தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சமூகச் சீர்திருத்தக் கருத்துகள்

2.4 சமூகச் சீர்திருத்தக் கருத்துகள்

    இராஜம் கிருஷ்ணனின் பார்வை, சமூகவியல் பார்வை
என்றும் அவரைப் பொறுத்தவரை நாவல் என்பது சமுதாய
மாற்றத்தை உருவாக்கும் சாதனம் என்பதும், நம்பிக்கை ஒளியை
ஊட்டிப் படிப்போரைச் செயலாக்கத்தில் செலுத்துவதே அவர்
தம்     நோக்கம் என்பதும் வெளிப்படை வாழ்வின்
போக்குகளையும், சமூகச் சார்புகளையும் கணித்து நிகழ்காலப்
பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திப்பதும் ஆக்கப்பூர்வமான
முடிவுகளை ஆராய்வதுமே தனது இலக்கிய நோக்கமென்றும்
இராஜம் கிருஷ்ணனே குறிப்பிட்டுள்ளார். மனிதாபிமானத்தை
எழுத்தில் வடித்து நடப்பியலை நாவலாகத் தரும் சமுதாய
நாவலாசிரியர் இராஜம் கிருஷ்ணன்.

2.4.1 சிறுவர் சிறுமியர் மீதான வன்முறை

    கூட்டுக்     குஞ்சுகள் புதினத்தில்
குழந்தைகளைத் தீப்பெட்டித் தொழிலில்
முடக்கித் தீக்குச்சிகளை அந்தப்
பெட்டியில்     அடைப்பதைப் போன்று
குழந்தைகளை அடைப்பதை விஜி
எதிர்க்கிறாள். காலை 7.00 மணி முதல்
இரவு 8.00 மணி வரை குழந்தைகளை
வேலை வாங்கும் முதலாளித்துவ
சமுதாயத்தில், அவர்களுக்குத் தகுந்த
ஊதியமும், அடிப்படைச் சலுகைகளும்
தரப்படாத நிலையில் உடலும், மனமும்
நொறுங்கும் அவலம் குழந்தைகளின் மீதான
வன்முறையாக கருத வைக்கிறது.

    “குழந்தைகளுக்கு எதிர்காலமில்லாமல் செய்யக் கூடிய
தொழிலும், உற்பத்திப் பெருக்கமும் உண்மையில் மகத்தான
தேசிய நஷ்டம் என்று கருதுகிறேன்” என்று விஜி, குழந்தை
தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டப்படுவதைத் தட்டிக்
கேட்கிறாள். கல்வி கற்று ஓடியாடி விளையாட வேண்டிய
இளஞ்சிறார்கள்,     வறுமையின்     கொடுமையால்
கூலித்தொழிலாளர்களாவது கண்டிக்கப்படுகிறது.

2.4.2 பெண்களின் அடிமைநிலை

    

    தமிழ் நாட்டுப் பெண்ணினம் விலங்கு பூட்டப்பட்டிருக்கும்
அவல நிலையை இராஜம் கிருஷ்ணன் சுட்டுகிறார். இன்றைய
சமூக அமைப்பில் பெண்களுக்கு வீடும் விலங்கு,
வெளியுலகமும் விலங்கு என்று கூறுகிறார்.

    “பெண் மெல்லியள்; வீடே அவளுக்குரிய பாதுகாப்பான
இடம் என்ற காப்பை; கண்ணுக்குத் தெரியாத விலங்கைப்
பூட்டி விடுகிறார்கள். அந்த விலங்கை உடைத் தெறியத்
துணிவின்றி வெளியே செல்லும் போது அதன் சுமையில்
அஞ்சிச் சாகிறாள். அவள், அதை உடைத்துக் கொண்டு
வெளியே, வண்ண வண்ணப் படை திரண்டாற்போல்
வருபவர்கேளா பல மாயக்கவர்ச்சிக்கு அடிமையாகிறார்கள்.
புரட்சிகரமாக இருக்க வேண்டிய அம்சங்களில் மாற மறுத்துக்
காலத்துக்கும் நடைமுறைக்கும் ஒவ்வாத பழைய கருத்துகளுக்கு
மதிப்பு கொடுக்கும் குடும்பம் எதுவாயினும் அது விலங்காகவே
அமையும்.” இவ்வாறு விலங்குகள் என்ற நாவலில் பெண்களின்
அடிமை நிலையைக் குறிப்பிட்டுள்ளார்.

2.4.3 சமுதாய மேம்பாடு

    “குடும்பத்தை நல்லபடியாகக் கொண்டு வந்தாலே
சமுதாயம் சிறப்படையும்” என்று வேருக்கு நீர் நாவலில்
குறிப்பிட்டிருப்பதிலிருந்து     இவரின்     சமுதாயப் பற்று
வெளிப்படுகிறது.

    விடுதலை இந்தியாவில் பல்வேறு கட்சிகள் இயக்கங்கள்
விளைத்த அரசியல் குழப்பங்களைக் காட்டி, “அன்பும்
தியாகமுமே நாட்டு வாழ்வாம் மரத்தின் வேருக்கு நீர் என்றும்,
ஜனநாயகம் சிறக்க தனிமனிதன் செம்மை நெறியில் ஒழுகுதல்
வேண்டும் என்றும்” வேருக்கு நீர் நாவலில் குறிப்பிட்டுள்ளார்.
இதே கருத்தையும், மாற்றத்தையும் முள்ளும் மலர்ந்தது
நாவலிலும் காணலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 18:51:32(இந்திய நேரம்)