தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.3 சிறுகதை நோக்கும் போக்கும்

6.3 சிறுகதை நோக்கும் போக்கும்

     பெண்கள் உழைப்பு சுரண்டப்படுதல், அவர்களுடைய
உரிமைகளும், உணர்வுகளும் ஒடுக்கப்படுதல் இவற்றின்
அடிப்படையில் எழும் பெண்களின் எண்ணங்களையும்,
உணர்வுகளையும்     வெளிப்படுத்துதலை     அம்பையின்
நோக்கமாகக் காண்கிறோம்.

    ஆண் ஆதிக்கத்திற்கும், பெண்கள் அந்த ஆதிக்கத்தின் கீழ்
அடங்குவதற்கும் உரிய காரணங்களை உளவியல் ரீதியில்
புனர் சிறுகதையில் அம்பை எடுத்துக் காட்டுகின்றார்
(வீட்டின் மூலையில் ஒரு சமையலறை). இச்சமுதாயத்தில்
பிறந்த     ஆண்களும்,     பெண்களும், ஆண்களாகவும்,
பெண்களாகவும் உருவாக்கப்படுகின்றனர். இச்சமுதாயமே
அவர்களின் நடத்தைக்குக் காரணமாகிறது என்பதைச் சுட்டிக்
காட்டுவது அவர் நோக்கமாகிறது.'இவ்வுலகில் பிறந்தவர்கள்
இயல்பாக இருப்பதே அவர்கள் சுதந்திரம்’. அவர்களை
அவ்வாறு இருக்க விடுவதும் சுதந்திரம் என்பதைப் பல
சிறுகதைகளில் வெளிப்படுத்துகிறார் அம்பை.

6.3.1 முறிக்கப்படும் சிறகுகள்

     உயிர் வாழ உணவு தேவைதான். அந்த உணவைத்
தயாரிக்க ஒரு சமையலறையும் தேவைதான். ஆனால் அந்தத
தேவை பெண்கள் மீது செலுத்தும் அழுத்தமும் ஆதிக்கமும்
சொல்லி முடியாது. சமையலறை பெண்கள் மீது செய்யும்
ஆதிக்கம் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை என்ற
சிறுகதையில் விவரிக்கப்படுகிறது.

     ஒளியற்ற,     ஜன்னல் அற்ற    குறுகிய அந்தச்
சமையலறையிலிருந்து கடலில் வசிக்கும் ஆக்டபஸ் ஜந்துவின்
எண்கால் போல், ஆதிக்கக் கரங்கள் நீண்டு வளைத்துப்
போட்டன. கால்கள் இறுக்க இறுக்கக் கட்டுண்டு கிடந்தனர்
ஆனந்தமாக. அவை இடுப்பை இறுக்கினால் ஒட்டியாணம்
என்றும், காலைச் சுற்றினால் கொலுசு என்றும், தலையில்
பட்டால் கிரீடம் என்றும் நினைத்துக் கொண்டனர் பெண்கள்.
நாலா புறமும் கம்பிகள் எழும்பிய உலகில் புகுந்து கொண்டு
அதை ராஜ்யம் என்று நினைத்து அரசோச்சினர். இன்று
மட்டன் புலவு, நாளை பூரி மசாலா என்று பூமியைத் திருப்பிப்
போடும் முடிவுகள் எடுத்தனர்.' பேடி அதிகாரம்' என்று
இதனைக் கடுமையாகச் சாடுகிறார் அம்பை.

    "திருமணமான புதிதில் முப்பது பேர் வீட்டில் அஞ்சு
கிலோ ஆட்டா மாவு பிசைவேன். 300 சப்பாத்தி இடுவேன்"
என்று என்று கூறுகிறளள் ஜீ.ஜி. முதல் தடவை இரண்டு
உள்ளங்கையும் இரத்தம் கட்டி நீலமாய் இருந்தது.
தோள்பட்டையில் குத்திக்குத்தி வலித்தது.அவளைப் பார்த்துப்
பப்பாஜி சொன்னார். "சபாஷ் நீ நல்ல உழைப்பாளி" என்று
(வீட்டின் மூலையில் ஒரு சமையலறை). சந்தேகப்படும்
கணவன்     மனைவியை     எவ்வளவு     துன்பத்துக்கு
உள்ளாக்குகிறான் என்பதைச்    சொல்லும்     சிறுகதை
'வல்லூறுகள்' (சிறகுகள் முறியும்).

    ‘உடன்கட்டை ஏறுவது ஒரே மனிதனிடம் அவளுக்கு
உள்ள விசுவாசத்தின் உச்சக் கட்ட நிரூபணம்’ என்று
வாமனன் சிறுகதை குறிப்பிடுகிறது.

     சமையலறைச் சிந்தனைகளே பெண்ணின் மனத்தை
ஆக்ரமித்திருப்பதால்     அவளால்     உலக     அறிவும்
விழிப்புணர்வும் பெற இயலாமல் போய் விட்டதை
இக்கதையில் இடம் பெறும் மீனாட்சி வாயிலாக அம்பை
குறிப்பிடுகிறாள்

    நாலு நாட்களுக்கு ஒருமுறை ஸ்டவ் திரியை இழுத்து
விட வேண்டும். மண்ணெண்ணெய் கிடைக்கும் போது வாங்க
வேண்டும். மழைக் காலத்தில் கவலை. அரிசி, பருப்பில்
பூச்சி, மாங்காய்க் காலத்தில் ஊறுகாய் ; வெயில் காலத்தில்
அப்பளம், பழங்கள் வரும் காலத்தை ஒட்டி சர்பத், ஜூஸ்,
ஜாம், பழைய சமையலறை முற்றத்துக்கு இரண்டு வாரங்களுக்கு
ஒருமுறை சுண்ணாம்பு, மாதவிடாய் தள்ளிப் போயிற்றோ
என்று கவலை ; தள்ளிப் போகாவிட்டால் கவலை என்று
பெண்களின் கவலைகளையெல்லாம் எடுத்துரைக்கிறார்.
இவை இல்லாமல் இருந்திருந்தால் 'புதுக்கண்டங்களைக் கண்டு
பிடித்திருக்கலாம், காவியம்எழுதியிருக்கலாம், குகைகளுக்குள்
ஓவியம் தீட்டியிருக்கலாம்’ என்று பெண்ணின் உழைப்பும்
குறுகிய வட்டத்திலான உணர்வுகளும் அவளை இதுவே
உலகம் என்று எண்ணச் செய்து விட்டதையும், அவள்
விரும்பினால்தான் அதிலிருந்து அவள் விடுபட முடியும்
என்பதையும் உணர்த்துகிறது வீட்டின் மூலையில் ஒரு
சமையலறை
என்னும் சிறுகதை.

6.3.2 பெண்நிலை நோக்கு

    சாயா திருமணமானவள். கணவன் பாஸ்கரன் சாயாவின்
உரிமைகளுக்கும்     உணர்வுகளுக்கும்     சிறிதும்
மதிப்பளிக்காதவன். தன்னுடைய ஒரு சொத்தாக மட்டுமே
மனைவியை நினைப்பவன். எழுதாத சமூகச் சட்டங்களினால்
இச்சமூகத்தில் ஏற்பட்டிருக்கின்ற கட்டுப்பாடுகளும், ஆதிக்க
வேகமும் சாயாவுக்குக் கோபத்தை உண்டாக்கினாலும்
அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.

    அலுவலகம் செல்லும் கணவனுக்குத் தினமும்
அக்கறையாகச் சமைத்து உணவு கொடுத்தனுப்புகிறாள்.
அன்போடு அவள் செய்தவற்றை அவன் பாராட்ட வேண்டும்
என்ற எதிர்பார்ப்பும் ஏக்கமும் மேலிட வாய்விட்டே கேட்டு
விடுகிறாள்.

    "நீ நன்னாத்தான் சமைக்கிறே. சாமானை வீணடிச்சுடறே.
இருந்தாலும் ஒட்டல்ல சாப்பிடறதை விட இது லாபம்தான்"
(சிறகுகள் முறியும்) என்று கூறுகிறான். இதுபோன்ற
தருணங்களில் தன்னுள் எழும் ஆத்திரத்தைச் சாயா எப்படிச்
சமாளிக்கிறாள் தெரியுமா?

    நாட்டை ஆளும் ராணியாக, ஆணையிடும் அரசியாகத்
தன்னைக் கற்பனை செய்து கொள்வாள். "இஸ்திரி போட்ட
பேண்ட் உடுத்தினால் என்ன?" என்று கேட்டால்,
"வண்ணானுக்கு எத்தனை கொடுக்கிறது?" என்று புலம்பும்
கணவன்.

    மனதுக்குள்ளே இடும் சட்டம் :    கருமிகளுக்குக்
கல்யாணமே ஆகக்கூடாது. ஆவலுடன் மனைவியின் கண்கள்
ஒரு பொருளின் மீது படியும் போது, கெட்டியாக
மூடிக் கொள்ளும் கணவனின் பர்ஸ் பறிமுதல் செய்யப்பட
வேண்டும் என்றொரு சட்டம். அடக்குமுறை அதிகமாக
அதிகமாகச் சுதந்திர தாகமும் அதிகரிக்கிறது. சாயாவுக்கும்
அப்படித்தான். அவள் தங்கையைப் பெண் பார்க்க வருவதால்
சாயா வரவேண்டுமென்று அவள்     தாய்     கடிதம்
எழுதியிருந்தாள். பாஸ்கரனோ "ஆயிரம் பேர் பெண் பார்க்க
வருவா, ஒவ்வொரு தடவையும் நீ போக முடியுமா?"என்கிறான்.
அந்தக்கணம் ஓர் இந்துப் பெண்ணுக்குத் தோன்றக் கூடாதது
என்று காலம் காலமாய் எல்லாரும் சொல்லும் ஓர் எண்ணம்
அவளுக்கும் தோன்றியது. அவனை விட்டுப் போய்விட
வேண்டும் என்று அவள் நினைத்தாள். பத்து வருஷங்களாய்
இழுக்க இழுக்க நீளும் ரப்பர் துண்டாய் வளைந்து கொடுத்த
மனம் அன்று கல்லென்று உறைந்தது. மனம் நினைத்த
மறுவினாடியே எதிர்காலத் திட்டங்கள் நீண்டு அவள்
தீர்மானமே செய்து விட்டாள். அவள் சிறகுகளை விரித்து
அவள் பறக்க வேண்டும். விசும்பின் நிச்சலனமான
அமைதியில் அவள் சிறகுகள் அசைய வேண்டும். அதுதான்
வாழ்க்கை என்று நினைக்கிறாள். (சிறகுகள் முறியும்)

• பெண்ணின் சாதனை

    ஆணாதிக்கத்தில்     உரிமைகள் ஒடுக்கப்படலாம்.
உணர்வுகள் அடக்கப் படலாம். ஆனால் பெண் நினைத்தால்
சாதிக்கலாம் என்பதை அம்பை எவ்வளவு சுவையாகச்
சொல்கிறார் என்று பாருங்கள்:

    எந்த வாகனமும் ஓட்ட அவளுக்கு உரிமை
மறுக்கப்பட்டது. அவளுக்கு ஒரு வாகனம் உரிமை
உடையதாயிற்று. சக்கரமில்லா, சுற்றுப்புறச்     சூழலை
மாசுபடுத்தாத வாகனம், ஓசையின்றி, மோதலின்றி, ரத்தமின்றி
இயங்கும் வாகனம். மின்னியக்க வாகனம். அதில்
ஆரோகணித்துத் தகவல் வீதியில் பல காத தூரம் பயணம்
போனாள். தகவல் வலைக் கூட்டத்தாரின் வீட்டுப்
பக்கங்களை நோட்டம் விட்டாள். பல வீட்டின் கதவுகளைத்
தட்டித் திறந்தாள். தனக்கென்று ஒரு வீட்டை அதில்
அமைத்துக் கொண்டாள். தற்போது தன் வாகனம் என்று
குறிப்பிட்டு     மின்னியக்க     மூஞ்சூறின்     மேல்
ஆரோகணித்தவளாய்த் தன்னை வரைந்து கொண்டாள்.
அரக்கர்களை அழிக்கவும்     தேவர்களைச் சந்திக்கவும்
மின்னியக்கத் தருணம் பார்க்க ஆரம்பித்தாள். இவ்வாறு
அக்கதை (காட்டில் ஒரு மான்) செல்கிறது.

     தந்தைக்கும் மகனுக்கும் இடையே அமையும் தோழமை
உணர்வையும் நெருக்கத்தையும் பல படைப்பாளிகள்
வெளிப்படுத்தியுள்ளனர். அதேபோலத் தாய்க்கும் மகளுக்கும்
அமைந்த தோழமை உணர்வையும் ஒருவரையொருவர் புரிந்து
கொள்ளும் நிலையினையும் வெளிப்படுத்துகிறது அம்பையின்
'பிரசுரிக்கப்படாத கைப்பிரதி' (காட்டில் ஒரு மான்).

6.3.3 உளவியல் நோக்கு

    'தனிமையெனும் இருட்டு' உளவியல்     ரீதியாகப்
படைக்கப்பட்ட சிறுகதை (சிறகுகள் முறியும்). கணவன்
வெளியூரில் வேலை நிமித்தம் தங்குவதாகவும், தனிமையை
விரட்ட கணவன் அருகில் இருப்பது போலவும் அவன் தன்
விருப்பப்படி நடந்து கொள்பவனாகவும் கற்பனை செய்தே
காலத்தை இனிமையாக ஓட்டிக் கொண்டிருக்கிறாள்.
நாளடைவில் அதுவே பழக்கமாகிவிடவே இனியதான அந்த
உலகத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறாள்.
உண்மையில் கணவனிடமிருந்து மறுநாள் வருவதாகக் கடிதம்
வந்த போது அவளால் அதை ரசிக்க முடியவில்லை.
இதுநாள்வரை தான் அனுபவித்த சுதந்திரமான கற்பனை
இன்பத்தைக் கைவிட முடியாமல் தூக்க மாத்திரைகளை
விழுங்கி விடுவதாகக் கதை முடிவடைகிறது.

    சமுதாயத்தில் ஆண்கள், பெண்கள் இவர்களின்
நடத்தைக்கு, சமுதாயம் அவர்களுக்குக் கற்பித்துத் தந்ததே
என்று உளவியல் ரீதியான காரணத்தை ஒரு சிறுகதையில்
எடுத்துக் காட்டுகிறார் (வீட்டின் மூலையில் ஒரு சமையலறை).

    ‘லோகிதாஸ்’ என்ற ஆண் உருவாக்கப்பட்டான். சபரி
என்ற பெண்ணும் உருவாக்கப்பட்டாள்.

    ஆண் சம்பாதிப்பவன். சம்பாதிப்பவனே ஆண். நீ
சம்பாதிப்பவன். நீ வேலைக்குச் செல்பவன். நீ உரிமைகளை
உடையவன். நீ அழக் கூடாதவன். நீ உறுதியானவன். நீ
தீர்மானங்களைச் செய்பவன். நீ ஆண் - இப்படி
உருவாக்கப்படுபவன்     ஆண் என்று     ஆணாதிக்கச்
சமுதாயத்தை எடுத்துக் காட்டுகிறார். (வீட்டின் மூலையில்
ஒரு சமையலறை
)

    ஹிஸ்டரி எடு ! அப்புறமா அடுப்பு தானே ஊதணும்?
சமைக்கக் கத்துக்க,வாய்க்கு ருசியா சமைக்காத பொண்ணை
யார் கட்டுவாங்க? ஃபெமினா பாரு, ரெசிபி கத்தரிச்சு வை.
நீ வீட்டைப் பேணுபவள், நீ அழகு சாதனங்களுக்கானவள்.
நீ அடக்கமானவள். நீ தீர்மானங்களைக் கேட்டுக்
கொள்பவள். நீ தேவியானவள். நீ உபயோகமானவள். நீ
சுகத்தைத் தருபவள். நீ தேவைக்காக மட்டுமே வேலை
செய்பவள்.நீ பாதுகாக்கப்பட வேண்டியவள். நீ பெண்.
இவ்வாறு சபரி என்ற பெண்ணை உருவாக்கியுள்ளதாக
எடுத்துக் காட்டுகிறார்.

    ஆண் மேம்படுத்தப்பட்டும், பெண் அடக்கப்பட்டும்
உருவாக்கப் படுவதால் இச்சமுதாயச் சூழல் அதனை
வளர்க்கவே வழி செய்வதை அம்பை எடுத்துக் காட்டுகிறார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 18:27:36(இந்திய நேரம்)