தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வினைப் பொருள்கள்

1.3 வினைப் பொருள்கள்

     வினைமுற்றுச் சொல், அது உணர்த்தும் பொருளுக்கேற்ப,
ஏவல், வியங்கோள் முதலிய பெயர்களால் குறிக்கப்பெறும்.

    வா, போ என்னும் வினைப் பகுதிகளை, ஒருவரை
நோக்கிச் சொல்லும் பொழுது அவற்றை ஏவல் வினை
என்கிறோம். அதாவது, ஒருவரை ஒரு வினை செய்யுமாறு
கட்டளை இடுவதை ‘ஏவல்’ என்கிறோம்.

     இதுபோல், வியங்கோள் வினை, காரண வினை என்னும்
வினைகளும் உள்ளன. இவை யாவும் சூழலுக்கேற்ப ஏவல்,
வியங்கோள் முதலிய பொருள்தருமாறு பேசப்படுகின்றன.
இவை குறித்து இனிக் காண்போம்.

1.3.1 ஏவல் வினை

வினைப் பகுதியோடு முன்னிலை விகுதி சேர்ந்தே ஏவல் வினை
அமையும்.     இக்காலத்தில்     விகுதி     இல்லாமலும்
பயன்படுத்துகிறோம்.

நீ வாராய்
நீ செல்வாய்

இவற்றுள் வா, செல் என்னும் வினைப் பகுதிகேளாடு ‘ஆய்’
என்னும் முன்னிலை ஒருமை விகுதி சேர்ந்துள்ளது.

நீவிர் காண்மின் (காணுங்கள் என்று பொருள்)
நீர் செல்லும்

என்னும் முன்னிலைப் பன்மைச் சொற்களும் அவ்வாறே
முன்னிலைப் பன்மை விகுதிகளைப் பெற்றுள்ளன. ‘மின்’, ‘உம்’
என்பன முன்னிலைப் பன்மை விகுதிகளாகும்.

1.3.2 வியங்கோள் வினை

    'வியம'், 'கோள'் என்னும் இரு சொற்கள் சேர்ந்தே
'வியங்கோள்' வந்தது. ‘வியம்’ என்பதற்கு ஏவல் என்று
பொருள். ‘கொள்’ என்பதே 'கோள்' என முதல் எழுத்து
நீண்டது. ஒருவர் விரும்பிய ஏவலைக் கொள்வது என்பதை
வியங்கோளுக்குரிய பொருளாகச் சொல்லலாம். இது, வாழ்த்தல்,
விதித்தல், வேண்டல், வைதல் என்னும் பொருள்களில் வரும்.
வியங்கோள், இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் உரியதாக
வரும்.

வாழ்க, வெல்க - வாழ்த்தல் பொருள்
வருக, செல்க - விதித்தல் பொருள்
அருள்க, கருணைசெய்க - வேண்டல் பொருள்
வீழ்க, கெடுக - வைதல்(ஏசுதல்) பொருள்

     வியங்கோள் வினையில் ஒருமை, பன்மை என்னும்
பாகுபாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1.3.3 காரணவினை

    வினைஎச்சம் ஒரு வினைமுற்றைக் கொண்டு முடியும்
என்பது நமக்குத் தெரியும். சில வினையெச்சங்கள் ஒரு
காரணத்தைக் காட்டுவது போல் அமையும். கீழே தரப்பட்டுள்ள
தொடர்களில் முன் உள்ள வினைஎச்சச்சொற்கள் பி்ன் உள்ள
வினைகளுக்குக் காரணம் ஆகின்றன என்பதைக் காண்க.

மழை பெய்தால் பயிர் வளரும்
மழை பொழிந்ததாயின் குளம் குட்டைகள் நிரம்பும்
மழை பெய்யின் குடிநீர் கிடைக்கும்
மழை பெய்ததெனின் வெப்பம் தணியும்
மழை பெய்ததென்றால் நாடு செழிக்கும்

இத் தொடர்களில் மழை பெய்தல் ஆகிய செயல், பயிர்
வளர்தல் போன்றவற்றுக்குக் காரணமாக அமைகிறது என்பது
புலப்படுகிறது. இவற்றிலும் ஆல், ஆயின் முதலிய விகுதிகளே
(பி்ன்னொட்டுகள்) காரணப் பொருளைத் தெரிவிக்கின்றன.
இவ்வாறு     வரும் வினைகளைக் காரணவினை என்று
இக்காலத்தில் குறிப்பிடுகிறார்கள். ஆனால் பழைய இலக்கண
நூல்களில் இப்பெயர் இல்லை. இதுவரை வினைச்சொற்களால்
சூழலுக்கு ஏற்ப உணர்த்தப்படும் பொருள்கள் சிலவற்றைப்
பார்த்தோம்.

பயில்முறைப் பயிற்சி - II
  1. ஏவல் வினைக்குரிய விகுதிகளைச் சேர்த்து ஏவல்வினைச்
    சொற்கள் சிலவற்றை எழுதிப் பார்க்க.
  2. வியங்கோள் பொருள்களில் வெவ்வேறு வினைச்
    சொற்களை இலக்கியங்களில் கண்டு தெளிக.
  3. ஏவல்வினை விகுதிகள் பேச்சு வழக்கில் வருகின்றனவா
    என்பதை நோக்கிக் குறித்து வைத்திடுக.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 09:30:05(இந்திய நேரம்)