தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4-6:3-கற்பைப் பொதுவில் வைப்போம்

6:3 கற்பைப் பொதுவில் வைப்போம்  

ஐரோப்பாவில் 'விடுதலைக் காதல்'(Free Love) என்னும்
கொள்கையைக் கடைப்பிடிப்போர் ஒரு சாரார் உள்ளனர்.
'மாதர் எல்லாம் தம்முடைய விருப்பின் வண்ணம்
மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார்: பிரியம் வந்தால்
கலந்தன்பு
பிரிந்துவிட்டால் வேதனை ஒன்றில்லாதே பிரிந்து சென்று வேறொருவன் தனைக் கூட வேண்டும் என்பார்.'
என்பது அவர்களின் காதல் கொள்கை. பாரதியாருக்கு
இக்கொள்கையில் சிறிதும் உடன்பாடு இல்லை. இக் காதலைப்
'பொய்மைக் காதல்' என்றும், இக் கொள்கையினரை 'வீரமிலா
மனிதர்' என்றும் 'பாரதி அறுபத்தா'றில்(54) அவர் கடுமையாகச்
சாடுகின்றார். அத்துடன், ஒருபுறம் பெண் இன்பத்தை
நுகர்வதையே நோக்கமாகக் கொண்டு, மறுபுறம் கற்பை
உபதேசிக்கும் ஆண்களைப் பார்த்து - அவர் கூரிய கேள்விக்
கணை ஒன்றைத் தொடுக்கின்றார்.

ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால்
அப்போது பெண்மையும் கற்பு அழிந் திடாதோ?
நாணற்ற வார்த்தை அன்றோ? வீட்டைச் சுட்டால்
நலமான கூரையும் தான்எரிந் திடாதோ?

(பாரதி அறுபத்தாறு, : 56)

என்பதே பாரதியார் ஆணினத்தை நோக்கித் தொடுக்கும் கூரிய,
பொருள் பொதிந்த கேள்விக்கணை ஆகும்.

ஒரு பெண்ணின் கற்பு போற்றிப்
பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், அதற்கு
அவளைச் சார்ந்த ஆணும் கற்புடையவனாக
இருக்கவேண்டும்; ஆண் தனது கற்பு
நெறியைக் கைவிட்டுத் தவறு செய்ய
முற்பட்டால், அப்போது பெண்ணின் கற்பும்
பிழைபடும். இக் கருத்தினை விளக்குவதற்குப்
பாரதியார் ஓர் எளிய உவமையைக்
கையாண்டுள்ளார். ஒரு வீடு தீப்பற்றி எரிகிறது என்றால், அதன் கூரையும் தான் அதனுடன் சேர்ந்து பற்றி எரியும்;முடிவில் அழியும். அது போல் தான் ஓர் ஆணின் ஒழுக்கக் குறைபாடு,அவனைச் சார்ந்த பெண்ணின் வாழ்விலும் இழுக்கத்தை ஏற்படுத்தவே செய்யும்.

எனவே, பாரதியாரின் கருத்தில் கற்பு என்பது பெண்ணுக்கு
மட்டும் உரியதன்று; ஆண், பெண் இருவருக்கும் கட்டாயம்
இருக்க வேண்டிய ஒன்றே ஆகும். இந்நிலையில், 'கற்பு'என்ற
ஒற்றைச்சொல்லால் சுட்டாமல், 'கற்பு நிலை' என்ற ஒரு புதிய
தொடரைக் கையாண்டுள்ளார் பாரதியார்.

கற்பு நிலை என்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்

(பெண்கள் விடுதலைக்கும்மி, செய்யுள் : 5)

என்பது அவர் இசைக்கும் புதிய 'பெண்கள் விடுதலைக் கும்மி'
ஆகும். இங்கே கற்பினை ஆண், பெண் இருவருக்கும்
பொதுவாக்கி - 'கற்பு நிலை' என்ற ஒரு பொருள் பொதிந்த
சொல்லினை உருவாக்கியுள்ளார் கவியரசர்.

ஆண் ஒழுக்கம் தவறினால், பெண் எப்படி அதைப்
பேண முடியும்?

கவிதையில் மட்டுமன்றி, கட்டுரையிலும் பாரதியார் கற்புநெறி
பற்றிய தம் கருத்தினைப் பதிவு செய்துள்ளார். சான்றாக, 'மாதர்'
பகுதியில் 'பதிவிரதை'என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள ஒரு
கட்டுரையை இங்கே சுட்டிக்காட்டலாம். அதில் அவர்,'ஒழுக்க
நெறி என்பது ஆண் - பெண் இருவருக்கும் பொதுவானது;
பெண்ணின் ஒழுக்கம் பேணப்பட வேண்டும் என்றால், அதற்கு
ஆணும் ஒழுக்கம் தவறாமல் இருக்க வேண்டும் என்ற கருத்தைத்
தமக்கே உரிய பாணியில் தருக்க நெறியைப் பின்பற்றி
வெளியிட்டுள்ளார்; ஆண்களின் பரத்தைமை இழுக்கத்தைக்
கடுமையாகச் சாடியுள்ளார். இதோ, பாரதியாரின் சொற்களிலேயே
அக் கருத்தினைக் காண்போம்:

'ஸ்திரீகள் பதிவிரதையாக இருக்க வேண்டும்' என்று
எல்லோரும் விரும்புகிறார்கள். அதிலே கஷ்டம்
என்னவென்றால், ஆண் பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை.
ஆண் மக்களில் ஒவ்வொருவனும் தன் மனைவி, மக்கள்
பதிவிரதைகளாக இருக்க வேண்டுமென்பதில் எத்தனை
ஆவலோடு இருக்கிறானோ, அத்தனை ஆவல் இதர
ஸ்திரீகளின் பதிவிரத்யத்திலே காட்டுவதில்லை. . .

அட, பரம மூடர்களா! ஆண் பிள்ளைகள் தவறினால்
ஸ்திரீகள் எப்படிப் பதிவிரதையாக இருக்க முடியும்?
கற்பனைக் கணக்குப் போட்டுப் பார்ப்போம்.
ஒரு பட்டணத்தில் லக்ஷம் ஜனங்கள். ஐம்பதினாயிரம் பேர்
ஆண்கள், ஐம்பதினாயிரம் பேர் பெண்கள். அதில்
நாற்பத்தையாயிரம் ஆண்கள் பரஸ்திரீகளை இச்சிப்பதாக
வைத்துக் கொள்வோம். அதிலிருந்து குறைந்த பக்ஷம்
நாற்பத்தையாயிரம் ஸ்திரீகள் பர புருஷர்களின்
இச்சைக்கிடமாக வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் இருபதனாயிரம் புருஷர்கள் தம்
இச்சையை ஓரளவு நிறைவேற்றுவதாக வைத்துக் கொள்வோம்.
எனவே, குறைந்த பக்ஷம் இருபதனாயிரம் ஸ்திரீகள்
வ்யபசாரிகளாக இருத்தல் அவசியமாகிறது.
"

(பாரதியார் கட்டுரைகள், பக். 131 - 132)

'அட, பரம மூடர்களா! ' - எத்துணைக் கடுமையான, காரமான,
காட்டமான சாடல் கவனித்தீர்களா?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 07:42:36(இந்திய நேரம்)