தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாவலில் கையாளும் உத்திகள்

3.5 நாவலில் கையாளும் உத்திகள்

    ஆனந்தாயி நாவலில் கையாளும் எழுத்து நடை,
வர்ணனை, சொல்லாட்சி உவமை, உருவகம், பழமொழி
ஆகியவற்றில் ஒரு சில உதாரணங்களை இங்குக்
காணலாம்.

3.5.1 எழுத்து நடையும் வர்ணனையும்

    நாவல் இலக்கிய உலகில் சிவகாமியின் நடை
தனித்தன்மை வாய்ந்தது. ஏனெனில் அவரது நாவல்கள்
கிராமத்து மக்களின் வாழ்க்கையையே பிரதிபலிக்கிறது
அவ்வகையில் இந்நாவலில் திருச்சி மாவட்டம் பெரம்பலூரைச்
சுற்றியுள்ள கிராம மக்களின் பேச்சு வழக்குச் சொற்களைக்
காண முடிகிறது. கிராமத்து மக்களின் வாழ்க்கை முறை
பேச்சுவழக்கு எல்லாம் கதை நடையில் எளிமையையும்
அழகையும் கூட்டுகின்றது.

• வர்ணனை

    இந்நாவலில் இடம்பெறும் இயற்கை வருணனை, காட்சியை
நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. இலட்சுமி தன்
மாமனுடன் மலங்காட்டிற்குச் சென்று வந்த காட்சியைப்
பின்வருமாறு வர்ணிக்கிறார் ஆசிரியர்..

    

    “வானத்தில் பந்தம் புடிச்ச மாதிரிக்கி, நெலா
எரிஞ்சிக்கிட்டிருக்கு. நெருப்புப் பத்தப் பத்தப் பானையிலே
பால் பொங்கி வழியுமே அது மாதிரி மலங்காட்டுல பால் மாதிரி
வெளிச்சம். சாமக்கதிருக்கும் தெனக்கதிருக்கும் காவல்
இருந்தோம். திருட்டுப்பசங்க பக்கத்துக்காட்ல தெனையறுத்துக்
கிட்டிருந்தானுஹ. சத்தம் போட்டாக்கி பொம்பளைன்னு
கூடபாக்காத மென்னியத் திருகிடுவானுஹ”. என்று மலங்காட்டு
வர்ணனை அமைந்துள்ளது.

    பத்தாம் வகுப்பு படிக்கும் தனத்தின் நடவடிக்கையில்
ஏற்பட்ட தடுமாற்றத்தைக் கவனித்த அவள்தாய் ஆனந்தாயி,

    “ஓடும்பாம்பை மிதிக்கும் வயதாயிற்றே. தனம் என்ன
பண்ணுவாள்? இந்தத் தலைமுறையின் நியாயங்களை முந்தைய
தலைமுறையல்லவோ முடிவு செய்கிறது. ஆனந்தாயி தனத்தைக்
கண்டித்து கண்காணிப்பில் வைக்க ஆரம்பித்தாள் என்றாலும்
வேர்களைச் செல்லரிக்கும் போது இலைகள் என்னாகும்? அந்த
வீட்டில் அம்மாவின் அஸ்திவாரமே ஆடிக் கொண்டிருந்தது.”

    இலட்சுமியின் அழகை மிளகாய்க்கார தண்டபாணி
பெரியண்ணனிடம் பின்வருமாறு வர்ணிக்கிறான்.

    “பால்ல குங்குமப்பூ கலந்தா எப்படியிருக்கும்.
    ரோஜாப்பூ கலரு நல்ல ஒயரம், முன்னயும்
    பின்னயும் பார்த்தா பார்த்துக்கிட்டே இருக்கலாம்.”

வசதியுள்ள ஆண்களுக்கு, மனைவி குடும்பம் இருந்தாலும்,
இலட்சுமி போன்ற பொதுமகளிரைப் பற்றிக் கூறி
அவர்களுடைய மனதைக் கலைத்துப் பொருளை இழப்பதற்குக்
காரணமாகத் தண்டபாணியைப் போன்றவர்கள் சமுதாயத்தில்
உள்ளனர்.

    பெரியண்ணன் செய்யும் கொடுமைகளைத் தாங்கமுடியாத
லட்சுமி, பூங்காவனத்திடம் சொல்லி அழும் பொழுது
ஆனந்தாயி அங்கு வருகிறாள். விவரத்தை அறிந்த அவள்
பின்வருமாறு கூறுகிறாள்.

        

    “எலும்பு துண்டை கண்டா நாய் உடுமா. தொரத்திக்
கிட்டுத்தான் அலையும். அவர், நீ எங்க போனாலும்
உடப்போறதில்லை. வீட்ல வேலையைச் செஞ்சுக்கிட்டு
செவனேன்னுகெட. கொஞ்ச நாள் ஆனா எல்லாம்
சரியாப்போவும். செத்து கித்துப் போயிடாத. அந்தாளுக்குப்
பயித்தியமே புடிச்சுடும்” இவ்வாறு கணவனை நாயாகவும்
இலட்சுமியை     எலும்புத்     துண்டாகவும்     ஆனந்தாயி
உருவாக்குகிறார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 18:53:45(இந்திய நேரம்)