தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D01124-4.2 இலக்கிய மதிப்பு

4.2 இலக்கிய மதிப்பு
    இலக்கியம் என்பது கருத்து, கற்பனை, உணர்ச்சி,
வடிவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
இது மேல்நாட்டார் கூறும் இலக்கியக் கொள்கையாகும்.
இந்த அடிப்படைக் கூறுகள் இன்றி, உலகில் எந்த
மொழியிலும் இலக்கியம் உருவாக முடியாது. எனவே,
அகநானூற்றை இந்த அடிப்படைக் கூறுகளின் வழி
அறிவோம்.

4.2.1 கருத்து
    இலக்கியம் என்றால் அது ஏதேனும் கருத்தை
உணர்த்த வேண்டும். அகநானூறு அகப்பொருளை -
அகப்பொருட் கருத்தை - உணர்த்த வந்தது.
அகப்பொருள் அதாவது அக ஒழுக்கம் களவொழுக்கம்,
கற்பொழுக்கம் என இருவகைப்படும்.

• களவொழுக்கம்

    தனக்கு நிகராகவோ தனக்கு மேலாகவோ
ஒருவரும் இல்லாத தலைவன், அதே போன்ற தகுதி
உடைய தலைவியை விதிவயத்தால் சந்தித்து உறவு
கொள்வான். தனியே சந்திப்பதில் தடைகள்
ஏற்படும்போது தோழன், தோழி ஆகியோரில்
யாரேனும் ஒருவர் உதவியுடன் சந்திப்பான். இந்த
ஒழுக்கம் பல்வேறு கூறுகளை உடையது. இதுவே
களவொழுக்கம் எனப்படும்.

    ஒரு தலைவன் விதி வழிநடத்த ஒரு
தலைவியைத் தனியிடத்தில் கூடி மகிழ்கிறான்.
மறுநாளும் அவளைச் சந்தித்து மகிழலாம் என்று
செல்கிறான். ஆனால் யாது காரணத்தாலோ அவள்
அங்கு வரவில்லை. அதனால் வருத்தமடைந்த தலைவன்
நேற்றைய மகிழ்வையும் இன்றைய துயரையும்
நினைந்து புலம்புகின்றான் (அல்லகுறிப்பட்டுழித்தலைவன்
வருந்தியது)
.

    பாடல் 62 இக் கருத்தைத் தழுவி அமைந்துள்ளது.

• கற்பொழுக்கம்

    கற்பொழுக்கம் என்பது தலைவனும் தலைவியும்
இல்லறம் நடத்துவதாகும். இந்த இல்வாழ்க்கை களவு
வாழ்க்கையின் தொடர்ச்சியாகவும் இருக்கலாம். பெற்றோர்
செய்து வைத்த திருமணத்தைத் தொடர்ந்ததாகவும்
இருக்கலாம். தலைவியின் இல்லறச்சிறப்பு, விருந்துபசரிப்பு,
தலைவன் பொருளீட்டவோ நாடு காக்கவோ தலைவியைப்
பிரிதல், பரத்தையர் பொருட்டுப் பிரிதல் போன்ற பல
கூறுகளைக் கொண்டு கற்பு வாழ்க்கை அமையும்.

    காதல் மனைவியைப் பிரிந்து ஒரு தலைவன்
போருக்காகச் சென்றிருக்கின்றான், அவன் பாசறையில்
இருக்கும்போது, தானும் தலைவியும் பிரிந்திருத்தலை
எண்ணிப் புலம்புகிறான்:

.....................
புறவுஅடைந் திருந்த அருமுனை இயவில்
சீறூ ரோளே ஒண்ணுதல் -யாமே
.....................
அருந்திறை கொடுப்பவும் கொள்ளான், சினம்சிறந்து
வினைவயின் பெயர்க்கும் தானைப்
புனைதார் வேந்தன் பாசறை யேமே
(84)
(புறவு = காடு; சீறூரோள் = சிற்றூரில் இருக்கிறாள்;
வினைவயின் பெயர்க்கும் = போரின்மேற் செல்லும்;
தானை = சேனை; பாசறையேம் = பாசறையில் உள்ேளாம்;
இயவு = நெறி; திறை = கப்பம்)
4.2.2 வாழ்க்கைப் பாடம்
    அகநானூறு அகப்பொருளைக் கூற வந்தது
என்றாலும் அறக் கருத்துகளையும் கூறத் தவறவில்லை.

---------------------- தண்துறை ஊர
விழையா உள்ளம் விழையும் ஆயினும்
என்றும் கேட்டவை தோட்டியாக மீட்டு ஆங்கு
அறனும் பொருளும் வழாமை நாடி
தன்தகவு உடைமை நோக்கி, மற்றதன்
பின்ஆ கும்மே முன்னியது முடித்தல்
அனைய பெரியோர் ஒழுக்கம் ; அதனால்
அரிய பெரியோர் தெரியுங் காலை
நும்மோர் அன்னோர் மாட்டும், இன்ன
பொய்யொடு மிடைந்தவை தோன்றின்
மெய்யாண்டு உளதோஇவ் வுலகத் தானே
(286)
(கேட்டவை = கேள்வியறிவு; தோட்டி = அங்குசம்;
வழாமை = தவறாமை; முன்னியது = கருதியது;
மிடைந்தவை = கலந்தவை)

என்ற பாடற்பகுதி வாழ்க்கைப் பாடம் கூறுவதாகும்.
''பற்றற்ற உள்ளம் ஒரு சமயத்தில் ஒன்றை
விரும்பினாலும் தாம் கேட்டறிந்த அறங்களைக்
கருவியாகக் கொண்டு ஆசையை அடக்கி, அறத்தினும்
பொருளினும் வழுவாமல் நின்று தன்
தகுதியுடைமைக்குத் தக்கவாறு ஒழுகி, செய்யக்
கருதியதைச் செய்துமுடித்தலே செயல்சிறப்பும்
பெரியோர் ஒழுக்கமும் ஆகும். அரிய பெரியோராக
இருப்பவரிடத்தும் பொய்யானவை இருந்தால் இந்த
உலகத்தில் உண்மையை எங்கே தேடுவது'' என்ற
கருத்தே மேற்கூறிய பாடற்பகுதியில் இடம் பெற்றுள்ளது.

    இங்ஙனம் தாம் உணர்த்தவந்த அகப்பொருள்
கருத்துகேளாடு உலகுக்குத் தேவையான
அறக்கருத்துகளையும் அகநானூற்றுப் பாடல்கள்
வழங்குகின்றன. இங்ஙனம் அகநானூற்றுப் பாடல்கள்
கருத்தமைதியில் சிறந்துள்ளன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 10:47:25(இந்திய நேரம்)