தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D01125-5.3 தலைவன்

5.3 தலைவன்
    இவனுக்கும் தலைவிக்கும் உள்ள உறவை
அடிப்படையாகக் கொண்டே அகப்பாடல்கள்
தோற்றம்கொள்கின்றன. தலைவன் தன்னுடைய நெஞ்சம்,
தேர்ப்பாகன், தலைவி, தோழி, பாங்கன் ஆகியோரிடம்
பேசுவதாக அகநானூற்றுப் பாடல்கள் அமைந்துள்ளன.
அவை வெவ்வேறு சூழலில் அமைந்தனவாகும்.
5.3.1 தலைவன் -> நெஞ்சம்
    தலைவன் கூற்றாக அமைந்த பாடல்களில் ஐம்பது
விழுக்காட்டிற்கும் மேலானவை அவன் நெஞ்சுடன்
(மனத்துடன்) பேசுவதாக அமைந்தவையாகும்.

    தலைவி, தான் சொன்ன நன்மொழிகளை நம்பி
மழைபொழியும் இரவில் வந்து தன்னைக் கூடியபின்
திரும்பிப் போவதைக் காண்கிறான் தலைவன். தலைவியின்
இச்செயலை நினைந்து நினைந்து மகிழ்கிறான். ‘இவள்
ஒரு தெய்வ மகளே’ என்று அதை நெஞ்சிடம்
வெளிப்படுத்துகின்றான். இது 'புணர்ந்து நீங்கிய
தலைமகளது போக்கு நோக்கிய தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது' என்னும் துறையாகும்
(பாடல் 198) இதைப்போன்று தலைவியைப் பற்றி
நெஞ்சிற்குக் கூறும் பாடல்கள் பல உள்ளன.

    தலைவன், தலைவியை முன்குறிப்பிட்டவாறு
குறிப்பிட்ட இடத்தில் சந்திக்கலாம், பேசலாம் என்று
வருகிறான். தலைவியைச் சந்திக்க முடியவில்லை. மனம்
வருந்தி - புலம்பி - திரும்பிச் செல்கிறான். இது
'அல்லகுறிப்பட்டுழித் தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது' என்னும் துறையாகும் (பாடல்கள் 212, 322,
338, 342, 372)

    இவற்றைப் போன்ற களவுக்காலத்துப் பாடல்கள்
- துறைகள் - கூற்றுகள் அகநானூற்றில் பல உள்ளன.

    கற்புக் காலத்தில் தலைவன் நெஞ்சிடம் பல
சூழல்களில் பேசுவதாகப் பாடல்கள் அமைந்துள்ளன.

    மனைவி மக்கேளாடு இன்பமாக வாழ்வதற்குப்
பொருள் இன்றியமையாத் தேவை ஆகும். பொருளைத்
தேடுவதற்காகத் தலைவன் வேற்றூர் செல்ல விரும்புகின்றான்.
இதை உணர்ந்து கொண்ட தலைவி பாலை நிலத்தைக் கடந்து
செல்லும்போது தலைவன் அடையும் துன்பங்களை எண்ணி
வருந்துகிறாள். அவன் பிரிந்து செல்லக் கூடாது என்ற தன்
விருப்பத்தைப் ‘பேசா ஓவியமாக’ அவனுக்கு உணர்த்துகிறாள்.
தலைவி பற்றிய அந்த நினைவு அவன் வேற்றூருக்குச்
செல்வதைத் தடுக்கிறது. இது, 'பிரியக் கருதிய தலைமகன்
தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது' (பாடல் 5)
என்னும் துறையாகும்.

    ஒரு தலைவன் பொருளுக்காகப் பிரியக் கருதுகிறான்.
பிரிந்தும் செல்கிறான். செல்லும் வழியில் தலைவியின்
நினைவு வருகிறது. அதனால், அவளது அழகையும்
செயலையும் தன் நெஞ்சிடம் விவரிக்கிறான். ஆயினும்,
அவள் மகிழப் பொருளைத் தேடிவருவோம் என்னுடன்
விரைந்து வா என்று நெஞ்சுக்கு உரைக்கிறான். இஃது
‘இடைச் சுரத்து நின்று மீளலுற்ற நெஞ்சைக் கழறியது’
என்னும் துறை ஆகும் (பா.21). அகநானூற்றில் பல
பாடல்கள் இத்துறையில் அமைந்துள்ளன.

    ஒரு தலைவன் நாடுகாவல் பொருட்டு வேந்தனின்
படையுடன் போருக்குச் செல்கிறான். பாசறையில்
தங்கியிருக்கிறான். அப்பொழுது தலைவியின் நினைவு
வருகிறது. தன் நெஞ்சிடம் புலம்புகின்றான். இது, 'பாசறைப்
புலம்பல்' என்னும் துறையாகும் (பாடல்கள் 84, 214, 304).
5.3.2 தலைவன் -> தேர்ப்பாகன்
    பிரிந்த தலைவன் பொருள் ஈட்டித் திரும்பும்
காலத்தில் தேரோட்டிச் செல்பவன் தேர்ப்பாகன் ஆவான்.
தலைவன் தேர்ப்பாகனிடம் பேசும் நிகழ்வுகள்
கற்பொழுக்கத்தில் மட்டுமே நிகழும். நெஞ்சத்தை
அடுத்த நிலையில் தேர்ப்பாகனிடமே தலைவன் கூற்றுகள்
மிகுதியாய் நிகழும். அகநானூற்றில் இத்துறையில்
அமைந்த பாடல்கள் பல உள்ளன.

    ஒரு தலைவன் வினையின் (வேலையின்) பொருட்டு
வெளியூர் செல்கிறான். கார்காலம் வரும்போது தானும்
வருவதாகக் கூறிச் செல்கிறான். வினையும் முடிகிறது;
கார்காலமும் வருகிறது. ஊருக்குப் புறப்படுகின்றான்.
வழியில் தேர்ப்பாகனிடம் , தேரை விரைந்து செலுத்தச்
சொல்கிறான். இது, 'வினைமுற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது' என்னும் துறையாகும்.

    தான் தலைவியை விரைவில் சென்று அடைய
வேண்டும் என்று நினைத்தாலும் தனது விரைவு மற்ற
உயிரினங்களின் இன்பத்திற்கு இடையூறு செய்யக் கூடாது
என்ற உயர்ந்த உள்ளம் கொண்டவனாகத் தலைமகன்
விளங்கினான். அவன் தேர்ப்பாகனிடம் கூறிய சொற்கள்
இதற்குச் சான்று ஆகும் (பாடல் 134).

    தலைவன் குதிரையை அடித்து விரட்டித் தேரை
ஓட்டவேண்டாம் என்று பாகனிடம் கூறுகின்றான். குதிரை,
தேர் இவற்றின் ஒலி கேட்டுச், சேர இருக்கின்ற
ஆண்மானும் பெண்மானும் மருண்டு பிரிந்துவிடக் கூடாது
என்பதற்காகவே அவ்வாறு கூறுகின்றான்.
5.3.3 தலைவன் -> தலைவி
    தலைவன், தலைவியிடம் கூற்று நிகழ்த்தும் இடங்கள்
மிகச் சிலவே. இக்கூற்று, களவுக் காலத்திலும் நிகழும்;
கற்புக் காலத்திலும் நிகழும்.

    தலைவன் தலைவி களவொழுக்கம் தலைவியின்
பெற்றோருக்குத் தெரிந்து விடுகிறது. ஆயினும் திருமணம்
செய்து கொள்ள முடியாத சூழல். இதனால், பிறர்
அறியாமல் தலைவியைத் தலைவன் தனது ஊருக்கு
அழைத்துச் செல்வான். அது உடன்போக்கு எனப்படும்.
உடன்போக்கின்போது தலைவியிடம் தலைவன் பேசுவான்.
இங்ஙனம் அமையும் கூற்றுகள் பல வகைப்படும்.
அவற்றுள் ஒன்று, 'உடன்போக்கின்கண் தலைமகளைத்
தலைவன் மருட்டிச் சொல்லியது' என்னும் துறையாகும்.
இது செல்லும் வழியில் உள்ள தீங்கு பற்றித் தலைவன்
தலைவியிடம் குறிப்பிடுவதாகும்.
5.3.4 தலைவன் -> தோழி
    களவு வாழ்விலும் கற்பு வாழ்விலும் இன்றியமையாத
பங்கு வகிப்பவள் தோழி ஆவாள். அத்தோழியிடம் களவுக்
காலத்தில் தலைவன் குறையிரந்து (வேண்டி) நிற்பதும்
கற்புக் காலத்தில் பிரிவுணர்த்தி நிற்பதுமாகக் கூற்றுகள்
நிகழும். தங்கள் திருமண நாள் இரவில் தலைவி கொண்ட
நாணம் பற்றித் தோழியிடம் தலைவன் கூறுவதாக அமைந்த
பாடல் (86) மிக அழகியது.
5.3.5 தலைவன் -> பாங்கன்
    களவுக் காலத்தில் தலைவனுக்கு உதவியாக
இருப்பவன் பாங்கன் - தோழன். இயற்கைப் புணர்ச்சியில்
தலைவியைப் புணர்ந்த தலைமகன் மீண்டும் அவளைச்
சந்திக்க இயலாதபோது, பாங்கனின் உதவியை நாடுவான்.
இதனைப் பாங்கற் கூட்டம் என இலக்கணங்கள் கூறும்.
பாங்கனே தலைவனின் செயற்பாடுகளில் மாற்றம்
இருப்பதனால் கேட்டுத் தெரிந்துகொண்டு உதவுவதும்
உண்டு.

    நெய்தல் நிலத்துத் தலைவியின் கண்களால் தான்
கொண்ட காதல் நோயைத் தலைவன் பாங்கனிடம் கூறும்
பாடல் (140) நயம் மிக்கது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 10:48:36(இந்திய நேரம்)