தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.1 ஆர். சூடாமணி

1.1 ஆர். சூடாமணி

    ஆர். சூடாமணி என்கிற பெண் படைப்பாளி 1954 முதல்
தமிழில் சிறுகதைகள் எழுதி வருகிறார். இவர், 10.01.1931 - இல்
சென்னையில் பிறந்தவர். பள்ளிக்கல்வி நிறைவு செய்யவில்லை
என்றாலும் தன் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்
அளவு ஆங்கில மொழித்திறம் உடையவர். ஆங்கிலத்தில்
நேரடியாகச் சிறுகதை படைத்தலும் உண்டு. இவருடைய
சிறுகதைப் படைப்புகள் தினமணி கதிர், தினமலர் தீபாவளி மலர்,
அமுதசுரபி தீபாவளி மலர், கல்கி, புதிய பார்வை, கணையாழி,
சௌராஷ்டிர மணி, மஞ்சரி, சதங்கை, இந்தியா டுடே ஆகிய
இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்துள்ளன.

1.1.1 படைப்புகள்

    ஆர். சூடாமணி மொத்தம் 600 சிறுகதைகளுக்கு மேல்
படைத்துள்ளார். இவர் படைத்த சிறுகதைகள் 19 தொகுப்புகளாக
வெளிவந்துள்ளன. இவர் சிறுகதைத் தொகுப்புகளில் சிலவற்றைக்
கீழே காணலாம்.

    அந்த நேரம் (1969), இழந்த மகுடம் (1973), ஓர் இந்தியன்
இறக்கிறான் (1975), ஆர். சூடாமணியின் சிறுகதைகள் (1978),
உலகத்தினிடம் என்ன பயம் (1978), சுவரொட்டி (1985), அம்மா
(1987), கிணறு (1991), அஸ்தமனக் கோலங்கள் (1993), காவலை
மீறி (1996), ஆர். சூடாமணியின் கதைகள் (2001). இறுதியாகக்
குறிப்பிட்டுள்ள இந்த நூலுக்குத் தமிழ்வளர்ச்சித் துறை சிறந்த
சிறுகதைப் படைப்புக்கான பரிசு வழங்கியுள்ளது.

     சிறுகதை, புதினம், குறும்புதினம், நாடகம் ஆகிய நான்கு
துறைகளிலும் இதுவரை 37 நூல்கள் படைத்துள்ளார். இவருடைய
சில சிறுகதைகள் ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில்
மொழி பெயர்ப்பாகி வெளிவந்துள்ளன. சில கதைகளை இவரே
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். 1962 முதல் மொழி
பெயர்ப்பாக அன்றி நேரடியாகவும் ஆங்கிலத்தில் சிறுகதை
படைத்து வருகிறார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 18:15:02(இந்திய நேரம்)