவ்விருவரையும் கண்டு மகிழ்கின்றனர்.

  • தடுத்தாட்கொண்ட மாட்சி


  • அடுத்த நிலையில் இடம்பெறும் ஓவியமானது சுந்தரமூர்த்தி
    நாயனாரின் வாழ்க்கையைச் சித்திரிப்பதாக உள்ளது. சுந்தரர்
    திருமணக் கோலத்தில் இருப்பதும், சிவபெருமான் அவரைத்
    தடுத்து ஆட்கொள்வதற்காக முதியவர் வடிவில் வருவதும்
    மூன்று பிரிவுகளாக     வரையப்பட்டு உள்ளன. திருமண
    நிகழ்ச்சியாதலின் மகளிர் பலர் பல்வேறு விதமான ஆடைகளை
    அணிந்து திருமணத்திற்கான விருந்து சமைப்பது சித்திரிக்கப்பட்டு
    உள்ளது. சிலர் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கின்றனர்.
    அவர்களின் முகங்களில் பல்வேறு விதமான பாவனைகள்
    காட்டப்பட்டு உள்ளன.

  • சேரமான் பெருமாள் நாயனார் சிவனை வழிபடல்


  • அருகே சிதம்பரம் நடராசர் கோயிலின் தோற்றமும், அதில்
    நடராசரது     திருவுருவமும் காணப்படுகின்றன. இருபுறமும்
    நடராசரின் அர்ச்சகரும் மற்றும் அரசர் அவரது மனைவியர் மூவர்
    ஆகியோருடன் மக்களும் காட்சிப் படுத்தப்பட்டு உள்ளனர். இதன்
    கண் இடம்பெறும் அரசர் மற்றும் அரசியர் உருவங்கள் சேரமான்
    பெருமாள் நாயனாரும் அவர்தம் மனைவியரும் ஆவர் என்று
    கருதப்படுகிறது. இவ்வோவியம் சேரமான் பெருமாள் நாயனார்
    தில்லை வந்து நடராசரை வழிபட்ட வரலாற்றை அடிப்படையாகக்
    கொண்டதாகக் கருதலாம்.

  • திரிபுரங்களின் வீழ்ச்சி


  • வடக்குச் சுவரில் முழுவதுமாகச் சிவபெருமான் முப்புரங்களையும்
    எரித்த கதை சித்திரிக்கப்பட்டு உள்ளது. சிவபெருமான் தேரின்
    மீது கம்பீரமாக நின்று வரும் காட்சி அழகுறச் சித்திரிக்கப்பட்டு
    உள்ளது. இத்தேரினைப் படைப்புக் கடவுளான பிரம்மா
    தேரோட்டியாக அமர்ந்து செலுத்துகிறார். சிவபெருமான் தேரில்
    ஒரு காலைத் தூக்கிச் சற்று உயரமான இடத்தில் வைத்துத் தன்
    கையில் உள்ள மேருவாகிய வில்லில் வாசுகியாகிய பாம்பெனும்
    நாணினை ஏற்றுகிறார். இக்காட்சியைக் கண்ட மூன்று அசுரர்களும்
    நடுங்கி நிற்பது போல் காட்டப்பட்டு உள்ளனர். இவ்வசுரர்களின்
    மனைவியர் கண்ணீரோடும் சோகத்தோடும் தீட்டப்பட்டு
    உள்ளனர்.

    சிவபெருமான் தேரேறிக் கிளம்பிய உடனே பார்வதி தேவி தன்
    வாகனமான சிம்மத்திலும், கணபதி தனது வாகனமான மூசிகத்தின்
    மீதும், முருகன் தனது வாகனமான மயிலின் மீதும் ஏறிப்
    போர்க்களம்     நோக்கிப்     புறப்பட்டுச் செல்வதுபோல
    அமைந்துள்ளது. நந்தி தேவரும் அருகே காட்டப்பட்டுள்ளார்.
    சிவபெருமான் தனது சிரிப்பால் முப்புரத்தையும் எரித்ததால்
    இந்த ஓவியத்தில் சிவபெருமானது முகம் சிரித்த நிலையில்
    வரையப்பட்டுள்ளது.

    திரிபுராந்தகரது இந்த ஓவியம் இராசராசனது பல்வேறு
    வெற்றிகளை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டு உள்ளது
    எனலாம். சிற்பங்களில் திரிபுராந்தகரது உருவங்கள் அதிக
    அளவில் இடம்பெறச் செய்திருப்பது போல ஓவியத்திலும்
    இடம்பெறச் செய்துள்ளனர்.

    இராவணன் கயிலாய மலையைத் தூக்கும் காட்சி இடம்
    பெற்று இருப்பினும் இதன் பெரும்பான்மையான பகுதி
    அழிந்துவிட்டது.

  • இராசராசனும் கருவூர்த் தேவரும்


  • இராசராசனும் கருவூர்த் தேவரும்

    இராசராசன் மற்றும் அவனது குருவான கருவூர்த் தேவரது
    ஓவியங்கள் தீட்டப்பட்டு     உள்ளன. கருவூர்த் தேவர்
    சடை முடியுடனும் தாடியுடனும் காட்டப் பட்டுள்ளார். இராசராசன்
    மகுடத்துடன் இடம் பெற்றுள்ளார். இதில் கருவூர்த் தேவர்
    இராசராசனுக்கு ஏதோ ஒரு செய்தியை விளக்குவது போலும்,
    இராசராசன் அதனைக் கூர்ந்து கேட்பது போலும் தெரிகின்றன.

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 05:32:38(இந்திய நேரம்)