Primary tabs
2.5 கதைமாந்தர்
நாவலில் காண்பதெல்லாம் கதை மாந்தர் தொடர்புடைய
நிகழ்ச்சிகளேயாகும். எனவே கதை மாந்தரை, தலைமை மாந்தர்,
துணை மாந்தர் என்று இருவகையாகப் பிரிக்கலாம்.
இபபகுதியில் இராஜம் கிருஷ்ணன் படைப்புகளில் சிறந்து
விளங்கும் பெண் பாத்திரங்கள் குறித்த செய்திகள்
இடம்பெறுகிள்றன.
2.5.1 பெண் பாத்திரங்கள்
இராஜம் கிருஷ்ணன் நாவல்களில் வரும் பெண்
பாத்திரங்கள் கூட்டுக் குடும்பம் என்னும் கூட்டுக்குள் உரிமை
இழந்து தனிமையின் கொடுமையைத் தீவிரமாக உணர்கின்றனர்.
இக்காலப் பெண்களுக்கு எதிலுமே தேர்ந்தெடுத்துக் கொள்ளும்
உரிமை மறுக்கப்படுகிறது. குறிப்பாகத் திருமணத்தில்
வாழ்க்கைத் துணைவரைத் தெரிவு செய்யும் உரிமை
தரப்படுவதில்லை. இந்த நிலையில் சூழ்நிலைகளுக்குக்
கட்டுப்பட்டு யாரோ ஒருவனை மணக்க வேண்டியுள்ளது.
ஓசைகள் அடங்கிய பிறகு நாவலில், மீனா, லோகனை
விரும்பினாலும் சாரங்கனையே கணவனாக ஏற்றுக்
கொள்கிறாள். ருக்கு (மானுடத்தின் மகரந்தம் என்ற நாவலில்)
தன் தாயின் வற்புறுத்தலுக்காகவே கோவர்த்தனுக்கு இரண்டாம்
தாரமாகச் சம்மதிக்கிறாள்.
ஓசைகள் அடங்கிய பிறகு என்னும் நாவலில் வரும்
மீனா, ஒரு பெண்ணுக்குப் பொருளாதார சுதந்திரம்
அவசியமென்றும் அந்த அடிப்படையில் மேலும் உழைத்துப்
பொருள் ஈட்டத் தாய்மைப்பேறு அடைவது தடையாக
இருக்குமென்றும் உணர்ந்த பிறகு, மீனா சிலகாலம் தாய்மைப்
பேற்றைத் தள்ளிப்போட எண்ணுகிறாள். ஆனால், தலைமை
மாந்தரான மீனாவின் கணவன் சாரங்கனோ ஆண் ஆதிக்க
உணர்வோடு அவளை நடத்துகிறான்.
“ஒரு பெண்ணுக்கு ஒரு குழந்தையைப் பெத்துக்கிறதுக்கும்
பெறாமல் தள்ளிப் போடறதுக்கும் உரிமை இல்லையா?” என்று
மீனா குமுறுகிறாள். அடிப்படைச் சுதந்திரம் பறிக்கப்படுமாயின்,
அந்த இல்லறம் தனக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு
வருகிறாள். தன்னை அடக்கி ஒடுக்கிய ஆண் ஆதிக்கத்தின்
கர்வத்தை அழிக்க அவளுள் இருந்த புதிய பெண்மை
வெளிக்கிளம்புகிறது.
இராஜம் கிருஷ்ணனின் தலைமை மாந்தரைப் போலவே
துணை மாந்தரும் சிந்தனைத் தெளிவுடையவர்களாக உள்ளனர்.
வீடு என்ற புதினத்தின் கதைத்தலைவி தேவிக்கு, துணைமாந்தர்
ரஞ்சனி துணைபுரிகிறாள். ரஞ்சனியின் தெளிந்த சிந்தனையால்,
தேவி தன் கணவனின் ஆதிக்கப் பிடியிலிருந்து விலகி
வெளிவரும் துணிவைப் பெறுகிறாள். தன்னைக் காத்துக்
கொள்ளத் தையல் பணி செய்து குடும்ப நிலையை
முன்னேற்றுகிறாள். காலமெல்லாம் ஆணின் பொருளாதாரச்
சார்பாக வாழும் பெண் அதை மீறி வெளிவரப் பொருளாதாரம்
காரணமாகிறது. ஒரு பெண் பிறரைச் சார்ந்து வாழாமல், தன்
காலில் தற்சார்புடன் வாழ்வதற்கு, தொழில் செய்து உழைத்து
வாழ வழிகாட்டப்படுகிறது. அறிவுக் கூர்மையுடைய துணை
மாந்தர் தலைமை மாந்தருக்கு உறுதுணையாக இருக்கிறாள்.
இவ்வாறு இராஜம் கிருஷ்ணனின் அனைத்து நாவல்களிலும்
இடம்பெறும் தலைமை மாந்தரும், துணைமாந்தரும்
வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொண்டு
அவற்றிலிருந்து வெளிவர முயற்சி செய்கின்றனர்.