தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4-4:5-முப்பெரும் பாடல்கள்

4.5 முப்பெரும் பாடல்கள்

பாஞ்சாலிசபதம், கண்ணன் பாட்டு , குயில்
பாட்டு ஆகியமுப்பெரும்பாடல்கள் மூன்றும் வெவ்வேறு
வகையின. ஒருகவிஞனின் பல்வேறு பரிமாணங்களை
இவைகாட்டுகின்றன.

பாஞ்சாலிசபதம்

-

பழைய கதை நிகழ்வின் புதிய வார்ப்பு

கண்ணன்பாட்டு

-

சமய எல்லைகளைத் தாண்டிய பக்தி இலக்கிய பரிணாமம் விளங்கும் வகையில
படைக்கப்பெற்ற படைப்பு

குயில் பாட்டு

-

தேவதைக் கதைகளின் பாங்கில்தத்துவ
உள்ளுறை அமைந்த உருவாக்கம்,

இந்த மூன்று பாடல்களின் ஒவ்வொரு பகுதியும் ஆழ்ந்து கற்கும்
போதெல்லாம் புதிய புதிய செய்திகளை நமக்குஅளிக்கும்
வைரச் சுரங்கங்களாகக் காட்சிதருகின்றன. பாரதியின் சமயம்,
அவர் காணவிரும்பிய சமுதாயம், அவரது கவிதை உலகம்
ஆகியமூன்றும்இந்த முப்பெரும் பாடல்களால்
நமக்குப்புலனாகின்றன.

4.5.1 பாரதியின் சமயம்

சடங்கு, ஆசாரம், சம்பிரதாயப் பழக்கங்கள்
ஆகியவற்றால்பாரதியைக் கட்டுப்படுத்த முடியாது! ‘தெய்வம் நீ
என்று உணர்’‘வேதம் புதிது செய்’ என்று கூறியவர் பாரதியார்.

தெய்வம் பலபல சொல்லிப் - பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்
உய்வ தனைத்திலும் ஒன்றாய் - எங்கும்
ஓர் பொருளானது தெய்வம்

(பல்வகைப்பாடல்கள் - முரசு - 11)

என்றுபாடிய பாரதி சமயங்களைக் கடந்தநிலையிலிருந்தார்.
பாஞ்சாலி சபதம் காட்டும்கண்ணனும், கண்ணன் பாட்டுக் கூறும்
கண்ணனும், வைணவசமயத்தவர் போற்றி வணங்கும் ஒரு
சமயவட்டத்துக்குள்ளான கண்ணன் இல்லை. ‘புத்தர்,சங்கரர்,
இயேசு, இராமன், கண்ணன் ஆகிய எல்லோரும்இறந்து
விட்டார்கள்; நான் இறக்கமாட்டேன்’
என்று கூறியவர் பாரதி.
பல்வேறு வடிவங்களில்அவரால் போற்றப்பட்ட தெய்வம் ஒன்றே.
அந்தத்தெய்வம் எந்தசமய எல்லைக்குள்ளும் இருப்பதில்லை.
வழிபாடு செய்து, பூப்போட்டுச் சூடம்சாம்பிராணி காட்டி,
மந்திரங்கள் சொல்லிப்போற்றப் படுவதாக இருந்த
தெய்வத்தைமக்களுக்குஇன்னலிலே உதவுகின்ற ஓர் எளிமையான
உறவுடையதாகப்பாரதியார் பாஞ்சாலி சபதத்திலும்
கண்ணன் பாட்டிலும் படைக்கிறார்.

ஏழைகளைத் தோழமை கொள்வான்- செல்வம்
ஏறியார் தமைக்கண்டு சீறிவிழுவான்
தாழவரு துன்பம் அதிலும் - நெஞ்சத்
தளர்ச்சி கொள்ளாதவர்க்குச் செல்வ மளிப்பான்

(கண்ணன்- என் தந்தை - 5)

என்று பாரதியார் பாடுவதைக் கொண்டு, துன்புறும் மனிதர்க்குத்
துணையாகும் ஓர் அன்புச் சமயம் அவருடையது என அறியலாம்.

4.5.2 பாரதியின் சமுதாயம்

நிறம், குலம், சாதி என்ற பிரிவுகளில் பாரதிக்கு நம்பிக்கை
இல்லை. எந்தச் சாதியினர் வீட்டிலும் அவர் உண்பார்.
கனகலிங்கத்திற்கும் அவர் நண்பர்களுக்கும் அவர் பூணூல்
அணிவித்தார். தம்போலா என்ற தோட்டியின் இல்லத்தில்
சென்று தங்கினார். தாம் பூணூல் அணிவதை விட்டு விட்டார்.
ஒரு முறை பொங்கல் பண்டிகையைக் குறித்த சாத்திரத்தை
யதுகிரி அம்மையார் கேட்டபோது,

"அதோ பார்! தாடியுடன் இருக்கும் அந்த
ஐயரைக் கேள்! எனக்குத் தெரியாது, அவர்
ஏதாவது சாஸ்திரங்களில் ஆய்ந்து சரக்குச்
சேர்த்து வைத்திருப்பார்,எனக்கு வழக்கம்
சாஸ்திரம் புராணம் கட்டோடு பிடிக்காது"

(-மகாகவி பாரதியார் வாழ்க்கைச்
சித்திரம்-தி.முத்துகிருஷ்ணன் பக்.213)

என்று கூறி வ.வே.சு.ஐயரைக் காட்டி விடுகிறார். அவர் வாழ்ந்த
காலத்தில்இத்தகைய சமுதாய நோக்கத்திற்காக அவர் மிகவும்
துன்பப்படுத்தப் பட்டிருக்கிறார். கண்ணன் மறக்குலத்தில் பிறந்து,
இடைக்குலத்தில் வளர்ந்து, பார்ப்பனருள்ளே சிறந்து,
செட்டிமக்களோடு உறவு கொண்டு வாழ்கிறான் என்றும்
கூறுகிறார்.குயில் பாட்டில் சேர அரச குமரன் வேடர் மகளைக்
காதலிக்கின்றான். பாரதியின் பொதுமைச் சமுதாய உணர்வை
முப்பெரும் பாடல்கள் காட்டுகின்றன.

4.5.3 பாரதியின் கவிதை உலகம்

பாரதியாரின்கவிதை உலகம், தன்னிகரற்ற மூன்று
காப்பியங்களை, முப்பெரும் பாடல்களைக் கொண்டுள்ளது. இவை
மரபுவழிக் காப்பிய அளவுகோல்களுக்கு உட்படாதவை.இருபதாம்
நூற்றாண்டுக் காப்பிய மறுமலர்ச்சிக்கு இவை அமைத்துள்ள
அடித்தளம் மிகவும் வலிமையானது. தேசிய பாடல்கள் ஒரு
தேவையை ஒட்டித் தோன்றியவை; தெய்வப் பாடல்கள் அவரது
ஆன்ம நிறைவை ஈடேற்றப்பிறந்தவை; பலவகைப் பாடல்கள்
அவ்வப்போதிருந்த சூழல்களால் வெளிப்பட்டவை; முப்பெரும்
பாடல்கள் அவருடைய படிப்பாலும் அனுபவத்தாலும்
ஆராய்ச்சியாலும், ஞானத்தாலும் எழுதப்பெற்றுத்தமிழ் இலக்கிய
உலகில் அவருக்கெனத் தனி அரியணைஅமைத்தவை.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 07:48:45(இந்திய நேரம்)