தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

அறநெறி அணுகுமுறை

4.4 அறநெறி அணுகுமுறை

    

    இனி, அறநெறி அல்லது நீதிக் கோட்பாடு அணுகுமுறை என்பது பற்றிப் பார்க்கலாம். காலந்தோறும் காணப்படும் மனித அறங்களை மையமாகக் கொண்டு, இலக்கியத் திறனாய்வின் பார்வை அமைகின்றபோது, அதனை அறநெறி அணுகுமுறை (Ethical or Moralistic criticism) என்கிறோம். சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் இலக்கியங்கள் அச்சமூகம் கட்டிக் காத்துவரும் அறக்கருத்துகளையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழில் இலக்கியப் பார்வையில் அறவியல் பார்வை நீண்ட காலமாகப் பரவலாக இருந்து வருகிறது.

4.4.1 அறநெறி அணுகுமுறை - விளக்கம்

    
    மனித சமூகத்தில் தொன்றுதொட்டு மரபுவழியாக வந்தவை அறங்கள்; மனித சமூகத்திற்கு ஒரு கூட்டு வாழ்வையும் தகுதியையும் தருவன அறங்கள். இவை மனித ஒழுகலாறுகளின் போக்குகளிலிருந்து சாராம்சமாகக் கண்டறியப்பட்டவை. இலக்கியங்களாக எழுதிவைக்கப்பட்டவை. எனவே சட்டங்களாக இல்லாமல் மரபுகளாகவும், இறுக்கமானவையாக அல்லாமல் நெகிழ்வானவையாகவும்     இவை     அமைகின்றன. இவை, நுண்மையானவை (Abstract). இத்தகைய அறநெறிக் கொள்கையை மையமாகக் கொண்டு இலக்கியங்களை அணுகுதல் அறநெறி அணுகுமுறை எனப்படும்.

    
    மனித வாழ்க்கைச் சூழல்களிலிருந்து பிறந்து மனித வாழ்க்கைகளின் எதிர் வினைகளை (Responses) இலக்கியம், படம் பிடித்துக் காட்டுகின்றது. காலந்தோறும் இலக்கியங்களில் சொல்லப்பட்டு வருகின்ற அறநெறிக் கருத்துகளைத் தொகுப்பது இதன் நோக்கமல்ல. காலந்தோறும் மாறியும் வளர்ந்தும் வந்திருக்கின்ற இலக்கியங்களை அறநெறி எவ்வாறு வழிநடத்திச் செல்கிறது என்று காண்பதும், இலக்கியங்களின் உள்ளே பொதிந்து கிடக்கின்ற அறநெறிப் பண்புகளையும், ஆற்றலையும் காண்பதும் அறநெறி அணுகுமுறையின் நோக்கமாகும்.

4.4.2 அறநெறி அணுகுமுறை - வரையறை

    
    தனக்கு ஏற்புடையதென்று பலகாலமாக அங்கீகரித்திருக்கின்ற ஒரு குறிப்பிட்ட ஒழுக்கமுறையினை அல்லது கருத்தமைவினைச் சமுதாய மதிப்பு (Social Value) என்பர். காட்டாகக், கற்பு என்பது தமிழ் மரபில் ஒரு சமூக மதிப்பு. இதனைப் பேணுவதும், பேணுவதற்கு வற்புறுத்துவதும், அறவியலின் செயல்முறையாகும். அதாவது, சமுதாய மதிப்பு என்று எதைக் கொள்கிறோமோ அதுவே அறமாக அமையும் எனலாம். இச்சமுதாய மதிப்பினை அதன் தகுதி நிலைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பது அறநெறி சார்ந்த அணுகுமுறையின் தளமாகவும் இலக்காகவும் அமையும்.

    
    சமூக     அமைப்பில் முரண்பாடுகள் உண்டு. இவை இயற்கையானவை. நல்லது x கெட்டது, தீங்கற்றது x தீங்கானது, ஏற்புடையது x ஏற்புடையதல்லாதது என்ற முறையில் காலந்தோறும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. இவற்றைத் தெரிந்து, ஏற்புடைய அறங்களைச் சமூகம் அங்கீகரிக்கின்றது. மனிதாபிமான உணர்வும் பிறர்க்குக் கேடற்ற நடத்தையும் சமுதாய நல்லுணர்வோடு தனிப்பட்ட மனிதனின் மனநலனும் கூடி வருகின்ற அறங்களையே அறநெறி என்கிறோம்.     இது, காலந்தோறும் சமுதாய அமைப்பிற்கேற்ப மாறுபடக்கூடும். மேலும், இத்தகைய கருத்தமைவு சமுதாய அமைப்போடு சார்ந்திருப்பதாகலின் சமுதாயவியல் திறனாய்வோடு அறவியல் திறனாய்வு நெருங்கிய தொடர்பு கொண்டதாகும்.

4.4.3 அறநெறி அணுகுமுறை - வரலாறு
பிளேட்டோ
    

    திறனாய்வு அணுகுமுறைகளில் இது மிகவும் பழையது. பழங்காலத்தில் அறிஞர்கள் இலக்கியங்களை அறங்களின் அடிப்படையிலேயே மதிப்பிட்டார்கள். தமிழில் தொல்காப்பியர் அறங்களை வலியுறுத்தினார். கிரேக்கத்தில் பிளேட்டோ வலியுறுத்தினார். ஆங்கில நாட்டிலும் இது செல்வாக்கோடு இருந்தது. ஆங்கிலக் கவிஞரும் விமர்சகருமான மாத்யூ அர்னால்டு, இது பற்றி வலியுறுத்திப் பேசுகிறார். இலக்கியத்தில் எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பது முக்கியம். இதுவே அறநெறி அணுகுமுறையின் அடித்தளமாகும். மேலைநாடுகளில் 19ஆம் நூற்றாண்டிலும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இத்தகைய பார்வை பிரசித்தமாக இருந்தது. இக்கருத்துகள் கொண்ட கருத்தாளர்களைப் ‘புதிய மனிதநேயவாதிகள்’ (New Humanists) என்றழைத்தனர். இவர்கள்    இலக்கியத்தை வாழ்க்கையின் விமர்சனம் என்று கண்டனர். இம்முறை ஆய்வில் பால் எல்மர் மோர், இர்விங் பாப்பிட் ஆகிய இருவரும் முக்கியமானவர்கள்.     இவர்களைத் தொடர்ந்து இதே வரையறையை நார்மன் பாஸ்டர், எச்.எச்.கிளார்க், ஜி.ஆர்.எலியட் போன்றவர்களும் பின்பற்றினர் - வளர்த்தனர். இவர்களின் காலத்திற்குப் பின், நவீனத்துவம் மிக வேகமாகப் பரவியது ; பழைய மரபுகளை இது மறுதலித்தது. இலக்கியத் துறையில் ஒரு புதிய கேள்வி எழுந்தது. அது, அறக் கோட்பாடுகள் என்பன மதம் சார்ந்தவையா? அல்லவா என்பதாகும். சாராம்சமாக, மனிதனுக்கு இயல்பான அறஉணர்வு இருக்கும்- இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதே சமயத்தில் சூழ்நிலைகளிலிருந்து விடுபடுவது மட்டுமல்ல, மனசாட்சி என்ற ஒன்றுக்கும் கட்டுப்பட வேண்டும் என்றும் கருத்துக் கூறப்பட்டது.
 

4.4.4 தமிழ் இலக்கியமும் அறங்களும்

    இலக்கிய உலகில், அறநெறிக் கோட்பாடுகள் சமூகவியல் நோக்கோடு ஆராயப்படுகின்றன. குறிஞ்சி, முல்லை முதலாகிய ஐந்திணை பற்றிப் பேச வந்த தொல்காப்பியர், வெறுமனே ஐந்திணை என்று மட்டும் சொல்லி நிறுத்தாமல் அதற்கு ஒரு நீண்ட அடைமொழி தருகிறார். ‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை’ என்று பேசுகிறார்.
 

    சங்க இலக்கியங்களில் அன்றைய காலத்து அறநெறிக் கருத்துகள் ஏராளம். குறிப்பாக அக இலக்கியங்களுக்கும் புற இலக்கியங்களுக்கும் அறநெறிகள் அடிப்படை வாழ்க்கை நெறியைத் தந்திருக்கின்றன. மேலும் காப்பியங்கள் தோன்றிய போதும் பாவிகம் என்ற நிலையில், அவை அறம் பற்றிப் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 

    அரைசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாவதூஉம்
    உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்
    ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்
                 -(சிலப்பதிகாரம்)
 

என அறநெறி சார்ந்த கருத்துகளாகவே அமைகின்றன. இங்ஙனம் சங்க இலக்கியம் முதல் இன்றைய தற்கால இலக்கியங்கள் வரை அறநெறித் திறனாய்வை மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை
    இக்கால இலக்கியமான மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் நாவல் பெண்ணின் பெருமையைப் பேசுகிறது என்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த ஆண், சிறந்த பெண், சிறந்த குடும்பம் எப்படியிருக்க வேண்டும் என்பதை மரபு வழியிலான தமிழ்ச் சமுதாயத்தின் அறவழியில் நின்று விளக்கமாகப் பேசுகின்றது. அதன் பாத்திரப் படைப்புகளும் கருப்பின்னல்களும், சூழலும், உரையாடல்களும் இந்த அறநெறிக் கோட்பாட்டின் மூலமாக வெளிப்படுகின்றன.
 

    தமிழ் இலக்கியத்தின் நீண்ட வரலாற்றில், பெரும்பாலானவை அறம் பேசுபவையாகவே அமைந்துள்ளன. “அறம், பொருள், இன்பம், வீடடைதல் நூற்பயன்” என்று     இலக்கணம் பேசுகின்றது. ‘தன்னெஞ்சறிவது பொய்யற்க’ ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்’ என்று திருக்குறள் சமயம் சாராத அறத்தைக் கூறுகிறது.
 

    இவ்வாறு, நீதி நூற்கள் முதற்கொண்டு இன்றைய காலம் வரை நிறையவே அறக்கருத்துகள் இருக்கின்றன. தொடர்ந்து இவை காணப்படுகின்றன. ஆனால் இன்றைய இலக்கியங்களில் முக்கியமான வேறுபாடு என்னவென்றால் மரபு வழிபட்ட அறங்கள் விமரிசிக்கப் படுகின்றன. மறுபரிசீலனைகளுக்கு ஆளாகின்றன. எவ்வாறாயினும் இவை அவ்வக் காலத்தினுடைய தமிழ்ச் சமுதாயத்தின் அறநெறிக் கோட்பாடுகளை அளவிட உதவுகின்றன.
 

4.4.5 காலந்தோறும் மாறுபாடுகள்

    மனிதனின் வாழ்வியல் முறையிலும் சிந்தனை முறையிலும் ஏற்படுகின்ற மாற்றம் இலக்கியங்களிலும் வெளிப்படுகின்றது. காலம் மற்றும் இடச்சூழலுக்கு ஏற்ப இலக்கியங்களில் வடிவ அமைப்பு முறையிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன.
 

    சங்க காலத்தில் காதலும் வீரமும் வாழ்வியல் ஒழுக்கங்களாக இருந்தன. உருவும் திருவும் ஒத்த இருவர் கருத்தொருமித்துக் காதல் கொள்வது அறமாக இருந்தது. தலைவியின் காதல் தோழிக்குத் தெரிய வந்து, பின் செவிலித்தாய் மூலம் நற்றாய்க்குத் தெரியவந்து, நற்றாய் மூலம் தமையன், தந்தைக்குத் தெரிய வரும். அல்லாமல் தலைவி நேரிடையாகத் தன் காதலை வீட்டாரிடம் சொல்வது மரபில்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இப்படியாகக் காதலைச் சொல்வது நடைமுறையில் இல்லை. இன்றைய சிறுகதை, நாவல், நாடக இலக்கியங்களிலும் காதல் வெளிப்படுவதில் இத்தகைய வரிசைகளைப் பார்ப்பது மிக அரிது.
 

    இதே போல், கற்பு என்பது மிகவும் முக்கியமான ஒரு கருத்தமைவு. இது, காலந்தோறும் மாறி வந்துள்ளது. ஒருத்திக்கு ஒருவன் என்பது புனிதமான ஒழுக்கமாகப் பெண்ணுக்கு வலியுறுத்திச் சொல்லப்பட்டது. இன்று, ‘கற்புநிலையென்று சொல்ல வந்தார். இரு கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்’ என்று பாரதி சொல்லும் நிலை வந்தது.
 

    அறநெறி அணுகுமுறை இலக்கியத்திலிருந்து வாழ்க்கையையும் வாழ்க்கையிலிருந்து     இலக்கியத்தையும்     அறவியல் கண்ணோட்டத்துடன் உய்த்துணர்ந்து விளக்கம் தருகிறது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 17:13:22(இந்திய நேரம்)