தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

D01125-5.4 தலைவி

5.4 தலைவி
    அகப்பாடல்களின் தலைவி. இவளுக்கும்
தலைவனுக்கும் உள்ள உறவையே அகப்பாடல்கள்
உணர்த்துகின்றன. தலைவி தோழி, தலைவன், பாணன்,
விறலி ஆகியோருடன் கூற்று நிகழ்த்துவாள். அவற்றுள்
ஒரு சிலவற்றைக் காண்போம்.
5.4.1 தலைவி -> தோழி
    தலைவிக்கு உற்ற துணையாகக் களவுக்
காலத்திலும் கற்புக் காலத்திலும் இருப்பவள் தோழி
ஆவாள். தோழியின் துணை இன்றித் தனியே தலைவியின்
இயக்கம் இல்லை என்று சொல்லும் அளவிற்குத் தோழி
பெரும்பங்கு வகிக்கின்றாள். இதனால் தலைவி தோழியிடம்
பேசும் பேச்சுகளே மிகுதி. இவை பல்வேறு துறைகளாய்
அமைகின்றன.

    கற்பு வாழ்க்கையில் ஒரு தலைவன் பிரிந்து
சென்றிருக்கிறான். பிரிவால் வாடுகின்றாள் அவன் மனைவி.
தன் வருத்தத்தைத் தோழியிடம் வெளிப்படுத்துகின்றாள்.
இது, 'தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள்,
தோழிக்குச் சொன்னது' என்னும் துறையாகும். ஆட்டன்
அத்தியை ஆற்று வெள்ளம் கொண்டுபோக, அவனைப்
பிரிந்து தவித்துத் துடித்த ஆதி மந்தி போன்று பிரிவுத்
துன்பத்தால் தான் வருந்துவதாகத் தலைவி தோழியிடம்
கூறுகிறாள் (பாடல் 135).
5.4.2 தலைவி -> தலைவன்
    தலைவி தலைவனுடனும் கூற்றுகள் நிகழ்த்துவாள்.
இருப்பினும் இவை மிகச் சிலவே. இவை களவு, கற்பு
ஆகிய இரு ஒழுக்கங்களிலும் நிகழும். கூற்றுகள்
நேரிடையாகப் பேசுவதாகவோ தோழியிடம் பேசுவதுபோல
மறைமுகமாகவோ அமையும்.

    கற்பு வாழ்க்கையில் பரத்தையர் பொருட்டுப்
பிரிந்து மீண்டும் வரும் தலைவனிடம் தலைவி கூற்று
நிகழ்த்துவாள். ஒரு தலைவன் பரத்தையுடன் இருந்து,
பின் தன் இல்லம் திரும்புகின்றான். அவனது தகாத
ஒழுக்கத்தைக் குறித்துத் தலைவி வினவுகின்றாள். அவன்
ஒன்றும் தெரியாதவன் போல் நடிக்கின்றான். அவனது
ஏமாற்றுத்தனத்தைத் தலைவி அவனிடமே
வெளிப்படுத்துகின்றாள். இது, 'பரத்தையர் சேரியினின்றும்
வந்த தலைமகன், யாரையும் அறியேன் என்றாற்குத்
தலைமகள் சொன்னது' என்ற துறையாகும் (பாடல் 16).

    “தெருவில் விளையாடிக் கொண்டிருந்த நமது
மகனை வழியில் வந்த அந்தப் பெண் வாரியெடுத்து
மகிழ்ந்தாள். நான் அங்குச் சென்றதும் களவு செய்தவரைப்
போல விழித்தாள். நீயும் இவனுக்குத் தாயே என்றேன்.
நாணித் தலை குனிந்தாள்” என்பது இப்பாடலின் கருத்து.
5.4.3 தலைவி -> பாணன்
    தலைவனுக்கும் தலைவிக்கும் தூதாக இருப்பவன்
பாணன் ஆவான். தலைவிக்குத் தலைவன் மீதுள்ள
ஊடலைத் தீர்க்கும் வாயில்களில் ஒருவனாகப் பாணன்
கருதப்படுகிறான். பெரும்பாலும் மருதத் திணையிலேயே
பாணனின் செயற்பாடுகள் இருக்கும். தலைவன் பொருட்டுத்
தூதாக ஊடல் தீர்க்க வரும்போது தலைவி பாணனுடன்
கூற்று நிகழ்த்துவாள். பாணனின் கோரிக்கையை
ஏற்பதாகவோ (வாயில் நேர்தல்) மறுப்பதாகவோ (வாயில்
மறுத்தல்) கூற்று இருக்கும். 'வாயில் வேண்டிச் சென்ற
பாணற்குத் தலைவி வாயில் மறுத்தது' என்னும் துறையில்
அமைந்த பாடல் (146) நயம் மிக்கது.

    “பரத்தையர் சேரிக்குள் தலைவனின் தேர் நாள்
தவறாமல் வந்து செல்கிறது என்றால், அந்தப் பொய்யனின்
பேச்சுகளைக் கேட்டு ஏமாந்து என்னைப் போலத் தன்
இளமை நலத்தையெல்லாம் அவனிடம் இழந்த யாரோ
வேறு ஒரு பேதைப் பெண் இருக்கிறாள் என்று பொருள்.
இரக்கத்திற்குரிய அவளிடம் சென்று வாயில் வேண்டி
அவளது ஊடலைத் தணிக்க முயற்சி செய். என்னிடம்
வராதே” என்று பாணனிடம் வாயில் மறுக்கிறாள் தலைவி.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 10:48:39(இந்திய நேரம்)