Primary tabs
கோடல் (பிறர் அறியாது கொள்ளுதல்) என்று பொருள்
கூறுவர் இளம்பூரணர். தமக்கு உறவு அல்லாத ஒரு
பெண்ணை அவளது உறவினர் கொடுக்கக் கொள்ளாது,
கேட்டுப் பெறாது பெண்ணின் விருப்பத்தோடு யாரும்
அறியாமல் கூடி, பின்னும் அந்நிலை வழாஅமல் வாழ்தல்
களவு என அகப்பொருளில் வழங்குகிறது.
ஊழ் கூட்டுவிக்க ஒப்பாரும் மிக்காரும் அற்ற
தலைவனும் தலைவியும் சந்தித்துக் காதல் கொண்டு
தொடர்வது களவு வாழ்க்கை ஆகும்.
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
என்று களவின் தொடக்கத்தைத் தொல்காப்பியம்
குறிப்பிட்டுள்ளது. இதை இயற்கைப் புணர்ச்சி என்பர்.
இதன்மேலும் இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம்,
பாங்கியிற் கூட்டம் எனக் களவு தொடரும்.
ஐங்குறுநூற்றில் அமைந்துள்ள களவொழுக்கப்
பாடல்களை இனிக் காண்போம்.
பால் அல்லது ஊழ் அல்லது விதிதான் காரணம்
என்பது நம்மில் பெரும்பாலான மக்களின் நம்பிக்கை.
ஊழின் வலியாலேயே தலைவனும் தலைவியும் சந்திப்பர்.
களவு வாழ்க்கையைத் தொடங்குவர். இதனை ஒரு
தலைவியின் கூற்றால் அறிய முடிகிறது.
பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை
என்னை என்னும் யாமே ; இவ்வூர்
பிறிதொன் றாகக் கூறும்
ஆங்கும் ஆக்குமோ வாழிய பாலே
பிறிதொன்று = வேறொன்று ; பால் = ஊழ்)
(அந்தத் துறைவனே என் தலைவன் என்று நான்
நினைக்கிறேன். இந்த ஊர் வேறு ஒருவருக்கு என்னை
மணம் பேசுகிறது.) முன்பு ஒரு நாள் என்னை ஒரு
தலைவனுடன் சேர்த்து வைத்த பால்/ஊழ், இவ்வூர்
கூறுவது போல வேறொருவனுக்கு மனைவியாக்குமா-
எனத் தலைவி வினவுவதாகப் பாடல் அமைந்துள்ளது.
இச்செய்தி ஊழ்தான் தலைவன் தலைவியை ஒன்று
சேர்த்து வைக்கிறது என்ற கருத்திற்குச் சான்றாகும்.
விதி வயத்தால் சந்திக்க நேரும். சந்தித்த இருவரும்
ஒருவருக்கு ஒருவர் குறிப்பறிந்து புணர்ச்சி மேற்கொள்வர்.
இது இயற்கைப் புணர்ச்சி எனப்படும். இது காட்சி,
ஐயம், தெளிவு, துணிவு என்னும் நான்கு நிலைகளில்
நிகழும்.
முழவு இமிழ் இன்னிசை மறுகுதொறும் இசைக்கும்
தொண்டி அன்ன பணைத்தோள்
ஒண்தொடி அரிவை என் நெஞ்சு கொண்டோளே
தொண்டி = ஒரு நகரம் ; அரிவை = பெண்)
இது நெய்தல் திணையில் அமைந்த பாடலாகும்.
இயற்கைப் புணர்ச்சியில் மகிழ்ந்து நீங்கும் தலைவன்,
தலைவி ஆயத்தோடு (தோழிகள் கூட்டத்தோடு)
செல்வதைக் கண்டு, அவள் நலம் (அழகு) பாராட்டி,
தன் நெஞ்சம் கவர்ந்த நிலையைக் கூறுகின்றான்.
இது இயற்கைப் புணர்ச்சி குறித்ததாகும்.
தலைவன் மீண்டும் அவ்விடத்து அந்நேரத்துச் சென்றால்
அவளைச் சந்திக்கலாம் என்று கருதுவான். தலைவியும்
இங்ஙனமே கருதினால் சந்திப்புகள் நிகழும். இது
இடந்தலைப்பாடு (இடத்தை அடைதல்) எனப்படும்.
இடந்தலைப்பாட்டில் தலைவன் தலைவியைத் தவிர வேறு
யாருக்கும் பங்கு இல்லை.
முகம்புதை கதுப்பினள், இறைஞ்சி நின்றோளே -
புலம்புகொள் மாலை மறைய
நலங்கே ழாகம் நல்குவள் எனக்கே
இது நெய்தல் திணைப் பாடலாகும். இயற்கைப்
புணர்ச்சி நிகழ்ந்த இடத்தில் தலைவியைக் காண்போம்
என்று தலைவன் சென்று அங்குத் தலைவியைக்
கூடுகிறான். மாலை மறைந்ததும் தலைமகள் கூடுவாள்
என்ற எதிர்பார்ப்பைக் குறிக்கும் வகையில் பாடல்
அமைந்துள்ளது.
சந்திக்க முடியாத நிலை ஏற்படும் போது தலைவன்,
பாங்கனின் (தோழனின்) உதவியை நாடுவான். சந்திக்க
முடியாமல் வருந்தி உடல் மாறுபட்டு இருக்கும்
தலைவனைக் கண்டு பாங்கனே உதவவும் முன் வருவான்.
இங்ஙனம் தலைவனுக்கும் தலைவிக்கும் நிகழும் கூட்டம்
பாங்கற் கூட்டம் (பாங்கனால் ஏற்பாடு செய்யப்பட்ட
சந்திப்பு) எனப்படும்.
வண்டிமிர் பனித்துறைத் தொண்டி ஆங்கண்
உரவுக்கட லொலித்திரை யென்ன
இரவி னானும் துயிலறி யேனே.
இது நெய்தல் திணைப் பாடல். தூங்காமல் அல்லல்படும்
தலைவனைப் பார்த்து வினவ, ஒண்தொடி அரிவை என்
உள்ளம் கொண்டாள் எனத் தன் துன்பத்திற்கான
காரணத்தைத் தலைவன் கூறுவதாகப் பாடல்
அமைந்துள்ளது.
தலைவியைத் தலைவன் சந்திக்கும் இடத்தில்
சென்று பார்த்து வந்த பாங்கன், இத்தகு அழகு வாய்ந்த
தலைவியைச் சந்திப்பவர்கள் இரவு நேரத்தில் மணியைத்
தொலைத்து விட்ட நாகப்பாம்பு அடையும் துன்பத்தைப்
போலத் துன்பம் அடைவது உறுதி எனத் தனக்குள்ளே
கூறும் செய்தி 173ஆம் பாடலாக அமைந்துள்ளது.
குறி நல்கினாள் எனப் பாங்கன் கூறும் செய்தி,
(174) பாங்கற் கூட்டத்திற்கு அவன் ஏற்பாடு
செய்தமையைக் காட்டுகிறது.
சந்திக்கவே இயலாத போதோ தலைவன் தோழியின்
உதவியை நாடுவான். பாங்கியிற் கூட்டம் / தோழியிற்
கூட்டம் களவுப் புணர்ச்சியில் மிகப்பெரும் பங்கு
வகிக்கும். பாங்கற் கூட்டத்தின் போதே, எதிர்காலத்தில்
தோழியின் உதவி தேவை என்பதைத் தலைவன்
உணர்கிறான். இதை அறிவுறுத்தும் பாடல் ஒன்று
ஐங்குறுநூற்றில் (175) இடம் பெற்றுள்ளது.
அடுத்த சந்திப்பின் போது தோழியையும்
உடனழைத்து வரவேண்டும் என்ற தலைவனின்
வேண்டுகோளை இது எடுத்துச் சொல்கிறது.
தோழியிற் கூட்டம் என்பது பாங்கி மதி
உடன்பாடு, பகற்குறி, இரவுக்குறி, அலர்,
சேட்படை, மடல் திறம், வெறியாட்டு, நொதுமலர்
வரைவு, வரைவு கடாதல், அறத்தொடு நிற்றல்,
ஒருவழித் தணத்தல், உடன்போக்கு என்ற
நிலைகளில் அமையும்.
• பாங்கி மதிஉடன்பாடு
தலைவன், தலைவி மீது கொண்டுள்ள காதலைத்
தோழி அறியச் செய்தலும் காதலை ஏற்கச் செய்தலும்
மதியுடன்பாடு ஆகும். இது முன்னுறவு உணர்தல்,
குறையுற உணர்தல், இருவரும் உள்வழி அவன்
வரவு உணர்தல் என்ற நிலைகளில் நிகழும்.
குறையுற உணர்தல் என்பது, தலைவன்,
தலைவியைச் சந்திக்க முடியாமல் தவிக்கும் தன்
குறையைத் தீர்க்கக் கோரித் தோழியிடம் முறையிட்டுத்
தழை ஆடை கொடுக்க, அதனை ஏற்ற தோழி,
தலைவியைக் கூட்டத்திற்கு உடன்படச் சொல்லும்
செய்தியைக் கூறுகிறது. தழையுடை என்பது கையுறை
என்ற சொல்லால் அக இலக்கியங்களில் குறிக்கப்படும்.
தழையுடையைத் தலைவியிடம் தலைவன் நேராகக்
கொடுப்பதும், தோழி வாயிலாகக் கொடுப்பதும்
தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள காதலைப்
புறத்தார்க்குப் (மற்றவர்களுக்கு) புலப்படுத்தும் குறியீடு
ஆகும். மதியுடன்பாட்டின் தொடர்ச்சியாகப்
பகற்குறி, இரவுக்குறிகள் நிகழும்.
• சேட்படை
தலைவன் தோழியிடம் குறையிரந்து நிற்கும்
போது, தோழி உடன்படாது தலைவனை அவ்விடத்தை
விட்டு அகற்ற முற்படுவாள். இது சேட்படை என்னும்
நிலை-துறை - ஆகும்.
எம்மொடு வந்து கடலாடு மகளிரும்
நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார்
உடலகம் கொள்வோர் இன்மையின்
தொடலைக் குற்ற சிலபூ வினரே
என்ற பாடல் தோழி தலைவனிடம் கூறும் செய்தியைக்
கொண்டது. உங்களுக்கு எந்த வகையிலும்
தொடர்பில்லாத - பகையோ நட்போ இல்லாத-
நொதுமலாளராகியவர்கள் நீங்கள் கொடுப்பதை ஏற்க
மாட்டார்கள் என்றும் நெய்தல் நிலத்தில் கிடைக்காத
இத்தழையுடையை ஏற்றால் பார்ப்போருக்கு ஐயம்
ஏற்படும் என்றும் கூறி, தோழி தலைவனை அகற்ற
முயலும் செய்தி பாடலில் இடம் பெற்றுள்ளது.
இதுவே சேட்படை.
தலைவியது இளமையைக் கூறி, மணத்திற்கான
தகுதியை அடையாதவள் என்று கூறித் தலைவனை
அகற்றும் முயற்சியிலும் தோழி ஈடுபடுவாள்.
• பகற்குறி
மதியுடன்பாட்டில் வெற்றி கண்ட தலைவன்
தோழியின் உதவியோடு மீண்டும் மீண்டும் தலைவியைப்
பகற்பொழுதில் ஒரு குறித்த இடத்தில் சந்திப்பது
பகற்குறி ஆகும். பகற்குறி இல்ல வளாகத்திற்கு
வெளியில் நிகழும்.
பாடல் (215) பகற்குறியைக் குறிப்பிடுவதோடு
இரவுக்குறி நயத்தலையும் (விருப்பத்தையும்)
குறிப்பிட்டுள்ளது. ‘புதல் மலர் மாலையும் பிரிவோர்’
என்ற தொடர் பகற்குறியில் வந்து திரும்புவதை
விளக்குவதாகும்.
பகலில் வந்து செல்வதால் ஏற்படும்
இடையூறுகளையும் இரவில் சந்திப்பதால் ஏற்படும்
நன்மைகளையும் கருத்தில் கொண்டு பகற்குறியை
மறுத்து இரவுக்குறியை விரும்புவது உண்டு.
மேற்காட்டிய பாடல், பகற்குறிக் கண் வந்து நீங்கும்
தலைவன் சிறைப்புறத்தில் (வளாக எல்லைக்
கோட்டில்) இருக்க, அவன் கேட்கும் வகையில்
பகற்குறி மறுத்து இரவுக்குறி விரும்பி, தலைவி
தோழிக்கு உரைப்பதாக அமைந்துள்ளது.
• இரவுக்குறி
இரவுக்குறி என்பது இரவு நேரத்தில் ஒரு
குறித்த இடத்தில் தலைவன், தலைவியைத் தோழியின்
உதவியுடன் சந்திப்பதாகும். இரவுக்குறி இல்ல
வளாகத்தில் நிகழும்.
கழனி ஊர!நின் மொழிவல் ; என்றும்
துஞ்சுமனை நெடுநகர் வருதி ;
அஞ்சா யோஇவள் தந்தைகை வேலே
என்ற பாடல் தோழி தலைவனிடம் கூறுவதாக
அமைந்ததாகும். இப்பாடலில் இடம் பெற்றுள்ள
‘துஞ்சுமனை நெடுநகர் வருதி’ என்ற தொடர்
இரவுக்குறியைக் குறிப்பதாகும்.
பகற்குறி, இரவுக்குறி குறித்த பாடல்கள் எல்லாம்
அவற்றை மட்டும் குறிப்பதாக இல்லாமல் வேறு
செய்திகளையும் குறிக்கும். பகற்குறி மறுத்து இரவுக்குறி
விரும்புவதும் பின் இரவுக்குறியின் இடர்ப்பாடுகளைக்
குறிப்பிட்டு வரைவுக்கு முயலச் சொல்வதும் ஆகிய
செய்திகள் பாடல்களில் இடம் பெறும். மேற்காட்டிய
பாடலில் உள்ள ‘அஞ்சாயோ இவள் தந்தை கைவேலே?’
என்ற தொடர் மறைமுகமாக வரைவு கடாவுவது
(திருமணத்திற்கு ஏற்பாடு செய்யச் சொல்லுவது) ஆகும்.
• அல்ல குறி
இரவுக்குறியின் போது தவறுகள் ஏற்படுவது
உண்டு. ஏதோ ஓர் ஒலியைத் தலைவன் குறிப்பிட்ட
ஒலி என்று கருதி, குறியிடத்து வந்து தலைவன்
இல்லாதது கண்டு வருந்தி, தலைவி இல்லத்திற்குத்
திரும்புவதும், தலைவன் வந்து ஒலி
எழுப்புகின்றபோது தலைவி பழையதை நினைத்து
வாராதிருப்பதும் அல்லகுறிகள் ஆகும்.
யாம் வந்து காண்பதோர் பருவ மாயின்
ஓங்கித் தோன்றும் உயர்வரைக்கு
யாங்கெனப் படுவது நும்மூர், தெய்யோ?
என்ற பாடல் அல்லகுறிக்குச் சான்று ஆகும். தோழி
தலைவனிடம் கூறுவதாகப் பாடல் அமைந்துள்ளது.
தலைவன் தலைவியைச் சந்திக்க இரவுக்குறிக்கு
வருகிறான். ஏதோ காரணத்தால் (அல்லகுறி) சந்திக்க
இயலாமல் போய்விடுகிறது. மறுமுறை வருகிறான்
அப்போது தோழி முதல் நாள் வரவில்லை என்று
கருதித் தலைவனிடம் வெகுண்டு பேசுகிறாள். ‘காதல்
உந்துகின்ற காரணத்தால் நாங்கள் உம்மைச் சந்திக்க
வருகின்றோம். உம்முடைய ஊர் எங்கே இருக்கிறது?’
என்பதாகப் பாடல் அமைந்துள்ளது.
• வரைவு கடாஅதல்
பகற்குறியிலும் இரவுக்குறியிலும் ஈர்க்கப்பட்ட
தலைவன், வரைதலில் (திருமணம்) நாட்டமின்றி,
களவொழுக்கத்தையே விரும்பி வாழ்வான். இந்நிலையில்
தோழி பல்வேறு நிலைகளை - சூழல்களை எடுத்துக்கூறித்
திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவாள். இது
வரைவு கடாஅதல் ஆகும்.
பகலில் வருபவனை இரவில் வா என்பதும் இரவில்
வருபவனிடம் வரும் வழிக்கு அஞ்சுகின்றோம் என்பதும்
வரைவு கடாதல்
அருக்கல் மஞ்ஞை கவரும் நாட
நடுநாள் கங்குலும் வருதி
கடுமா தாக்கின் அறியேன் யானே !
ஏனல் = தினை ; கடுமா = யானை)
என்ற பாடல் இரவில் நள்ளிரவில் வருவதால் கொடிய
விலங்குகளால் துன்பம் ஏற்படுமோ என்று
அஞ்சுகின்றோம் என்று கூறுமுகத்தான் வரைவு
கடாவுவதாக அமைந்துள்ளது.
ஏற்பட இருக்கின்ற அலரையும் இற்செறிப்பையும்
(தலைவியை வெளியே செல்ல விடாது தடை செய்தல்)
கருத்தில் கொண்டு தோழியை நடுவில் நிறுத்தித்
தலைவியே வரைவு கடாதலும் உண்டு.
இற்செறிப்பார் எனக் கேட்ட தலைமகள்
வரையாது வந்தொழுகும் தலை மகன் சிறைப்
புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியதாகப் பாடல் (111)
கூறுகிறது.
விளைந்த தினையைக் கிளி கவராமல் இருக்கக்
காவலுக்குத் தலைவி இருப்பாள். இது பகற்குறிக்கு
உதவியாக இருக்கும். தினை அறுவடைக்குட்பட்டாலோ
இயற்கைச் சீற்றத்தால் அழிய நேரிட்டாலோ தலைவி
காவலுக்கு வர இயலாது. பகலில் சந்திக்க இயலாது.
இதைக் காரணமாகக் கொண்டு தோழி வரைவு
கடாவுவாள்.
வேற்று வரைவு - வேற்றார் வந்து மணம்
பேசுவதைக் காரணமாகக் கூறி வரைவு கடாவுவது
உண்டு.
பாடல் 289இன் முதல் இரு அடிகளில் அமைந்துள்ள
உள்ளுறை மூலம் நொதுமலர் (வேற்றார்) வரைவு
கொண்டு வரைவு கடாதல் நிகழ்வதை அறியலாம்.
• ஒருவழித் தணத்தல்
களவொழுக்கத்தால் ஈர்க்கப்பட்டு, பகலும்
இரவும் குறியிடம் சென்று தலைவன், தலைவியோடு
பல காலம் கூட்டம் நிகழ்த்தி வந்தமையால் களவு
வெளிப்பட்டுப் பலரும் அறிவதாகிப் பரவிவிடும். பலரும்
அது பற்றிப் பேசுவர் ; அது அலர் எனப்படும். அலர்
அடங்குவதற்காகத் தலைவன் சிறிது காலம் தலைவியைச்
சந்திக்க வருவதைத் தவிர்ப்பான். இது ஒருவழித்
தணத்தல் எனப்படும்.
இருங்கல் விடரளை வீழ்ந்தென, வெற்பில்
பெருந்தேன் இறாஅல் சிதறும் நாடன்
பேரமர் மழைக்கண் கலிழத்தன்
சீருடை நன்னாட்டுச் செல்லும் அன்னாய்
என்ற பாடல் தலைவன் ஒருவழித் தணப்பேன்
என்று கூறிய வழி, அவன் சிறைப்புறத்தானாகத்
தோழி, தலைவியிடம் அச்செய்தியைக் கூறுவதாக
அமைந்துள்ளது. தலைவியே நீ அழும்படியாகத்
தலைவன் சிறிது நாட்கள் தன் நாட்டிற்குச் செல்ல
இருக்கின்றான். காரணம் அலர் தோன்றி விட்டது
என்கிறாள் தோழி. அலர் தோன்றியிருப்பது
உள்ளுறையால் விளக்கப் பட்டுள்ளது. பலாப்பழம்
முதிர்ந்து விட்டது போல, களவு முதிர்ந்து விட்டது.
பழத்தின் மணம் போலக் களவு வெளிப்பட்டு விட்டது.
பழம் வீழ்ந்ததால் தேனடை சிதைந்தது போலக் களவும்
சிதைகிறது என்பதாக உள்ளுறை அமைந்துள்ளது.
ஒருவழித் தணப்பேன் என்ற தலைவனிடம்
தலைவி தனது கருத்தை வெளிப்படுத்துவாள். பிரிய
வேண்டாம் என வற்புறுத்துவாள்.
அருவரை மருங்கி னாய்மணி வரன்றி
ஒல்லென இழிதரும் அருவிநின்
கல்லுடை நாட்டுச் செல்லல் தெய்யோ
என்ற பாடல் தோழி, தலைவனிடம் நீ விரைந்து வாராய்;
பனியும் வாடையும் தலைவியை வாட்டும் ; ஆகவே
உம் நாட்டுக்குச் செல்ல வேண்டாம்’ என்று கூறுவதாக
அமைந்துள்ளது.
• வரைவிடை வைத்துப் பொருள் வயிற் பிரிவு
களவில் இரு பிரிவுகள் உண்டு. அலர் அடங்குவதற்காகச்
சிறிது காலம் தலைவன் தலைவியைச் சந்திக்காமல் இருப்பான்.
இது ஒருவழித் தணத்தல். களவு வாழ்க்கையில் ஈடுபட்ட
தலைமகன் திருமணத்திற்காகவும் கற்பு வாழ்க்கைக்காகவும்
வேண்டிப் பொருள் தேடப் பிரிவான். இது வரைவிடை வைத்துப்
பொருள்வயிற் பிரிவு. தலைவன் தானாகவே முன்வந்தோ
தோழியால் அறிவுறுத்தப்பட்டோ வரைவுக்கு ஏற்பாடு
செய்துவிட்டுப் பொருள் தேடுவதற்காகப் பிரிவான்.
பிரிவின் கண் தலைவி ஆற்றியிருக்கத் துணை
செய்யும் தோழி, அவன் வரவையும் உணர்த்தும் செயலில்
ஈடுபடுவாள்.
பாடல் (217) தலைவனின் வரவை உணர்த்தி,
தலைவியைப் புத்துணர்வு கொள்ளச் செய்யும் தோழியின்
செயற்பாட்டை விளக்கியுள்ளது.
• மண அறிவிப்பு / வரைவு
களவில் வந்தொழுகும் தலைமகன் வரைய
முற்படுவான். ஏதோ ஒரு வகையில் தலைவனோடு
தலைவியின் குடும்பத்தார் உடன்பட்டு, திருமணத்திற்கு
முயல்வர். இதனைத் தோழி அறிந்து தலைவிக்குக்
கூறுவாள்.
ஒண்டழை அயரும் துறைவன்
தண்டழை விலையென நல்கினான் நாடே
திருமணத்துக்காகத் தலைவன் தந்த பொருளைக் குறிப்பிடுகிறது.)
என்ற பாடல் தலைவன் பரிசம் போட்டதை
அறிவிப்பதாகும். சுற்றத்தார் வேண்டும் பொருள்
கொடுத்து, தலைவன் வரைவு ஏற்பாடு செய்தமை
அறிந்து மகிழ்ந்து தோழி அதனைத் தலைவிக்கு
அறிவிக்கின்றாள். தழையின் விலைக்கு ஈடாகத் தனது
நாடுகளைக் கொடுத்தான். அதாவது பரிசம் போட்டான்
என்ற செய்தியைத் தோழி தலைவியிடம் கூறுகிறாள்.
• உடன் போக்கு
களவு வாழ்க்கை மேற்கொண்டிருந்த தலைவன்,
தானாக முன்வந்தோ தலைவியால் அறிவுறுத்தப்பட்டோ
தலைவியை உடன் கொண்டு செல்வான். இது
உடன்போக்கு எனப்படும். இதுவும் பிரிவு என்றே
கொள்ளப்படும். இருப்பினும் இது தலைமகளை உடன்
கொண்டு அவள் தமரைப் பிரியும் பிரிவாகக் கூறப்படும்.
உடன்போக்கிற்குத் தோழி ஏற்பாடு செய்வாள்.
தலைவி உடன்போக்கில் இருந்த போது அவளது
தோழியை விட அவளது ஊர் கவலையில் இருந்த
செய்தியைக் கூறுவதாகப் பாடல் 389 அமைந்துள்ளது.
உடன்போக்குக் குறித்த பாடல்களில், தலைவி,
தோழி கேட்கும் வினாக்களுக்கு விடையிறுப்பதாகச் சில
பாடல்கள் ஐங்குறுநூற்றில் உள்ளன.
உடன்போய் மீண்ட தலைவியிடம், நீ சென்ற
நாட்டுக் குடிநீர் நன்றாக இருக்காது என்று தோழி
கூறுகிறாள். இல்லை, இல்லை இனிமையான நீர் என்று
பதிலிறுக்கிறாள் தலைவி. இது தலைவியின் அன்பை
வெளிக் கொணர, தோழி கையாளும் உத்தி ஆகும்.
தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
உவலைக் கூவல் கீழ
மான்உண்டு எஞ்சிய கலிழி நீரே
உவலைக் கூவல் = தழை மூடிய கிணறு ;
கீழ = அடியில் உள்ள ; கலிழி நீர் = கலங்கிய நீர்)
என்ற பாடல் மேற்கூறிய செய்தியைத் தாங்கி நிற்பதாகும்.
• மாற்று நிகழ்வுகள்
தோழியர் கூட்டத்தில் இங்ஙனம் ஆற்றொழுக்காக
நிகழ்வுகள் அமையாமல் எதிர் விளைவுகளும் உண்டு.
வெறியாட்டு, நொதுமலர் வரைவு போன்றவை மாற்று
நிகழ்வுகளாக அமையும்.அவற்றை இனிக் காண்போம்.
• வெறியாட்டு விலக்கல்
களவின் வழி ஒழுகும் தலைவியின் மேனி
இற்செறிப்பு முதலியவற்றால் வேறுபடும் ; மெலியும்.
இந்த உண்மை அறியாத தாய், இவ்வேறுபாடு எதனால்
ஆயிற்று என்று அறிவரை வினவ, அவர்கள் குறி
பார்த்து முருகனால் ஆயிற்று என்பர். குறிபார்க்கக்
கழங்கு முதலியவற்றைப் பய்னபடுத்துவர். தலைவிக்கு
ஏற்பட்ட குறையைப் போக்க வேலன் என்பவனால்
பூசைகள் நிகழ்த்துவர். இது வெறியாட்டு எனப்படும்.
தோழி வெறியாட்டை விலக்க உண்மையை
மறைமுகமாகச் சொல்வாள். இது வெறிவிலக்கல் ஆகும்.
வெறிவிலக்கலாய் அறத்தொடு நிலையும் ஆகும்.
முருகென மொழியும் வேலன் ; மற்றவன்
வாழிய - இலங்கும் அருவிச்
சூர்மலை நாடனை அறியா தோனே.
கழங்கை வைத்துத் தலைவிக்கு வந்த நோய்
முருகனால் வந்தது என வேலன் மொழிந்ததைக் கேட்ட
தாய், அதனை உண்மை என நம்புகிறாள் ; தாய்
கேட்குமாறு, அந்த வேலன் தலைவிக்கும் தலைவனுக்கும்
உள்ள தொடர்பை அறியாதவன் என்று தோழி
தெரிவிக்கிறாள். இந்தப் பாடல் அதனை எடுத்துக்
காட்டுகிறது.
குறிஞ்சித் திணைப் பகுதியில் அமைந்துள்ள
வெறிப்பத்து பாடல்கள் யாவும் வெறியாட்டு,
வெறிவிலக்கல், அறத்தொடுநிற்றல் என்ற நிலைகளில்
அமைந்தவை ஆகும்.
• அறத்தொடு நிற்றல்
அறத்தின் வழி ஒழுகுதல் என்று இதற்குப்
பொருள் கொள்ளலாம். கற்பென்னும் கடைப்பிடியில்
நின்று களவொழுக்கத்தைப் பெற்றோர்க்கு
வெளிப்படுத்துதல் என்பது இத்துறையின் பொருளாகும்.
தலைவி ஏற்கெனவே கற்பு நெறிப்பட்டு விட்டாள்,
அறத்தோடு பொருந்தவே நடந்துள்ளாள் என்பதை
நேரிடையாகவோ, மறைமுகமாகவோ அறிவிப்பது
அறத்தொடு நிற்பதாகும்.
தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்பாள், தோழி,
செவிலிக்கு அறத்தொடு நிற்பாள். செவிலி, நற்றாய்க்கு
அறத்தொடு நிற்பாள். நற்றாய், தந்தை மற்றும்
தமையனார்க்கு அறத்தொடு நிற்பாள்.
அறத்தொடு நிலை இரண்டு சூழலில் ஏற்படும்.
தலைவிக்கு இற்செறிப்பு நிகழ்ந்து, உடல் மெலிந்து,
வெறியாட்டு நடக்கின்ற போது அறத்தொடு நிலை
நிகழும். தலைவிக்கு வேற்றுவரைவுக்கு முயலும் போதும்
அறத்தொடு நிற்றல் இடம் பெறும்.
• முதல் நிலை
இற்செறித்த இடத்துத் தலைவிக்கு எய்திய
வேறுபாடு கண்டு இது தெய்வத்தான் வந்தது என்று
கருதி வெறியாட்டு எடுக்க முற்படுகின்ற போது தோழி
செவிலிக்கு அறத்தொடு நிற்பது முதல் நிலை (பாடல் 28).
மணிவரைக் காட்சி மடமயில் ஆலும்நம்
மலர்ந்த வள்ளியங் கானங் கிழவோன்
ஆண்டகை விறல்வேள் அல்லன்இவள்
பூண்தாங்கு இளமுலை அணங்கி யோனே
இவள் பூண்தாங்கு இளமுலை அணங்கியோன் = இவளை
வருத்தும் நோயைத் தந்தவன்)
என்ற பாடல் நேரிடையாகவே, நோய் முருகனால் வந்தது
அல்ல, இது காதல்நோய் என்று கூறி அறத்தொடு
நிற்பதாக அமைந்துள்ளது.
• இரண்டாம் நிலை
வேற்று வரைவு நிகழ்த்த முயலுகையில் அறத்தொடு
நிற்பது இரண்டாம் நிலை.
தலைவியை அயலார் மணம் பேச வந்தனர்.
இப்போது செவிலி கேட்கும் வகையில் தலைவி தனக்கும்
தலைவனுக்கும் உள்ள தொடர்பைத் தோழியிடம்
எடுத்துரைக்கின்றாள் (201).
அவ்வாறே, நொதுமலர் வரைவின்கண் தோழி
செவிலிக்கு அறத்தொடு நிற்பாள்.
வேற்றுவரைவின் கண் தோழி செவிலிக்கு
அறத்தொடு நின்றதைப் பாடல் 110 கூறுகிறது. புன்னை
மலர்கள் பரந்து உதிர்ந்து கிடக்கும் துறையை உடையவன்
தலைவன். அத்தகையவனை யாம் எம் தலைவன் என்று
கூறுகிறோம். இவ்வூரில் உள்ளவர் வேறொன்றாகக்
கூறுவர். ஆதலால் ஊழ் அவ்வண்ணமும் ஆக்குமோ?
என்று தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்கிறாள் (110).
தலைவன் தலைவி களவு வாழ்க்கை வெற்றிகரமாக
நடந்து கற்பு வாழ்க்கைக்கு அடியெடுத்து வைக்கப்
பல்வேறு வகைகளில் தோழி உதவுவாள். இவையே
பாங்கியிற் கூட்டம் என்று விளக்கப்பட்டன.
• வாழ்த்து
மணம் முடித்துப் பள்ளியறைக்குச் செல்லும்
தலைவனிடம் தோழி ஒரு வேண்டுகோளை வைக்கின்றாள்.
சுணங்குவளர் இளமுலை மடந்தைக்கு
அணங்குவளர்த்து அகறல் வல்லா தீமோ.
இவளுக்கு வருத்தம் உண்டாக்கிப் பிரியாதிருப்பாய்
ஆகுக என்பதே தோழியின் வேண்டுகோள்.
நிற்றல் ஆகியவற்றில் செவிலி, நற்றாய், கண்டோர்
ஆகியோரின் பங்கு உண்டு. சிலவற்றைக் காண்போம்.
• செவிலி
உடன்போகிய தலைவியை எண்ணிப் புலம்புவதும்
சுரத்தில் (பாலை வழியில்) சென்று தேடுவதும் கண்டோரை
வினவுவதும் செவிலியின் செயற்பாடுகள் ஆகும்.
• நற்றாய்
தலைவி தலைவனுடன் போகியவழி நற்றாய்
புலம்புவது உண்டு. ஐங்குறுநூற்றில் மகட்போக்கிய
வழித் தாய் இரங்கு பத்து என்ற பகுப்பே இந்நிலையில்
அமைந்துள்ளது. இப்பகுப்பில் முதல் ஒன்பது பாடல்கள்
நற்றாய் புலம்புவதாகும்.
உயர்நெடுங் குன்றம் படுமழை தலைஇச்
சுரநனி இனிய ஆகுக தில்ல
அறநெறி இதுவெனத் தெளிந்தஎன்
பிறைநுதல் குறுமகள் போகிய சுரனே
என்ற பாடல் உடன்போகிய தன் மகளுக்கு அதாவது
தலைவிக்கு இடையூறு எதுவும் ஏற்படக் கூடாது என
வேண்டும் நற்றாய் கூற்றைக் கொண்டுள்ளது. இதுவே
அறநெறி என்று தெளிவான முடிவு எடுத்துக் காதலனுடன்
சென்ற என் மகளுக்கு அவள் செல்லும் பாலை வழி
இனியதாக அமையட்டும் என்பது இதன் பொருள்.
• கண்டோர்
உடன்போக்கில் இருக்கும் தலைவன் தலைவியைக்
கண்டோர் வியந்து கூறுவது, அறிவுரை கூறுவது,
தலைவன் தலைவியர் கூறுவதை அறிந்து ஆயத்தாரிடம்
கூறுவது எனக் களவு வாழ்க்கையில் கண்டோர் (பிறர்)
பங்கு அமையும். உடன்போக்கின்கண் இடைச் சுரத்து
உரைத்த பத்து என்ற பகுப்பில் கண்டோர் கூறுவதும்,
கண்டோரிடம் தலைவி கூறுவதும் இடம் பெற்றுள்ளன.
செங்கான் மராஅத்த வரிநிழ லிருந்தோர்
யார்கொல் அளியர் தாமே - வளர்சிறைக்
குறுங்கால் மகன்றில் அன்ன
உடன்புணர் கொள்கைக் காத லோரே?
அளியர் = இரக்கத்துக்குரியவர்;
உடன்புணர் கொள்கை = உடன்போக்கு மேற்கொண்டுள்ள)
என்ற பாடல் உடன்போக்கில் வழியிடையே தலைவன்
தலைவியரைக் கண்டவர் வியந்து சொல்லியது ஆகும்.
தலைவி தலைவனுடன் சென்ற செய்தியைத் தன்
தாயிடம் கூறுமாறு தலைவி கண்டோரிடம் கூறுவதுண்டு
(385). இதுபோல் ஆயத்தார்க்குச் சொல்லி அனுப்புவதும்
உண்டு. (ஆயம் - தோழியர் கூட்டம்)
இடைச்சுரத்தில் கண்டார் தாமே வந்து தாயாரிடம்
உரைப்பதுண்டு. இடைச்சுரத்தில் தேடி வரும்
செவிலித்தாயிடம் உலக இயற்கை கூறிச் செல்வதிலும்
கண்டோரின் பங்கு உண்டு.(387)