தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

6-6.5 கைவினைக் கலைகளும் பண்பாடும்

6.5 கைவினைக் கலைகளும் பண்பாடும்


    நாட்டுப்புறக் கைவினைக் கலைப் பொருட்கள் கைவினைக்
கலைஞர்களின் படைப்புத் திறனை வெளிப்படுத்துவதோடு அவற்றைப்
பயன்படுத்தும் மக்களின் பண்பாட்டு அடையாளங்களாகவும்
விளங்குகின்றன. இக்கலைப் பொருட்கள் நாட்டுப்புற மக்களின்
பண்பாட்டுச் செயல்பாடுகளில் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதும்
இங்குச் சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

மங்கலப் பொருள்


    
நாட்டுப்புற மக்களின் திருமணங்களில் மணமேடையில் மண்ணால்
செய்த அரசாணிப் பானை மங்கலப் பொருளாக வைத்து வழிபடப் படுகிறது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் திருமணத்தின் போது மங்கலப்
பொருட்களையும் பட்டுச் சேலையையும் வண்ண ஓலைப் பெட்டிகளில்
வைத்து எடுத்துச் செல்வதையே இன்றும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
மேலும் திருமணத்தில் கலந்து கொள்வோருக்கு அழகிய வண்ண ஓலை
விசிறி, பூக்கூடைகளைப் பரிசாகக் கொடுத்து மரியாதை செய்யும்
வழக்கமும் கொடுத்தனுப்பும் மரபும் காணப்படுகிறது. மேற்கூறியவை
எல்லாம் கைவினைக் கலைகள் பண்பாட்டோடு இரண்டறக்
கலந்துள்ளதற்குச் சான்று கூறுபவையாகும். விநாயக சதுர்த்தியன்று
களிமண்ணால் விநாயகர் உருவம் செய்து வழிபடும் வழக்கமும்
உள்ளது. ‘பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது’ என்ற பழமொழி
இதன்பொருட்டு உருவானதே ஆகும்.

காணிக்கை


    நாட்டுப்புற மக்களால் காவல் தெய்வமாக வணங்கப்படும் அய்யனார்
வழிபாட்டின் போது குதிரை எடுப்பு விழா நடைபெறும். மண்ணால்
செய்யப்பட்ட குதிரைகளை     அய்யனாருக்குக் காணிக்கையாகச்
செலுத்துவதே இவ்விழாவின் அடிப்படை நோக்கமாகும். ஒவ்வொரு
ஆண்டும் இவ்விழா தவறாமல் நடைபெறும். ஆண்டு தோறும் புதிய
சுடுமண் குதிரைகள் காணிக்கை ஆக்கப்படும்.

நம்பிக்கை


    தச்சர்கள் மரவேலையைத் தொடங்குவதற்கு முன்பு தச்சுக்
கழித்தல்
என்ற சடங்கை மேற்கொள்கின்றனர். இச்சடங்கு
செய்யப்படுவதால் மரங்களில் உள்ள பேய், பிசாசு போன்ற கெட்ட
ஆவிகள் வெளியேறிவிடும் என்ற நம்பிக்கை தச்சர்களிடம்
காணப்படுகிறது. திருமணமாகி நீண்ட நாட்களாகக் குழந்தைப் பேறு
இல்லாதவர்கள் மரப்பாச்சிப் பொம்மைகளை வாங்கிக் கோயில்களில்
உள்ள தல விருட்சங்களில் தொட்டில் கட்டியோ, ஊஞ்சல் கட்டியோ
வழிபட்டால் குழந்தைப் பேறு கிட்டும் என்ற நம்பிக்கை இருந்து
வருகிறது.

இறப்புச் சடங்கு
 


    இறப்புச் சடங்கில் மண்ணாலான கொள்ளிக் குடம் உடைக்கும்
சடங்கு இடம் பெறுவது அறியத் தக்கதாகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 07:39:13(இந்திய நேரம்)