தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

D01124-4.4 உணர்ச்சி

4.4 உணர்ச்சி
    மனிதனின் அகத்தெழு உணர்வுகளே உணர்ச்சிகள்
என்ற பெயரால் குறிக்கப்படும். சொல்லப்படுகின்ற
கருத்துக்கேற்பவே பாடல்களில் உணர்ச்சிகள் அமையும்.
உணர்ச்சிகளைத் தமிழ் இலக்கணங்கள் சுவை என்று
குறிப்பிடும். அவை எட்டு ஆகும். நகை, அழுகை,
இளிவரல், அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை,
மருட்கை என்பவை எண்சுவைகளாகும்.
இச்சுவைகள்-உணர்வுகள் அமைந்த பாடல்கள்
சிலவற்றைக் காண்போம்.
4.4.1 நகை
     ஒருவர் மற்றொருவரைப் பார்த்து
எள்ளிநகையாடுவது நகை என்னும் சுவை அல்லது
உணர்ச்சி ஆகும். நகை தோன்றுவதற்குப் பல காரணங்கள்
உண்டு.

    பாணன் ஒருவன் தலைவன் ஒருவனைப்
பரத்தையர் இல்லத்தில் இருக்கச் செய்துவிட்டுத் தலைவி
இருக்கும் தெருவில் உலவுகின்றான். அப்பொழுது
கன்றினை ஈன்று சில நாட்களே ஆன பசுவானது அவன்மீது
பாய்கிறது. அதற்கு அஞ்சிய அவன் தலைவியின்
இல்லத்திற்குள் நுழைந்து தப்ப முயல்கிறான். அது
நகைப்பாக இருந்தது. அவன் அருகில் சென்ற தலைவி,
இது உன் வீடல்ல, அதோ தெரிகிறதுபார் உன்வீடு
என்கிறாள். அப்போது பாணன் வருந்தும் உள்ளத்தோடு
தலைவியைத் தொழுது நிற்கிறான். நேற்று நடந்த
இந்நிகழ்ச்சி நினைக்க நினைக்க எனக்கு நகையைத்
தருகிறது என்று தலைவி தோழியிடம் தெரிவிக்கின்றாள்.
இந்நகைச்சுவையை,

நகை ஆகின்றே தோழி! நெருநல்
--------------------------------
-------------பாணன் தெருவில்
புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ்இட்டு
எம்மனைப் புகுதந் தோனே, அதுகண்டு
மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்று
இம்மனை அன்று;அஃது உம்மனை என்ற
என்னும் தன்னும் நோக்கி
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே
(56)

என்ற பாடற்பகுதி அழகாக வெளிப்படுத்தியுள்ளது.
4.4.2 அழுகை
    இழப்புப் போன்ற காரணங்களால் ஏற்படுவது
அழுகை ஆகும். இச்சுவை பட, பல பாடல்கள்
அகநானூற்றில் இடம் பெற்றுள்ளன.

    ஒரு தலைவன் பொருளுக்காகப் பிரிய
நினைக்கின்றான். இச்செய்தியைத் தோழி மூலம்
தலைவிக்கு உணர்த்த நினைக்கின்றான். அதன்படியே
செய்கின்றான். இச்செய்தியைக் கேட்டவுடன் தலைவி
அழத்தொடங்கிவிட்டாள். இதனைத் தோழி தலைவனிடம்
கூறுகின்றாள். தனது வருத்தத்தையும் தெரிவிக்கின்றாள்.
பிரிவு காரணமாக அழுகை உணர்வு மேலிடுவதை,

செய்வினைப் பிரிதல் எண்ணிக் கைம்மிக
-------------------------------
-------------------------------
வெம்மலை அஞ்சுரம் நீந்தி ஐய!
சேறும் என்ற சொற்கு இவட்கே
------------------------------
-------------- துவலையின் மலர்ந்த
தண்கமழ் நீலம் போலக்
கண்பனி கலுழ்ந்தன நோகோ யானே
- 143

என்ற பாடற்பகுதி வெளிக்காட்டியுள்ளது.

    வெள்ளிவீதியார் என்ற பெண்பாற்புலவர் தனது
அழுகை உணர்வை வெளிப்படுத்தியதோடு ஆதிமந்தி
என்ற பெண்ணின் உணர்வையும் வெளிக் கொணர்ந்துள்ளார்.

------------------------------ யானே
காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய்கூர்ந்து
ஆதி மந்தி போலப் பேதுற்று
அலந்தனென் உழல்வென் கொல்லோ - பொலந்தார்
--------------------------------
--------------------------------
உடைமதில் ஓர்அரண் போல
அஞ்சுவரு நோயொடு, துஞ்சா தேனே!
- 45

என்ற பாடற்பகுதி தத்தம் கணவரைத் தொலைத்துவிட்டு
அழும் இரு பெண்களின் உணர்வை வெளிப்படுத்தியுள்ளது.
4.4.3 அச்சம்
    ஒருவருக்கு அச்ச உணர்வு எப்படி வரும் -
எப்பொழுது வரும் என்று யாரும் விளக்கத்
தேவையில்லை. இருப்பினும் அணங்கு, விலங்கு, கள்வர்,
அரசன் போன்றவற்றால் அச்ச உணர்வு ஏற்படும் எனத்
தொல்காப்பியம் குறிப்பிடும்.

    பொருளீட்டப் பிரிந்து சென்றுள்ள தலைவன் போன
காட்டுப் பாதை ஒன்று அச்சத்தை ஏற்படுத்துவதாக
அமைந்துள்ளது. கள்ளிச்செடிகள் மண்டிக் கிடக்கும் காட்டில்
புள்ளிகள் பொருந்திய கலைமானை விரட்டிச் சென்ற
புலியானது அதனைப் பாதி தின்றுவிட்டு மீதியை விட்டுச்
சென்றதால் புலால் நாற்றம் வீசும் பாதை. அந்தப் பகுதியில்
காட்டு அரண்களில் உள்ளவர்கள் அலறுமாறு அவர்களைக்
கொன்று தாம் கவர்ந்து வந்த நிரைகளைப் (பசுக்களை)
பங்கிட்டுக் கொண்டு பெரிய கற்பாறையினது முடுக்கிலே
தசையை அறுத்துத் தின்பர் கொலைத் தொழிலில் வல்ல
வலிய வில்லினையுடைய வெட்சி வீரர். இவர்களைப் போல்
பெரிய தலையையுடைய கழுகுகளுடன் பருந்துகள் பலவும்
ஒருங்கு வந்து சூழ்ந்துள்ள அரிய காட்டுப்பாதை என்பது
அச்சத்தை ஊட்டுவதாகும்.

கள்ளிஅம் காட்ட புள்ளிஅம் பொறிக்கலை
வறன்உறல் அம்கோடு உதிர, வலம்கடந்து
புலவுப் புலிதுறந்த கலவுக்கழி கடுமுடை
இரவுக் குறும்புஅலற நூறி நிரைபகுத்து
இருங்கல் முடுக்கர்த் திற்றி கொண்டும்
கொலைவில் ஆடவர் போலப் பலவுடன்
பெருந்தலை எருவையொடு பருந்துவந்து இறுக்கும்
அருஞ்சுரம் இறந்த கொடியோர்
- 97

என்ற பாடற்பகுதி அச்ச உணர்வை வெளிப்படுத்துவதாய்
அமைந்ததாகும்.
4.4.4 மருட்கை
    மருட்கை என்பதற்கு வியப்பு என்பது பொருளாகும்..
இயல்புக்கு மாறானவற்றைக் காணும்போது நமக்கு வியப்பு
(ஆச்சரியம்) ஏற்படும். யாருமே தூக்க இயலாத வில்லை
இராமன் எடுத்து வளைத்து நாண் ஏற்ற முயன்றபோது
அது முறிந்தே விடுவது வியக்கத்தக்கது. நளன் வேகமாகத்
தேரோட்டி வருகிறான். தேருக்குள் அமர்ந்திருக்கும்
மன்னன் மேலாடை கீழே விழுந்துவிடுகிறது. அதை உடனே
தெரிவித்துத் தேரை நிறுத்தச் சொல்கிறான் மன்னன்.
நளனோ அந்தக் கணநேரத்தில் தேர்பல காத தூரம்
வந்துவிட்டதைக் கூறுகிறான். இதுவும் வியப்புணர்வை
மேலிடச் செய்வதாகும்.

    அகநானூற்றில் வரும் தேரின் வேகமும் வியப்பை
ஏற்படுத்துகிறது. போருக்காகச் சென்ற தலைவன்
இல்லத்திற்குத் திரும்புகின்றான். அவன் தேரில் ஏறி
அமர்ந்தது மட்டுமே அவனுக்குத் தெரிகிறது. வந்த வழியே
தெரியவில்லை. வீடு வந்துவிட்டது, தேரைவிட்டு
இறங்குங்கள் என்று தேர்ப்பாகன் கூறுகின்றான்.
வியப்படைந்த தலைவன் தேர்ப்பாகனைப் பார்த்து
விண் வழியே செல்லும் காற்றைத் தேரில்
பூட்டி ஓட்டினாயா? அல்லது உனது மனத்தையே
குதிரையாக்கித் தேரில் பூட்டி ஓட்டினாயா? என்று
கேட்கின்றான். இவ்வியப்பு உணர்வை,

இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தெனப்
புரிந்த காதலொடு பெருந்தேர் யானும்
ஏறிய தறிந்தன்று அல்லது வந்தவாறு
நனியறிந் தன்றோ இலனே --------
--------------------------------
--------------------------------
மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇ
இழிமின் என்றநின் மொழிமருண் டிசினே
வான்வழங்கு இயற்கை வளிபூட் டினையோ?
மானுரு வாகநின் மனம்பூட் டினையோ?
உரைமதி வாழியோ வலவ ----------
- 384

என்ற அகநானூற்றுப் பாடல்வழி அறியலாம் - அடையலாம்.
4.4.5 உவகை
    உவகை என்பது மகிழ்ச்சியைக் குறிக்கும். மகிழ்ச்சி
எதனால் வரும் என்று சொல்லத் தேவையில்லை.
இருப்பினும் அகப்பொருளில் உவகை உணர்வு என்பது
தலைவன் தலைவியைக் கூடுதல், தலைவியுடனோ
பரத்தையுடனோ நீர்நிலையில் விளையாடுதல்
போன்றவற்றால் ஏற்படுவது என்று இலக்கணங்கள்
கூறுகின்றன.

    கோடைக்காலத்தில் மழைபெய்து நீர்நிலைகள்
நிரம்பினால் உழவன் எப்படி மகிழ்வானோ அத்தகைய
மகிழ்ச்சி தலைவிக்கு ஏற்படுகிறது. காரணம் தலைவன்
தலைவியை மணந்து கொள்ள உடன்பட்டு இல்லம்
வந்ததுதான். பின் தலைவியின் உவகையை அளவிட
முடியுமோ?

பெரும்பெயல் பொழிந்த ஏம வைகறை
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுள் பெய்தந் தற்றே சேண்இடை
ஓங்கித் தோன்றும் உயர்வரை
வான்தோய் வெற்பன் வந்த மாறே
- 42

என்ற பாடல் அகநானூற்றுத் தலைவி ஒருத்தியின் உவகை
உணர்வை வெளிக் காட்டியுள்ளது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 10:47:31(இந்திய நேரம்)