Primary tabs
பாடல் பின்னனி
புதுவையில் ஈசுவரன் தர்மராஜா கோயில் என்றொரு கோயில் உள்ளது.
அதனை மக்கள் திரௌபதி அம்மன் கோயில் என்றே கூறுவர். அக்கோயில் பாரதியாரை ஈர்த்தது.
கோயிலும், கோயிலில் உள்ள பாண்டவர் சிலைகளும் பாரதியாரின் உள்ளத்தில் உணர்ச்சிக்
கொந்தளிப்பை உண்டாக்கின. பாஞ்சாலி துகில் உரியப்பட்ட காட்சி, அவையில் அவளுடைய
குமுறல் ஆகியன
பாரதியாரின் உள்ளத்தில் பேரலை வீச்சுகளைத் தொடர்ந்து எழுப்பின.
வியாசர் எழுதிய மகாபாரதம் ஒரு தெய்வ அவதாரத்தின் மேன்மையைக் கூறுவது. கொடியோரை
ஒறுத்து (தண்டித்து) நல்லவர்களைக் காக்கத் தெய்வ அவதாரம் அவ்வப்போது தோன்றும்.
இந்தக் கருத்தை மெய்ப்பிக்க அந்த இதிகாசம் எழுந்தது.
அரசியல் நெறிகள், கோட்பாடுகள், அறத்தின் வலிமை, நல்லவர் அடையும் சோதனைகள்,
தெய்வம் அறத்தை நிலைநாட்டுவதற்கு அவதாரம் எடுத்தல், உடன்பிறந்தோர் அன்பு.
செய்நன்றி அறிதல், கடமையிலிருந்து வழுவாமை போன்ற நற்பண்புகளை வியாசரின் மகாபாரதம்
உணர்த்திற்று. தமிழில்
எழுந்த வில்லிபாரதம் பெரும்பாலும் வியாச பாரத நோக்கங்களையே கொண்டிருந்தது.
பாரதியார் வியாச பாரதத்தையே தழுவித் தம் பாஞ்சாலி சபதத்தை படைத்ததாகக் கூறுவர்.வியாச
பாரதத்தில் இடம்பெறும் சூதுப்போர்ச் சருக்கத்தையே பாஞ்சாலி சபதமாகப் படைத்துள்ளார்.
வில்லிபாரதத்தில் 283 பாடல்களில் பேசப் பெறும் இந்நிகழ்ச்சியைப் பாரதியார்
308 பாடல்களில் பாஞ்சாலி சபதமாக்கியுள்ளார். பாரதியார் இந்த இதிகாசப் பகுதியை
ஒரு
தனிக் காவியமாக ஏன் பாடினார்?
பாடல் நோக்கம்
ஒரு காவியம் புனைய வேண்டுமென்ற தூண்டலை விடத் தாம் வாழும் சமூகத்திற்கு உணர்த்த வேண்டிய கருத்துகளை இயம்ப, இக்காப்பியத்தைத் தகுந்த ஓர் ஊடகமாகப் (medium) பாரதியார் படைத்தார் எனலாம். நாட்டின் அடிமை நிலை, மக்களின் கவலையற்ற போக்கு, பெண்களின் பிற்போக்குத்தன்மை ஆகியவற்றை உணர்ச்சியோடு எடுத்துக் கூறி உணர்த்துவதற்குப் பாரதக் கதை நிகழ்வு அவருக்குத் துணை செய்திருக்கின்றது.
"தமிழ் ஜாதிக்குப் புதிய வாழ்வு தர வேண்டுமென்று
கங்கணம் கட்டி நிற்கும் பராசக்தியே என்னை
இத்தொழிலிலே தூண்டினாள் . . . "
(பாஞ்சாலி சபத முன்னுரை)
என்று அவரே கூறுகின்றார். ஒரு பழைய காவியத்தை மறுபடியும் புலவர் ஒருவர் பொழுதுபோக்காக மக்கள் படிக்க எளிமையாகப் படைத்துத் தந்தது என்று பாஞ்சாலி சபதத்தை எண்ண முடியவில்லை.
4.2.1 பெண்ணுரிமைக்கான போர்க்குரல்
துரியோதனனின் ஏவலில் அவனுடைய தேர்ப்பாகன் திரௌபதியை அவைக்கு அழைத்துவரச் சொன்னதாகச் சொல்கிறான். திரௌபதி சீறுகின்றாள்.
சூதர் சபைதனிலே தொல்சீர் மறக்குலத்து
மாதர் வருதல் மரபோடா . . .
(பாஞ்.சபதம் - விதுரன் சொல்வது - 48)
என முழங்குகின்றாள். பாகன் மன்னனிடம் வந்து அவன் ஏவலால் மீண்டும் வந்து திரௌபதியை அழைக்கின்றான். அப்போது திரௌபதி கேட்கிறாள்;
நாயகர் தாம் தம்மைத் தோற்ற பின் - என்னை
நல்கும் உரிமை அவர்க்கில்லை - புலைத்
தாயத்திலே விலைப்பட்ட பின் - என்ன
சாத்திரத்தால் எனைத் தோற்றிட்டார்? - அவர்
தாயத்திலே விலைப்பட்டவர் - புவி
தாங்கும் துருபதன் கன்னி நான் - நிலை
சாயப் புலைத் தொண்டு சார்ந்திட்டால் - பின்பு
தாரமுடைமை அவர்க்குண்டோ?
(பாஞ்.சபதம். - திரௌபதி சொல்லுதல் - 52)
இந்தத் தருக்கம் பாரதியின் சொற்களில் மிக வலிவாக வெளிப்பட்டுள்ளதல்லவா? இங்கே தான் பாரதி பறக்கவிடும் பெண்ணுரிமைக் கொடி தன் முழுப் பொலிவையும் காட்டி நம்மை ஈர்க்கின்றது.
1, அடிமைகளுக்கு என்னைத் தோற்கும் உரிமை இல்லை,
2, தகுதியற்ற தொழிலில் ஈடுபடுவோர்க்கு நான் மனைவி
ஆகமாட்டேன்,
இந்த இரண்டு உரிமைப் பட்டயங்களைத் திரௌபதி உயர்த்திப் பிடிக்கிறாள், புதிய பெண்ணுலகம் உரிமைகளை மீட்டுக் கொள்ளும் போராட்டத்தில் இவை இடம் பெறுகின்றன என்பது கருதத்தக்கது.
பாஞ்சாலியைத் தெய்வமாக எண்ணுவதற்குக்களம் அமைத்தது மகாபாரதம்.
ஆனால் பாரதி கண்ட பாஞ்சாலி தெய்வம் அல்லள்; மானிடப் பெண்; ஆனால் புதுமைப்பெண்.
கொடுமை கண்டவிடத்துச் சீறிச் சினந்து போராடும் துணிவு
பெண்ணுக்கு வேண்டும் என்று காட்டும் புரட்சிப்பெண்ணாக அவள் விளங்குகின்றாள்.
பாஞ்சாலி சபதம் ஓர் உள்ளுறைக் கருத்துப் பொதிந்த பாடல்
என்பது அறிஞர் பலர் கருத்தாகும். என்ன உள்ளுறை? பாஞ்சாலி என்பவள் உண்மையில்
பாரததேவியே என்பது அவர்கள் கருத்தாகும். அடிமைப்பட்டுப் பழம் பெருமைகள் குலைந்து
புகழ்குன்றி நின்ற பாரத நாட்டை மக்கள் முன் உருவகப்படுத்தப் பாரதிக்குப்
பாஞ்சாலியே மிகப் பொருத்தமானவளாகப்
புலப்பட்டிருக்கிறாள்.
போச்சுது நல்லறம்! போச்சுது வேதம்!
ஆச்சரியக் கொடுங்கோலங்கள் காண்போம்!
ஐயஇதனைத் தடுத்தல் அரிதோ!
(பாஞ். சபதம்:சபா நிர்மாணம் - 113)
என்று விதுரன் கூறும் மொழிகள் பாரதத்தின் அடிமை நிலையை உள்ளுறையாகப் பொதிந்து கூறுவதே எனக் கருதலாம். இதனைவிடத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இக்காப்பியம் நிகழ்கால உணர்வோடு எழுதப்பட்டது என்பதற்கும் விடுதலை நோக்கு இதன் குறிக்கோள் என்பதற்கும் உரிய ஓர் எடுத்துக்காட்டைக் காணலாம்.
"அன்னை பாஞ்சாலி - பாண்டவர்களின் காதலி
- துரியோதனனால், அவமதிக்கப்பட்ட பொழுது,
பெண்ணாக மட்டுமல்ல, அடிமைத்தனத்தில்
அவமதிக்கப்படும் நமது பாரத தேவியைப்
போலவே காணப்படுகிறாள். இறுதியில் அவளது
பெண்மை வெற்றி கொண்ட வேகத்தில் - சபதம்
செய்யும்
பொழுது, - பராசக்தியின்
ஸ்வரூபமாகிறாள்.
இக்காவியப் பகுதியை
பொறுக்கியெடுத்ததிலேயே, பாரதியின்
ரசிகத்தன்மையும், நுட்பமான ஆராய்ச்சி
சக்தியும்
நன்கு வெளியாகிறதல்லவா? தன்
கொள்கைக்கேற்ற ஒரு கதையை எடுத்துப்
பட்டை
தீட்டிப் புது வைரமாக்கியிருக்கிறார்".
(புதுவையில் பாரதி - சம்பந்தம், பக்.109)
என்று கூறுவது எண்ணத்தக்கது. இதனை எழுதி
முடிக்கின்ற
வரை பாரதியார் உணர்ச்சிக் கடலாக, அமைதியற்று இருந்தார்
எனக் கூறப் பெறுகின்றார். நிகழ் காலத் துன்பங்களை எண்ணாத நிலையில் இத்தகைய உணர்ச்சிக்
கொந்தளிப்புக்கு இடமில்லை.
பாரத நாடு பாருக்கெலாம் திலகம்;
நீரதன் புதல்வர்
இந்நினைவு அகற்றாதீர் என்று பாடிய பாரதி, பாஞ்சாலி சபதத்தில் தருமன்
சூதாட்டத்தில் நாட்டைத் தோற்ற போது,
தேயம் வைத்திழந்தான்; சிச்சீ சிறியர் செய்கை செய்தான்!
(பாஞ்.சபதம்: சூது மீண்டும் தொடங்குதல்15)
என்று கூறக் காண்கிறோம். முன்நூல்களில் இல்லாத இந்தச் சினக்குரல், பாரதிக்கு நிகழ்கால நாட்டு நிலையால் உண்டானது எனக் கருத வேண்டும்.
பாரதி சக்தி வழிபாட்டை மேற்கொண்டவர். காளி, மாரி, சாமுண்டி,
பைரவி, உமை, பராசக்தி எனச் சக்தியின் பல வடிவங்களையும் அவர் பாடுகின்றார்.
ஆனால் மற்ற சக்தி வழிபாட்டுக்காரர்களைப் போலக் குறிப்பிட்ட சில
உருவங்களுக்கும், வடிவங்களுக்கும் உரியதாக வைத்துச் சக்தியைத் ‘தோத்திரப்
பாட்டுப்’ பாடுகின்ற அளவில் அவர் நின்றுவிடவில்லை. சக்தியைக் குறித்த சிந்தனையில்
ஒரு புதிய பரிமாணத்தைப் புலப்படுத்துகின்றார். சக்தி கோயில்களில் உறையும்
ஒரு பொம்மைத் தெய்வமாக அவருக்குத் தோன்றவில்லை. மாறாக உலகமெங்கும் தோன்றும்
அறக்கேடுகளை மாற்றுகின்ற பேராற்றலாக அவருக்குத் தோன்றுகின்றது. அந்த நிலையிலே
தான்,
மாகாளி பராசக்தி உருசிய நாட்
டினிற் கடைக்கண் வைத்தாள். அங்கே
ஆகா என் றெழுந்ததுபார் யுகப்புரட்சி.
(புதிய ருஷ்யா - 1)
என்று பாடுகின்றார். அதே நிலையில் பாஞ்சாலியை அவர் பாரத
சக்தியாகக் காண்கின்றார். சுதந்திர தேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே
என்று பாடிய பாரதி, பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலியைச் சுதந்திரத்திற்கு அவாவும்
பாரத தேவியாகவே காண்கிறார். பாரத நாட்டில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் சக்தியின்
வடிவமாகத் திகழ்வதைக் காணும் பாரதியார், அவர்களின் விடுதலைக் குரல் எழுப்புகின்றவளாகப்
பாஞ்சாலியைக் காண்கின்றார்.
ஒப்பில்லை மாதர்; ஒருவன் தன் தாரத்தை
விற்றிடலாம்; தானமென வேற்றவர்க்குத் தந்திடலாம்
முற்றும் விலங்கு முறைமையன்றி வேறில்லை.
(பாஞ்.சபதம் - வீட்டுமா சாரியன் சொல்வது - 64)
என்று அறிஞனாகத் திகழ்கின்ற பீஷ்மர் சொல்கின்றார். இதற்குப் பாஞ்சாலி ‘பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்று மறுமொழி கூறுகின்றாள். பாரதிக்கு முன்பு பாரதக் கதையை எழுதியவர்கள் திரௌபதியைப் பாண்டவரின் மனைவியாகக் கண்டனர்; பாரதப் பண்பாட்டின் உருவமாகச் சித்திரித்தனர்; கொடியவர்களின் சூழ்ச்சியால் அவமானத்திற்குள்ளாகி இறைவனால் காப்பாற்றப்பட்ட இரக்கத்திற்குரிய பெண்ணாகக்காட்டினர். பாரதி அவர்களிலிருந்து வேறுபட்டுப் பாஞ்சாலியை அன்னையாகக் கண்டார். நாணம் முதலிய பாரம்பரியப் பண்புகளோடு அமைதியாக வீட்டிலிருந்து மனையறம் செய்யும் பெண், தீமை கண்டால் விலகிப் போகாமல் எதிர்க்கவும், கயமையைக் கண்டு கொந்தளித்து எழும்சக்தியாக உருக்கொள்ளவும் வேண்டுமென்பதைப் பாஞ்சாலி உணர்த்தும் வகையில் பாரதி அவளைப் படைத்தார்.
துச்சாதனன் எழுந்தே - அன்னை
துகிலினை மன்றிடை உரிதலுற்றான்
(பாஞ். சபதம், திரௌபதி கண்ணனுக்குச் செய்யும் பிரார்த்தனை - 88)
என்று கூறுவதில் உள்ள நுட்பம் காண்பதற்குரியது. பேராசிரியர் வ.சுப.மாணிக்கம்
"திரௌபதி துகில் என்னாது
அன்னை துகில் என்று
சொல்லுங்கால், தாயின் துகிலை உரிந்தவன் கொடுமை
சட்டெனப் பதிவதோடு, சின உணர்ச்சியும் தோன்றி
விடுகின்றது"
என்று கூறுகின்றார். பேயனான துச்சாதனன் தாயின் துகிலினை உரிகின்றான். பீஷ்மர், துரோணர் போன்ற அறவோரெல்லாம் பார்த்திருக்கின்றனர்; துரியோதனன் வெறியோடு களித்திருக்கின்றான்; அந்நிலையில் பாஞ்சாலி நிலை யாது?
பேயனும் துகிலினை உரிகையிலே
உட்சோதியிற் கலந்தாள்; அன்னை
உலகத்தை மறந்தாள்; ஒருமையுற்றாள்.
(பாஞ். சபதம், திரௌபதி கண்ணனுக்குச் செய்யும் பிரார்த்தனை - 88)
என்று கூறுகின்றார் பாரதியார். இந்த நிலையில் அவள் பெண்மை தெய்வத்தால் காப்பாற்றப் பெறுகின்றது. மானுடப் பெண்களெல்லாம் சக்தியின் வடிவமென்பது பாரதியின் கொள்கை. ஆற்றல் கொண்ட பராசக்தி அன்னை நல் அருளினால் ஒரு கன்னிகை ஆகியே, தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள் ('புதுமைப்பெண்' 10) என்று கூறுமாறு பாரதி பாஞ்சாலியை உருவாக்கியுள்ளார்.