தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

D01121-1.3 நெய்தல்

1.3 நெய்தல்
    தலைவன் ஏதோ ஒரு காரணம் குறித்துப் பிரிந்து
சென்றிருப்பான். அவ்வேளையில் பிரிவுத் துயர் ஆற்றாது
(தாங்காது) தலைவனோ தலைவியோ புலம்புவது
நெய்தல் திணை ஒழுக்கம் (உரிப்பொருள்) ஆகும்.
இத்திணைக்குக் கடலும் கடல் சார்ந்த இடமும்
முதற்பொருள். இப்பகுதியில் வாழும் மக்களும் விலங்குகளும்
பறவைகளும் பிறவும் கருப்பொருளாய் அமைந்து
இத்திணைப் பாடல்களை நடத்திச் செல்லும். இங்கு
நெய்தல் திணைப் பாடல்களை அவற்றின் பகுப்பு வழிக்
காணலாம்.

1.3.1 பாடல்கள்
    தாய்க்கு உரைத்த பத்து, தோழிக்கு உரைத்த பத்து,
கிழவற்கு உரைத்த பத்து, பாணற்கு உரைத்த பத்து, ஞாழற்
பத்து, வெள்ளாங்குருகுப் பத்து, சிறுவெண்காக்கைப் பத்து,
தொண்டிப் பத்து, நெய்தற் பத்து, வளைப்பத்து ஆகிய
பத்தும் நெய்தல் பகுதியின் பிரிவுகளாகும்.

• தாய்க்கு உரைத்த பத்து

    தலைவன் களவிலோ கற்பிலோ பிரிந்திருக்கும் போது
வருந்தும்    தலைவியின் நிலை குறித்துத் தாய்
(செவிலித்தாய்) வருந்துவாள். வருந்தும் தாய்க்குத் தோழி
சில சொல்லுவாள். இவ்வகையில் அமைந்த பத்துப்
பாடல்களின் தொகுதி தாய்க்கு உரைத்த பத்து என்ற
பெயரால் குறிக்கப்படுகிறது.

அன்னை வாழி வேண்டன்னை உதுக்காண்
ஏர்கொடிப் பாசடும்பு பரிய ஊர்புஇழிபு
நெய்தல் மயக்கி வந்தன்று நின்மகள்
பூப்போல் உண்கண் மரீஇய
நோய்க்கு மருந்தாகிய கொண்கன் தேரே
- (101)
(உதுக்காண் = அதோ பார்;
பாசடும்பு = பசிய அடப்பங்கொடி; பரிய = வருந்துமாறு;
ஊர்பு இழிவு = ஏறியிறங்கி; உண்கண் = மையுண்ட கண்;
கொண்கன் = கணவன்)

என்ற பாடலில் தலைவியின் பிரிவு நோய்க்கு மருந்தாகிய
தலைவனின் தேர் வந்து விட்டது என்று தோழி செவிலியிடம்
கூறும் ஆறுதல் செய்தி இடம் பெற்றுள்ளது. அறத்தொடு
நிற்கும் பாடல்களும் இப்பகுப்பில் இடம் பெற்றுள்ளன.
அன்னை வாழி, அம்ம வாழி போன்றவை விளிகள்.

• தோழிக்கு உரைத்த பத்து

    தலைவி தனது நிலை குறித்தோ, களவு வாழ்க்கை
இல்லத்தாருக்குத் தெரிந்தமை குறித்தோ தோழியிடம்
எடுத்துக் கூறுவாள். இவ்வகையில் அமைந்த பத்துப்
பாடல்களின் தொகுதி தோழிக்கு உரைத்த பத்து என்ற
பெயரால் குறிக்கப் படுகிறது. இப்பகுப்பின் ஒரு பாடல்
மட்டும் கற்புக் காலப் பாடலாக உள்ளது.

அம்ம வாழி தோழி பாணன்
சூழ்கழி மருங்கின் நாண் இரை கொளீஇச்
சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை
பிரிந்தும் வாழ்துமோ நாமே
அருந்தவம் முயறல் ஆற்றா தேமே.
- (111)
(கழி = உப்பங்கழி;
நாண் = தூண்டில்; முயறல் = முயலுதல்;
சினைக்கயல் = சினையாக உள்ள கயல்மீன்கள்;
ஆற்றாதேம் = இயலாதவர்களாகிய நாங்கள்)

என்ற பாடலில் தலைவன் பிரியாமல் இருக்கத் தவம்
இயற்றவில்லை என்றாலும் பிரிவை ஆற்றியிருக்கும் திறம்
பெற்றிருக்கிறேன் எனத் தலைவி தோழியிடம் உரைக்கும்
செய்தி இடம் பெற்றுள்ளது.

• கிழவற்கு உரைத்த பத்து

    கிழவன் என்ற சொல் தலைவனைக் குறிக்கும். கற்பு
வாழ்க்கையில் பரத்தை, தலைவனை எள்ளி நகையாடி
உரைக்கும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி
கிழவற்கு உரைத்த பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.
பரத்தைக்குச் சிறப்பின்மையால் தலைவன் பெயரால்
குறிக்கப்பட்டது. “கண்டிகு மல்லமோ கொண்க நின்கேளே?”
என்ற தொடர் பத்துப் பாடல்களிலும் இடம் பெற்றிருந்தாலும்
இதனால் பெயர் அமையாது கேட்போரைக் கொண்டு பெயர்
குறிக்கப் பெறுவது குறிப்பிடத் தக்கது.

கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே?
முண்டகக் கோதை நனையத்
தெண்டிரைப் பௌவம் பாய்ந்து நின்றோளே
- (121)
(கண்டிகும் அல்லமோ = நாங்கள் பார்த்ததில்லையா என்ன?;
கேள் = உறவு; முண்டகக் கோதை = தாமரை மாலை)

என்ற பாடலில் பரத்தை, தலைவனிடம் தலைவி குறித்துப்
பேசிய செய்தி இடம் பெற்றுள்ளது.

• பாணற்கு உரைத்த பத்து

    அகத்திணையில் சிற்சில சூழ்நிலைகளில் தலைவன்
தலைவியரிடையே சந்து (சமாதானம்) செய்விப்போர்
வாயில்கள் எனப்படுவர். வாயிலாக உள்ள பாணனிடம்
தலைவி, தோழி, பரத்தை ஆகியோர் கூற்று நிகழ்த்துவதாக
அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி பாணற்கு உரைத்த
பத்து
என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

நன்றே பாண கொண்கனது நட்பே
தில்லை வேலி இவ்வூர்க்
கல்லென் கௌவை எழாஅக் காலே
- (131)
(தில்லை = ஒரு வகை மரம்; கௌவை = பழிச்சொல்)

என்ற பாடலில் தலைவி, ‘ஊரார் பழிச்சொல் கூறா விட்டால்
தலைவனின் நட்பு ஏற்றுக் கொள்ளத் தக்கதே’ என்று
பாணனிடம் வாயில் மறுக்கும் (மறுத்துரைக்கும்) செய்தி
இடம் பெற்றுள்ளது.

• ஞாழற் பத்து

    ஞாழல் என்பது ஒரு வகை மரம். இது கொன்றை மர
வகையைச் சார்ந்தது. நெய்தல் நிலக் கருப்பொருள்.
இக்கருப்பொருள் இடம் பெறும் வகையிலும் அதன்வழி
உட்பொருள் விளங்கவும் அமைந்த பத்துப் பாடல்களின்
தொகுதி ஞாழற் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

• வெள்ளாங்குருகுப் பத்து

    நீர்ப்பறவை இனத்துள் ஒன்று வெள்ளாங்குருகு.
நெய்தல் நிலத்துக் கருப்பொருள். வெள்ளாங்குருகு இடம்
பெறும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி
வெள்ளாங்குருகுப் பத்து என்ற பெயரால் குறிக்கப்
படுகிறது.

    இப்பகுதியில் தலைவி, வெள்ளாங்குருகை
உள்ளுறையாக வைத்து, தலைவனுக்கு வாயில் மறுக்கும்
செய்தி இடம் பெற்றுள்ளது.

• சிறுவெண்காக்கைப் பத்து

    நெய்தல் நிலக் கருப்பொருள்களில் ஒன்று சிறுவெண்
காக்கை
. இக்காக்கை இடம் பெறவும் அதன்வழி உட்பொருள்
விளங்கவும் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி
சிறுவெண்காக்கைப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
கருங்கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப்
பயந்துநுதல் அழியச் சாஆய்
நயந்த நெஞ்சம் நோய்ப்பால் அஃதே!
- (161)
(கருங்கோடு = கரிய கிளை; புன்னை = புன்னை மரம் ;
பயந்து = பசந்து; நுதல் அழிய = நெற்றி ஒளி மங்க;
சாய் = மெலிந்து; நயந்த = விரும்பிய;
நோய்ப்பாலஃது = நோய்வாய்ப்பட்டது)

என்ற பாடலில் தலைவன் ஒருவழித்தணந்த வழி, தலைவி
ஆற்றாமை மிக்கு உரைக்கும் செய்தி இடம் பெற்றுள்ளது.
இப்பாடலில் சிறுவெண் காக்கை வழி உள்ளுறை ஒன்றும்
வெளிப்பட்டுள்ளது. (ஒருவழித் தணத்தல் - அலர்
அடங்குவதற்காகத் தலைவன் சில நாட்களுக்குத்
தலைவியைக் காண வாராதிருத்தல்)

• தொண்டிப் பத்து

    தொண்டி என்பது ஒரு கடற்கரை நகரம். இந்நகரம்
பெண்ணின் அழகுக்கு உவமையாகும் வகையிலும் நகரின்
நிகழ்வுகளைக் கூறும் வகையிலும் அமைந்த பத்துப்
பாடல்களின் தொகுதி தொண்டிப் பத்து என்ற பெயரால்
குறிக்கப்படுகிறது.

திரைஇமிழ் இன்னிசை அளைஇ அயலது
முழவுஇமிழ் இன்னிசை மறுகுதொறும் இசைக்கும்
தொண்டி அன்ன பணைத்தோள்
ஒண்தொடி அரிவைஎன் நெஞ்சு கொண்டோளே
- (171)
(மறுகு = தெரு)

என்ற பாடலில், இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும்
தலைமகன், தலைவியின் அழகை, தொண்டி நகரத்தால்
உவமிக்கும் செய்தி இடம் பெற்றுள்ளது.

• நெய்தற் பத்து

    நெய்தல் நிலக் கருப்பொருள்களில் ஒன்று நெய்தல்
மலர். இந் நெய்தல் மலர் இடம் பெறும் வகையிலும் அதன்
வழிப் பொருள் விளக்கமுறும் நிலையிலும் அமைந்த பத்துப்
பாடல்களின் தொகுதி நெய்தற் பத்து என்ற பெயரால்
குறிக்கப் படுகிறது.

    இப்பகுதியில் நெய்தல் மலர் உவமையாக இடம்
பெற்றுள்ளது.

• வளைப்பத்து

    வளை என்ற சொல் சங்கைக் குறிக்கும்; இது
நெய்தல் நிலக் கருப்பொருள்களில் ஒன்று.
வளை - வளையல் இடம் பெறும் வகையில் அமைந்த
பத்துப் பாடல்களின் தொகுதி வளைப்பத்து என்ற
பெயரால் குறிக்கப்படுகிறது.

கடற்கோடு செறிந்த வளைவார் முன்கைக்
கழிப்பூத் தொடர்ந்த இரும்பல் கூந்தல்
கானல் ஞாழல் கவின்பெறும் தழையள்
வரையர மகளிரின் அரியளென்
நிறையரு நெஞ்சம் கொண்டொளித் தோளே.
- (191)

    பாங்கன், உன் மனத்தைக் கவர்ந்தவள் எத்தகையவள்
என்று கேட்க, தலைவன் அவளைப் பற்றிக் கூறிய
கருத்தமைந்த பத்துப் பாடல்களைக் கொண்டது இந்தப் பகுதி.

    நெய்தல் திணைப் பகுப்புகளில் தாய், தோழி,
தலைவன், பாணன் ஆகிய நான்கு இயல் கொண்டு அதாவது
கேட்போரைக் கொண்டு பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
ஞாழல், குருகு, காக்கை, நெய்தல், வளை ஆகிய ஐந்து
கருப்பொருள் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளன. தொண்டி
நகரத்தைக் கொண்டு ஒன்று தொகுக்கப்பட்டுள்ளது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 10:44:19(இந்திய நேரம்)