தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

புராண, இதிகாசத் தொடர்பற்ற சிற்பங்கள்

5.4 புராண, இதிகாசத் தொடர்பற்ற சிற்பங்கள்

புராண, இதிகாசங்கள் தொடர்பான சிற்பங்களைப் பற்றி
மேற்கண்ட தலைப்புகளில்     அறிந்தோம். அவையல்லாத
வேறு வகையான சில சிற்பங்கள் பற்றி இங்குக் காண்போம்.

5.4.1 குதிரை வீரர் சிற்பங்கள்

நாயக்கர் காலத்துக் கோயில் தூண்களில்     தவறாது
இடம்பெறுவன குதிரை வீரர் சிற்பங்களாகும். குதிரை வீரன்
கையில் உள்ள ஈட்டியால் புலிகளை வேட்டையாடுவது
போன்று அமைந்தவை இவை. கிருஷ்ணா புரம் வெங்கடாசலபதி
கோயில், திருவரங்கம் அரங்க நாதர் கோயில், காஞ்சிபுரம்
வரதராசப் பெருமாள் கோயில் முதலிய இடங்களில் இவை சிறப்புற
அமைக்கப் பட்டுள்ளன. திருவரங்கம் கோயிலில் குதிரை மண்டபம்
என்றே ஒரு மண்டபம் அமைந்துள்ளது. இதில் பெரிய குதிரைகள்
பாய்ந்து செல்கின்றன. கீழே வீரர்கள் பலர் ஆயுதங்களுடன்
காணப்படுகின்றனர்.
5.4.2 அரச அரசியர் சிற்பங்கள்

அரச - அரசியர் சிற்பங்களை வடிக்கும் வழக்கம் பல்லவர்
காலத்தில் தோன்றியது; நாயக்கர் காலத்தில் பல்கிப் பெருகியது.
காஞ்சி வரதராசப் பெருமாள் கோயில் மண்டபத்தின் மேற்குப்
பக்கத் தூண் ஒன்றில் அரசன், அரசி, பணிப்பெண்டிர் ஆகியோர்
வடிக்கப் பட்டுள்ளனர். மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில்
அம்மன் சந்நிதிக்கு முன்னர்ப் பிரகாரத்தில் திருமலை நாயக்கர்
சிற்பமும் அவருடைய இரு மனைவியர் சிற்பங்களும் வணங்கிய
நிலையில் அமைந்துள்ளன. அழகர்கோயில் பிரகாரத்திலும்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நான்கு தூண்களுடன்
கூடிய மண்பத்திலும் திருமலைநாயக்கர் சிற்பம் மனைவியருடன்
அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம்     முருகன்     கோயில்
மண்டபத்தில் திருமலை நாயக்கரும், இராணி மங்கம்மாளும்
பக்தர்களைப் பார்த்து வணங்குவது போல் வடிக்கப்பட்டுள்ளனர்.


திருமலை நாயக்கரும்,
இராணியும்


காஞ்சி வரதராசப் பெருமாள்
கோயில் தூண்

இதே போன்ற அரச - அரசியர் சிற்பங்களைத்
தாடிக்கொம்பு,     திருமெய்யம்,     திருப்புல்லாணி,
திருக்கோட்டியூர்,     நாங்குனேரி,     திருமோகூர்,
ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, திருக்குறுங்குடி,
திருவரங்கம். வேலூர்
ஜலகண்டேசுவரர் கோயில் எனப்
பல்வேறு கோயில்களில் காணலாம். மதுரைப் புதுமண்டபத்தில்
விசுவநாத நாயக்கர் முதல் திருமலை நாயக்கர் வரையிலான
காலத்தைச் சேர்ந்த 10 மன்னர்களின் சிற்பங்கள் இடம்பெற்று
உள்ளன.

5.4.3 நாட்டுப்புறச் சிற்பங்கள்

பிற அரச மரபினரின் சிற்பக் கலையில் காணப்படாத ஒரு
புதிய மரபை நாயக்கர்கள் தொடக்கி வைத்தனர். நாட்டுப்புற
எளிய மக்களாகிய குறவன், குறத்தி, வேடன், நாடோடி, நாடோடிப்
பெண், கழைக் கூத்தாடிகள் ஆகியோரின் உருவங்கள்
மண்டபங்களில் வடிக்கப்பட்டு உள்ளன. ஒரு கையில் வாளும்
மறுகையில் கொம்புமாகத் தோன்றும் வேடன் சிற்பத்தை
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், நாங்கு நேரி வானமாமலை
கோயில், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதர் கோயில் ஆகியவற்றில்
காணலாம்.

நாடோடி ஆண் மற்றும் நாடோடிப் பெண் சிற்பங்கள்
திருக்குறுங்குடி நம்பி கோயில், கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி
கோயில் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இதில் நாடோடி
ஓர் இளவரசியைத் தூக்கிச் செல்கிறான். அவனது தோளில்
அமர்ந்துள்ள இளவரசி மகிழ்ச்சியுடன் காணப்படுகிறாள்.நாடோடிப்
பெண் சிற்பத்தில் அப்பெண்ணின் தோளில் இளவரசன் ஒருவன்
அமர்ந்திருக்க, அப்பெண் ஓடுவது போல் அமைந்து உள்ளது.
இச்சிற்பங்களின் அடிப்படை,     நோக்கம் ஆகியவற்றைக்
கண்டுபிடிக்க இயலவில்லை.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் உள்ள குறவன், குறத்தி
சிற்பங்கள் அவர்களின் இயல்பை நன்கு காட்டும் வகையில்
மிக அழகாக வடிக்கப்பட்டு உள்ளன. குறவன் ஒரு கையில்
ஈட்டியையும், மற்றொரு கையில் உடும்பையும் பிடித்திருப்பான்.
அவனருகே குரங்கு ஒன்று இருக்கும். குறவனுக்கு அடுத்துக்
குறத்தி பின்னப்பட்ட கூடையைக் கையில் இடுக்கிக் கொண்டு, ஒரு
குழந்தையைத் தோளிலும் மற்றொரு குழந்தையை இடுப்பிலும்
ஏந்தியபடி நிற்பாள்.

  • பாலியல் சிற்பங்கள்


  • தமிழகக் கோயில்களில் பாலியல் சிற்பங்கள் இடம் பெறுவது
    விசயநகர-நாயக்கர் காலக் கோயில்களில்தான். வடக்கே
    கஜு ராஹோ கோயிலில்     இத்தகு பாலியல் சிற்பங்கள்
    அதிக அளவில்     செதுக்கப்பட்டுள்ளன.     தமிழகத்தில்
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், கிருஷ்ணாபுரம்
    வெங்கடாசலபதி கோயில் ஆகிய இடங்களில் இத்தகைய
    பாலியல் சிற்பங்கள் சில இடம் பெற்றுள்ளன.


  • யாளிச் சிற்பங்கள்


  • யாளி என்பது சிங்கமும் யானையும் கலந்த கற்பனை
    உருவமாகும். விசயநகர-நாயக்க மன்னர்கள் தாம் கட்டிய
    மண்டபங்களில் யாளி உருவங்களைப் படைத்துள்ளனர். சில
    கோயில்களில் யாளி மண்டபங்கள் உள்ளன.


    யாளி

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 05:33:47(இந்திய நேரம்)