தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இராஜம் கிருஷ்ணன்

2.1 இராஜம் கிருஷ்ணன்

        

    தற்பொழுது வாழ்ந்து வரும் மூத்த பெண் எழுத்தாளரான
இராஜம் கிருஷ்ணன் பிறந்த தேதி 05.11.1925. பெற்றோர்கள்
யஞ்ஞ நாராணன், மீனாட்சி. கணவர் மின்வாரியப்
பொறியாளரான முத்து கிருஷ்ணன். 1946-லிருந்து பல்வேறு
பத்திரிகைகளில் எழுதி வருகிறார். கணவரின் பணிமாற்றம்
காரணமாக ஊட்டி, குந்தா, கோவா போன்ற இடங்களுக்குச்
சென்றிருந்தமை இவர் நாவல் உருவாக்கத்திற்கு உறுதுணையாக
இருந்தது.

2.1.1 இராஜம் கிருஷ்ணனின் படைப்புகள்

    1948-இல் சுதந்திர ஜோதி என்ற நாவல் மூலம்
எழுத்துலகில் புகுந்த இராஜம் கிருஷ்ணன் நாற்பதுக்கும்
மேற்பட்ட நாவல்களைப் படைத்துள்ளார். முதல் சிறுகதையான
வெள்ளி டம்ளர் சாவி அவர்களின் ‘வெள்ளி மணி’யில்
வெளிவந்தது. அலைகடலில், பவித்ரா, அல்லி போன்ற குறு
நாவல்கள், டாக்டர் ரங்காச்சாரி வாழ்க்கை வரலாறு,
பயணநூலான அன்னை பூமி, மாஸ்கோ போன்ற
நூல்களையும் எழுதியுள்ளார். கதையின் கதை, கானாற்றின்
செல்வங்கள்
போன்ற 25 வானொலி நாடகங்களையும்
படைத்துள்ளார். ஊசியும் உணர்வும் என்ற உயரியகதை உலக
மொழிகளின் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது.
அதிலிருந்து அவ்வப்போது சில ஆண்டு மலர்களிலும் மற்றும்
சிறப்பிதழ்களிலும் சிறுகதைகள் எழுதினார். இருந்தாலும்,
“நாவல்துறையில்     அவர்     பெற்றிருக்கும்     புகழ்தான்
முக்கியமானது” என்று மணிக்கொடி எழுத்தாளரும் சிறந்த
திறனாய்வாளருமான     ‘சிட்டி’     பெ.கோ. சுந்தரராஜன்
குறிப்பிட்டுள்ளார். இராஜம் கிருஷ்ணன் சிறுகதை, வாழ்க்கை
வரலாறு, வானொலிக் கட்டுரைகள், வானொலி நாடகங்கள்,
மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் போன்ற பல துறைகளில்
சாதனை முத்திரை பதித்திருந்தாலும் நாவல் துறையில் மட்டுமே
அதிகக் கவனம் செலுத்தியுள்ளார்.

    மிகச்சிறந்த நாவலாசிரியரான இவர் இருமுறை இலக்கியச்
சிந்தனைப் பரிசு பெற்றுள்ளார். இருமுறை சோவியத் நாடு
சென்றுள்ளார்.

பெண்குரல்
-
கலைமகள் பரிசு (1953)
மலர்கள்
-
விகடன் பரிசு (1958)
வேருக்கு நீர்
-
சாகித்ய அகாதெமி விருது (1973)
வளைக்கரம்
-
சோவியத் நாடு நேரு பரிசு (1975)
கரிப்பு மணிகள்
-
இலக்கியச் சிந்தனை விருது (1980)
சேற்றில் மனிதர்கள்
-
இலக்கியச் சிந்தனை விருது (1983)
சுழலில் மிதக்கும்
தீபங்கள்
-
தமிழ் வளர்ச்சிக் கழகப்
பரிசு (1983)

    இராஜம் கிருஷ்ணன் பெற்ற பரிசுகளே அவருடைய
இலக்கியத் தரத்தை உயர்த்திக் காட்டும் துலாக் கோலாகத்
(தராசாக) திகழ்கின்றன.

2.1.2 தமிழ் இலக்கிய வரலாற்றில் பெறுமிடம்

    இராஜம் கிருஷ்ணனின் சிறுகதை, வாழ்க்கை வரலாறு,
வானொலி நாடகங்கள், மொழிபெயர்ப்பு சிறுவர் இலக்கியம்
போன்ற பல துறைகளில் தன் பங்களிப்பைச் செய்திருந்தாலும்
சிறந்த சமூக நாவலாசிரியர் என்ற முறையில் தமிழ் இலக்கிய
வரலாற்றில் இடம் பெறுகிறார்.

    நாவலுக்கான மையப்பொருளை முன்பே திட்டமிட்டு உரிய
இடத்தை அடைந்து, களஆய்வு செய்து, சமகாலப்
பிரச்சினைகளை     எழுதுவதே இராஜம் கிருஷ்ணனின்
தனித்தன்மையாகும்.

    புதிய     கருக்களுக்கு     உருகொடுப்பதும், பழைய
பொருளுக்குப் புதிய பின்புலம் தந்து தெளிவுபடுத்துவதும்
அவரது சிறப்புத் தன்மைகள்; மானிடவியலையும் மனவியலையும்
(Anthropology and Psychology) எழுதுவதில் வல்லவர்;
பழங்குடியினர், பல மாநில மக்களின் வாழ்வு, நாட்டு வரலாறு,
அரசியல் ஆகிய பின்னணியில் நாவல் படைப்பதில் வல்லவர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 18:50:48(இந்திய நேரம்)