தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D0412441-காப்பிய வகைமை

4.1 காப்பிய வகைமை

கதை சார்ந்து செய்யுள் நடையில் அமையும் இலக்கியம் காப்பியமெனத் தண்டியலங்காரம் கூறுகிறது. எனினும் காப்பியம் என்ற சொல் பரந்த பொருளை உள்ளடக்கியதாகவே அமைகிறது.  மூத்த தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன் இதிகாசம், புராணம், பெருங்காப்பியம், காப்பியம், கதைப்பாடல், சிற்றிலக்கியம் அனைத்தையும் ஒன்றிணைத்துக் காப்பியம் என்ற ஒற்றைச் சொல்லாலேயே வகைப்படுத்துகிறார்.

    “தமிழில்     காப்பியங்களை     இதிகாசம்,     புராணம், பெருங்காப்பியம், கதைப்பாடல்,     சிற்றிலக்கியம்     என வகைப்படுத்தலாம். இவற்றிடையே சில சிறுசிறு வேறுபாடுகள் காணப்படினும் இவற்றைக் காப்பியங்கள் என்றே கொள்கின்றனர். வடமொழியில் கவியால் எழுதப்படும் அனைத்தையும் காவியம் என்ற சொல்லால் குறிக்கின்றனர்” என்கிறார்  கி.வா.ஜகந்நாதன். (தமிழ்க்காப்பியங்கள்) என அமை.

    இன்றைய புதிய வகைமையாக்கத்தில் இது சாத்தியமில்லை. 416 சிற்றிலக்கிய வகைமைகள் பல்கிப் பெருகிவிட்ட இன்றைய சூழலில் வகைமையாக்கத்திலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    பெருங்காப்பிய சிறுகாப்பிய வகைமை வடமொழியைப் பின்பற்றி எண் வரையறைக்குள்ளே அடங்கினாலும், அது பொருத்தமற்றதாகவே தோன்றுகிறது. நாட்டார் இலக்கியங்கள் தமிழின் தனித்துறையாக மாறி வரும் இன்றைய சூழ்நிலையில் தண்டியாசிரியரின் காப்பிய வரையறையைத் தாண்டிக் காப்பியவகைமையாக்கத்தில் புதிய போக்குகள் தோன்றி உள்ளன.

4.1.1 வடமொழிக் காப்பிய மரபும் வகைமையும்

     காப்பியத்திற்கான அனைத்துக் கூறுகளையும் பெற்றுத்திகழ்வன பெருங்காப்பியங்கள். “வடமொழியில்    இதனை மகாகாவியங்கள் என்பர். இரகுவம்சம் குமாரசம்பவம்,  சிசுபாலவதம், கிராதள்ஜு னீயம், நைஷதீய சரிதம் என்பன வடமொழி மகாகாவியங்கள். இம்முறைப்படி,     தமிழிலும் சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்தையும் பிற்காலத்தார் ஐம்பெரும் காப்பியங்கள் என்றனர். இத்தொகை முறை பொருந்தாது என்பது அறிஞர் முடிபு. ஆகலின் இங்குச் சிலப்பதிகாரம், பெருங்கதை, மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி ஆகிய ஐந்துமே ஐம்பெருங்காப்பியங்களாகக் கொள்ளப்படுகின்றன” என்று உலகக் காப்பியங்கள எனும் நூலில் டாக்டர் இரா.காசிராசன் குறிப்பிடுகிறார்.

இதிலிருந்து தெரிய வருவது :

    ஐந்து எனும் வகைமை முறை வடமொழி சார்ந்தது.

    ஐம்பெரும் காப்பியங்கள் பொருத்தமான முறையில் வகைமையாக்கப் படவில்லை.

    கொங்குவேளிர் எழுதிய பெருங்கதை அகவற்பாவில் அமைந்தது.

    சமண சமயத் துறவி திருத்தக்க தேவர் எழுதிய சீவகசிந்தாமணி விருத்தப்பாவில் அமைந்த முதல் தமிழ்க் காப்பியம் என வகைப்படுத்தப் படுகிறது.

     திருத்தக்க தேவரின் விருத்தப்பாப் பயன்பாட்டைப் பற்றி டாக்டர் தமிழண்ணல் பின்வருமாறு குறிப்பிட்டு உள்ளார்.

     “முன்னர் எழுந்த காப்பியங்கள் அகவற் பாவாலமைந்தவை. அவற்றுள் சிலம்பில் காணப்படும் வரிப் பாடல்களில்      விருத்தப் பாக்களுக்கான தோற்றுவாய்கள் உள. பக்தி    இலக்கியப் பெரியோர்கள் விருத்தங்களை இசைத்தனர். ஒரு      பொருள்மேல் பத்தடுக்கிப் பதிகங்கள் பாடினர். அவற்றைப் பின்பற்றிக் கதை தழுவிய காப்பியமாக ஆக்கிய பெருமை  திருத்தக்க தேவருடையது. அவருக்குப் பின்பு சேக்கிழாரும்,    கம்பரும், கச்சியப்பரும் இவ்யாப்பினை எடுத்தாளுதற்கு  இவரே முன்னோடியாவார்.” - (புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு).

     தோலாமொழித்  தேவர்   எழுதிய சூளாமணியும் விருத்தப்பாவில் அமைந்த காப்பியமே.

     “விருத்தப்பாவைக் கையாள்வதில் தோலாமொழித் தேவர் சீவக சிந்தாமணி ஆசிரியரைப் பின்பற்றிய போதிலும், சில இடங்களில் அவரையும் மிஞ்சிவிட்டார் என்று கூறலாம்” என்பர் டாக்டர் மு.வரதராசனார்.

     வளையாபதியும் விருத்தப்பாவின் முன்னைய வளர்ச்சி நிலையிலேயே அமைகிறது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை; முனைவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் இந்நூல் சிந்தாமணிக்கு முந்தியது என்பார்.

     மறைந்து போன தமிழ் நூல்களுள் ஒன்றாகத் திகழும் குண்டலகேசியும் விருத்தப்பாவால் இயற்றப்பட்டது. இதன் ஆசிரியர் நாதகுத்தனார்.

ஆசிரியப்பாவில் அமைந்த காப்பியங்கள்

     (1) சிலப்பதிகாரம் - இளங்கோ அடிகள்
     (2) மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
     (3) பெருங்கதை - கொங்கு வேளிர்

என்பன ஒரு பிரிவுக்குள்ளும்

விருத்தப்பாவில் அமைந்த காப்பியங்கள்

     (1) சீவகசிந்தாமணி - திருத்தக்க தேவர்
     (2) சூளாமணி     - தோலாமொழித் தேவர்
     (3) வளையாபதி - -
     (4) குண்டலகேசி - நாதகுத்தனார்

என்பன மற்றொரு பிரிவுக்குள்ளும் வைக்கப்பட்டுள்ளன.

4.1.2 காலகட்டமும் வகைமையும்

    பழைய இலக்கியங்களையும், அவற்றின் உரைகளையும் ஆராய்வதன் மூலமும், கல்வெட்டுகள், பட்டயங்கள் ஆகியவற்றை ஆராய்வதன் வாயிலாகவும் இலக்கியங்களின் காலம் வரையறை செய்யப்பட்டது. காலகட்டத்தைக் கொண்டும் காவிய வகைமை செய்யப்பெற்றது.

· கா.சுப்பிரமணியபிள்ளையின் கருத்து

     கடைச்சங்க காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முதல் பகுதியோடு முடிவடைகிறது.

     கி.பி. 3 - கி.பி.4ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை - மாணிக்கவாசகர் காலம்.

     கி.பி.4 - 6ஆம் நூற்றாண்டு - சமணர் காலம். இக்கால கட்டத்தில்தான் சமணரது கீழ்க்கணக்கு நூல்களும் பெருங்கதையும் தோன்றின.

     6ஆம் நூற்றாண்டு - சுந்தரர் காலம்.

     7ஆம், 8ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி தேவார கால கட்டம். 8ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் ஒன்பதாம் நூற்றாண்டின்  முடிவு வரை வைணவ ஆழ்வார்கள் காலம்.

     10ஆம் நூற்றாண்டு சமணர்களின் சிந்தாமணி தோன்றியது.

     ஐம்பெரும் காப்பியங்களில் உள்ள வளையாபதிக்கும் குண்டலகேசிக்கும் பதில், பெருங்கதையும் சூளாமணியும் இடம் பெறுவதே பொருத்தம் எனத் தெளிகிறோம்.

· டாக்டர் மு.வ.வின் கருத்து

(1)டாக்டர் மு.வரதராசனார் சிலப்பதிகாரத்தையும்  மணிமேகலையையும் கி.பி.100 - 500 ஐ    இரட்டைக்   காப்பியங்கள் என முன்னே கொண்டு சென்றார்.

(2) தமிழ்க் காப்பியங்களின் காலமாக கி.பி.500-1200 ஐ   வரையறுக்கிறார்.

(3) தமிழில் இராமாயணம், பாரதம தோன்றிய காலம்  கி.பி.4ஆம், 5ஆம் நூற்றாண்டுகள் என நிலை நிறுத்துகிறார்.

(4) சேக்கிழாரின்     பெரிய புராணம் கி.பி.11, 12ஆம்  நூற்றாண்டுகள்

என மு.வ. விளக்குகிறார்.

· மு.அருணாசலத்தின் கருத்து

(1) சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 8 வரை.

(2) கம்பராமாயணம், சீவகசிந்தாமணி, சூளாமணி, நீலகேசி,  பெரிய புராணம கி.பி. 9ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.     12ஆம் நூற்றாண்டு வரை. (இக்கால கட்டத்தில் இறந்து     போன காப்பியங்களான சாந்தி புராணம், வளையாபதி,     குண்டலகேசி என்பவற்றை இங்கு கருதவில்லை)

(3) கந்த புராணம், நளவெண்பா - கி.பி. 14ஆம் நூற்றாண்டு.

(4) அரிச்சந்திர புராணம் - கி.பி. 16ஆம் நூற்றாண்டு.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 13:15:55(இந்திய நேரம்)