தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1-1:4-பாரதி - தமிழ்நாட்டைப் பற்றி

1.4 பாரதி - தமிழ்நாட்டைப் பற்றி

தேன் எவ்வாறு இனிமையைக் கொடுக்கிறதோ,
அதைப்போலவே, ‘செந்தமிழ் நாடு’ என்று சொன்ன உடனேயே,
அதைக் கேட்கும் காதிற்கும் தேனின் சுவைபோல், இன்பம்
கிடைக்கும் என்கிறார் பாரதியார்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே

(தேசிய கீதங்கள், தமிழ்நாடு : 1)

(போதினிலே = பொழுதில்)

தேன் வந்து பாயுது காதினிலே என்பதற்கு நேரடியான பொருள்
கொள்ளக்கூடாது. இங்கு இனிமைக்குத்தான் தேன்சுட்டப்படுகிறது.
வேறு எதற்காகவும் இல்லை.

தமிழ்நாடு என்ற சொல்லே கேட்கும் காதுகளுக்கு இன்பம் நல்கும்
என்றால், தமிழ்நாட்டின் பெருமைகள் முழுவதையும் அறிந்தால்
அது எவ்வளவு இன்பத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்
என்பதை நினைத்துப் பாருங்கள்! தமிழ் மீது பாரதி கொண்ட
தீராக் காதலைப் புரிந்து கொள்ள முடிகிறதா?

இயற்கை வளம் மிகுந்த நாடு தமிழ்நாடு. கல்விச் சிறப்புடைய நாடு தமிழ்நாடு. அறவோர்களும், புலவர்களும் தோன்றியமையால்,
உலகப் புகழ் வாய்ந்த நாடு தமிழ்நாடு. தமிழ்நாட்டின் இத்தகையச்
சிறப்புகளை எல்லாம் உள்ளடக்கி, பல பாடல்களைப் பாரதியார்
பாடியுள்ளார்.

1.4.1 இயற்கை வளம்

மலைவளம், கடல்வளம் போன்ற இயற்கை வளம் மிகுந்த
நாடு தமிழ்நாடு. இயற்கையாக அமைந்த ஆறுகள் பல இங்கு
உள்ளன. காவிரி ஆறு, தென் பெண்ணை ஆறு, பாலாறு, வைகை
முதலிய பலபெரிய ஆறுகள் தமிழ் நாட்டிற்கு வளம் சேர்க்கின்றன.
எனவே, தமிழ்நாட்டின் வளத்தைக் குறிப்பிடும்போது பாரதியார்,

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி - என
மேவிய ஆறு பலஓடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு

(தேசியகீதங்கள், தமிழ்நாடு : 3)

(மேவிய = பொருந்திய, மேனி = உடல் (இங்குத் தமிழ்நாட்டின்
பகுதி)

என்று குறிப்பிடுகிறார்.

இத்தகைய நீர்வளம் பொருந்திய தமிழ்நாட்டில், பிற செல்வங்கள்
எல்லாம் செழித்திருந்தன என்று கூறுகிறார் பாரதியார்.

1.4.2 கல்வி வளம்

தொடக்கக் காலம் முதலே, தமிழ்நாட்டில்
புலமை மிக்க பலர் இருந்தனர். திருவள்ளுவர்
முதல் கம்பர் வரையிலும் கல்வியில் சிறந்த
பல புலவர்கள் இருந்தனர். சங்க காலத்தில்
ஒளவையார், காக்கைப் பாடினியார்,
வெள்ளிவீதியார் போன்ற பெண் புலவர்கள்
பலரும் இருந்தனர். இதனால் தமிழ்நாடு
பெருமை பெற்றிருந்தது. எனவே பாரதியார்,

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு

(தேசியகீதங்கள், தமிழ்நாடு: 6)

(பார் = உலகம், வீசும் = பரவும்)

என்று தமிழ்நாட்டைப் புகழ்ந்து கூறுகிறார்.

கம்பனின் கல்வியின் சிறப்பை அறிந்த மக்கள் அவரைக்
‘கல்வியில் பெரியவர் கம்பர்’ என கூறி மகிழ்வர். வடமொழியில்
எழுதப்பட்ட இராமாயணத்தைத் தழுவி, கம்பன் எழுதிய
இராமாயணம் தமிழில் உள்ள தலைசிறந்த படைப்புகளில் ஒன்று.
இதன் பெருமையை அறிந்தே, மலையாளம் போன்ற மொழிகளில்,
கம்பனின் இராமாயணத்தை மொழிபெயர்த்துள்ளனர். இத்தகைய
சிறப்பு வாய்ந்த கம்பன் பிறந்ததும் தமிழ்நாடு. அதனால்
தமிழ்நாடு பெருமை பெற்றது என்று குறிப்பிடுகிறார் பாரதியார்.

உலகப்புகழ்

தமிழ்நாட்டின் பெருமை உலகளாவிய நிலையில்
பரவுவதற்குக் காரணமாக இருந்தவர் வள்ளுவர். உலகிலுள்ள
பெரும்பாலான அறநூல்கள் எல்லாம் சமயச் சார்புடையன.
ஆனால் வள்ளுவரால் இயற்றப் பெற்ற திருக்குறள், எந்த ஒரு
சார்பும் இல்லாது எல்லோருக்கும், பொருந்துகின்ற ஒன்று.
எல்லாக் காலத்திற்கும் பொருந்துகின்ற ஒன்று. எனவே இதை
‘உலகப் பொதுமறை’ என்று அழைப்பர். உலகிலுள்ள பல
மொழிகளில் இதனை மொழிபெயர்த்தனர். எனவே, திருக்குறள்
எனும் உலகப் பொதுமறையை இயற்றியமையால், திருவள்ளுவர்
உலகப் புகழ் பெற்றார். அதனால் தமிழ்நாடு உலகப் புகழ்
பெற்றது. இந்த உண்மையினைப் பாரதியார்,

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

(தேசியகீதங்கள், தமிழ்நாடு: 7)

(வான் = உயர்ந்த)

என்று வியந்து பாராட்டுகிறார்

சேக்ஸ்பியரால் இங்கிலாந்து நாடு புகழ்பெற்றது என்பர்.
ஹோமரால் கிரேக்க நாடு புகழ் பெற்றது என்பர். அதைப்போல
வள்ளுவரால் தமிழ்நாடு உலகப் புகழ் பெற்றது என்கிறார்
பாரதியார்.

திருக்குறளிலுள்ள கருத்துகள் உலகநோக்கு (Universal) உடையன.
அதனால் உலகளாவிய நிலையில் பரவின. தம் கருத்துகளால்
உலக மக்களின் மனத்தில் இடம் பெற்றார் வள்ளுவர். அதனால்
புகழ் பெற்றார். அந்தப் புகழ், தமிழ் நாட்டினை மிக உயர்ந்த
நிலைக்குக் கொண்டு சென்றது என்று குறிப்பிடுகிறார்
பாரதியார். இவ்வாறு, புலமை மிகுந்த ஒளவையாராலும்,
இளங்கோவடிகளினாலும் தமிழ்நாடு பெருமை பெற்றது என்றும்
பாரதி குறிப்பிட்டுள்ளார்.

1.4.3 வணிகவளம்

பண்டைய தமிழ் மக்கள் உலகிலுள்ள பல நாடுகளுடனும்
வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். குறிப்பாக, மேற்கே,
உரோம், எகிப்து முதலிய நாடுகளுடனும், கிழக்கே சீனம்,
மலேயா, சிங்கப்பூர் முதலிய நாடுகளுடனும் வணிகத் தொடர்பு
கொண்டிருந்தனர். ஏலம், இலவங்கம் போன்ற நறுமணப்
பொருள்களைத் தமிழ்நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி
செய்தனர். இத்தகைய ஏற்றுமதி இறக்குமதி வணிகம் சிறப்பாக
நடந்ததாகவும் அதற்கான சுங்க வரிகள் வசூலிக்கப்பட்டதாகவும்
பட்டினப்பாலை
என்ற நூல் குறிப்பிடுகிறது. தமிழர்கள் தாம்
தொடர்பு கொண்ட நாடுகளில் தம் பண்பாட்டுக் கூறுகளையும்
எடுத்துச் சென்றனர். இதனால் வாணிபத் தொடர்பு கொண்ட
நாடுகளிலெல்லாம் தமிழர்களின் புகழ் பரவியிருந்தது.

தமிழர்கள் கடல்கடந்து வாணிபம் செய்து தமிழ்நாட்டை
வளப்படுத்தியதோடு தமிழர்களின் பெருமை உலகமெலாம்
செல்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தினர். இதனைப் பாரதியார்,

சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு

(தேசியகீதங்கள், தமிழ்நாடு : 10)

(மிசிரம் = எகிப்து, யவனரகம் = கிரேக்கம், படைத்தொழில் = போர்த் தொழில்)

என்று குறிப்பிடுகிறார்.

வாணிபவளம் சேர்த்ததோடு, அறிவு வளர்ச்சியும், கலைவளர்ச்சியும்
தமிழ்நாட்டிற்கு அளித்தனர். தமிழர்களின் புகழ், அவர்கள்
வணிகத்தின் பொருட்டுச் சென்ற இடங்களிலெல்லாம் பரவியது
என்கிறார் பாரதியார்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 08:02:37(இந்திய நேரம்)