தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

A05111l4-2.4 வேற்றுமை அணி

2.4 வேற்றுமை அணி
     தண்டியலங்காரத்தில் எட்டாவதாகக் கூறப்படும் அணி வேற்றுமை அணி ஆகும். உவமை அணியிலிருந்து தோன்றிய அணிகளில் இதுவும் ஒன்று. உவமை அணியில் இரு பொருள்களுக்கு இடையிலான ஒப்புமை மட்டுமே சொல்லப்படும். ஒப்புமை உடைய இருபொருள்களுக்கு இடையிலான வேற்றுமையையும் சொல்வது வேற்றுமை அணி. ஆகவே இவ்வணி உவமை அணியிலிருந்து பிறந்து அதன் தொடர்ச்சியாக அமைவது. திருக்குறள் போன்ற தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் இவ்வணி மிகுதியாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது.
 
2.4.1 வேற்றுமை அணியின் இலக்கணம்
 
    இரு பொருள்களுக்கிடையே உள்ள ஒப்புமையை வெளிப்படையாகவோ, குறிப்பாகவோ முதலில் கூறிப் பின்னர் அவற்றுக்கிடையே     வேற்றுமை தோன்றக் கூறுவது வேற்றுமை அணி ஆகும்

கூற்றினும் குறிப்பினும் ஒப்புடை இருபொருள்
வேற்றுமைப் படவரின் வேற்றுமை அதுவே
(தண்டி. 49)

(கூற்று - வெளிப்படையாகச் சொல்வது;
குறிப்பு - குறிப்பாக, மறைமுகமாகச் சொல்வது)

    ஒப்புமையைக் கூறும் முறையால் கூற்று வேற்றுமை, குறிப்பு வேற்றுமை என வேற்றுமைஅணி இரு வகைப்படும் என்பது புலனாகிறது. இரு பொருள்களுக்கு இடையிலான ஒப்புமையை வெளிப்படையாகச் சொல்லுவது கூற்று வேற்றுமை எனப்படும். அவ்வொப்புமையை வெளிப்படையாகச் சொல்லாமல் குறிப்பாகச் சொல்லுவது குறிப்பு வேற்றுமை எனப்படும்.

    இனி, வேற்றுமையை எடுத்துக்காட்டும் வகையிலும் வேற்றுமை அணி இருவகைப்படும்.     இருபொருள்களை வேற்றுமைப்     படுத்தும்போது, இரண்டும்     சமமான சிறப்புடையவையே எனத் தோன்றுமாறு கூறுவது வேற்றுமைச் சமம் எனப்படும். அவ்வாறு அல்லாமல், இரு பொருள்களுள் ஒன்று, மற்றொன்றைவிட உயர்ந்தது எனத் தோன்றுமாறு காரணத்துடன் சொல்வது உயர்ச்சி வேற்றுமை எனப்படும்.

    ஒரு பொருளை மட்டும் வேற்றுமைப்படுத்துவது ஒரு பொருள் வேற்றுமை எனவும், இரு பொருள்களையும் வேற்றுமைப் படுத்துவது இரு பொருள் வேற்றுமை எனவும் குறிப்பிடப்படும்

2.4.2 வேற்றுமைச் சமம்
 
    வேற்றுமைப் படுத்தப்படும் இரு பொருள்களும் சமமான சிறப்புடையவையே எனக்காட்டுவது வேற்றுமைச் சமம் ஆகும்.

எடுத்துக்காட்டு :


அனைத்து உலகும் சூழ்போய், அரும்பொருள்
கைக்கொண்டு,
இனைத்து அளவைத்து என்றற்கு அரிதாம், -
பனிக்கடல்
மன்னவ! நின் சேனைபோல்; மற்று அது நீர்வடிவிற்று
என்னும் இது ஒன்றே வேறு


(அளவைத்து = அளவை உடையது;
வடிவிற்று = வடிவை உடையது)

இப்பாடலின் பொருள்
 

    மன்னவனே! கடலும் நின் சேனையும் ஒரே வகையான இயல்பு, தொழில்களை உடையவை. குளிர்ந்த கடல், உலகம் முழுவதையும் சூழ்ந்து, பல அரிய பொருள்களைத் தன்னகத்தே கொண்டு, இன்ன அளவை உடையது என்று அளப்பதற்கு அரியதாய் உள்ளது; உன் சேனையும் பல நாடுகளையும் கைப்பற்றுவதற்கு உலகம் முழுவதையும் சூழ்ந்து, பகை நாட்டு அரசர்களின் அரிய பொருள்களை எல்லாம் கைக்கொண்டு, இன்னஅளவை உடையது என்று அளப்பதற்கு அரியதாய் உள்ளது. ஆனால் கடல், 'நீர் வடிவில் உள்ளது' என்னும் ஓர் இயல்பு மட்டும்தான் இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு ஆகும்.

  • அணிப் பொருத்தம்

    இப்பாடலில், சேனை, கடல் என்னும் இரு பொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமைகள் முதலில் வெளிப்படையாகக் கூறப்பட்டன. பின்பு, கடல் என்னும் ஒரு பொருளுக்கு மட்டும் 'அது நீர் வடிவிற்று' என்னும் வேறுபாடு கூறப்பட்டது. வேற்றுமை கூறும்போது, ஒன்றைவிட மற்றொன்று உயர்ந்தது எனக் கூறவில்லை. ஆகவே இது வேற்றுமைச் சமம் ஆகும். கடல், நீர்வடிவை உடையது என ஒரு பொருள் மட்டுமே வேற்றுமைப் படுத்தப்பட்டதால் இது ஒருபொருள் வேற்றுமைச் சமம் எனப்படும்.

2.4.3 உயர்ச்சி வேற்றுமை

    வேற்றுமைப் படுத்தப்படும் இரு பொருள்களில் ஒன்று மற்றொன்றைவிட உயர்ந்தது எனப்புலப்படுமாறு வேற்றுமைப் படுத்துவது உயர்ச்சி வேற்றுமை ஆகும்.

எடுத்துக்காட்டு :

மலிதேரான் கச்சியும் மாகடலும் தம்முள்
ஒலியும் பெருமையும் ஒக்கும்; - மலிதேரான்
கச்சி படுவ கடல்படா; கச்சி
கடல்படுவ எல்லாம் படும்

(மலிதேரான் = மிகுந்த தேர்ப்படையை உடையவன்;
கச்சி = காஞ்சிபுரம்; படுவ = இருப்பவை)


இப்பாடலின் பொருள்

    மிக்க தேர்ப்படையை உடைய எம் அரசனுடைய காஞ்சி மாநகரும் பெரிய கடலும் தமக்குள்ளே ஒலியாலும் பெருமையாலும் ஒத்தவை. எனினும் காஞ்சி மாநகரில் உள்ளவை எல்லாம் கடலில் இல்லை; கடலில் இருப்பவை எல்லாம் காஞ்சி மாநகரில் உள்ளன.

  • அணிப் பொருத்தம்

    இப்பாடலில் ஒலியாலும், பெருமையாலும் காஞ்சிபுரமும் கடலும் ஒத்தவை என அவற்றின் ஒப்புமை வெளிப்படையாகச் சொல்லப்படுகிறது. பின்னர்க் கடலைவிடக் காஞ்சி மாநகர் உயர்ந்தது எனப்பொருள்படும்படி வேற்றுமை கூறப்பட்டது. ஆகவே இது உயர்ச்சி வேற்றுமை ஆயிற்று.

    வேற்றுமை அணி, திருக்குறள் போன்ற தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சான்றாகத் திருக்குறளில் இருந்து ஒரு குறள் பாவினைக் கொண்டு அதில் வேற்றுமை அணி அமைந்திலங்கும் திறத்தைக் காண்போம்.

தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு     (குறள். 129.)


இக்குறளின் பொருள்

தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் கூறிச் சுட்ட வடு என்றும் ஆறாது.

  • அணிப் பொருத்தம்

    இக்குறளில், தீயும் சுடும், நாவினால் கூறும் தீய சொல்லும் சுடும் என்று ஒப்புமை கூறி, பின்பு தீயினால் சுட்ட புண் ஆறிவிடும்; ஆனால் நாவினால் சுட்ட வடு ஆறாது என்று வேற்றுமை கூறியதால் வேற்றுமை அணி ஆயிற்று.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 12:36:57(இந்திய நேரம்)