Primary tabs
அகப்பொருள் உணர்த்தும் நூல். ஐந்து நூறு பாடல்கள்
கொண்டிருப்பதாலும், அவை குறிய பாடல்களாக
இருப்பதாலும் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.
அகநானூறு, புறநானூறு, நற்றிணை நானூறு
என்பவை போல அக ஐந்நூறு எனப் பெயர் கொடுக்காது
ஐங்குறுநூறு (ஐ+குறு+நூறு) எனப் பெயர் கொடுத்தமைக்குக்
காரணம் உண்டு. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை,
முல்லை என்ற ஐந்து திணைக்கும், திணைக்கு நூறு பாடல்கள்
என்ற அடிப்படையில் அமைந்திருப்பதால் அதை உணர்த்தும்
வகையில் ஐந்து குறுநூறு > ஐங்குறுநூறு எனப்பட்டது.
இச்சிறப்பு சங்க அக இலக்கியத்தில் வேறு எந்த நூலுக்கும்
இல்லை. அரசனுக்குப் பத்துப்பாடல் என்ற அடிப்படையில்
நூறு பாடல்களுக்குப் பதிற்றுப்பத்து என்ற பெயர் புற
இலக்கியத்தில் உண்டு.
• நூலமைப்பு
ஐங்குறுநூற்றின் பாடல்கள் மூன்றடிச்
சிற்றெல்லையையும் ஆறு அடிப் பேரெல்லையையும்
கொண்டவை. ஒவ்வொரு திணைக்கும் உரிய நூறு
பாடல்களும் பத்துப் பத்துப் பாடல்களாகப் பகுக்கப்
பட்டுள்ளன. ஒவ்வொரு பத்துப் பாடல்களின் பகுப்பிற்கும்
ஒரு பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. பத்துப் பாடல்களில்
பயின்றுள்ள அத்திணைக்கு உரிய உரிப்பொருேளா,
கருப்பொருேளா, கூற்று உரைப்போரோ, கேட்போரோ
பகுப்பிற்குப் பெயராக அமைந்திருக்கின்றது.
முன்னுரையைப் படிக்க வேண்டும். முன்னுரை பழந்தமிழ்
இலக்கியத்தில், இலக்கணத்தில் பாயிரம் என்ற பெயரால்
குறிக்கப்பட்டுள்ளது. பாயிரம் படிக்காது நூலுக்குள் சென்றால்
குன்றில் மோதிய குருவி போலவும், வேடர் குடியிருப்புக்குள்
நுழைந்த மான் போலவும் தொல்லைப்பட நேரும் என்பது
அறிஞர் கொள்கை. பாயிரத்தின் முன்னுரையில் முதல் செய்தி
நூலாசிரியரைப் பற்றியதாகும். எனவே ஐங்குறுநூற்றின்
ஆசிரியர்களைப் பற்றி அறிவது இன்றியமையாததாகும்.
திணை பற்றிப் பாடுவதில் வல்லமை பெற்ற ஐம்பெரும்
புலவர்கள் இந்நூலின் பாக்களை இயற்றியுள்ளனர்.
ஓரம்போகியார், அம்மூவனார், கபிலர், ஓதலாந்தையார்,
பேயனார் என்பாரே அப்பெரும் புலவர்கள். இவர்கள்
பெயரையும், இவர்கள் பாடிய திணை எது என்பதையும்
கருதும் குறிஞ்சி கபிலன் - கருதிய
பாலைஓ தலாந்தை பனிமுல்லை பேயனே
நூலைஓது ஐங்குறு நூறு.
என்ற பழம்பாடல் விளக்கியுள்ளது.
• ஓரம்போகியார்
ஐங்குறுநூற்றின் முதல் நூறு பாடல்கள் மருதத்
திணைப் பாடல்களாகும். அவற்றைப் பாடியவர்
ஓரம்போகியார் ஆவார். இதுவே இவரது இயற்பெயராகும்.
இவரது பெயர் ஓரேர் போகியார், ஒன்னார் உழவர்,
காம்போதியார் எனச் சில படிகளில் காணப்படுகிறது.
இப்புலவரை ஆதரித்தவன் ஆதன் அவினி என்னும்
சேர மன்னன். இவர் தம்மை ஆதரித்த ஆதன் அவினியோடு
கடுமான் கிள்ளி, ஆமூரைத் தலைநகராகக் கொண்ட ஒரு
சோழன் முதலிய வேறு சிலரையும் தம் பாடல்களில்
பாடியுள்ளார்.
ஐங்குறுநூறு அல்லாமல் இவர் பாடிய பாடல்கள்
மொத்தம் 10. இவற்றுள் அகத்திணை 9, புறத்திணை ஒன்று.
அகத்திணையின் ஒன்பது பாடல்களில் ஏழு மருதத்திணைப்
பாடல்களாகும். இதனால் இவர் மருதத்திணையைப் பாடுவதில்
பெரும் ஆர்வம் கொண்டிருந்தவர் என்பது விளங்குகிறது.
• அம்மூவனார்
ஐங்குறுநூற்றின் இரண்டாவது நூறு, நெய்தல்
திணைப் பாடல்களாகும். இவற்றைப் பாடியவர் அம்மூவனார்
ஆவார். இவரது இயற்பெயர் மூவன் என்பதாகும். இத்துடன்
அ அடைமொழி சேர்க்கப்பட்டு அம்மூவன் > அம்மூவனார்
என ஆகியிருக்கலாம்.
இப்புலவர் பெருமகனைச் சேரரில் ஒருவன்,
பாண்டியரில் ஒருவன், காரி ஆகியோர் ஆதரித்துள்ளனர்.
ஐங்குறுநூறு அல்லாமல் இவர் பாடிய பாடல்கள் 27
ஆகும். இவை யாவும் அகப்பாடல்களே. இவற்றுள் 23
பாடல்கள் நெய்தல் திணைப் பாடல்களாகும். இதனால்
நெய்தல் திணையைப் பாடுவதில் இவர் வல்லவர் என்பது
விளங்குகிறது.
• கபிலர்
ஐங்குறுநூற்றின் மூன்றாவது நூறு குறிஞ்சித்திணைப்
பாடல்களாகும். இவற்றை எழுதியவர் கபிலர். இவர் அந்தணர்
என்பது இவரது கூற்றாலேயே அறியக் கிடக்கிறது. இவரது
ஊர் மதுரை நகருக்குக் கிழக்கில் உள்ள வாதவூர் என்று
நம்பப்படுகிறது. பாரி என்ற வள்ளலுக்கு நண்பராய்
விளங்கியவர். பாரி இறந்த பின் அவனது மகளிருக்குத்
திருமணம் செய்து வைத்தவர். இவரால் பாடப்பட்டோர்
பலராவார்.
ஐங்குறுநூறு அல்லாமல் இவர் பாடிய
அகப்பாடல்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 103 ஆகும்.
இவற்றுள் 97 பாடல்கள் குறிஞ்சித்திணைப் பாடல்களாகும்.
இவற்றுள் நெடும்பாட்டான குறிஞ்சிப்பாட்டும் அடங்கும்.
இதனாலேயே இவர் குறிஞ்சிக்கோர் கபிலர் என்று
சிறப்பிக்கப் பட்டார்.
• ஓதலாந்தையார்
ஐங்குறுநூற்றின் நான்காவது நூறு, பாலைத்திணைப்
பாடல்களாகும். இவற்றைப் பாடியவர் ஓதலாந்தையார்.
இவரது இயற்பெயர் அதன் தந்தை எனபதனின் மரூஉ ஆந்தை
என்பர்¥. இவரை ஆதரித்த அரசர்கள் பற்றிய செய்திக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை.
ஐங்குறுநூறு அல்லாமல் இவர் பாடிய பாடல்கள்
மொத்தம் மூன்று. இவற்றுள் இரண்டு பாலைத் திணைப்
பாடல்களாகும். இதனால் இவர் பாலை பாடுவதில் மட்டுமே
பேரார்வம் கொண்டிருந்தார் என்பது விளங்குகிறது.
பாடல்களாகும். இவற்றைப் பாடியவர் பேயனார் ஆவார்.
இவரது இயற்பெயர் பேயன் என்பதாகும். இவரை ஆதரித்த
அரசர்கள் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
ஐங்குறுநூறு அல்லாமல் இவர் பாடிய பாடல்கள் ஐந்து.
இவற்றுள் மூன்று பாடல்கள் முல்லைத்திணைப் பாடல்களாகும்.
இதனால் இவர் முல்லையைப் பாடுவதில் வல்லவர் என்பது
விளங்குகிறது.
ஐங்குறுநூற்றின் ஐந்து திணைகளையும் பாடியவர்கள்,
அவ்வத் திணையில் ஈடுபாடு கொண்டவர்கள்,
துறைபோகியவர்கள் என்பது அவர்கள் பாடிய அகத்திணைப்
பாடல்களின் எண்ணிக்கை வழி தெளிவாகிறது.
நூலாசிரியர் பற்றிச் சிறிது அறிந்து கொண்டோம். இனி
ஐங்குறுநூற்றில் அமைந்த ஐந்து திணைப் பாடல்களையும்
காணலாம்.
ஒவ்வொரு திணையும் நூறு பாடல்களைக் கொண்டது.
நூறு பாடல்களும் பத்துப் பத்தாக ஒவ்வொரு தலைப்பின்கீழ்
அமைந்துள்ளன. ஒவ்வொரு தலைப்பும் பத்து என்றே இருக்கும்.
எடுத்துக்காட்டு:
வேட்கைப் பத்து, வேழப் பத்து (மருதம்) ; தாய்க்கு
உரைத்த பத்து (நெய்தல்); அன்னாய் வாழிப் பத்து (குறிஞ்சி).
இவைபோலவே மற்றவைகளும் அமைந்துள்ளன. திணைக்கு
ஒன்று அல்லது இரண்டு பத்துகளிலிருந்து சில பாடல்களை
விளக்கமாகக் காணலாம்.