Primary tabs
இக்கால ஓவியங்களைத் தீட்டுவதில் தமது வாழ்வை
முழுமையாக அர்ப்பணித்துக்
கொண்ட ஓவியர்களைப் பற்றியும்
அவர்கள் கலை உலகிற்குப் படைத்தளித்த ஓவியங்கள் பற்றியும்
இப்பகுதியில் காணலாம்.
நவீன ஓவியர்களுள் ஓவியக் கலைக் கல்லூரியில் முறையாகப்
பயின்று ஓவியம் தீட்டுபவர்களும் உள்ளனர்; தாமே கற்று ஓவியம்
வரைபவர்களும் உள்ளனர். மேலும் மரபு சார்ந்த ஓவியர்களும்
உள்ளனர் ; மரபு சாரா ஓவியர்களும் உள்ளனர்.
ஆதிமூலம், சந்துரு, முருகேசன், பெருமாள், முனுசாமி,
தனபால்,மூக்கையா ஆகியோர் சென்னைக்
கலைக் கல்லூரி தந்த
ஓவியர்கள் ஆவர். இவர்களில் தனபால், மூக்கையா ஆகியோரைப்
பற்றிச் சிற்பிகள் எனும் பகுதியில் கண்டோம். ஏனைய
ஓவியர்களைப் பற்றி இப்பகுதியில் காணலாம்.
ஆதிமூலம் திருச்சி மாவட்டம் கீரப்பூரைச் சேர்ந்தவர். இவர்
சந்தான ராஜ், முனுசாமி ஆகியோரிடம் பயின்ற மாணவர். இவர்
தமது கோட்டோவியங்களின் மூலமாக மாறுபட்ட படைப்புகளை
அளித்துள்ளார்.
ஆதிமூலம்
ஏ.பி. சந்தான ராஜின் கரிக்கோட்டு ஓவியங்களாலும் தனபாலின்
தூரிகைச் சித்திரங்களாலும்
கவரப்பட்டிருந்த காலமான கி.பி. 1964
ஆம் ஆண்டில் மாநில அளவிலான பரிசு பெற்றவர் ஆதிமூலம்.
தம்மைச் சுற்றி உயிர்த் துடிப்புடன் நகர்ந்து கொண்டு இருக்கும்
இன்றைய அவசரமான வாழ்க்கை
நிலை, மரபு சார்ந்த பழைய
நாட்டுப்புறக் கலைகள் ஆகிய இரண்டுமே ஒரே நேரத்தில்
இவரைக் கவர்ந்தன. முதல் நிலையில் கிராமியக் கலைப்
பொருட்களைச் சற்று மாற்றம் செய்து சித்திரங்களாக
வரையத் தொடங்கினார். ஐயனார் சிலைகள், சுடுமண் குதிரைகள், களிமண்
தீபலட்சுமிகள் ஆகியவற்றைத் தீட்டினார். வீரன் சிலைகளில்
முறுக்கிய மீசை, பிதுங்கிய கண்கள், உயர்த்திய புருவங்கள்
ஆகியவை பல்வேறு கோணங்களில்
இவரது கலைப்
படைப்புகளில்
இடம் பெற்றுள்ளன.
மரச் சிற்பங்களில் காணப்படும் உளிக் கீறல்களைக் கொண்டு
படைக்கப்பட்ட இவரது காமதேனு
என்னும் ஓவியம்
சிறப்புடையதாகும். துணிப் பொம்மைக்குள் பஞ்சினை அடைத்து
உருவாக்கப் பட்டதைப் போல் காணப்படும் குதிரை வீரனின்
ஓவியமும் சிறப்புடையதாகும். உருவங்களின் உணர்ச்சி
வெளிப்பாட்டிற்கு அதிக இடம் தரும் பகுதிகளான மனிதனின்
முகம், குதிரையின் முகம் போன்றவற்றைச் சிறப்பாக
உருவாக்கியுள்ளார்.
மண்ணின் பண்பாட்டு அடையாளங்களோடு கூடிய
படைப்புகளின் சாரத்தை உள்வாங்கிக் கொண்டு தற்காலக்
கலை
பற்றிய விழிப்புணர்ச்சியோடு தமது படைப்பில் ஈடுபடும்
ஆதிமூலத்தின் படைப்புகள் உலகளாவிய சிறப்புப் பெற்று
விளங்குகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் இராமசாமி புரத்தில் பிறந்தவர்.
சென்னைக் கலைக்கல்லூரி மாணவர் இவர். சென்னைக்
கலைக்கல்லூரி உருவாக்கிய இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த
முன்னணி ஓவியர்கள் மற்றும் சிற்பிகள் பலருள்
குறிப்பிடத் தக்கவர். கிராமத்து விழா என்னும் வண்ண
ஓவியத்திற்குத் தேசிய விருது பெற்றவர். தேசிய மற்றும் மாநிலக்
கண்காட்சியில் இடம்பெற்ற இவருடைய ஓவியங்கள் இந்திய
மரபின் கலையழகு குன்றாத நவீன வெளிப்பாடுகள் ஆகும்.
பெருமாள்
தமக்கென ஒரு தனிப் பாங்கை அமைத்துக் கொண்ட
இவருடைய ஓவியங்கள் கிராமியக் கலை மணம்
கமழும் வண்ண
ஓவியங்களாகும். நாட்டுப்புற வாழ்க்கையில் நிலை கொண்டுள்ள
பழைமையும் புதுமையும் இணைந்த தன்மையையும் கிராமங்களில்
நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளையும் பிரதிபலிக்கச் செய்பவர்
இவர்.
சென்னை ஓவியக் கலைப் பள்ளி உருவாக்கிய பல முன்னோடி
ஓவியர்களுள் மிகவும் குறிப்பிடத் தக்கவர் எல். முனிசாமி.
கலையை மரியாதைக்குரிய ஒரு தொழிலாகவே கருதிய
கலையார்வம் மிக்க ஒரு குடும்பத்தில் பிறந்தவர். இவரது
முன்னோர்கள் தெய்வச் சிலைகளை வடிக்கும் சிற்பிகள் என்பதால்
அந்தப் பின்னணி, ஓவியக் கலையில் இவரை ஈடுபடச் செய்தது.
இவர் தனபாலின் சீடர் ஆவார். 1948 ஆம் ஆண்டு
டி.பி. ராய்சௌத்ரி அவர்கள் சென்னை ஓவியக் கலை
கல்லூரியின் முதல்வராக இருந்த காலத்தில் மாணவராக அங்குப்
பயின்றவர் முனிசாமி.
எல். முனிசாமி.
இவர் தொடக்க நிலையில் இயற்கைக் காட்சிகளை வரைந்து
வந்த போதிலும் விரைவில் தமக்கென்று
ஒரு பாணியை, இயல்புச்
சித்திதரிப்பை வகுத்துக் கொண்டார். ஓவியத்தின் கருப்பொருள்,
கலை
நுணுக்கம் ஆகியவற்றில் தீவிரக் கவனம் செலுத்தினார்.
இவருடைய படைப்புகள் ஒரே மாதிரியான உடல் உருவ
அமைப்பிலிருந்து வேறுபடுபவை. அடிப்படையில் இயல்பு ஓவியப்
பாணியை வகுத்துக்
கொள்ள அவர் முயன்ற போதிலும் கோடுகள்
மறையுருவம், அலங்காரம் ஆகியவற்றின் கலவையாகத்தான்
அவருடைய ஓவியங்கள் இருந்தன. தமது மறைபொருள்
ஓவியத்தில் இந்திய நாகரிகத்தின் தனித் தன்மை பாதிக்கப்
படாமல்
பார்த்துக் கொண்டார்.
ஓவியர் வீர. சந்தானம் கி.பி. 1947 ஆம் ஆண்டு தஞ்சை
மாவட்டத்தில் உப்பிலியப்பன் கோயில் என்னும் ஊரில்
பிறந்தார். சென்னை கலை மற்றும் கைவினைக் கல்லூரியின் கீழ்ச்
செயல்பட்டுவந்த கும்பகோணம் கலை மற்றும் கைத்தொழில்
கல்லூரியில் கலைகளைப் பயின்றார்.
வீர. சந்தானம்
கி.பி. 1970 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற்ற
ஓவியக் கண்காட்சியில் சந்தானத்தின்
ஓவியங்கள் முதன் முதலாகக்
காட்சிக்கு வைக்கப்பட்டன. இவர் மாணவராக இருந்தபோது
இந்நிகழ்ச்சி
நடைபெற்றது குறிப்பிடத் தக்கது. அதன் பின்னர்
சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம்,
புதுடில்லி, போபால்
போன்ற நகரங்களில் நடைபெற்ற கண்காட்சிகளில் இவருடைய
ஓவியங்கள் இடம்பெற்றதோடு பாராட்டுகளையும், பரிசுகளையும்
பெற்றன.
இவரது படைப்புகள் புதுமையாகவும் நேரடியாக நடைமுறைப்
பி்ரச்சனைகளைப் பற்றிப்
பேசுவனவாகவும் அமையும். கலைகளை
நேர்முகமாக எடுத்துச் சென்று பேசுவது கலைக்கு ஒவ்வாது என்று
சொல்வது உண்டு. இக்கருத்துக்கு நேர்மாறாகச் சந்தானம் தம்
படைப்புகளைப் படைத்து
வருகிறார்.
மக்கள், அரசியல் மற்றும் விடுதலை உணர்ச்சி காரணமாகப்
பாதிக்கப்படுவது போன்றவை இவரது
படைப்புகளில் முக்கிய இடம்
பெறுகின்றன. அவற்றை அவர் நேர்முகமான கலை படைப்புகளாக
மாற்றுகிறார்.
தனது அனுதாபம் முழுவதையும் அவர் படைப்பு
மூலம் வெளிப்படுத்துகிறார். மக்களுக்கு இழைக்கப்படும்
கொடுமை,
கொடூரம், சிதைக்கப்பட்ட மக்கள், சிறைப்பட்ட மனிதர்கள் என்று
மனித குல அவலம்
பார்க்கின்றவர்களின் மனதில் நேரடிப்
பாதிப்புகளை ஏற்படுத்துமாறு இவரது ஓவியங்கள் அமைகின்றன.
சென்னை கலை கல்லூரியின் ஆசிரியர் இவர். தமிழ்
மண்ணோடும் மக்களோடும் மரபுக் கலைகளோடும் தொடர்பு
கொண்டவர். நம் நாட்டு விலங்குகள், பறவைகள், மரம், செடி,
கொடிகளோடு நேரடியான உரையாடல்களை நிகழ்த்தும்
இவருடைய கலைப் படைப்புகள் அபூர்வமானவை ஆகும்.
எருதுகளை இவர் பார்க்கும் பார்வை வித்தியாசமானது.
அவற்றைத் தம் சித்திரங்கள், சிற்பங்கள் ஆகியவற்றிற்குக்
கருப்பொருளாக இவர் பயன்படுத்துகிறார். எருது என்னும் ஒரு
விலங்கினை, அதன் அத்தனைக் கோலங்களிலும் ஒரு வடிவமாக
உள்வாங்கி இருக்கிறார் என்றே சொல்லலாம். இதற்குக் காரணம்
இவரது இளமைக் காலத்தின் பெரும் பகுதி மாடுகளோடு
தொடர்புடையதாக இருந்ததே ஆகும். இவர் தந்தை ஒரு மாட்டு
வியாபாரி. ஆகவே மாடுகளின் செயல்பாடுகள் பற்றிய பல
விதமான அனுபவம் இவருக்கு உண்டு. எருது என்னும் விலங்கின்
வடிவ ரீதியான பதிவுகளை மட்டுமின்றி, உணர்வு உளவியல்
ரீதியான பதிவுகளையும் அவர் உள்வாங்கி வைத்திருக்கிறார்
என்பதையும் அறிய முடிகிறது. இதன் காரணமாக எருதைக் கல்,
மரம், உலோகம் ஆகியவற்றில் சிற்பமாகவும், ஓவியமாகவும்
படைத்திருக்கிறார்.
கே.சி. முருகேசன் மதுரை மாவட்டம் கள்ளந்திரி என்னும்
ஊரைச் சேர்ந்தவர். சென்னைக் கலைக் கல்லூரியில் பயின்றவர்.
படிக்கின்ற காலத்திலேயே தென்னிந்திய ஓவியர்கள் சங்கத்தின்
பரிசு பெற்றவர். 1968 ஆம் ஆண்டு வன விலங்குக் கண்காட்சியில்
பரிசு பெற்றவர். அகில இந்தியக் கதர் கிராமத் தொழில்கள்
கண்காட்சியில் இவருடைய ஓவியம் பரிசு பெற்றது. முருகேசன்
சென்னை, பெங்களூர், மதுரை ஆகிய மாநகரங்களில் ஓவியக்
கண்காட்சிகளை நடத்திப் பாராட்டுப் பெற்றுள்ளார். இவருடைய
ஓவியங்கள் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, கனடா, ஸ்வீடன்,
மொரீசியஸ் போன்ற நாடுகளில் பல இடங்களில் அலங்காரப்
பொருள்களாக இடம் பெற்றுள்ளன.
கே.சி. முருகேசன்
முத்துச்சாமி தமிழக அரசின் கலைச் செம்மல் விருது
பெற்றவர். இவர் ஒட்டோவியம் (Collage) தயாரிப்பதில் வல்லவர்
ஆவார். இன்றைய மனிதனது வாழ்க்கை செய்தித் தாள்களால்
சூழப்பட்டதாக உள்ளது. ஆகையால், முத்துச்சாமி செய்தித்
தாள்களைத் துண்டு துண்டாக வெட்டி, அவற்றைப் பயன்படுத்தி
ஒட்டோவியத்தைத் தயாரிக்கிறார். வண்ணங்களின் கலவைக்குப்
பதிலாக அச்சடிக்கப்பட்ட காகிதங்களின் மூலமாக வித்தியாசமான
கட்டமைப்பை உருவாக்குகிறார்.
இவர் பத்திரிகைகளில் வரும் வேலை வாய்ப்பு
விளம்பரங்கள், ஏல அறிவிப்புகள், புத்தக விமரிசனங்கள் மற்றும்
பல விளம்பரங்களைத் தெளிவிற்காகப் பெருமளவில்
பயன்படுத்துகிறார்.
தற்கால ஓவியர்கள் வரைந்த நவீன ஓவியங்களின்
உள்ளடக்கம், அமைப்பு முறை,
கருத்தமைதி ஆகியவற்றை இங்குக்
காணலாம்.
நாட்டுப் புறத்து வாழ்வின் எளிய கூறுகள், நாட்டுப்புறக் கலைக்
காட்சிகள் ஆகியவற்றைப் பெருமாளின் அழகிய ஓவியங்களில்
காணலாம். கணவன் தோளில் குழந்தை, மனைவி தலையில்
கஞ்சிக் கலயம் - குடும்பமே விறகு வெட்டச் செல்லும் காட்சி
அருமையாகத் தீட்டப்பட்டு உள்ளது. கிராமத்து விழாக்களில்
தாரை தப்பட்டை அடிப்போர் உயிர் ஓவியங்களாகப்
படைக்கப்பட்டு உள்ளனர். தாரையை அடிக்கும் வேகம், நடை,
பாவனை எல்லாம் ஓவியத்தில் உணர்த்தப்படுகின்றன.
வரையும் ஓவியத்திலிருந்து ஒட்டோவியம் சற்று மாறுபட்ட
ஓவியமாகும். செய்தித் தாள்களைப் பல்வேறு வடிவங்களில் வெட்டி
வைத்துக் கொண்டு அவற்றைப் பல்வேறு தோற்றங்கள்
அமையுமாறு ஒட்டி ஓவியம் தயாரிப்பதை ஒட்டோவியம் என்பர்.
வெட்டப் பட்ட செய்தித் தாள் துண்டுகளை எண்ணெய் மற்றும்
வண்ணக் கலவை இவைகளினால் ஈரமாக்கப் பட்ட ஓவியத்
துணியில் ஒட்டித் தேவையான ஒட்டோவியங்களை உருவாக்குவர்.
செய்தித் தாள்களை வெட்டி அவற்றை வைத்து ஓவியம்
படைப்பதை 1912 ஆம் ஆண்டில் கியூபிஸ்ட்ஸ் என்னும் ஒருவகை
ஓவியர்கள் முதன் முதலாகப் பயன்படுத்தினர். இதனைப்
பின்னாளில் வந்த ஃபியூச்சரிஸ்டுகளும், டாடா(dada)யிஸ்டுகளும்
பயன்படுத்தினர். எம்.கே.முத்துச்சாமியும், கே.சி.முருகேசனும்
ஒட்டோவியம் படைப்பதில் வல்லவர்கள்.
முத்துச்சாமி பெரும்பாலும் கிராமத்துக் கலைஞர்களைப்
படைத்துக் காட்டுவார். உதாரணமாகக் குறி சொல்லுபவர்கள்,
கரகாட்டக்காரர்கள், சிலம்பாட்டக்காரர்கள் போன்றோரைப்
படைத்துள்ளதைக் கூறலாம். சிலம்பாட்டக்காரன் என்ற ஓவியத்தில்
அவனது கால்களில் ஒவ்வொரு விரலுக்கும் ஒவ்வொரு வகையான
செய்தித்தாள் துண்டுகளைப் பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம்
காலில் ஒரு அசைவை ஏற்படுத்துகிறார்.
நாட்டுப்புறக் கலை வடிவங்களை மேற்கத்தியப் பாணியில்
படைத்துக் காட்டுவது இவரது தனிச்சிறப்பாகும்.
தைல வண்ண ஓவியம் வரைவதில் தலைசிறந்த இவர்
ஒட்டோவியம் தயாரிப்பதிலும் சிறந்து விளங்குகிறார்.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தை நிலை நிறுத்தும்
வகையிலும், இந்தியக் கலாச்சார மரபைச் சிறப்பிக்கும் வகையிலும்
பல ஒட்டோவியங்களை இவர் படைத்துள்ளார்.
சமய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் இவர்
உருவாக்கிய ஒட்டோவியம் ஒரு கருத்துப் பேழையாகும். இதில்
கோயில், மசூதி, மாதா கோயில், குருத்வாரா ஆகிய அனைத்துக்
கோயில்களும் இடம் பெற்றுள்ளன. சுற்றிலும் பல்வேறு சமய
மக்கள் நின்ற படியும் நடுவே மூவண்ணக் கொடி யோடு
இந்தியத் தாய் நின்ற படியும் உள்ள காட்சி அருமையாக
அமைந்துள்ளது.
கோடுகளால் மட்டும் வரையப்படும் ஓவியம் கோட்டோவியம்
ஆகும். ஒவியர் சந்துரு கோட்டோவியம் வரைவதில் சிறந்தவர்.
இவர் வரைந்த எருது ஓவியம் பல சிறப்புகளைக் கொண்டதாகும்.
இவ்வோவியத்தில் ஓர் அரை வட்டம் காணப்படுகிறது. அதற்குள்
தரையைக் கொம்புகளால் உரசும் மூர்க்கத்தனமான காளை
வரையப்பட்டுள்ளது. காளையின் முதுகுப் பக்கத்திலிருந்து
பார்த்தால் கிடைக்கும் காட்சி, பின் பக்கமிருந்து பார்த்தால்
கிடைக்கும் காட்சி, வயிற்றிற்குக் கீழ்ப் பக்கமிருந்து பார்த்தால்
கிடைக்கும் காட்சி என எல்லாக் கோணங்களும் ஒரே சித்திரத்தில்
இடம் பெறுகின்றன. இக்கோட்டோவியத்தில் காளையின்
சதைத் திரட்சி எங்கெங்கெல்லாம் இளகியிருக்கும், எங்கெங்குத்
திரண்டிருக்கும் என்பதை மிக அழகுறச் சித்திரித்துள்ளார்.
மற்றொரு சித்திரத்தில் காளை ஒன்றைக் கூம்பு, உருளை, கன
சதுரம் போன்ற வடிவங்களாலேயே படைத்திருக்கிறார்.
ஓவியர் வீர சந்தானத்தின் நாற்காலி கோட்டோவியம்
புகழ்மிக்கதாகும். நாற்காலியை அவர் பலவிதமாக உருட்டியும்,
நிலை மாற்றியும் பார்வையாளர் மனத்தில் நாற்காலியின் பிம்பம்
பாதிப்பை ஏற்படுத்துமாறு செய்திருக்கிறார். வண்ணங்கள் இன்றி
வெறும் மையினால் இதனைச் சாத்தியம் ஆக்கியிருப்பது
உண்மையில் ஒரு சாதனைதான். இந்த நாற்காலி என்பது
பதவிக்காக அலையும் அரசியல் வாதிகளை நையாண்டி செய்யும்
விதமாக அமைந்துள்ளது.
ஆதிமூலத்தின் கோட்டோவியங்கள் பற்றி முன்னர்க் கண்டோம்.
வண்ணத்தினால் தீட்டி அவ்வண்ணத்தின் மூலம் ஓவியன்
கூறவந்த கருத்தைப் பார்ப்பவர்களது மனத்தில் இன்னும் கொஞ்சம்
ஆழமாகப் பதியச் செய்வது வண்ண ஓவியம். இங்கு ஓவியர்
கே.சி. முருகேசன் அவர்களின் வண்ண ஓவியங்கள் சிலவற்றைக்
காணலாம்.
நர்த்தன மயில் என்றோர் ஓவியம் வண்ணத் தோகை கொண்ட
வனப்பு மிக்க மயிலின் நடனக் கோலத்தைக் காட்டுகிறது.
மேலோட்டமாகப் பார்க்கின்ற போது பூக்களின் குவியலாகத்
தோன்றுகிறது ; அந்தப் பூக்குவியலை உற்றுப் பார்க்கின்றபோது
அங்கே அழகிய மயில் தோகை விரித்து ஆடுவதைக் காணலாம்.
இந்த ஓவியம் ஒரு பயங்கரக் காட்சியைப் பக்குவமாகக்
காட்டுகிறது. கடல் நடுவே தீ்ப்பிடித்துக் கொண்ட ஒரு கப்பலின்
நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. கப்பலில் எரியும் தீயின்
நிழல் கடல் பரப்பில் படுவது மிக இயற்கையாகக்
காட்சிப் படுத்தப்பட்டு உள்ளது.
இந்த ஓவியம் 1991 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற
ஓவியக் கண்காட்சியில் ஒருமைப்பாட்டிற்கான சிறப்புப் பரிசு
பெற்றது. நீலம், சாம்பல், கறுப்பு, பழுப்பு, சிவப்பு போன்ற
வண்ணங்கள் முக்கியமாகப் பயன்படுத்தப்பட்ட ஓவியம் இது. இது
போர், அழிவு, போரை வெறுக்கும் பூவையர் நடத்தும் மௌனப்
போராட்டம், மக்கள் போரால் வெளியேறும் அவலம்
ஆகியவற்றைக் காட்டி அனைவரது உள்ளத்தையும் கவர்வது.
முட்டைக்குள் குஞ்சு உருப்பெற்ற காட்சியினை வண்ணச்
சேர்க்கையில் பிரதிபலிக்கச் செய்துள்ள இவரது ஓவியம் சிறந்த
வண்ண ஓவியத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
வீர. சந்தானத்தின் ஓவியம் ஒன்றில் போர்வாள் ஒன்றை
அலகில் தாங்கிய, ஒரு கால் முடமாகிய பறவை ஒன்று துப்பாக்கிக்
குழலின் முனை மீது அமர்ந்திருக்கிறது. கீழே மரத்தில்
செய்யப்பட்டது போன்ற முகங்கள் சிறைக் கம்பிகளின் இடையே
காட்டப்பட்டு உள்ளன. அவை மண்டை ஓடுகளைப் போல்
தோற்றமளிக்கின்றன. கை விலங்குகளும், கம்பிகளுக்கு இடையே
காணப்படுகின்றன. வானம் எங்கும் போர்க்குறிகள் நிரம்பியிருக்கும்
அமைதியற்ற இன்றைய நிலையில் இவரது பறவை எங்கும்
அலைந்து திரிகிறது. நம்பிக்கையின் அடையாளமாக அதற்குத்
தானியக் கதிர் எதுவும் கிடைக்கவில்லை. அதற்கு இளைப்பாறக்
கிளை ஏதும் கிடைக்கவில்லை. இளைப்பாறக் கிடைப்பதெல்லாம்
துப்பாக்கிக் குழலின் முனைதான் என இன்றைய அமைதியற்ற
உலகில் சமாதானத்தின் நிலையை இந்தப் புறாவின் மூலம்
சித்திரித்துள்ளார்.