தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

D03111-1.2 வரைவு மலிதல்

1.2 வரைவு மலிதல்

திருமணம் தொடர்புடையதாகத் தொடங்கி, தொடர்ந்து நடக்கும்
நிகழ்வுகளும் பேச்சுகளும் வரைவு மலிதல் எனப்படும். களவு வாழ்வை
மாற்றிக் கற்பு வாழ்வை நிலைப்படுத்தத் தொடர்ந்து நடக்கும்
மகிழ்ச்சியான முயற்சி மிகுதலை வரைவு மலிதல் என்றார் ஆசிரியர்.


1.2.1 வரைவு மலிதலின் வகை

வரைவு மலிதல் எனப்படும் திருமணம் தொடர்பான முயற்சிகளும்
நிகழ்ச்சிகளும் நான்கு வகையாகப் பாகுபடுத்தி உரைக்கப்பட்டுள்ளன.
அவையாவன:

(அ) வரைவு முயல்வு உணர்த்தல்

:
திருமணம்     தொடர்பான
முயற்சிகளைத்     தலைவன்
தொடங்கிவிட்டான் என்பதனைத்
தோழி தலைவிக்குத் தெரிவித்தல்.

(ஆ) வரைவு எதிர்வு உணர்த்தல்

:
தலைவன் தொடங்கிய திருமண
முயற்சியை அவனது உறவினர்,
தலைவியின் பெற்றோரிடம் முன்
மொழிய, அதைப்     பெற்றோர்
ஏற்றுக் கொண்டனர் என்பதைத்
தோழி, தலைவியிடம் கூறுதல்.

(இ) வரைவு அறிந்து மகிழ்தல்

:
பெற்றோர், தன் மனம் விரும்பும்
தலைவனையே மணமகனாக ஏற்க
இசைந்தனர் என்ற செய்தியை
அறிந்த தலைவி, மனம் மகிழ்தல்;
தனக்குள் பேசி மகிழ்தல்.

(ஈ) பராவல் கண்டு உவத்தல்
(பராவல் = பராவுதல், வழிபடுதல்)

:
தான் விரும்பும் மணவாழ்வு
உறுதிப்படுவதை     உணர்ந்த
தலைவி அதற்கு நன்றிபாராட்டும்
நோக்குடன்     தெய்வத்தை
வணங்கி நிற்பாள். அதைக் கண்டு தலைவன் மகிழ்தல்.


1.2.2 வரைவு மலிதலின் விரி

மேலே நான்காக வகைப்படுத்தி உரைக்கப்பட்ட வரைவு மலிதல்
என்னும் செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தி எழுவகைக் கிளவிகளாக
(கூற்றுகளாக)     வரிசைப்படுத்தி     வழங்கியுள்ளார் நூலாசிரியர்.
அவையாவன :

காதலன் மணமுயற்சி

காதலன், காதலியை மணந்து கொள்ள விருப்பம் தெரிவித்து, அதற்கு
ஈடாக (விலையாக)த் தான் தர விரும்பும் பொருள் இது எனச்
சொல்லி அனுப்புதல். இச் செய்தியைத் தோழி தலைவிக்குக் கூறுதல்.

விலை என நல்கினன் நாடே - (ஐங்குறுநூறு - 147)

என்னும் சங்க இலக்கியத் தொடர் தலைமகளை மணக்கும் நிலைக்கு
விலையாகத் தன் நாட்டையே வழங்கத் தலைவன் இசைந்ததை
வெளிப்படுத்தும்.

காதலி, நற்றாய் உள்ள மகிழ்ச்சி உள்ளல்

தான் விரும்பும் தலைவனொடு திருமணம் நிகழுமானால் தாயும் மிக
மகிழ்வாள் எனத் தலைவி, தாய் அடையப் போகும் மகிழ்வை எண்ணிப்
பார்த்து இன்புறுதல். (உள்ளல் - நினைத்தல்)

தலைவன் உறவினர் மணம் பேசல்

தலைவனின் உறவினர் மணம் பேச வந்தபோது, அவர்களைத் தங்கள்
பெற்றோர் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு வரவேற்ற இன்பச் செய்தியைத்
தோழி, தலைவிக்குச் சொல்லுதல்.

தலைவியின் உவகை

தன் பெற்றோர் தலைமகனது விருப்பத்திற்கு உடன்பட்டதைத் தோழி
மூலமாக அறிந்த தலைவி, மிகுந்த மகிழ்ச்சியால் தன் மனத்துடன் தானே
பேசுதல்.

தலைவனைப் பாங்கி வாழ்த்தல்

உரிய நேரத்தில் - உரிய முறையில் வரைவு விருப்பத்தைத்
தலைவியின் பெற்றோரிடம் முன்வைத்து இசைவு பெற்ற தலைவனைத்
தோழி வாழ்த்துதல்.

தலைவி பராவுதல் (பரவுநிலை = வழிபடும் நிலை)

தான் விரும்பும் தலைவனோடு திருமணம் நிகழ்ப்போவதை அறிந்த
தலைவி, தெய்வத்தை வணங்கி நிற்பதைத் தோழி தலைவனுக்குக்
காட்டுதல்.

கண்டோன் மகிழ்வு

தான் விரும்பும் தலைவனோடு திருமணம் நிகழப் போவதை அறிந்த
தலைவி, தெய்வத்தை வணங்கி நிற்பதைத் தோழி, தலைவனுக்குச் சுட்டிக்
காட்ட, அதைக் கண்ட தலைவன் அகம் மிக மகிழ்தல்.

மேற்கண்ட எழுவகைப் பிரிவுகளும் வரைவு மலிதலின் விரிவுகளாக
அமைகின்றன.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1.

வரைவு என்றால் என்ன?

2.

இருவகை வரைவுகள் யாவை?

3.

வரைவிற்குரிய இருவகைக் கிளவித் தொகைகள் யாவை?

4.

வரைவு மலிதல் - விளக்குக.

5.

வரைவு மலிதலின் வகைகள் எத்தனை? அவை யாவை?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 11:48:00(இந்திய நேரம்)