தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாவல்களில் கையாளும் உத்திகள்

2.6 நாவல்களில் கையாளும் உத்திகள்

    இராஜம் கிருஷ்ணன் நாவல்களில் கையாளும் நடை,
வருணனை, சொல்லாட்சி, உவமை ஆகியவற்றில் ஒரு சில
உதாரணங்களை இங்கு காணலாம்.

• எழுத்து நடை

    இராஜம் கிருஷ்ணனின் நாவல் படைப்புத்திறனில்
அவருடைய எழுத்துநடை முக்கியப் பங்கு வகிக்கிறது.
அவருடைய நடை உயிரோட்டமான நடை. வாசகரைக் கவரும்
வகையில் சிறப்பாக எடுத்துரைக்கும் அவரின் போக்கு மனித
மனத்தைக் கவரவல்லது. அவரின் பிறமொழிச் சொற்களின்
கலப்பின்றி எழுதும் தமிழ்நடை, வாசகரின்     நெஞ்சையும்
நினைவையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் வாய்ந்ததாக உள்ளது.
மண்ணின் மணமே நாவலின் பின்னணியாக நின்று படிப்போரை
ஈர்க்கிறது.

• வர்ணனை

    நாவலின் வர்ணனை, படிப்பவரை வியக்கவைக்கும்
தன்மையுடையதாகவும், நிகழ்ச்சியைப் படம் பிடிப்பதாகவும்
இருக்க வேண்டும்.

    “பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர் கோவாவைக்
    கைப்பற்றிக் கொண்ட புதிதில் காப்பாக எழுப்பிக்
    கொண்ட கோட்டை அது... மாண்டலின் முகத்துவாரத்தில்
    வந்து நிற்கும் கப்பல் பிரயாணிகளின் தொற்று நோய்த்
    தங்கு மனையாக வெகுநாட்களுக்கு அக்கோட்டை
    பயன்பட்டு வந்தது. பிறகு பாழடைந்த கோட்டையாக,
    தொற்று நோய்க் கிருமிகளின் உறைவிடங்களாக விளங்கிய
    அந்தக் கட்டிடத்துக்கு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து
    நாற்பத்தாறாம் ஆண்டு யோகம் அடிக்கலாயிற்று. அந்த
    அறைகளில் ஆடு மாடுகளைப் போல மக்கள் வந்து
    நெருங்கினார்கள். ஆணை ஒலிக்கும் சிப்பாய்களின்
    அடியோசைகளும் துப்பாக்கிச் சரிசெய்யும் அரவங்களும்
    அடைபட்டுக் கிடக்கும் கைதிகளின் பலவேறு குரல்களும்,
    கடலும், ஆறும் கைகோத்துப் பணியும் அந்தக்
    கோட்டைக்குள் கேட்கின்றன”

    இவ்வாறு இராஜம் கிருஷ்ணன் வளைக்கரம் என்ற
நாவலில் தகவல்களைத் தரும் முறை வியக்கத்தக்கது.
மேற்கண்ட பின்னணி வர்ணனை நீல்மோகோஸ் கோட்டையின்
பழைய வரலாற்றை எடுத்துச் சொல்வது மட்டுமின்றி
அக்கோட்டை வாசலில் பல்வேறு அரவங்களைக் காதால்
கேட்டபடி நாமே நின்று கொண்டிருப்பது போன்ற
உணர்வையும் எழுப்புகிறது.

• சொல்லாட்சி

    இராஜம் கிருஷ்ணன் தம் புதினங்களில் கையாளும்
சொல்லாட்சிகள் சிறப்புடையன. எடுத்துக்காட்டாக,

    “கீழ்மலை மாதலிங்கேசுவரர் கோயிலில் அழல் மிதிக்கும்
    திருவிழா நிறைவேறி பூமி திருப்பி புதுவிதை விதைக்கும்
    விழா நடைபெற்று பயிரும் வளர்வதாயிற்று. காய்ச்சலில்
    கிடந்து புது இரத்தம் ஊறிய உடல்போல் வறண்ட
    மரங்களில் எல்லாம் புதுத்தளிர்கள் தோன்றின” என்று
    குறிஞ்சித்தேன் நாவலில் வாழ்க்கையின் வேகத்தைச்
    சுட்டிக் காட்டப் பயன்படும் தொகுப்புரையில், இனிமையான
    எளிமையான சொல்லாட்சி கொண்ட தமிழ்நடையைக் காண
    முடிகிறது. இத்தகைய சொல்லாட்சி இராஜம் கிருஷ்ணனின்
    நாவல்களில் அமைந்துள்ளது.

• உவமை

    இராஜம் கிருஷ்ணன் கையாண்டுள்ள உவமைக்கு ஒரு
எடுத்துக்காட்டு “வெளிச்சம் பாய் விரித்தாற் போல சாலையில்
படிகிறது” என்று வேருக்குநீர் நாவலில் புதிய உவமையைக்
கையாண்டுள்ளார். சுற்றுச் சூழலை உவமை மூலம் விளக்கும்
முறை சிறப்புடையதாக உள்ளது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 18:51:43(இந்திய நேரம்)