தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3-3.4 கடையெழு வள்ளல்கள்

3.4 கடையெழு வள்ளல்கள

நல்லியக்கோடனின் வள்ளல் தன்மை மூவேந்தர்களின் வள்ளல்
குணத்தைக் காட்டிலும் மிக்கிருப்பது போல, கடையெழு வள்ளல்களின்
கொடைத்     திறனைக்     காட்டிலும்     உயர்ந்தது     என்று
சிறுபாணாற்றுப்படை கூறுகின்றது. இச்செய்தி இந்நூலின் 84-113
அடிகளில் கூறப்பட்டுள்ளது. கடையெழு வள்ளல்களாவோர்:

1) பேகன்

2) பாரி

3) காரி

4) ஆய்

5) அதிகன் (அதியமான்)

6) நள்ளி

7) ஓரி

இனி, இவர்கள் செய்த அருங்கொடையைப் பற்றிக் காணலாம்.

3.4.1 பேகன்

இவன் குறுநில மன்னன். இம் மன்னனின் கொடைத்திறத்தை
இந்நூல் (84-87 அடிகள்) குறிப்பிடுகிறது.

பருவ மழை தவறாது பெய்யும் வளம்மிக்க மலை நாட்டை
உடையவன் பேகன். மயில் காட்டில் அகவியதை இவன் கேட்டான்.
குளிரால் நடுங்கியே மயில் அகவியது என்று எண்ணினான். அதன்
மீது மிகுந்த இரக்கம் கொண்டான். அம் மயில் மீது தன்
போர்வையைப் போர்த்தினான்.

இத்தகு அரிய கொடையால் இவன் அழியாப் புகழ் பெற்றான்.
இதனால் இவன்,

கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய

............ ................ ................ .................... ................

பெருங்கல் நாடன் பேகன்...

(சிறுபாணாற்றுப்படை 85-87)

(கானம் = காடு; மஞ்ஞை = மயில்; கலிங்கம் = ஆடை;
பெருங்கல் = மலை)

என்று குறிக்கப்பெறுகிறான்.

3.4.2 பாரி

பறம்பு மலையை ஆண்ட குறுநில மன்னன் பாரி. இம் மன்னனின்
வள்ளல் தன்மையை இந்நூல் (87-91 அடிகள்) குறிப்பிடுகிறது.

சுரும்புகள் (வண்டுகள்) உண்ணுமாறு தேன் வழங்கும் சிறப்பு
உடைய சுரபுன்னைகள் நிறைந்த வழிப்பாதை, அப்பாதையின்
வழியே பாரி தன் தேர் மீது ஏறிச் சென்றான். அப்பாதையில், சிறிய
பூக்களை உடைய முல்லைக் கொடி பற்றிப் படர்வதற்குக்
கொழுகொம்பு இல்லாமல் தவித்தது. இதைக் கண்ட பாரி தான் ஏறி
வந்த தேரை அவ்விடத்தில் நிறுத்தினான். அதில் முல்லைக்
கொடியைப் படரவிட்டான். இத்தகு இரக்கக் குணம் கொண்டவன் பாரி.
இதனால் இவன்,

சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய

................ .................. .......................

பறம்பின் கோமான் பாரி ...

(சிறுபாணாற்றுப்படை - 89-91)

(வீ = பூ; பறம்பு = பறம்பு மலை; கோமான் = அரசன்)

என்று பாடப் பெறுகிறான்.

3.4.3 காரி

அருள்மொழி மிக்கவன். ஒளி மிக்க அச்சம் தரும் நீண்ட
வேலினை உடையவன். தடக்கையையும் (பெரிய கை), காரி என்ற
குதிரையையும் உடையவன். இம்மன்னனின் கொடைத்திறத்தை
இந்நூல் (91-95 அடிகள்) குறிப்பிடுகிறது.

உலகமே      வியக்கும் வகையில் போரில் புகழ்மிக்க தன்
குதிரையையும், பெரும் பொருளையும் இரவலர்க்குக் கொடுத்தான்.
இதனால் இவன்,

ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த

........................... ................. ........

கழல்தொடித் தடக்கைக் காரி ...

(சிறுபாணாற்றுப்படை 93-95)

என்று சிறப்பிக்கப்படுகிறான்.

3.4.4 ஆய்

இவன், பொதிய மலையினிடத்து உள்ள ஆய் குடியைத்
தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன். அதனால் ஆய் என்னும்
பெயர் ஏற்பட்டதாகச் சிலர் கூறுவர். வேள் ஆய், ஆய் அண்டிரன்
என்னும் பெயர்களாலும் இவன் அழைக்கப்படுகிறான். இவனைப்
பற்றிய செய்திகள் இந்நூலில் 95-99 அடிகளில் இடம் பெற்றுள்ளன.

இவன் வலிமையான தோள்களை உடையவன்; இனிய
மொழிகளைப் பிறரிடத்துப் பேசி மகிழ்பவன். பெறுவதற்கு அரிய
சிறந்த மணியையும், ஆடையையும் இவன் பெற்றிருந்தான்.
சிவபெருமான் மீது கொண்டிருந்த பேரன்பால் அவற்றை அவ்
இறைவனுக்குக் கொடுத்து மகிழ்ந்தான். இவன், 'ஆர்வ நன்மொழி
ஆய்' என்று அழைக்கப்படுகிறான்.

3.4.5 அதிகன்

இம்மன்னன் அதியர் என்னும் குடியில் பிறந்தவன் என்று கூறுவர்.
அதியன், அதிகமான், அதியமான், நெடுமான் அஞ்சி, அஞ்சி
என்னும் பல பெயர்கள் இவனுக்கு உண்டு. இவனது அரிய
கொடைத்திறம் பற்றி இந்நூலின் 99-103 அடிகளில் கூறப்பட்டுள்ளது.

அதிசய நெல்லிக்கனி

அதிகன், ஒருமுறை வேட்டையாடுவதற்காகக் காட்டிற்குச்
சென்றான். அங்கு உள்ள மலைச்சாரலில் மருத்துவத் தன்மை உடைய
நெல்லி மரத்தில் ஒரே ஒரு பழம் பழுத்துத் தொங்கியது. அதை
அதிகன் பறித்து வந்தான். அக்கனியை உண்போர் நீண்ட நாள் உயிர்
வாழ்வர் என்பதை இவன் அறிந்து கொண்டான். அத்தகு சீரிய
நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஒளவையாருக்கு வழங்கினான்
(ஒளவையார் சங்க காலத்து மிகச் சிறந்த பெண் புலவர்).
இச்செய்தியை,

அமிழ்துவிளை தீம்கனி ஒளவைக்கு ஈந்த

................. ...................... ................. ...........

அரவக் கடல்தானை அதிகனும்...

(சிறுபாணாற்றுப்படை 101-103)

(அமிழ்து விளை = இறவாமை தரும்; தீம் = இனிய; அரவம் =
ஒலி ; தானை = சேனை)

என்று இந்நூல் சுட்டுகிறது.

3.4.6 நள்ளி

வளம் செறிந்த கண்டீர நாட்டைச் சேர்ந்தவன் நள்ளி.
உள்ெளான்று வைத்துப் புறம் ஒன்று பேசுவதும், உள்ளத்தில் கருணை
இல்லாமல் பிறர்க்கு ஈதலும் (கொடுத்தல்) பயன் தராது என்ற
கொள்கை உடைய இம்மன்னனின் வள்ளல் தன்மையைச்
சிறுபாணாற்றுப்படை 103-107 அடிகளில் சுட்டுகிறது.

முட்டாது கொடுப்போன்

தன்னிடம் வந்த இரவலர்கள் மனம் மகிழ்கின்ற வகையில்
பரிசுப்பொருள்களை அள்ளிக் கொடுப்பவன் இவன்.

தன்னிடம் வந்தவர்கள் மீண்டும் வறுமையில் வாடாதவாறும்
வேறொருவரிடம் சென்று இரவாதவாறும் நிரம்பக் கொடுக்கும் இயல்பு
உடையவன் நள்ளி. இதனால் இவன்,

முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கை

............ ........... ................... ..................

நளிமலை நாடன் நள்ளி...

(சிறுபாணாற்றுப்படை 105-107)

(முட்டாது = தடையில்லாது; முனை = போர்முனை; நளிமலை =
குளிர்ந்த மலை)

என்று பாராட்டப்படுகிறான்.

3.4.7 ஓரி

சிறிய மலைகளை உடைய கொல்லி மலைக்குத் தலைவன் ஓரி.
இவன் ஓரி என்னும் புகழ்மிக்க குதிரையை உடையவன். காரி என்னும்
புகழ்மிக்க குதிரையை உடைய காரியுடன் இவன் போரிட்டுப் பல
முறை வென்றான். இறுதியில் சேரனின் துணைபெற்று இவனுடன்
போரிட்ட காரி இவனைக் கொன்றான். இவ் வள்ளல் பற்றிச்
சிறுபாணாற்றுப்படையின் 107-111 அடிகள் குறிப்பிடுகின்றன.

நறும்போது கஞலிய நாகு முதிர் நாகத்துக்

குறும்பொறை நல்நாடு கோடியர்க்கு ஈந்த

............ ............. ................ ..................

ஓரிக் குதிரை ஓரி.........

புன்னை மரங்களையும் குன்றுகளையும் உடைய நாடுகளைக்
கூத்தருக்குக் கொடுத்த ஓரி என்று இந்நூல் அவனைப் புகழ்கிறது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 10:53:17(இந்திய நேரம்)