தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

3.3 தெருக்கூத்து

3.3 தெருக்கூத்து

தெருக்களின் ஓரங்களில் களம் அமைத்துக் கொண்டதால்
இக்கலை தெருக்கூத்து எனப் பெயர் பெறலாயிற்று. தமிழகத்தில்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் செல்வாக்குப் பெறத் தொடங்கிய
கலைவடிவம் இது. அறுவடைக்குப் பின்பும், கோயில்
விழாக்களிலும் இவ்வகைத் தெருக்கூத்து நடத்தப் பெறுகிறது.

3.3.1 மேடை

மேடை. வீதிகளிலும், நாற்சந்திகளிலும், கோயில்களுக்கு
அருகிலும் தெருக்கூத்து     மேடை அமைக்கப்படுகிறது.

தெருக்கூத்துக்கு, பொதுவாகத் திறந்தவெளி
இடங்களை     ஒட்டியே     மேடை
அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்
பெறுகிறது.     தென்னை     ஓலைகளால்
வேயப்பெற்ற     சிறிய     மேடையில்

தெருக்கூத்து நிகழ்த்தப் பெறுகிறது. நடிகர்கள் வருவதற்கு முன்பு
வெள்ளைத்துணி ஒன்று மேடையை மறைத்தபடி பிடிக்கப்
பெற்றிருக்கும். நடிகர் வந்து அதன் பின்புறம் நின்றதும் திரை
அகற்றப்படும்.

  • ஒளியமைப்பு


  • தெருக்கூத்து     மேடையில்     தொடக்க காலத்தில்
    ஒளியமைப்புக்காகத் ‘தீவட்டிகள்’ பயன்படுத்தப் பெற்றன.

    அக்காலக்கட்டத்தில் மின்சார விளக்குகள்
    அறியப்படாமல் இருந்தது. காலமாற்றத்துக்கேற்ப,
    கிராமங்களில் மண்ணெண்ணெய் விளக்குகள்
    பயன்படுத்தப்படுகின்றன.     தற்போது சில
    இடங்களில் மின் விளக்குகளும் கூடப்
    பயன்படுத்தப்படும் நிலையைக் காணலாம்.

  • ஒலியமைப்பு


  • தெருக்கூத்தில் நடிகர்கள் ஆடியும் பாடியும் நடிப்பது
    வழக்கம். பொதுவாக ஒலிபெருக்கி போன்றவை தெருக்கூத்து
    மேடைகளில் பயன்படுத்தப்படுவதில்லை. ஓங்கிய குரலில்
    பாடியும், குதித்தும் நடிகர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளை
    அப்படியே வாங்கிக் கொள்வதையே மக்கள் விரும்புகின்றனர்.
    எனினும் நவீனம் என்ற பெயரில் ஒலிபெருக்கிகளும் இன்று
    பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

  • இசை


  • தெருக்கூத்தில் இசை முக்கியமான கூறாக விளங்குகிறது.
    மிருதங்கம், டோலக், ஜால்ரா, புல்லாங்குழல், ஆர்மோனியம்
    போன்ற இசைக்கருவிகள்     பெரும்பாலும் பயன்படுத்தப்
    பெறுகின்றன. இவைகள் ‘பக்க வாத்தியங்கள்’ எனப் பெயரிட்டு
    அழைக்கப்படுகின்றன.


    மிருதங்கம்


    ஜால்ரா

    புல்லாங்குழல்

    ஆர்மோனியம்

    இசைக்குழு மேடையின் பின்பக்கம் திரையை ஒட்டி,
    பார்வையாளர்களைப் பார்த்து அமர்ந்திருக்கும். இசையின்
    ஒலிப்பு ஓங்கிக் கேட்கும் வண்ணம் இசைக்கப்படும். இதனால்
    பாட்டும், தாளமும் சேர்ந்து அமைவதில்லை. தாளத்தின் ஓசையும்,
    கருவிகளின் ஒலியும் பாட்டை அமுக்கி விடுகின்றன.

  • ஒப்பனை


  • எந்தவொரு நடத்து கலைக்கும் ஒப்பனை (make-up) மிகவும்
    முக்கியமானதாகும்.     பாத்திரங்களை     வேறுபடுத்தவும்,
    பொலிவுபெறச்     செய்யவும்     ஒப்பனை     உதவுகிறது.
    தெருக்கூத்துக்கான ஒப்பனை தனித்துவம் வாய்ந்தது ஆகும்.

    வேடத்துக்கேற்ற முக ஒப்பனை தெருக்கூத்தில் குறைந்தே
    காணப்படுகிறது. பொருளாதார வசதியின்மையே இதற்கான
    முக்கிய காரணமாகும். முகத்தில் பூசப்படும் அரிதாரம்,
    கரிப்பொடி, காக்காப்பொன் போன்றன தாங்களாகவே தயாரித்துக்
    கொள்ளும் ஒப்பனைப்     பொருள்களாகும். (அரிதாரம் =
    முகச்சாயம் ; காக்காப்பொன் = பளபளப்பான ஒருவகைப் பொடி.)

    ஆடைகள் மிகவும்     கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்
    பெறுகின்றன. வெல்வெட்டு, பொன், வெள்ளிச்சரிகை, பட்டு
    போன்றவற்றால் உடைகள் உருவாக்கப்பட்டிருக்கும். எனினும்
    வேடத்திற்கேற்ற ஆடைகள் அமைக்கப் பெறுவதில்லை.

    ஆண் வேடதாரிகள் பெரும்பாலும் நீளக்கால் சட்டை
    (Pant)யுடன் சரிகை     தைக்கப்பட்ட     ஆடைகளைப்
    பயன்படுத்துகிறார்கள். பெண் வேடதாரிகள் பெரும்பாலும்
    நைலான் புடவைகளைப் பயன்படுத்துகின்றனர்.
    3.3.2 கதை

    நாட்டுப்புற மக்கள், அறிமுகமான கதைகளையும், தங்களுக்கு
    விருப்பமான கதைகளையும், தெருக்கூத்து மேடையில் கண்டு
    களிப்பதில் விருப்பம் கொண்டவர்களாவர். எனவே மக்களுக்கு
    நன்கு     அறிமுகமான     தொன்மை     இலக்கியங்களும்,
    நாட்டுப்புறக்கதைகளும் பெரும்பாலும் தெருக்கூத்துக்கெனக்
    கொள்ளப் பெறுகின்றன.

    எனினும் கால மாற்றத்திற்கேற்ப நடப்பியல் கூறுகளும்
    கதைகளாக்கப் படுகின்றன.

    மதுரை வீரன், பவளக்கொடி, நல்லதங்காள், ஆரவல்லி
    சூரவல்லி, பாரதக்கூத்து, காத்தவராயன், சித்திராங்கி போன்றவை
    குறிப்பிடத்தக்க தெருக்கூத்துக் கதைகளாகும்.

    எடுத்துக்காட்டாக ‘நல்லதங்காள்’ கதையினை இங்குக்
    காண்போம்.

    நல்லதங்காள் கதை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம்
    அறிமுகமான கதையாகும்.     காசி நாட்டு அரசியான
    நல்லதங்காளுக்கு ஏழு குழந்தைகள்.     நாட்டில் வறுமை
    தாண்டவமாடுகிறது. தனது சகோதரன் ஆளுகின்ற மதுரை
    நாட்டுக்குத் தனது குழந்தைகளை அழைத்துச் செல்கின்றாள்.
    அவள் காசியை விட்டுச் செல்வதை அவளது கணவன்
    ஏற்கவில்லை. எனினும் தனது குழந்தைகளின் பசித்துயர் காணப்
    பொறுக்காமல் கணவன் தடுத்தும் மதுரை நாடு செல்கிறாள்.
    மதுரையில் தனது சகோதரன் அரண்மனையில் இல்லாத நேரம்
    தனது அண்ணியின் (அண்ணன் மனைவி) கொடுமைக்கு
    ஆளாகிறாள். அவமானப்படுத்தப்படுகிறாள். நல்லதங்காள்
    நம்பிக்கை இழந்தவளாக மதுரை அரண்மனையை விட்டுத்
    துயரத்தோடு வெளியேறுகிறாள். அவள் கண்ணுக்கு ஆழமான
    பாழுங்கிணறு     தென்படுகிறது.     தனது குழந்தைகளை
    ஒவ்வொன்றாகக் கிணற்றுக்குள் தள்ளுகிறாள். கடைசியாகத்
    தானும் குதித்து மூழ்குகிறாள்.

    பெண்மையின் துயர் பேசும் இக்கதை தமிழகத்தில் மிகவும்
    செல்வாக்குப் பெற்ற தெருக்கூத்துக் கதையாக உள்ளது.
    இக்கூத்துக் கதை பெண்களை அழவைக்கும் அத்தனைக்
    கூறுகளையும் கொண்டுள்ளதைக் காண்கிறோம்.

    3.3.3 தெருக்கூத்தின் அமைப்பு

    தெருக்கூத்து நீண்ட கால வழக்கினைக் கொண்டது. எழுத்து
    வடிவிலான வரையறுக்கப்பட்ட உரையாடல் இல்லை. இதனால்
    கூத்தின் நீளம் அதிகமாகிக் கொண்டே செல்லும் நிலை
    ஏற்படுகிறது. பாடல், உரைநடை, நடனம், பேச்சு யாவும் ஒன்றாக
    அமைந்த அமைப்பினைக் கொண்டு தெருக்கூத்து விளங்குகிறது.

  • நோக்கம்


  • நீதி போதனைகளை மக்களிடையே பரப்புவதும், கூத்தின்
    நோக்கமாக உள்ளது. எனவே கூத்துக்கதைகளில் சமகால
    நிகழ்வுகளும் கலைஞர்களால் இணைத்துப் பேசப் பெறுவதுண்டு.

  • கால அளவு


  • தொடக்க காலத்தில் கூத்து முடிய மாதக்கணக்கில் நேரம்
    எடுத்துக் கொள்ளப் பெற்றது. மக்களின் விருப்பத்திற்கேற்பக்
    கூத்துக் கதை வளர்க்கப்படும். மக்கள் முடிக்கச் சொன்னால்
    மட்டுமே கூத்து முடிக்கப் பெறும்.
    கூத்தாடி கிழக்கே பார்ப்பான்
    கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்

    என்னும் பழமொழி கூட விடிய விடியக் கூத்து நடந்த நிகழ்வை
    நமக்கு நினைவூட்டுகிறதல்லவா!

    ஆனால், கால மாற்றத்திற்கேற்ப, தற்பொழுது தெருக்கூத்தும்
    காலக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பெற்றுள்ளது.

    3.3.4 நடத்து முறை

    தெருக்கூத்துகளில் பாத்திரங்கள்     யாவும் தனித்தனி
    நடிகர்களால் நடிக்கப்பெறும். தெருக்கூத்து நடிகர்கள் உரத்த
    குரலில் பாடத் தெரிந்தவர்களாவர். பெரும்பாலும் பெண் பாத்திர
    வேடங்களையும் ஆண்களே ஏற்றுக் கொள்கின்றனர். எனினும்
    பெண் வேடங்களைப்     பெண்களே ஏற்றுக்கொள்வதைத்
    தற்பொழுது காண முடிகிறது.

    தெருக்கூத்து     மேடையேற்றம்     தனித்தன்மையுடன்
    அமைந்துள்ளது. நடிகர்களையும், பார்வையாளர்களையும் பிரித்து
    வைப்பது திரைச்சீலை மட்டும் தான்.

    தொடக்கத்தில் தோடயப் பாடல்கள் பாடப் பெறும். பின்னர்
    விநாயகராக வேடமணிந்த ஒருவர் தோன்றி அனைவருக்கும்
    ஆசி வழங்குவார். அடுத்ததாக கட்டியங்காரனின் வருகை
    அமையும். கூத்தில் வரக் கூடிய பாத்திரங்களை கட்டியங்காரன்
    அறிமுகம் செய்வான். கூத்தின் நிகழ்ச்சிகளையும், சூழலையும்,
    கதைப் போக்கையும் விளக்குவதாக அவனது பேச்சும், நடிப்பும்
    அமைந்திருக்கும்.

    மேடையில்     நடிகர்கள்     குதித்துக்     கொண்டு
    ஆர்ப்பாட்டத்தோடு     அறிமுகம்     ஆவார்கள்.
    பின்பாட்டுக்காரர்களும் மிருதங்கம், ஆர்மோனியம், தபலோ
    போன்ற வாத்தியக்காரர்களும் மேடையில் ஒரு பக்கத்தில்
    அமர்ந்திருப்பார்கள். அவர்கள் வாத்திய இசைக்கு ஏற்ப
    நடிகர்கள் தாள அசைவுடன் ஆடியும், பாடியும் நடிப்பார்கள்.

    நடிகர்களுக்கும் இசைக்குழுவினருக்கும் இடையே ஏற்படும்
    இடைவேளையில் சமகாலச் செய்திகள் கூத்துக்குள் நுழைவதுண்டு.
    கூத்தில் ‘கோமாளி’ சிறப்பிடம் பெறுகிறான். (கோமாளி = தனது
    செய்கைகளினால் சிரிப்பை ஊட்டுபவன்.)

  • வீழ்ச்சி


  • தெருக்கூத்தின் நீண்ட கால அளவும், மக்களிடம் அடிக்கடி
    அறிமுகமான தெருக்கூத்துக் கதைகளில் ஏற்பட்ட சலிப்பும், புதிய
    கலை வடிவங்களின் வருகையும் தெருக்கூத்துக்கலையின் நலிவுக்கு
    வித்திடலாயின. ஒப்பனை, ஆடைகள், இசை போன்றவையும்
    பொருத்தமாக அமையாத தன்மை தெருக்கூத்தின் இயல்பு
    நிலையைக் குறைப்பதாக உள்ளது.

    இக்காலத்தில் தமிழகத்தின் வடபகுதியில் மட்டுமே
    செல்வாக்குப் பெற்ற கலையாகத் தெருக்கூத்துக் கலை விளங்கி
    வருகிறது. பிறபகுதிகளில் அவ்வப்போது மட்டுமே கூத்துகள்
    நடத்தப்பட்டு வருகின்றன.
    3.3.5 தெருக்கூத்தின் பயன்பாடு

    மக்களோடு     இயைந்த     கலையான தெருக்கூத்து
    எவ்வகையிலான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பதைப்
    பார்ப்போம்.

    தமிழுக்கான நல்லதொரு நாடக வடிவத்தினைத் தெருக்கூத்து
    பங்களிப்புச் செய்துள்ளது. இத்தெருக்கூத்தின் செல்வாக்கு
    இன்றைய மேடை நாடக வடிவத்திற்குள்ளும் வந்திருக்கிறது.

    தெருக்கூத்துக் கதைகளின் மூலங்கள் இன்றைய மேடை
    நாடகத்துக்கான அடிப்படைக் கதைக் கருவாக வடிவம்
    பெற்றுள்ளன. புதிய அறிவியல் கருத்துக்கள் கூட இவ்வாறு கூத்து
    வடிவில் மக்களிடம் கொண்டு செல்லப்படுகின்றன. மேலும்,
    தெருக்கூத்தில் இடம்     பெறும்     ‘அடவுகள்’ பாத்திரச்
    சித்திரிப்பிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. (அடவு = வைப்பு
    முறை)

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 05:52:12(இந்திய நேரம்)