தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

4-4:1-புதுவையில் பாரதி

4.1 புதுவையில் பாரதி

சுப்பிரமணிய பாரதியார் சென்னையை விட்டுப் புதுவைக்குச் (புதுச்சேரி) செல்ல வேண்டிய சூழல் - 1908 ஆம் ஆண்டு ஏற்பட்டது. 1906 - ஆம் ஆண்டு மே மாதத்தில் சென்னையில் தோற்றுவிக்கப்பட்ட ‘இந்தியா’ பத்திரிகையில் பாரதியாரின் கனல் தெறிக்கும் கட்டுரைகள் வெளிவந்தன. இந்தியா பத்திரிகை தமிழ் நாடெங்கும், புதுவையிலும் பரவலாகப் பலரால் படிக்கப் பெற்றுப் பாரதியாரின் புகழ் பரவியது. இந்த நிலையில், தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியரின் தடையுத்தரவை மீறிக் கூட்டம் நடத்தியதற்காக வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்பிரமணிய சிவாவும் 12.03.1908 - இல் கைது செய்யப்பட்டுப் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலிப் பகுதிகளில் கொந்தளிப்பு ஏற்பட்டது. திருநெல்வேலியில் பெரும் கலவரம் எழுந்தது குறித்து 29.03.1908 அன்று சென்னையில்
நடந்த அனுதாபக் கூட்டம் ஒன்றில் பாரதியார் பேசினார்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி திரட்டும் முயற்சியில் இறங்கினார். பாரதி அந்த அனுதாபக் கூட்டத்தில்,

"திருநெல்வேலியில் நடந்த அந்தக் கலவரம்
கடவுளின் செயலாகும். அது நாட்டிற்கு இறுதியில்
நன்மை பயக்கவே நடந்தது. அந்தக்
கலவரங்களில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
அவர்களுடைய பெண்டு பிள்ளைகள் மற்றும்
பெற்றோர்கள் இருந்தால் அவர்கள் உதவிக்கு

உரியவர்கள். எனவே அவர்களின் நிவாரண
நிதிக்கு இயன்றவரை நிதி கொடுத்து உதவ
வேண்டும்"

(மகாகவி பாரதி வரலாறு - சீனி.விசுவநாதன், பக்.319)

என்று பேசினார். தூத்துக்குடி, நெல்லை வழக்குத் தொடர்பாகப் பாரதியாரையும், ஆங்கிலேயரின் ஒற்றர் படை தொடர்ந்து கண்காணித்தது. அவர் பேச்சுகள் குறிப்பெடுக்கப்பட்டு மேலிடத்திற்கு அனுப்பப்பட்டன. நெல்லைக் கலவர வழக்கில் சாட்சியம் அளிக்க வழக்கு மன்றத்திலிருந்து பாரதியாருக்கு அழைப்பாணை (summon) அனுப்பப்பெற்றது. இந்தியா
பத்திரிகையில் அரசுக்கெதிரான செய்திகளை வெளியிட்டதற்காகவும் அயர்லாந்து நாட்டு விடுதலை இயக்கத்தின் புரட்சி ஏடான ‘காயலிக் அமெரிக்கன்’ என்பது இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதனை இரகசியமாக வரவழைத்ததற்காகவும் பாரதியைக் கைது செய்ய முடிவு செய்தது ஆங்கில அரசு. இந்நிலையில் பாரதியின் நண்பர்கள் பாரதி
அரசின் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக அவரைப் புதுவைக்கு அனுப்ப எண்ணினர். (புதுவை ஆங்கில ஆதிக்க எல்லைக்கு அப்பால், பிரெஞ்சு ஆதிக்க எல்லைக்குள் இருந்தது) பாரதி தொடக்கத்தில் உடன்படவில்லை. நண்பர்களின் வற்புறுத்தலும், கோவைச் சிறையிலிருந்து வ.உ.சிதம்பரம் பிள்ளை பாரதியைப் புதுவைக்குச் செல்லுமாறு அனுப்பிய செய்தியும் பாரதியைப் புதுவைக்கு அனுப்பி வைத்தன. 1908 - ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்தில் பாரதியார் புதுவையை அடைந்தார்.

பாரதியார் புதுவையில் பத்தாண்டுகள் வாழ்ந்தார். அங்கிருந்து ‘இந்தியா’ பத்திரிகையைப் பதினேழு மாதங்கள் நடத்தினார். இதோ அந்த ‘இந்தியா’ ஏட்டின் ஒரு பகுதியை நீங்கள் இங்குக் காணலாம். அரசாங்கத்தின் அடக்கு முறையால் புதுவையிலும் பாரதியாரால் ‘இந்தியா’ இதழை நடத்த முடியவில்லை. 12.03.1910 - ஆம் நாளோடு ‘இந்தியா’ பத்திரிகை வெளிவருவது நின்று போயிற்று.

4.1.1 பத்தாண்டுப் படைப்புகள்

பாரதியார் புதுவையில் தங்கியிருந்த காலத்தில் இந்தியா, கர்மயோகி, விஜயா, சூர்யோதயம் ஆகிய பத்திரிகைகளை நடத்தினார். எனினும் பத்திரிகைகள் தொடர்ந்து வெளிவரவில்லை. பத்திரிகைகள் நின்று போன நிலையில் பாரதியின் இலக்கியப் படைப்புகள் பல வெளிவந்தன.

பாரதி புதுவையில் இருந்த காலத்திலேயே சக்திப் பாடல்கள், வேதாந்தப் பாடல்கள், சுயசரிதை, பெண் விடுதலைப் பாடல்கள், வசன கவிதைகள் ஆகியன அவரால் எழுதப்பெற்றன. இவற்றுக்கு மலோக, பாரதியாரின் முப்பெரும் பாடல்களான கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியன புதுவையிலேயே உருவாயின.

4.1.2 உடலும் உள்ளமும்

புதுவையில் இருந்த காலத்தில் பாரதியாருக்கு நிறைய எழுத வேண்டும் என்று உள்ளம் துடித்தது. எனினும் உடலும், குடும்பப் பொருளாதாரமும் அத்துடிப்பை அடக்க முனைந்தன. அந்நிலையில் அவர் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் என்ற முப்பெரும் பாடல்களைப் படைத்தார். இவற்றைப் படைக்கும் போது அவர் எவ்வாறு இருந்தார்? அவர் உடலும் உள்ளமும் எவ்வாறிருந்தன? இதோ அவரே சொல்கிறார்:

"உடல் படுத்துக் கொண்டது. உடலை வைரம் போல
இலாகவம் உடையதாகவும், சிங்கத்தைப் போல
வலியுடையதாகவும் செய்ய வேணும். உடனே வசப்படா
விட்டால் இந்த உலகத்தில் வாழ்க்கை பெருந்துன்பந்தான்.
உடம்பே எழுந்து உட்காரு. உடம்பு எழுந்து விட்டது.
முதுகு கூறுகிறது. அந்த வழக்கத்தைத் தொலைத்து விட
வேண்டும்.

வயிறு வேதனை செய்கிறது உஷ்ண மிகுதியால். நோயற்று
இருப்பதற்குச் சக்தியை ஓயாமல் வேண்டிக் கொள் . . . .
மகனே, உடல் வெற்றி கொள்.அது எப்பொழுதும்
நீ சொன்ன படி கேட்க வேண்டும். அது சொன்னபடி நீ
கேட்கலாகாது. அது மிருகம்; நீ தேவன்.அது யந்திரம்;நீ
யந்திரி."


(இலாகவம் - எளிமை)

உடலைப் பற்றி இவ்வாறு அவர் நிறைய எழுதியுள்ளார்; மனத்தைப்
பற்றியும் அவர் எழுதுகிறார்.

"இந்த மனமாகிய கடலை வென்று விடுவேன்; பல
நாளாக இதை வெல்ல முயன்று வருகிறேன். இந்த
மனத்தை வெல்ல நான் படும் பாடு
தேவர்களுக்குத்தான் தெரியும். இதிலே ப்ராண பயம்,
வியாதி பயம், தெய்வ பக்திக் குறைவு, கர்வம், மமதை,
சோர்வு, முதலிய.... மிகுதிப்பட்டிருக்கின்றன. இவற்றை
ஒழித்து விட வேண்டும்".
 

(பாரதி - சித்தக்கடல்)

இவ்வாறு அவர் தம் உடலும் உள்ளமும் இருந்த நிலை பற்றிக் கூறுகின்றார். நோய், அச்சம், கடன்காரர் தொல்லை, வீட்டு வாடகை பாக்கி, நண்பர்கள் உற்றதுன்பம், நாட்டின் அடிமை நிலை ஆகிய இவற்றுக்கிடையே காவியங்கள் அல்லது நீண்ட பாடல்கள் தோன்றுமா? பாரதியின் உள்ளம் உடம்பை வென்றது. மெலிந்த உடலில் மெலியாத உள்ளம் வைரமாய் நின்று
இயக்கியது.

விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டியபடி செலும்உடல் கேட்டேன்
நசையறு மனம்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகம்கேட்டேன்

(தோத்திரப்பாடல் - கேட்பன - 2)

என்று பாரதியார் தமக்கு வேண்டும் உடலும் உள்ளமும் பற்றிக் குறிக்கின்றார். புதுவையிலிருந்த அக்காலத்தில் துன்பங்களுக்கிடையே காவியப் படைப்புகளுக்கும், ஞானத் தேடல்களுக்கும் அவருக்கு வாய்ப்புக் கிடைக்கச்செய்தது தெய்வத்தின் அருளேயாகும்.

4.1.3 ஞானத்தேடல்கள்

பாரதியார் புதுவையில் இருந்த காலத்தில் அவன் உள்ளம் தத்துவ ஆய்வுகளிலும், ஞானத் தேடல்களிலும் முழுகி முழுகி எழுந்தது. அரவிந்தரும், குள்ளச்சாமியும், கோவிந்தசாமியும், யாழ்ப்பாணத்து சுவாமியும், குவளைக்கண்ணனும், பாரதிதாசனும் பாரதியின் ஆழ்ந்த அறிவாராய்ச்சிகளுக்குத் துணை நின்றிருக்கின்றனர். அரவிந்தரின் துணையால் பாரதி வேத வேதாந்தக் கருத்துகளை மிக ஆழமாக எண்ணித் தம் கவிதைகளில் அவற்றிற்கு உருக்கொடுத்தார். குள்ளச்சாமி முதலான சித்தர்கள், தமிழ்நாட்டுச் சித்தர் மரபின் சித்தாந்தக் கோட்பாடுகளைப் பாரதி அறியக் காரணமாயிருந்தனர். குள்ளச்சாமியைப் பற்றிப் பாரதியார்.

முப்பாழும் கடந்தபெரு வெளியைக் கண்டான்
முக்தியெனும் வானகத்தே பரிதி யாவான்
தப்பாத சாந்தநிலை அளித்த கோமான்
தவம் நிறைந்த மாங்கொட்டைச் சாமித்தேவன்
குப்பாய ஞானத்தால் மரண மென்ற
குளிர்நீக்கி எனைக்காத்தான், குமார தேவன்

(பாரதி அறுபத்தாறு - 20)

(முப்பாழ் = ஆணவம், கன்மம், மாயை)

என்று கூறுகின்றார். பாரதிதாசன் பழக்கத்தால் பாரதி புலவர் உலகின் கேள்விக் கணைகளுக்குத் தக்க விடை கொடுக்க முடிந்தது.

நானும் அவர்க்கே எழுத்தியல் உதவுமோர்
தொண்டினால் அவர்க்கும் புலவர்க்கும் தோன்றும்
சண்டையில் வெற்றி கண்டிடச் செய்தேன்

(பாரதிதாசன் - கவிஞரும் காதலும் - வாழ்த்து)

என்று பாரதிதாசனே கூறுகின்றார். தாம் பழகியஎல்லாரிடமும் பேராற்றல் மறைந்திருப்பதாகப் பாரதியார் கருதினார். கடலில் மீன் பிடிக்கும் செம்படவனின் பாட்டு பாரதியாரின் நோக்கில் பலஆழ்ந்த பொருண்மைகளைக் கொண்டதாக அவருக்குத் தோன்றியிருக்கின்றது.

"பிரபஞ்சத்தின் அடிப்படையை அந்தச் செம்படவன் எனக்கு
உபதேசம் பண்ணினான்"

- (புதுவையில் பாரதி - பக்.171 ப.கோதண்டராமன்)

என்று கூறுகிறார். சீனா, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, இரஷ்யா, ஆகிய நாடுகளின் இலக்கியம், வரலாறு, அரசியல், தத்துவ ஞானம் ஆகியன அவரால் அலசப்பட்டிருக்கின்றன; வேதாந்த சித்தாந்தங்கள் மிக நுணுக்கமாக ஆராயப்பட்டிருக்கின்றன. சமயங்களை ஒட்டியும் சமயங்களைத் தாண்டியும் அவர் சிந்தித்திருக்கிறார். இச்சிந்தனைச் சுவடுகளை முப்பெரும் பாடல்களில் காணலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 07:48:30(இந்திய நேரம்)