Primary tabs
ஒரு பொருளின் தனித்தன்மைகளை அல்லது சிறப்புகளை அறிவதற்கு, அதனை அதனோடு ஓரளவு ஒத்த இன்னொரு பொருளோடு ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது மனித இயல்பே. அதனடிப்படையில் அமைவதுதான் ஒப்பியல் அணுகுமுறை. ஒப்பிட்டுத் திறனாய்வதற்குத் தளமாக இருப்பன, ஒன்றற்கு மேற்பட்ட கலை, இலக்கியங்கள் மற்றும் அவற்றின் கருத்தமைவுகள் ஆகும். இவற்றுள் பொதுத் தன்மையும் (commonness) இருக்க வேண்டும்; வேறுபட்ட தன்மையும் (difference) இருக்க வேண்டும். இத்தகைய இலக்கியங்கள் மேல் ஒப்பீடு செய்வது, ஒன்றனைவிட இன்னொன்று சிறப்பானது, உயர்வானது என்று கண்டறியும் நோக்கத்தைக் கொண்டதல்ல. எதனை எடுபொருளாகக் கொண்டிருக்கிறோமோ, அதன் தனித்தன்மைகளை ஆராய்வதுதான் ஒப்பியலின் முக்கிய நோக்கமாகும். கம்பனை மில்ட்டனோடு ஒப்பிடுகிறோம் என்றால், மில்ட்டனின் குறைகளைச் சொல்வதோடு, கம்பனின் உயர்வுகளை மிகைபடச் சொல்வதோ அல்ல; மாறாகக் கம்பனின் திறனையும், தனித்தன்மைகளையும், கம்பனுடைய சூழ்நிலைகளையும் சொல்வதே நோக்கமாகும். மேலும், ஒத்த சமுதாய வரலாற்றுச் சூழல்களில் தோன்றுகிற இலக்கியங்கள் ஒத்த தன்மைகளைப் பெற்றிருக்கக் கூடும் என்பதும், அதே சமயத்தில் படைப்பாளியின் திறத்தினாலும், குறிப்பிட்ட சிறப்பியலான சில பண்பாட்டுச் சூழலினாலும் வித்தியாசப்பட்ட தன்மைகளைப் பெற்றிருக்கக் கூடும் என்பதும், ஒப்பியல் அணுகுமுறையின் அடிப்படைக் கருதுகோள்கள் ஆகும்.

