Primary tabs
அரசியல், சமூக, பொருளாதார விடுதலைகளுக்குத் தந்துள்ள முதன்மையைப் பாரதியார் பெண் விடுதலைக்கும் தந்துள்ளார், 'பெண் விடுதலை', 'பெண்கள் விடுதலைக் கும்மி' எனக் கவிதையில் பாடிய அவர், 'பெண் விடுதலை' என்ற தலைப்பில் மூன்று தொடர் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை
கற்பு நெறியை ஆண், பெண் இருவர்க்கும் பொதுவாக்கிக் 'கற்பு
நிலை' என்று கவிதைகளில் பாரதியார் பாடினார். தம் கட்டுரைகளிலும் கதைகளிலும்
பெண்களுக்கு எதிராக ஆண்கள் செய்யும் பலவிதமான கொடுமைகளைக் குறித்தும் விரிவாக
எழுதியுள்ளார், பெண்களுக்குக் கொடுமைகள் புரியும்
ஆண்களைக் கடுமையாகச் சாடியுள்ளார். "அவர்களைச் செக்கு மாடுகளாகப் பாவிப்போர்
ஒரு திறத்தார். பஞ்சுத் தலையணைகளாகக் கருதுவோர் மற்றொரு திறத்தார். இரண்டும்பிழை";
(பாரதியார் கட்டுரைகள், பக்.129) என 'மாதர்' பகுதியில் 'தமிழ்நாட்டின்
விழிப்பு' என்ற தலைப்பில் எழுதி
உள்ளார். பெண்ணைப் பற்றிய ஆண்களின் பிழையான நோக்கினைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், அதே கட்டுரையின் வேறு ஓர் இடத்தில் "இன்று தமிழ்நாட்டில் மாத்திரமேயல்லாது
பூ மண்டல முழுதிலும், பெண்ணைத் தாழ்வாகவும் ஆணை மலோகவும் கருதி நடத்தும்
முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு; அது துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம்;
அநீதிகளுக்கெல்லாம் கோட்டை; கலியுகத்திற்குப் பிறப்பிடம்"(பக். 130)
எனக் கூறியுள்ளார். அவரது நோக்கில், "விவாகம் செய்துகொண்ட புருஷனுக்கு
ஸ்திரீ அடிமையில்லை; உயிர்த்துணை; வாழ்க்கைக்கு ஊன்றுகோல்; ஜீவனிலே ஒரு பகுதி;
சிவனும் பார்வதியும் போலே, விஷ்ணுவும் லட்சுமியும் போலே விளங்குகிறார்கள்".
(பாரதியார் கட்டுரைகள், பக். 130).
விதவா விவாகம் செய்யத்தக்கது
இனி,பாரதியாரின் கதைகளில் இடம்பெற்றுள்ள பெண்ணியச் சிந்தனைகளைக் குறித்துக் காண்போம். அவரது 'சந்திரிகையின் கதை' இவ்வகையில் முதலில் குறிப்பிடத்தக்கது. இதில் வரும் விசாலாட்சிக்கு வயது இருபத்தைந்து. பத்து வயதில் கன்னிப் பருவத்தில் விதவையான இளம்பெண் அவள். அவளது அண்ணன் மனைவியான கோமதி இறக்கும் தருவாயில் அவளிடம் கூறும் உருக்கமான சொற்கள் வருமாறு:
(பாரதியார் கதைகள், பக். 170)
கோமதி கூறிய இவ்வறிவுரைகளின் படி விசாலாட்சி தக்க ஆண்மகன் ஒருவனிடம் தன் வாழ்க்கையை ஒப்படைக்க விரும்பி, அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறாள்; ஆனால், அம் முயற்சியின் போது, அவள் எதிர்கொள்ளும் அனுபவங்கள் மிகமிகக் கசப்பானவையாகவே அமைகின்றன. இதோ, கதையின் பிற்பகுதியில் பாரதியாரே விசாலாட்சியின் அனுபவங்களைக் குறித்துப் பின்வருமாறு எழுதுகிறார்:
"அவரிடம் (தாயுடன் பிறந்த மாமன்) பணத்தை வாங்கிக்கொண்டு விசாலாட்சி புறப்பட்டு வழி நெடுக ஸ்தல யாத்திரை செய்த சமயத்தில் அவளுடைய கற்பையழிக்கவும், அவள் கையிலிருந்த பணத்தை அபகரித்துக் கொள்ளவும், அல்லது அவ்விரண்டு வகை பாதகச் செயல்களையும் கலந்து செய்யவும் பல ஆண் மக்கள் முயன்றனர். ஆனால் அவளை சாஸ்த்ரோக்தமாக (சாத்திர நெறிக்கு ஏற்றாற்போல) விவாகம்செய்து கொண்டு அவளுடன் சதிபதியாக (கணவன் மனைவியாக) வாழக்கூடியவனாக அவளுக்கு எவனும் தென்படவில்லை"
(பாரதியார் கதைகள், பக். 222).
'சந்திரிகையின் கதை'யில் இடம்பெறும்
மேற்குறித்த இரு
பகுதிகளின்வாயிலாகப் புலனாகும் பாரதியாரின் உள்ளக்
கருத்துகள் இரண்டு. அவை வருமாறு:
1. பாரதியாருக்குக் கைம்பெண் மறுமணத்தில்
- (விதவா
விவாகத்தில்) உடன்பாடு உள்ளது. 'சந்திரிகையின் கதை'யில்,
'வதவா விவாகம் செய்யத்தக்கது' என வரும் கோமதியின்
கூற்றின் வாயிலாக இதனை உணர முடிகின்றது.
2. பெண்களுக்கு எதிராகச் சுயநல உணர்வோடு ஆண்
மக்கள்
எழுதி வைத்திருக்கும் கருத்துகளையும் ('நீசத்தனமான சுயநல
சாஸ்திரம்)'பெண்களின் கற்பைச் சூறையாட நினைத்து ஆண்கள்
செய்யும் பலவிதமான கொடுஞ் செயல்களையும் எண்ணும்போது
பாரதியாரின் உள்ளத்தில் ஆத்திரமும் கோபமும்
பொங்கி
எழுகின்றன.
6:5:1 பெண் விடுதலைக்காகச் செய்ய வேண்டுவன
தமது கட்டுரைகளில் பாரதியார்
பெண்களுக்கு விடுதலை
கொடுக்கும் வகையில் செய்யத்தக்கன எவை, செய்யத்தகாதன
எவை என்பவற்றை - அக்காலச் சூழ்நிலையின் அடிப்படையில்
விவரித்துள்ளார்.விருப்பமில்லாத விவாகம், குழந்தைத் திருமணம்
- இவை கூடாது என்கிறார். விவாகத்திற்குப்பின் விரும்பினால்
கணவனைவிட்டு விலகவும் அல்லது விவாகமே செய்யாமல்,
சுயமாகத் தொழில் செய்து கௌரவமாக வாழவும் பெண்களுக்கு
உரிமை தர வேண்டும் என்கிறார். கணவனைத் தவிர வேறு
ஆடவருடன் பேசக்கூடாது என்ற நிபந்தனையை ஒழிக்க
வேண்டும் என்கிறார். பெண்களுக்கும் தந்தையர் வழிச்சொத்தில்
சமபங்கும், உயர்கல்வி பயிலும் உரிமையும், அரசு அலுவலகப்
பணிகளை ஏற்கும் உரிமையும் கொடுக்க வேண்டும் என்று
கூறுகிறார்.
"ஸ்திரீகளை மிருகங்களாக
வைத்து நாம் மாத்திரம்
மஹரிஷிகளாக முயலுதல் மூடத்தனம். பெண் உயராவிட்டால்
ஆண் உயராது" (பக். 141-142) என்னும் முத்தாய்ப்பான கருத்துடன்
அக் கட்டுரையை முடித்துள்ளார் கவியரசர்.
ஆணுக்குச் சமமான கல்வி
'ஆண்மக்கள் பெண்மக்களைத்
தங்களுக்குச் சரிநிகர்
சமானமாக எப்போது மதிப்பார்கள்? வேறு வகையாகக் கூறினால்,
ஆண்கள் தங்களைத் தக்கபடி மதிக்க வேண்டும் என்றால்
பெண்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்கிறீர்களா?
இதோ, பாரதியாரே 'தமிழ்நாட்டு மாதருக்கு'என்ற கட்டுரையில்
இவ்வினாவுக்கான விடையினைக் கூறியுள்ளார்.
அவர்
தமிழ்நாட்டு மாதருக்கு விடுக்கும் செய்தி (Message) இதுதான்:
"ஆண்களுக்கு ஸமமான கல்வித் திறமை பெண்களுக்குப்
பொதுப்படையாக ஏற்படும்வரை, ஆண்மக்கள்
பெண்மக்களைத் தக்கபடிமதிக்க மாட்டார்கள்;தாழ்வாகவே
நடத்துவார்கள்"
(பாரதியார் கட்டுரைகள், பக். 156).
இதே கருத்தை வேறு வடிவில் பாரதியார்
தம் கவிதையிலும்
அறிவிக்கக் காண்கிறோம்:
பெண்ணுக்கு
ஞானத்தை வைத்தான்- புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சிலமூடர் - நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்.
கண்கள்
இரண்டினில் ஒன்றைக் - குத்தி
காட்சி கெடுத்திடலாமோ?
பெண்கள் அறிவை
வளர்த்தால் - வையம்
பேதமை யற்றிடும் காணீர்
(முரசு. 9, 10)
'பெண்கள் அறிவை வளர்த்தால் இந்த வையகம் பேதைமை
அற்றிடும்' என்பது பாரதியாரின் அழுத்தம் திருத்தமான
-
ஆணித்தரமான - கருத்து.
தர்மயுத்தம்
தங்களுக்கு எதிராகக் கொடுமைகளும் பாதகங்களும்
செய்யும்
ஆண்மக்களைப் பெண்கள் எப்படி எதிர்கொள்ளவேண்டும்
என்பது பற்றியும் பாரதியார் ஆழமாகச் சிந்தித்துள்ளார். இவ்
வகையில் தமிழப் பெண்கள் செய்யத் தக்கது யாது என்று அவர்
தம் கட்டுரை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
"நமக்கு அநீதி செய்யும் ஆண்
மக்களுடனே நாம்
அன்புத்தளைகளால் கட்டுண்டிருக்கிறோம். நமக்கு அவர்கள்
அண்ணன் தம்பிகளாகவும், மாமன் மைத்துனராகவும், தந்தை
பாட்டனாராகவும், கணவர் காதலராகவும்
வாய்த்திருக்கின்றனர். இவர்களை எதிர்த்துப் போர் செய்ய
வேண்டுமென்பதை நினைக்கும்போது, என்னுடைய மனம்,
குருகேஷத்ரத்தில் போர் தொடங்கியபோது அர்ஜுனனுடைய
மனது திகைத்ததுபோலே, திகைக்கிறது. ஆண்மக்களை நாம்
ஆயுதங்களால் எதிர்த்தல் நினைக்கத் தகாத காரியம். அது
பற்றியே 'சாத்வீக எதிர்ப்பி'னால் இவர்களுக்கு நல்ல புத்தி
வரும்படி செய்ய வேண்டுமென்று நான் சொல்கிறேன்"
(பாரதியார்கட்டுரைகள், பக். 144).
பாரதியார் இங்கே சுட்டும் 'சாத்வீக எதிர்ப்பு
முறை' என்றால்
என்ன என்று கேட்கிறீர்களா? இதோ, இவ் வினாவுக்கான தக்க
விடையினையும் அவரே தொடர்ந்து கூறுகின்றார். அவரது
சொற்களிலேயே அதனைக் காண்போம்‘:
" 'நான் எல்லா வகையிலும் உனக்குச் சமமாக வாழ்வதில்
உனக்குச் சம்மத முண்டானால் உன்னுடன் வாழ்வேன்.
இல்லாவிட்டால் இன்று இராத்திரி சமையல் செய்ய
மாட்டேன்.
எனக்கு வேண்டியதைப் பண்ணித் தின்று கொண்டிருப்பேன்.
உனக்குச் சோறு போட மாட்டேன்.
நீ அடித்து
வெளியே தள்ளினால் ரஸ்தாவில் கிடந்து சாவேன்.இந்த வீடு
என்னுடையது. இதை விட்டு வெளியேறவும் மாட்டேன்'என்று
கண்டிப்பாகச் சொல்லிவிடவும் வேண்டும். இங்ஙனம் கூறும்
தீர்மான வார்த்தையை, இந்திரிய இன்பங்களை
விரும்பியேனும், நகை,துணி முதலிய வீண் டம்பங்களை
இச்சித்தேனும்(விரும்பியேனும்), நிலையற்ற உயிர் வாழ்வைப்
பெரிதாகப் பாராட்டியேனும் மாற்றக்கூடாது. .. நமக்கு
நம்முடைய புருஷர்களாலும், புருஷ சமூகத்தாராலும்
ஏற்படக்கூடிய கொடுமைகள் எத்தனையோ யாயினும்,
எத்தன்மை யுடையனவாயினும் அவற்றால் நமக்கு மரணமே
நேரிடினும், நாம் அஞ்சக்கூடாது. . .ஆறிலும் சாவு, நூறிலும்
சாவு. தர்மத்துக்காக மடிகிறவர்களும்
மடியத்தான்
செய்கிறார்கள்; ஸாமான்ய ஜனங்களும்
மடியத்தான்
செய்கிறார்கள். ஆதலால்
ஸஹோதரிகளே, பெண்
விடுதலைக்காக இந்த க்ஷணத்திலேயே
தர்ம யுத்தம்
தொடங்குங்கள். நாம் வெற்றி
பெறுவோம். நமக்கு
மஹாசக்தி துணைசெய்வாள்"
(பாரதியார்கட்டுரைகள், பக்.145).
இன்றைக்கு நாம் காணும் பெண்களின்
சமூக நிலை வேறு,
பாரதியார் காலத்தில் இருந்த சமூக நிலை வேறு, இடையில்
ஏற்பட்டுள்ள மாற்றம் ஏற்புடைய ஒன்று. இம்மாற்றத்திற்குக்
காரணமாக எத்தனை பேர் பாரதியின் அறிவுரையைப் பின்பற்றி
தர்ம யுத்தம் செய்தார்கள் என்பது சொல்ல முடியாது.
தர்ம
யுத்தங்கள் நடந்தனவோ இல்லையோ, பாரதியின் வார்த்தைக்
கூர்மையும்,பாரதி போன்றோரின் செயல் ஆர்வமும், மக்களுடைய
உணர்வுகளையும் எண்ணங்களையும் ஏற்புடையதாக மாற்ற
உதவின என்பது உண்மை.