தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D01123-3.2 கற்பு

3.2 கற்பு
    அகத்திணை ஒழுக்கத்தில் களவை அடுத்துத்
தொடரும் ஒழுக்கம் கற்பு ஆகும். மறைந்தொழுகிய
காதலர்கள் ஊரறியத் திருமணம் செய்து கொண்டு வாழும்
பகுதியே இது. கற்பு வாழ்க்கையில் பல்வேறு பிரிவுகளை
மையமாகக் கொண்டு பாடல்கள் அமையும்.
3.2.1 திருமணம்
    களவு வழியிலும் திருமணம் நடைபெறும்.
களவின்றியும் நிகழும். களவு வழியில் நிகழும் திருமணம்,
களவு வெளிப்படா முன்னும் நிகழும் வெளிப்பட்ட
பின்னும் நிகழும்.

• களவு வழி : களவு வெளிப்படாமுன்

    பாடல் (280) களவின் வழி வந்த திருமணத்தை,
அதிலும் களவு வெளிப்படா முன் நிகழ்ந்த திருமணத்தைக்
குறித்துக் கூறுகிறது. வரைவிடை வைத்துப் பொருள்
வயிற் பிரிந்து பின் மணங்கொள்வதெல்லாம் களவு
வெளிப்படா முன் நிகழும் திருமணங்களாகும்.

• களவு வழி : களவு வெளிப்பட்ட பின்

    பாடல் (399) நற்றாய் கூற்று ஆகும். திருமணம்
தலைவி இல்லத்தில் நடைபெறுகிறது. தலைவனின்
தாயிடத்தில் யாரேனும் சென்று சொல்ல வேண்டும் என்று
நற்றாய் விரும்புகிறாள். தலைவனின் தாய், தலைவியின்
தாய் எல்லாருக்கும் தெரிந்த பின் இம்மணம் நடப்பதால்
இது களவு வெளிப்பட்டபின் நிகழும் மணமாயிற்று.

• களவு வழி வாராத் திருமணம்

    களவு வாழ்க்கையில் தொடராமல் பெரியோர் பேசி
முடிக்கும் திருமணங்களும் உண்டு. இத்தகைய திருமணம்
நடைபெறும் வகையில் பாடல் சான்று ஐங்குறுநூற்றில்
இல்லை. எனினும் குறிப்புகள் உள்ளன. நொதுமலர் வரைவு,
வேற்று வரைவு முயற்சிகள் அறிந்து தோழி அறத்தொடு
நிற்பது. களவு வழி வாராமல் திருமணங்கள் நடக்கின்றன
என்பதற்குச் சான்று ஆகும்.

    எவ்வழியில் கற்பு வாழ்க்கை (திருமண வாழ்க்கை)
வரினும் சிறப்புடையதே ஆகும். திருமணத்திற்குப் பின்
இல்லறத்தை இனிதாக நடத்த வேண்டும்.
3.2.2 இல்லறத்தில் அன்பு
    கற்பு வாழ்க்கை மேற்கொண்டிருக்கும் தலைவன்
தலைவியரிடையே அன்பு மிக்கிருக்க வேண்டும்.

    இல்லறத்திற்கு இன்றியமையாதது அன்பு. தலைவன்
தலைவியரிடையே அமைந்த அன்பு பற்றி, செவிலித்தாய்
நற்றாயிடம் பல பாடல்களிலும் குறிப்பிட்டுள்ளாள்.

மாதர் உண்கண் மகன்விளை யாடக்
காதலித் தழீஇ இனிதிருந் தனனே
- 406

    (மகன் விளையாடுவதைப் பார்த்த படியே தான்
விரும்பிய மனைவியைத் தழுவிக் கொண்டு மகிழ்ச்சியோடு
இருந்தான்.) எனவும், இன்னும் பலவாறும், தலைவன்
தலைவி மீதும், குழந்தை மீதும் கொண்ட அன்பு
செவிலியால் விளக்கப்பட்டுள்ளது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1

இப்பாடப் பகுதியில் பகற்குறியைக் குறிக்கும்
தொடர் எது?

2

பாங்கற் கூட்டம் என்பது எதைக் குறிக்கும்?

3

தலைவியின் நோய் அறியக் குறிபார்க்கப்
பயன்படும் பொருள் எது?

4

களவில் பாங்கன், பாங்கி, பிறர்
செயற்பாடுகள் எவ்விடங்களில் நிகழும்?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 10:46:24(இந்திய நேரம்)