தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.4 சிறுகதைக் கலை

5.4 சிறுகதைக் கலை

    கதைப் பொருள், நிகழ்வுப் பின்னல், கதை சொல்லும் முறை,
கதை மாந்தர் படைப்பு,     படைப்பாளர் பயன்படுத்தும்
உத்தி முறை, மொழி நடை ஆகியவற்றில் அமையும் ஒழுங்கும்,
அழகும் சிறுகதைக் கலையில் அடங்கும். சிறுகதைப் பொருளை
எடுத்துரைக்கும் உத்தி, கதை மாந்தர் படைப்பு, மொழி நடை
அனைத்திலும் பிரபஞ்சனுக்குரிய தனித்தன்மை எவை எவை
என்பது பற்றிக் காண்போமா?

5.4.1 கதைப் பொருள்

    வெவ்வேறான     மனிதர்களின்     பண்பு விளக்கம்,
தனித் தன்மைகள்,மன இயல்புகள், பிரபஞ்சனின் பெரும்பாலான
கதைகளுக்குக் கருப்பொருள்கள் ஆகின்றன. குழந்தைகள்,
சிறுவர்களின் இயல்பும் இவற்றுள் அடங்கும். பெண்ணுரிமை
புறக்கணிக்கப்படுவது இவர் படைப்புகளில் எதிரொலிக்கக்
காணலாம்.     உரிமை மறுக்கப்பட்டு     அடக்கப்படும்
பெண்களையும், உரிமை மறுப்பின் பொழுது அதனை எதிர்க்கும்
பெண்களையும் இவர் படைப்புகளில் காணலாம்.

    சிறுவர்களின் இயல்பான மகிழ்ச்சிக்கு இன்றைய சமுதாயச்
சூழ்நிலை     தடை     விதிப்பதைப்     பல சிறுகதைகள்
எடுத்துக் காட்டுகின்றன. ஏமாற்றும் மனிதர்களிடமும் இரக்கம்
காட்டும் அப்பாவித்தனம், குற்றம் செய்தவன் ஒப்புக் கொண்ட
போது அவனை மன்னிக்க நினைத்து எப்படியாவது காப்பாற்ற
விரும்பும் தீவிரம் ஆகிய உணர்வுகளும் இவருடைய
கதைகளுக்குக் கருப்பொருள்களாகின்றன.

     நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் பிரெஞ்சுத்
துரைமார்கள் இந்நாட்டு மக்களைத் தங்கள் அடிமைகளாக
நினைத்து அலட்சியப் படுத்திய நிலையினால் புண்பட்ட
உள்ளங்களையும் சில சிறுகதைகளில் எடுத்துக் காட்டுகிறார்
பிரபஞ்சன். இவ்வகைச் சிறுகதைகள் வரலாற்றுச் சிறுகதை
என்று சொல்லக் கூடிய வகையில் முந்தைய சமுதாய நிலையை
நுணுக்கமாகப் படம் பிடித்துக் காட்டுபவை என்று
பாராட்டலாம்.     வாழ்க்கையில்     நடக்கும்     சாதாரண
நிகழ்ச்சிகளைக் கூட நகைச்சுவையை முதன்மையாகக் கொண்டு
சுவைபடச் சொல்லும் சிறுகதைகளும் உண்டு. காலையில்
பால் வாங்கப் போனபோது ஒரு முதியவர் வரிசையில்
பின்னால் தள்ளப்பட்டதையும் அது அவர்க்கு ஏற்படுத்திய
அனுபவங்களையும் சொல்லும் கதை 'எலி, எருமை வராத
மழை' (பூக்களை மிதிப்பவர்கள்).

    வரிசையாக, சென்ற இடங்களில் எல்லாம் தன் செருப்புகள்
மட்டும் தொலைந்து போகும் அவலம் ஒரு பதினாறு வயது
இளைஞனுக்கு ஏற்படுத்திய அனுபவங்களை வாசகர்க்கு
நகைச்சுவை தோன்றச் சொல்லும் சிறுகதை 'இராமலிங்க சாமி,
ஜீ.வி.ஐயர் மற்றும் நான்'

    வெறும் காலுடன் வீட்டுக்குப் புறப்பட்டேன்.... புத்தம்
புதிய பேண்ட்டும், சட்டையும் அணிந்து கொண்டு, செருப்பு
இல்லாமல் நடக்கிற துரதிருஷ்டம் அவமானமாக இருந்தது.

    வகுப்பறை... இளைஞன் ஆசிரியரிடம் கேட்கும் கேள்வி
இது: "இராமன் செருப்பை பரதன் வாங்கிக் கொண்டதால்
அவர் காட்டில் செருப்பில்லாமல் தான் நடந்தாரா?". செருப்பு
பற்றிய சிந்தனைகளுடனே அவன் இருப்பதைக் கற்பனை
செய்து கதை தொடர்கிறது. இனி, பிரபஞ்சன் படைக்கும்
கதைமாந்தர்கள் பற்றிக் காண்போமா?

5.4.2 பாத்திரப் படைப்பு

    இவ்வுலகில் நாம் காணும் மனிதர்களைத் தான் தன்
சிறுகதைப் படைப்புகளில் கதை மாந்தர்களாகப் படைத்துக்
காட்டுகிறார் பிரபஞ்சன். அவர்களுடைய உணர்வுகளை
முழுமையான நிலையில் உணர்த்தும்போது, குழந்தைகளையும்
சிறுவர்களையும் அவர்கள் நோக்கில் புரிந்து கொள்ள
வேண்டும் என்ற ஆசிரியரின் கருத்தை இச்சிறுகதைகள்
உணர்த்துகின்றன.

    ஆணாதிக்கத்துக்கு     அடிமையாகின்ற     பெண்கள்,
ஆதிக்கத்தை எதிர்த்து உரிமைக்குப் போராடும் பெண்கள்,
என்ற இருவகைப் பெண்களையும் இவர் படைப்புகளில்
காணலாம். பெண்கள் குடும்பம் என்ற அமைப்பிற்காகத் தங்கள்
உரிமைகளையும் விருப்பங்களையும் புறக்கணிக்கின்றனர். அதே
சமயம் குடும்ப நலனிற்காகவே தாங்கள் செய்ய வேண்டியுள்ளது
என்பதைப் புரிந்தவர்களாக இருக்கின்றனர். தேசப் பற்று
மிகுந்தவர்கள், தியாகத்துக்கு விலை பேசுவது கூடாது என்ற
உயர்ந்த மனப்பான்மையில் ஓய்வூதியமும் பெற மறுத்த சில
முதியவர்கள், பொருளே பெரிதென்று எண்ணும் சில
சிறியவர்கள் என்று இரு சாராரையும் படைத்துக் காட்டுகிறார்
பிரபஞ்சன். சாமியார் வேடத்தில் மக்களை ஏமாற்றும்
வஞ்சகர்கள், வலியோர் எளியோரை அடக்க நினைக்கும்
இயல்பினை நிரூபித்துக் காட்டும் சாதாரண மனிதர்கள்
ஆகியோரையும் கதை மாந்தர்களாகப் படைத்துக் காட்டுகிறார்.

    இருபது முப்பது     ஆண்டுகளுக்கு     முன்னால்
வாழ்ந்தவர்களைப் படம் பிடித்துக் காட்டும் கலையை மிக
நேர்த்தியாகச் செய்திருக்கிறார் பிரபஞ்சன். வகைவகையான
மனிதர்களை இனம் பிரித்துக் காட்டும் எளிமையான நிலை
இவரிடம் இயல்பாய் அமைந்துள்ளது.

    பள்ளிக் கூடத்தில் பிள்ளைகளை அடிக்கும் ஆசிரியர்கள்
நமக்கு அறிமுகமாகிறார்கள். தட்சணை, (நேற்று மனிதர்கள்)

    மூர்க்கத்தனம் நிறைந்த மாமா-சண்டைச் சேவல் பொறப்பு-
கால்ல கத்தி     கட்டிக்கிட்டுத் திரியுற ஜாதி என்று
வர்ணிக்கப்படுபவர் 'நேற்று மனிதர்கள்' என்ற கதையின்
நாயகன். தன் மனைவி தன்னைத் தவிர யாருடனும் சிரித்துப்
பேசிவிடக் கூடாது என்ற கொள்கை உடையவர். அவ்வாறு
பேசியதற்காக இறுதிவரை அவளை அவளுடைய சாவுக்குக்
கூடச் செல்லாமல் தன் வாழ்க்கையிலிருந்தே விலக்கியவர்.தன்
ஒரே மகள் உறவுக்காரப் பையனைத் திருமணம் செய்து
கொள்ள நினைத்ததற்காக அவள் மீது மண்ணெண்ணை ஊற்றி
எரித்தவர். அவள் விரும்பிய அந்தப் பையனைச் சூளைச்
செங்கல்லோடு    எரியச் செய்தவர். அன்பு,     பாசம்,
ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல், உறவின் பெருமை
அனைத்தையும் புறக்கணித்து வாழும் ஒரு வறட்டுப் பிடிவாத
வாழ்க்கையால் யாருக்கு என்ன பயன் என்று கேட்காமல்
கேட்கும் கதை நேற்று மனிதர்கள். இப்பிடிவாத வாழ்க்கை
நேற்று வேண்டுமானால் பெருமைக்கும் பாராட்டுக்கும் உரிய
தாய் இருந்திருக்கலாம். ஆனால் இன்று அப்படியில்லை
என்பதைச் சொல்லாமல் சொல்லும் கதை இது.

5.4.3 உத்திகள்

    எதையும் தவறென்று சொல்லாமல் இரண்டு கோணத்திலும்
பார்க்கின்ற பார்வையை இவருடைய சிறுகதைகளில் காணலாம்.
விதிவிலக்காக,     பெண்ணுரிமை     புறக்கணிக்கப்படுதல்,
குழந்தைகள்     உணர்வுகளை அலட்சியப் படுத்துதல்
இரண்டையுமே தவறென்று எடுத்துக் காட்டுவது இவருடைய
பெரும்பாலான கதைகளின் இயல்பாக உள்ளது.

    அப்பாவி மனிதர்கள் ஏமாந்து போவதை இவர்
சிறுகதைகள் நுணுக்கமாக     வெளிப்படுத்தும். ஏமாந்து
போகின்றவர்கள் மனிதாபிமானம் கருதுவதாலேயே மேலும்
ஏமாந்து போகிறார்கள் என்பதை உணர்த்தும் ஒரு
சிறுகதைதான் அப்பாவு கணக்கில் 35 ரூபாய்.

    நேற்று மனிதர்கள் சிறுகதைத் தொகுதி தமிழ்நாடு
அரசின் முதற்பரிசு பெற்ற சிறுகதைத் தொகுப்பு என்று
பார்த்தோமல்லவா? இத்தொகுதியை "மனிதனை நேசிக்கும்
எழுத்துக்கள். ஒவ்வொரு வரியும் மனித நேயம் பாடும்
கீதங்கள் ஆகும்" என்று தினத்தந்தி பாராட்டி உள்ளது.

    புதுமைப்பித்தனின் துன்பக்கேணி என்ற சிறுகதைத்
தலைப்பை நினைவுபடுத்துவது போல் தன்னுடைய ஒரு
சிறுகதைக்கு இன்பக்கேணி என்று பெயர் சூட்டியிருப்பதைக்
காணலாம். மிகச் சுருக்கமான     தலைப்புகளைத் தம்
சிறுகதைகளுக்கு இடுவதும் இவருடைய உத்தி எனலாம்.

    திரை, விளை, குழந்தைகள், கண், பாபா, உரை, ஆகஸ்ட்
15, பாப்பா, பாதுகை, அகி, ருசி, அடி, மூவர் ஆகியவற்றை
இதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். இனி பிரபஞ்சனின்
மொழி நடையைப் பற்றிப் பார்ப்போம்.

5.4.4 மொழி நடை

    எளிய மொழி நடை இவர்க்கே உரிய சிறப்பாகும்.
நுணுக்கமான உணர்வுகளைச் சுவைபடச் சொல்லும் திறனை
இவருடைய நடையில் காண முடிகிறது. இவர் கையாளும் புதிய
உவமைகளில் ஆசிரியருடய வகை வகையான கற்பனைகளைக்
காணலாம்.

    வாக்கியத்துக்கு முற்றுப் புள்ளி மாதிரி ஒவ்வொரு தரம் பேசி
முடித்த போதும் சிரிப்போடுதான் முடிப்பாள் அவள்.(நேற்று
மனிதர்கள்
)

    ஒரு குழந்தை மல்லாக்கப் படுத்துக் காலை விரித்துக்
கிடப்பது போல் கோப்பு மிக யதார்த்தமாகப் படுத்துக்
கிடந்தது. (அவலம், பூக்களை மிதிப்பவர்கள்)

    வெங்கட் தன் வெற்றிலைப் பெட்டியைத் திறந்தார். அது
ஆட்டம் முடிந்த நாடகக் கொட்டகை மாதிரி இருந்தது.
(பூக்களை மிதிப்பவர்கள்)

    நகரத் தயாராக இருக்கும் பஸ்ஸைப் பிடிக்கப் போகிறவர்
போல்     அவர் அவசரமாக நடந்தார். (பூக்களை
மிதிப்பவர்கள்
) சொல் அலங்காரம் இவர் சிறுகதைகளில்
இயல்பாய் அமைந்திருப்பதைக் காணலாம்.

    அலாரம் வைத்துக் கொண்டு அவர் படுப்பதில்லை. அவரே
ஒரு அலாரம் (எலி, எருமை வராத மழை)

    கன்றுக்குட்டி மாதிரி நின்றிருந்தது சைக்கிள் (நேற்று
மனிதர்கள்
)

    வாழ்க்கைத் தத்துவங்கள் ஆங்காங்கே சொல்வதும்
பிரபஞ்சனுக்கு இயல்பாக அமைகின்றது.

    இறந்த காலம் மீள்வதில்லை. நிகழ்காலம் உறைப்பது
இல்லை. எதிர்காலம் புரிவது இல்லை. (இருட்டின் வாசல்)

வரலாற்று உண்மைகளும், நிகழ்கால     உண்மைகளும்
பிரபஞ்சன் எழுத்தில் எப்படி எதிரொலிக்கின்றன பாருங்கள்:

    பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் தமிழகம் இருந்த
போது... "மூர்! எனக்கு நாலு இந்தியர்கள் வேலைக்கு
வேண்டும்".

"எதற்கு?"

    "எனக்கு வரும் வருமானத்தை எண்ணி மூட்டையில்
கட்டுவதற்கு”.

    பிரெஞ்சு அதிகாரி மேலும் சொல்கிறான். "நர்மதை
நதியிலிருந்து குமரி முனைவரைக்கும் என் மூச்சுக் காற்றே,
அதிகாரம்! என் காலுக்குக் கீழே என் சப்பாத்துக்கள் (ஷு ),
அந்தச் சப்பாத்துக்களுக்கும் கீழே பார் தலைகள் தென்படும்.
ஆம். இந்தியச் சிறு மன்னர்கள், நவாபுகள், ஜமின்தார்களின்
தலைகள்... இந்த மக்கள் நம் வாளுக்குத் தக்க கைப்பிடிகள்"
இந்தியர்களைப் பற்றிய கணிப்பு எப்படி இருந்தது என்பது
தெரிகிறதல்லவா?

    வேறுபட்ட சிந்தனைகளைச் சுவையாகச் சொல்லும்
திறன் பிரபஞ்சனிடம் அமைந்திருப்பதைப் பல இடங்களில்
காண முடிகிறது. எடுத்துக்காட்டாக ஒன்றைப் பார்ப்போம்:

    ரயில் புறப்படும் நேரம். பத்தரைதான். என்றாலும் அவன்
10 மணிக்கே ரயிலடிக்கு வந்து விட்டிருந்தான். கடைசி
நேரத்துப் பரபரப்பு, ஓடத் தொடங்கும் வண்டியை ஓடிவந்து
பிடித்தல் எல்லாம் அவன் இயல்புக்கு ஒத்து வருவது இல்லை
என்பதுதான் விஷயம். ரயில் நின்று கொண்டிருக்க-அதை
ரசித்தபடி,கெத்தாக நடந்து வந்து, சாவகாசமாக ஒட்டப்பட்ட
பட்டியலைப் பார்த்துக் கொண்டு பெட்டிக்குள் பிரவேசிப்பது
ஒரு வகை கௌரவம் என்பது அவன் எண்ணமாக இருந்தது.
வண்டி என்பது வெறும் வாகனம். அவனைச் சுமந்து கொண்டு
அவன் போக வேண்டிய இடம் கொண்டு சேர்ப்பதான கருவி...
அது மனிதர்க்கு மேம்படுவதாவது (மதிக்கும் நிலம், இருட்டின்
வாசல்
).

    எள்ளல் சுவை தரும் அங்கத நடையும் இவருடைய
மொழி நடைக்குச் சிறப்புச் சேர்க்கிறது எனலாம்.

    ‘நல்ல வெயில். சுட்டுப் பொசுக்கும் வெயிலை நல்ல
வெயில் என்று ஜனங்கள் வழங்குவது விசித்திரம்தான். நல்ல
பாம்பு என்பது போல் இதுவும்..' (தியாகராஜன், பூக்களை
மிதிப்பவர்கள்
)

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 18:25:30(இந்திய நேரம்)