Primary tabs

“எதனைப் போற்றுகின்றோமோ அது வளரும்” என்று பாரதியார் சொல்வார். மேலும், பாராட்டுதல் என்பது ஒரு நல்ல மனிதப் பண்பு. பேசப்படும் பொருளைப் போற்றியுரைப்பது என்பது சொல்லுகின்ற வழிமுறையின் ஒரு பண்பு ஆகும். எடுத்துக் கொண்ட பொருளையும், இலக்கியத்தையும் குறை காணாமல், அந்தக் குறைகளைக் கண்டாலும் அவற்றைப் பற்றி அதிகம் பேசாமல் நிறைகளை மட்டுமே விதந்து பேசுவது பாராட்டுமுறைத் திறனாய்வு (Appreciative Criticism) ஆகும்.
இன்று, இலக்கியச் சொற்பொழிவாளர்கள், கல்வியாளர்கள் முதலியவர்களிடம் , பாராட்டு முறை பரவலாகக் காணப்படுவதைக் காணலாம் . சில வகையான மேடையுத்திகள் , சில விருப்பங்கள் காரணமாக இந்தப் பாராட்டுமுறை நிறையவே இடம் பெறுகிறது.

திறனாய்வு என்பது குறிப்பிட்ட
இலக்கியத்தின் விளக்கங்களையும், தனித்தன்மைகளையும் வாசகர் மனதில்
பதியும்படி கொண்டு செல்ல வேண்டும். இவற்றைத் தவிரக் குறை அல்லது
நிறை என்ற ஒன்றனையே கண்டு அதனையே விதந்து உரைப்பதை
நோக்கமாகக கொள்ளக்கூடாது. அது அவ்விலக்கியத்தின் பலவிதமான அல்லது வேறுபட்ட
பண்புகளை ஒதுக்கி விடுவது ஆகும். பாரபட்சம் அல்லது பக்கச் சார்புக்குத்
திறனாய்வு இடம் தரலாகாது.
மேலும், எதுவும் அளவோடு சொல்லப்பட வேண்டும்.
திறனாய்வில் வெற்று உரைகள் முக்கியமல்ல என்பதை அறிய வேண்டும். பாராட்டுக்களால்
அலங்கரிப்பதும், குறைகளைப் பெரிதுபடுத்துவதும் இரண்டுமே உண்மையை
உதாசீனப்படுத்தி விடும். ஆகையால் திறனாய்வுக்கு உண்மை என்பது முக்கியம்.