Primary tabs
பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் தமிழ்
நாடக மேடை நல்லவர்களால் வெறுக்கப்படும் நிலைக்குத்
தள்ளப்பட்டது. கலைஞர்களிடையே
ஒற்றுமையின்மை,
வரையறுக்கப்படாத நாடக உரையாடல்கள், மேடையை
அருவருப்பான வார்த்தைகளால் அலங்கரித்த கோலம் முதலிய
யாவும் சீரழிவுக்கு வித்திட்டன. மேல் தட்டு மக்கள் தமிழ் நாடக
மேடையை நெருங்கவே அச்சம் கொண்டனர். அடித்தட்டு மக்கள்
கலைஞர்களின் கீழ்த்தரமான செய்கைகளைக் காண மேடையை
நெருங்கினர். கலைஞர்களும் அடித்தட்டு மக்களைக் கவரும்
வண்ணம் மேடையைக் கீழ்நிலைக்குக் கொண்டு சென்றனர். தமி்ழ்
நாடக மேடை தளர்வு கண்டது.
தமிழ் நாடக மேடையில் மேலே விவரிக்கப் பெற்ற நிலையை
மாற்றியமைக்க சங்கரதாசு சுவாமிகளும் சம்பந்த முதலியாரும்
மேற்கொண்ட முயற்சிகளை முந்தைய பாடத்தில் அறிந்து
கொண்டோம். இவற்றின் அடிப்படையில் தோற்றம் பெற்றதே
பாலர் சபை நாடக முறை என்னும் பரிசோதனை நாடக
முறையாகும்.
தமிழ் நாடக மேடையின் சீரமைப்புப் பணியினை
மேற்கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக விளங்கிய
சங்கரதாசு சுவாமிகளும், பம்மல் சம்பந்த முதலியாரும்
நல்லதொரு அடித்தளத்தினை அமைத்துத் தந்தார்கள். சங்கரதாசு
சுவாமிகள் மற்றும் சம்பந்த முதலியார் மேற்கொண்ட புது முயற்சி
தமிழ் நாடக மேடையில் வளமான தொடர் செயல்பாட்டுக்கு
வித்திட்டது. மேலும் மேனாட்டு நாடகங்களின் தாக்கம்,
மேனாட்டுக் கூத்துகளின் தாக்கம் போன்றன தமிழ் நாடகங்களின்
வடிவத்தில் புதிய மாற்றத்தினைக் கொணர்ந்தன. இவ்வகை
முயற்சிகள் யாவும் தமிழ் நாடகத்தின் மறுமலர்ச்சி்க்கு
வித்திட்டன.