Primary tabs
3.1 முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒரு செய்தியை யாரோடு பேசுகிறோமோ அவரை
‘முன்னிலை’ என்னும் சொல்லால் கூறுகிறோம். அல்லது
‘முன்னிலை’ என்னும் சொல் தமிழ் இலக்கணத்தில்
கேட்பவரைக் குறிக்கும் ஒரு கலைச்சொல் எனலாம். மூவிடப்
பெயர்களைக் கீழ்வருமாறு எளிமையாக நினைவுபடுத்திக்
கொள்ளலாம்.
தன்மை எனும் சொல் பேசுபவரைக் குறிக்கும்
முன்னிலை எனும் சொல் கேட்பவரைக் குறிக்கும்
படர்க்கை எனும் சொல் பேசப்படுபவரைக் குறிக்கும்
முன்னிலை வினைமுற்று என்பது ஒரு தொடரில் பயனிலையாக
வருவதாகும்.
நீ வந்தாய்
நீ உண்கிறாய்
நீ செல்வாய்
எனும் தொடர்களில் உள்ள வினைமுற்றுச் சொற்கள் முன்னிலை
வினைமுற்றுகள் ஆகும்.
முன்னிலை வினைமுற்றுச் சொற்கள் கீழ்க்காணும்
விளக்கங்களைத் தருவனவாக அமையும். செயல் (வினை),
காலம்,இடம், எண் ஆகியன குறித்து அச்சொல் அறிவிக்கும்
என்பதை ஓர் எடுத்துக்காட்டின் வழிக் காண்போம். ‘வந்தாய்’
என்னும் முன்னிலை வினைமுற்றுச் சொல் வருதல் ஆகிய
செயலையும் இறந்த காலத்தையும் முன்னிலையில் ஒருவரையும்
சுட்டுகிறது.
முன்னிலை வினைமுற்றுச் சொற்கள் தன்மை வினைமுற்றுச்
சொற்களைப் போன்றே திணை, பால் ஆகியவற்றைத்
தெரிவிப்பதில்லை. ‘வந்தாய்’ என்னும் சொல் எதிரில் உள்ள
ஒருவரை
மட்டும் குறிக்கிறதே தவிர அவர் உயர்திணையா
அல்லது அஃறிணையா என்பதையோ, அவர் ஆணா அல்லது
பெண்ணா என்பதையோ தெரிவிப்பதில்லை. எதிரில் உள்ள ஒரு
மனிதரைப் பார்த்தும் ‘வந்தாய்’ எனப் பேசலாம். எதிரில் உள்ள
அஃறிணைப் பொருளாகிய ஒன்றனைப் பார்த்தும் பேசலாம்.
சான்றாக ஒரு நாயைப் பார்த்தும், ‘நீ இவ்வளவு நேரம் எங்கே
போய்
இருந்தாய்? எப்பொழுது இங்கு வந்தாய்?' என்பன
போலப் பேசலாம். அதே போல வந்தீர் என்னும் முன்னிலை
வினைமுற்று உயர்திணையைக் குறிக்கவும் வரலாம்;
அஃறிணையைக் குறிக்கவும் வரலாம். ஆகவே, முன்னிலை
வினைமுற்றுச் சொற்கள் திணை, பால் உணர்த்தாமல் ஒருமை,
பன்மை என்பவற்றுள் ஒன்றை மட்டும் உணர்த்தும் என்பதை
அறிய வேண்டும்.
முன்னிலை வினைமுற்றுச் சொற்களைக் கீழ்வருமாறு பகுக்கலாம்.

இவ் அடிப்படையில் முன்னிலை ஒருமை வினைமுற்றுச்
சொற்கள் குறித்து முதலில் அறிந்து கொள்வோம்.
3.1.1 தெரிநிலை வினைமுற்று
முன்னிலை ஒருமை வினைமுற்றுச் சொற்களில் காலத்தை
வெளிப்படையாக அறிவிக்கும் சொற்களைத் தெரிநிலை
வினைமுற்றுச் சொற்கள் என்கிறோம்.
‘வந்தாய்’ என்பது இறந்தகாலம் காட்டுகிறது
‘வருகிறாய்’ என்பது நிகழ்காலம் காட்டுகிறது
‘வருவாய்’ என்பது எதிர்காலம் காட்டுகிறது
இச்சொற்களில் ‘வா’ என்னும் வினைப்பகுதிக்கும் ‘ஆய்’
என்னும் முன்னிலை ஒருமை விகுதிக்கும் இடையில் காலம்
காட்டும் இடைநிலைகள் உள்ளன. முறையே த், கிறு, வ்
என்பன (மேற்காணும் மூன்று சொற்களிலும்) மூன்று
காலங்களையும் உணர்த்துகின்றன. இவற்றைப் பற்றி விரிவாகப்
பின்னர் காலம் (C02136) என்னும் பாடத்தில் படிக்க
உள்ளீர்கள்.
முன்னிலை ஒருமைத் தெரிநிலை வினைமுற்று
விகுதிகளாக இ, ஐ, ஆய் என்பன உள்ளன. இவற்றுள்
‘ஆய்’ என்னும் விகுதியே இக்காலத்தில் பெருவழக்காக
உள்ளது.
நீ படித்தாய் ஓடினாய்
நீ நடந்தாய் உழுதாய்
நீ உண்டாய் சொன்னாய்
நீ சென்றாய் வந்தாய்
முதலிய சொற்களில் எல்லாம் ‘ஆய்’ விகுதி இருப்பதை அறிக.
இவற்றைப்போல, பழங்காலத்தில் இகர விகுதியும்
பயன்பட்டுள்ளது. ஒரு சான்று:
‘சென்றி’ என்பது இறந்தகாலம் உணர்த்தும் வினைமுற்று.
இதற்குச் சென்றாய் என்று பொருள்.
‘செல்லாநின்றி’ என்பது நிகழ்காலம் உணர்த்துகிறது.
‘செல்’
என்னும் பகுதியோடு ஆநின்று என்னும் நிகழ்கால
இடைநிலையும் ‘இ’கர விகுதியும் சேர்ந்துள்ளது. எனவே,
இச்சொல் செல்கிறாய் என்னும் பொருளுடையதாகும்.
‘சேறி’ என்னும் தெரிநிலை வினைமுற்று ‘செல்வாய்’
என்னும் பொருளுடையது. இது எதிர்காலம் உணர்த்துவது.
சென்றி, சொல்லாநின்றி, சேறி ஆகிய தெரிநிலை வினைமுற்றுச்
சொற்கள் இக்காலத்தில் வழக்கில் இல்லை. ஆதலால் இவற்றின்
பொருள்களை நினைவிற்கொள்ள வேண்டும். இகர விகுதியைப்
போல் ‘ஐ’கார விகுதியும் முன்னிலையில் வரும்.
‘உண்டனை’ என்பது இதற்குச் சான்று. இது உண்டாய்
என்னும் பொருளுடையது. இதுபோல் நிகழ்காலம் குறிப்பதாக
இவ்விகுதி ‘உண்கின்றனை’ என்று வருவதும் காண்க.
இதுவரை கூறியவற்றால் ஐ, ஆய், இ என்னும் மூன்று
விகுதிகளும் முன்னிலை ஒருமைத் தெரிநிலை வினைமுற்றுச்
சொற்களில் வருகின்றன என்பது தெளிவாகும்.
3.1.2 குறிப்பு வினைமுற்று
காலத்தைக் குறிப்பாக உணர்த்துபவை குறிப்பு
வினைமுற்றுகள் (காண்க: பாடம் 2.2.2). முன் சொன்ன ஐ, ஆய்,
இ எனும் மூன்று விகுதிகளும் முன்னிலை ஒருமைக் குறிப்பு
வினைமுற்றுச் சொற்களிலும் விகுதிகளாக வருகின்றன.
நீ நல்லாய்-ஆய்விகுதிஇவை முன்னிலை
ஒருமையில்
ஆண்பால்ஒருமை
பெண்பால் ஒருமை,
அஃறிணை
ஒன்றன்பால் ஆகிய
மூன்றையும்
குறிக்கும்.நீ நல்லை-ஐவிகுதிநீ அருளி-இவிகுதி
‘நல்லை’ என்னும் சொல் முன்னிலையில் இருக்கும்
ஆண் ஒருவரையோ, பெண் ஒருவரையோ, அல்லது
அஃறிணைப் பொருள் ஒன்றையோ குறித்துப் பேசுவதாக
அமையும். நீ நல்ல இயல்பை உடையாய் எனும் பொருள்
தருவதாக ‘நல்லை’ என்னும் சொல் குறிப்பு வினையில்
பயன்படுகிறது. அருளி என்பது ‘அருள் உடையவன் நீ’ என்று
பொருள்படும்.
ஓர் ஆணைப் பார்த்தும் ‘நல்லாய்’ எனக் கூறலாம்.
ஒரு பெண்ணைப் பார்த்தும் ‘நல்லாய்’ எனக் கூறலாம்.
ஒரு நாய் போன்ற அஃறிணை உயிரைப் பார்த்தும்
இவ்வாறு கூறலாம்.
குறிப்பு வினை இம் மூன்றற்கும் உரியது.
மேற்கண்டவற்றால் தெரிநிலை வினை,குறிப்பு வினை
எனும் இரண்டிற்கும் முன்னிலை ஒருமைக்குரிய விகுதிகளாக
ஐ, ஆய், இ எனும் மூன்றும் வருகின்றன என்பது விளங்கும்.
இவற்றுள் ஆய் விகுதி இன்றைய வழக்கில் உள்ளது
என்பதும், ஐ, இ ஆகிய விகுதிகள் முற்கால வழக்குகள்
என்பதும் நினைவிற்கு உரியன.
- முன்னிலை ஒருமை என்பது ஆண்பால், பெண்பால்
ஒன்றன்பால் என்பனவற்றுக்கு உரியது என்பதை
நினைவிற்கொண்டு செய், உண், காண், ஓடு முதலிய
வினைப் பகுதிகளை வைத்து, தெரிநிலை வினைமுற்றுச்
சொற்களை எழுதிப் பழகுக. - பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில்
என்னும் ஆறன் அடிப்படையில் குறிப்பு வினைமுற்றுச்
சொற்கள் அமையும். ஆதலால் இவற்றை வைத்து
ஏதேனும் மூன்று குறிப்பு வினைமுற்றுச் சொற்களை
முன்னிலை ஒருமைக்கு ஏற்ப எழுதிப் பார்க்கவும்.
(சான்று : நல்லாய், மதுரையாய், இன்மொழியாய்)