தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.7 நாட்டுப்புற நம்பிக்கைகள்

1.7 நாட்டுப்புற நம்பிக்கைகள்


     நாட்டுப்புற மக்களால் வழிவழியாக     நம்பப் பட்டும்
பாதுகாக்கப் பட்டும் வருகின்ற நம்பிக்கைகளே     நாட்டுப்புற
நம்பிக்கைகளாகும். பெரும்பாலான நம்பிக்கைகள் நாட்டுப்புற
மக்களாலேயே உருவாக்கப் பட்டும் ஒரு     தலைமுறையினரிடம்
இருந்து அடுத்த தலைமுறையினருக்கு வழங்கப் பட்டும் வருகின்றன.

Belief     என்ற நம்பிக்கையே நாட்டுப்புற மக்களிடம் வேரூன்றிக்
காணப்படுகிறது. இது மரபின் முத்திரையாக, காரண காரியத்திற்கு இடம்
கொடாமல் வழிவழியாகப் பின்பற்றப் பட்டு வருகிறது. மனிதன் தாயின்
வயிற்றில் கருவாக இருப்பதில் இருந்து இறந்த பின் எரியூட்டப்படுவது
வரை; ஏன்? இறந்த பின்பும் கூட அவன் ஆவியாக அலைகின்றானா,
பேயாகத் திரிகின்றானா என்பது வரை, அனைத்து நிலைகளிலும்,
நாட்டுப்புற     மக்களிடம்     நம்பிக்கைகள்     நிறைந்துள்ளன.
இந்நம்பிக்கைகளுக்குப் பின்னால் ஏதேனும் ஒரு வலுவான
உளவியல் (Psychological) காரணம் இருப்பதையும் நாம் அறிய
முடியும்.


    ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்ற நம்பிக்கை ஒரு
மனிதனைத் தீமையைச் செய்ய விடாமல் தடுக்கிறது. சத்தியம்
தொடர்பான நம்பிக்கை கட்டுப்பாட்டை     வளர்க்கிறது. விதி,
தலையெழுத்து பற்றிய நம்பிக்கை மனத்தைத் தேற்றிக் கொள்ள
உதவுகிறது. இவ்வாறு உளவியல் ரீதியான சோகங்களுக்கு மருந்தாக
நம்பிக்கைகள் செயல்படுகின்றன.


    நாட்டுப்புற மரபில் நம்பிக்கை முடிச்சுகள் ஏராளம். நம்பிக்கைகளைத்
தொகுத்தால் ஏடு கொள்ளாது என்னும் அளவிற்கு அவை நிறைந்து
காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்குக் காண்போம்.

நாட்டுப்புற நம்பிக்கைகள்

நாள்
பற்றிய
நம்பிக்கை
சகுணம்
பற்றிய
நம்பிக்கை
கண்ணேறு
பற்றிய
நம்பிக்கை
சோதிடம்
பற்றிய
நம்பிக்கை

1.7.1 நாள்பற்றிய நம்பிக்கை


    ‘நாளும் கோளும் நலிந்தோர்க்கில்லை’ என்பது பழமொழி,
என்றாலும் நாட்டுப்புற மக்கள் எந்தத் தொழிலைத் தொடங்கினாலும்
நல்ல நேரம், நல்ல நாள், சூலம் (திசை பார்த்தல்) பார்த்துத்
தொடங்குவதில் பெருநம்பிக்கை கொண்டுள்ளனர். விதைப்பு, நடவு,
அறுவடை, சடங்குகள், வழிபாடு, பயணம், இறப்பு என்று
எல்லாவற்றிலும் நாள், நேரம் பார்க்கத் தவறுவதில்லை. நாள் நேரம்,
சரியில்லை என்றால் அச்செயலைச் செய்யாமலிருக்கத் தயங்குவதும்
இல்லை. இது பற்றிய நம்பிக்கைகள் சிலவற்றைக் காண்போமா?

புதன், வியாழன், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் திருமண
    நாள் குறிப்பது நல்லது.

திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் திருமணம் நடந்தால்
    துன்பம் நேரும்.

பிறந்த நாள் மற்றும் பிறந்த கிழமைகளில் திருமணம் நடந்தால்
    துன்பம் நேரும்.

சனிக்கிழமை முதன்முதலில் நோயாளிகள் மருந்து சாப்பிடக்
    கூடாது.

சனிக்கிழமை ஒரு வீட்டில் இறப்பு நேரின் அது தொடரும்.

திங்கள் கிழமை பயணம் மேற்கொள்வது தீமை தரும்.

திருமணமான பெண்ணை வெள்ளிக் கிழமையன்று கணவன்
    வீட்டிற்கு அனுப்பக் கூடாது.

எந்த நல்ல காரியத்தையும் மாலை நேரத்தில் தொடங்கக் கூடாது.


    இந்த நாள் இனிய நாள் என்று வரையறை செய்திருக்கும் நாட்டுப்புற
மக்களின் அனுபவ அறிவு வியந்து போற்றுவதற்கு உரியதாகும்.

1.7.2 சகுணம் பற்றிய நம்பிக்கை


    சகுணம் பற்றிய நம்பிக்கைகள் உலகமெங்கிலும் பரவலாகக்
காணப்படுகின்றன. தமிழ் இலக்கியங்கள் இதனை நிமித்தம் என்று
குறிப்பிடுகின்றன. நிமித்தம் என்பதற்கு ‘வாழ்வில் நிகழவிருக்கும்
நன்மை தீமைகளைச் சில நிகழ்வுகளின் வாயிலாக உணர்த்துவது’ என்று
விளக்கம் கூறப்படுகிறது. நற்செயலையும் நற்பயனையும் தெரிவிக்கும்
நிகழ்வினை (குறியினை) நன்நிமித்தம் என்றும், தீய செயல்களைத்
தெரிவிக்கும் நிகழ்வினைத் (குறியினை) தீநிமித்தம் என்றும்
வகைப்படுத்துவர். இதனையே நாட்டுப்புற மக்கள் நல்ல சகு
ம், கெட்ட
சகு
ம் என்று குறிப்பிடுகின்றனர். சகும் என்ற சொல் சயனம்,
சவனம் என்று பேச்சு வழக்கில் இடம்பெறுவதுண்டு. புதிதாக ஒரு
செயலைப் பலரும் சேர்ந்து மேற்கொள்ளும் நிலையிலும் தனிப்பட்ட
நிலையிலும் சகுணம் பார்க்கும் வழக்கம் உள்ளது.


     மனிதர்கள், மனிதர்களின் செயல்பாடுகள், பறவை, விலங்குகளின்
செயல்பாடுகள் ஆகியவற்றைக்     கொண்டு சகுணம் பற்றிய
நம்பிக்கைகளும் அவற்றின்     பலன்களும் அறியப்படுகின்றன.
பறவைகளில் காகம், கருடன், கூகை, ஆந்தை, வௌவால் போன்றவையும்
சகுணம் பற்றிய நம்பிக்கைகளில் பெரும்பங்கு
வகிக்கின்றன. இவற்றில் பல்லிச் சகுணம் பெருவழக்கில் உள்ளது.
இதனைக் கெவுலி (அ)கௌலி சொல்லுதல் என்றும் கூறுவதுண்டு. பல்லி
எந்தத் திசையிலிருந்து ஒலி எழுப்புகிறது. மனித உடலில் எப்பகுதியில்
விழுகிறது என்ற அடிப்படையில் பல்லிச் சகுணம் குறித்த பலன்கள்
தீர்மானிக்கப் படுகின்றன. நாட்டுப்புற மக்களின் தெய்வ வழிபாடுகளை
நிர்ணயிப்பதில் பல்லிச் சகுணத்தின் பங்கு மிகவும் குறிப்பிடத்
தக்கதாகும். சகுணம் பற்றிய நம்பிக்கைகள் சிலவற்றைக் காண்போம்.


காலையில் சுமங்கலிப் பெண்கள் முகத்தில் விழிப்பது நல்லது.

பயணம் போகும்போது அழுக்குத் துணியோடு வரும்
    வண்ணாரைக் காண்பது நல்லது.

காகம் இடப் பக்கமிருந்து வலப் பக்கம் பறந்து செல்வதைப்
    பார்த்தால் நல்லது.

வௌவால் வீட்டில் பறந்தால் தீமை வரும்.

காகம் கரைந்தால் விருந்தினர் வருவர்.

நாய் ஓலமிட்டால் மரணம் நேரும்.

பல்லி தலையில் விழுந்தால் மரணம் நிகழும்.

பல்லி உடலில் விழுந்தால் ஆயுள் கூடும்.

பல்லி மேற்குத் திசையிலிருந்து ஒலி எழுப்பினால் நல்லது
    நடக்கும்.

நாட்டுப்புற     நம்பிக்கைகளில் சகுணம் பற்றிய நம்பிக்கைகளே
அதிகம் எனலாம்.

1.7.3 கனவு பற்றிய நம்பிக்கை


    கனவு என்பது மனிதனின் தூக்கத்தில் உலாவரும் உள்மன
வெளிப்பாடாகும். கனவு காணாத மனிதனே இல்லை என்னும்
அளவிற்கு மனிதனின் இயல்பான செயலாய் இது இருந்து வருகிறது.
சிலர் கனவு காண்பதிலேயே பொழுதைக் கழிப்பார்கள். நீங்கள் எப்படி?
வாழ்வில் பின்னர் நிகழப்போவதைக் குறிப்பால் உணர்த்தும் ஒன்றாகக்
கனவு நம்பப்படுகிறது. கனவில் வரும் நிகழ்வின் அடிப்படையில் நல்ல
கனவு, கெட்ட கனவு என்று பாகுபடுத்தப்படும். இதில் வேடிக்கை
என்னவென்றால் கனவில் நல்லது நிகழ்ந்தால் வாழ்க்கையில் அதற்கு
நேர்மாறாகத் தீயது நடக்கும். கனவில் தீயது நிகழ்ந்தால் வாழ்க்கையில்
நல்லது நடக்கும். இது கனவு நம்பிக்கைகளுக்கு மட்டுமே உரிய சிறப்புத்
தன்மையாகும். நாட்டுப்புற மக்களிடம் கனவு குறித்த நம்பிக்கைகள்
நிறைந்து காணப்படுகின்றன. கனவு நிகழ்வுகளோடு நனவு நிகழ்வுகளைப்
பொருத்திப் பார்த்து வியந்து பேசும் வழக்கமும் மக்களிடம் உள்ளது.
உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃபிராய்டின் ஆய்வுகள் கனவுகளையே
அடிப்படையாகக் கொண்டவை என்பது இங்கு அறியத் தக்கதாகும்.
கனவு பற்றிய நம்பிக்கைகள் சிலவற்றைப் படித்துப் பாருங்கள்.

ஏர் உழுவதாகக் கனவு கண்டால் எடுத்த காரியங்கள் தாமதமாகும்.

திருமணம் பற்றிக் கனவு கண்டால் தீயது நடக்கும்.

கனவில் தாமே இறந்துவிட்டதாகக் கனவு கண்டால் ஆயுள்
    பெருகும்.

மரணத்தைக் கனவில் கண்டால் சுகமாகும்.

இறந்தோர் கனவில் வந்து அழைத்தால் மரணம் வரும்.

கனவில் கோயிலைக் கண்டால் குடும்பத்தில் சண்டை வரும்.

வீடு தீப்பற்றி எரிவது போல் கனவு கண்டால் செல்வம் பெருகும்.

பெண்கள் கனவில் தண்ணீரைக் கண்டால் குழந்தை பிறக்கும்.

அதிகாலையில் காணும் கனவு பலிக்கும்.

நல்ல கனவு கண்டு விழித்தால் பின் தூங்கக் கூடாது.


     உங்கள் கனவுகளை நினைவுபடுத்திப் பாருங்கள். காரண
காரியங்களை நீங்களே அறிய முயலுங்கள்.


1.7.4 கண்ணேறு பற்றிய நம்பிக்கைகள்


    ‘கல்லெறிக்குத்    தப்பினாலும்     தப்பலாம்.    கண்ணெறிக்குத்
தப்ப முடியாது’ என்பது கண்ணேறு குறித்த பழமொழியாகும். சிலரது
பார்வை தீங்கை விளைவிக்கக் கூடியது என்றும் அதனால் ஏற்படும்
பாதிப்பே கண்ணேறு என்றும் கூறப்படுகிறது. இது கண்திருஷ்டி,
கந்தட்டி, திட்டி, கண்ணடி
என்று நாட்டுப்புற மக்களால்
வழங்கப்படுகிறது. கதிர் நன்றாக விளைந்திருக்கும் வயலில் கண்ணேறு
படாமல் இருக்க உயரமான திருஷ்டிப் பொம்மை வைத்திருப்பது,
புதிதாகக் கட்டிய வீட்டின் முன்பு திருஷ்டிப் பூசணியைப் பெரிய
பூசணிக் காயில் கோரமான உருவத்தை     வரைந்து கட்டித்
தொங்கவிடுவது, குழந்தைகளுக்குக் கண்ணேறு படாமல் இருக்கக்
கன்னத்தில் பெரிய கறுப்புப் பொட்டு வைப்பது போன்றவை
கண்ணேறு பற்றிய நம்பிக்கைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்
படுபவை ஆகும்.

குழந்தைகளை யானையின் மீது அமர வைத்தால் அவர்களுக்குப்
    பட்ட கண்ணேறு கழியும்.

குழந்தைகளில் கையில் யானையின் வால் முடியைக்
    கட்டினால் கண்ணேறு கழியும்.

கண்ணேறு பட்ட குழந்தைகளுக்குச் சூடம், உப்பு, எலுமிச்சம்
    பழத்தால் திருஷ்டி சுற்றிப் போட வேண்டும். காலடி மண்,
    உப்பு, மிளகாய் கொண்டு திருஷ்டி சுற்றி நெருப்பில் போடுவர்.

கடை வியாபாரம் முடிந்து வெளியேறும் நிலையில் சூடம் ஏற்றி
    வைத்தால் கண்ணேறு படாது.

வியாபார நிறுவனங்களில் கழுதையின் படம் வைத்தால்
    கண்ணேறு படாது. இவை கண்ணேறு பற்றிய நம்பிக்கைகள்
    ஆகும்.


1.7.5 சோதிடம் பற்றிய நம்பிக்கை


    ‘சோத என்ற ஆன்மா இடம் என்ற உடலில் தங்கி எவ்வளவு காலம்
தன் விளையாட்டை எவ்விதங்களில் நடத்துகிறது என்பதை அறியும்
கலையே சோதிடக் கலை’ என்று கூறுவதுண்டு.


    சோதிடம் குறித்த நம்பிக்கை நாட்டுப்புற மக்களிடம் பரவலாகக்
காணப்படுகிறது. குறி சொல்வோர், கைரேகை பார்ப்போர், ஏடு
போட்டுப் பார்ப்போர், கிளி சோதிடம் கூறுவோர், சாமக் கோடாங்கிகள்
போன்றோர் கிராமத்துத் தெருக்களில் வலம் வருவதை இயல்பாகக்
காணலாம். இவை ஒவ்வொன்றிலும் பல்வேறு வகையான நம்பிக்கைகள்
பொதிந்துள்ளன. சோதிடர்களுடன் நேருக்கு நேர் உரையாடித்
தங்களின் சுக துக்கங்களுக்கு வடிகால் தேடும் முறையாகச் சோதிட
நம்பிக்கை விளங்குகிறது. சோதிடத்தால் இறந்த காலம், நிகழ்காலம்,
எதிர்காலம் குறித்த பலன்களை அறிய முடியும். அதற்கேற்பத் தம்
வாழ்க்கைப் போக்குகளை மாற்றிக் கொள்ள முடியும் என்று
நம்புகின்றனர். சோதிடத்தில் கிளி என்ற பறவையும் பயன்படுத்தப்
படுவதுண்டு. இது கிளி சோதிடம் எனப்படும். கிளி எடுத்துக்
கொடுக்கும் துண்டுச் சீட்டில் இடம்பெறும் படங்களின் அடிப்படையில்
பலன்கள் எடுத்துரைக்கப்படும். இத்தகைய சோதிட முறைகள்
மனிதனின் மனக் குழப்பங்களைத் தீர்க்கும் வடிகாலாக மன இருள்
அகற்றும் நம்பிக்கை விளக்காக விளங்குகின்றன என்றால்
மிகையாகாது.


     சோதிடத்தில் எடுத்துரைக்கப்படும் தீய பலன்களைப் போக்க,
அதற்கான பரிகாரங்களை மேற்கொள்ளும் வழக்கமும் காணப்படுகிறது.
சோதிடம் குறித்த நம்பிக்கைகளை இங்குக் காண்போம்.


பரணி நட்சத்திரத்தில் பிறந்தவன் தரணி ஆள்வான்.

ரோகிணி நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் மாமனுக்கு ஆகாது.

செவ்வாய் தோசமுள்ள ஆணும் பெண்ணும் திருமணம் செய்தால்
    நல்லது.

முருகன் வள்ளி தெய்வானையோடு காட்சியளிக்கும் படம் வந்தால்
    சோதிடம் பார்ப்பவர்க்கு இரு மனைவிகள் அமைவர்.


    சோதிட நம்பிக்கைகள் மனித மனக் குழப்பங்களுக்குத் தற்காலிகத்
தீர்வைத் தருகின்றன; ஆறுதலை அளிக்கின்றன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 07:29:15(இந்திய நேரம்)