Primary tabs
4.3 கதைமாந்தர்
இந்த நாவலில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொன்றுமே
எடுத்துக் கொள்ளப்பட்ட கதை நிகழ்ச்சிக்குத்
தேவையானவற்றையே செய்துவிட்டு இடை இடையே நின்று
போய் விடுகின்றன. கதையை நகர்த்திச் செல்லும் நோக்குடன்
அவைகள் கொண்டு வரப்படவில்லை. இயல்பான
நடைமுறைகளை வெளிக்கொண்டு வருவதற்கே அவைகள்
இடம் பெற்றுள்ளன. எனவே, இந்த நாவலில் இடம் பெறும்
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சில மாந்தர்களைப் பற்றி
மட்டும் இங்குப் பார்ப்போம்.
4.3.1 ஞானமுத்துப் பாதிரியார்
தந்தை இறந்துபோக அம்மாவின் இரண்டாம் தாரமாக
வந்த சிறிய தந்தையின் அன்புடனும், அம்மாவின் அன்புடனும்
இரயில்வே துறையில் பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்குப்
பிறகு அவ்வேலையை விட்டுவிட்டு குருமடம் செல்கிறார்.
குருபட்டம் பெற்று ஏழை எளியவர்களுக்காகவும் திக்கற்ற
மனிதர்களுக்காகவும், நியாயத்திற்காகவும் பாடுபடுகிறார். இவர்
சமூக சீர்திருத்தத்தை ஏற்படுத்த மக்களைத் தன் வழிப்படுத்த
நினைக்கிறார். ஆனால் கடைசியில் உயர்சாதி மக்களுக்கு
ஒத்துப் போகவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
பாதிரியார் நல்ல பண்பாளர். அன்பு குணம் படைத்தவர்.
எந்த ஒரு செயலையும் தன்னம்பிக்கையோடு செயல்படுபவர்.
பின் தள்ளப்பட்ட மனிதர் வாழும் கிராமங்களில் கோயிலைக்
கட்டி அதனால் பல இன்னல்களை அனுபவித்து, கிராமங்களில்
பசியோடும் பட்டினியோடும் இரவுகளைக் கழித்து,
சாதிவெறியர்களால், அவமதிப்பிற்குள்ளாகுகிறார். மேலும்
கல்வியறிவில்லாத சிறுவர்களுக்குக் கல்விச் செல்வம் கிடைக்கவழி
செய்கிறார். நன்னியனுக்கும் அவன் குடும்பத்தாருக்கும் உதவி
செய்கிறார். இளையவனுக்கு விடுதலை வாங்கித்தருகிறார். பெரிய
கலட்டியில் மாதா கோயில் கட்டுகிறார். துன்பப்படுகிறவர்களின்
துன்பத்தைப் போக்கி அவர்களுக்கு வழிகாட்டத் தன்னை
அர்ப்பணிக்கிறார். மிகுந்த சிரமப்பட்டு மக்களுக்கு வேலை
வாங்கித் தருகிறார். தன்னம்பிக்கையோடு செயல்படும் இவர்,
இறுதியில் வயிற்றில் பசி என்ற நெருப்பை கட்டிக்
கொண்டிருக்கும் இளையவனிடம் தோற்றுப் போகிறார். அவர்
தோற்றுப் போகுமுன் கண்டவையெல்லாம் வெறும்
கானலாகிறது. பசி, பட்டினி, பஞ்சம் என்பவைகளை அவரால்
தனித்து நின்று வென்றுவிட இயலவில்லை. இது இவரது
தன்னம்பிக்கையையும், நற்பண்பினையும் வெளிப்படுத்தும்
விதமாக உள்ளது.
4.3.2 பிறர்
நன்னியன், தம்பன், பூக்கண்டர், தம்பாப்பிள்ளை,
வெள்ளச்சியம்மாள், நெஞ்சுச்சுப்பன், சந்தியாபிள்ளை ஆகிய
பிற பாத்திரங்களின் பண்பு நலன்களையும் பார்க்கலாம்.
• நன்னியன்
நன்னியன், நல்லமுறையில் தம்பாப்பிள்ளை வீட்டில்
வேலை பார்த்து வருகிறான். இவனுக்கு மூத்தவன், இளையவன்,
சின்னி என்று மூன்று பிள்ளைகள். இவன் உழைப்பில்
சிறந்தவன். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவன் மகள்
சின்னி, தம்பா பிள்ளையின் தங்கை வீட்டில் வேலை
செய்கிறாள். சின்னியின் கற்புக்குக் களங்கம் ஏற்பட்டதினால்
தம்பாப்பிள்ளை தங்கையின் வீட்டிலிருந்த சின்னியை அழைத்து
வருகிறான் நன்னியன். இதனால் தம்பாப்பிள்ளைக்கும்
இவனுக்கும் மோதல் ஏற்பட, விதானையான் இவனை
அடிக்கிறான். இதைப் பார்த்த இளையவனும் மூத்தவனும்
அதிர்ச்சி அடைகின்றனர். ஆத்திரத்தால் மூத்தவன்
விதானையானைக் கொலை செய்கிறான். மூவரும் சிறைக்குச்
செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவன் வாழ்க்கை
மண்வெட்டியுடனும் வயல்களுடனும் இணைந்தது.
• தம்பன்
இவன் சின்ன கலட்டி மக்களுக்கு அடைக்கலம் தந்து
அம்மக்களுக்கு உதவி செய்கிறான். நன்னியன் குடும்பத்துக்கு
நண்பனான இவன், பெரிய சவட்டியில் மாதாகோயில் கட்டுவதில்
பெரும்பங்கை எடுத்துக் கொள்கிறான். கோயிலில்
பொறுப்பேற்கிறான். பூக்கண்டருக்கும் இவனுக்கும் நெருங்கிய
பழக்கம் இருந்து வருகிறது. நன்னியன் மகன் இளையவனுக்கும்
மகள் சின்னிக்கும் தனித்தனியே திருமணம் நடத்தி
வைக்கிறான். இவன் நல்ல குணம் படைத்தவன். இனம்
பிரிக்காது ஒன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணம்
கொண்டவன். இவ்வாறு, பல்வேறு வகையில் நல்ல
செயல்களையே செய்கிறான்.
• பூக்கண்டர்
உயர்சாதியைச் சேர்ந்த வறுமைப்பட்ட விவசாயியான இவர்
கலட்டி மக்களுக்கு இருக்க இடம் கொடுக்கிறார். நன்னியன்
மகள் சின்னியின் திருமணத்தில் பெரும்பங்கை எடுத்துக்
கொள்கிறார். இவரிடம் சாதிய உணர்வுகளைவிட வர்க்க
உணர்வுகளே மேலோங்கி நிற்கிறது. அவ்வப்போது பொதுவான
மனித நீதிகளை மனம் திறந்து சொல்வார். தனியான
போக்குடைய இவர் கலட்டி மக்களிடம் நற்பெயரைப்
பெறுகிறார். தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும்
கிறித்தவர்களாக மாறிய பின்பு இவரும் கிறித்தவராகிறார்.
மனிதாபிமானியாக வரும் இவர் அடிக்கடி தம்பனிடம் பல
யோசனைகளைச் சொல்வதோடு உயர்சாதிகளிடையே கெட்ட
பெயரையும் சம்பாதிக்கிறார்.
• இளையவன்
நாவலின் தொடக்கத்தில் இளையவனாக வரும்
இளையவன், கிறித்தவனாக மாறுகிறான்; எந்தக் குற்றமும்
செய்யாமல் சிறைக்குப் போகிறான்; கதையில் ஒரு திருப்பத்தை
ஏற்படுத்தும் பாத்திரமாக வரும் இவன் நாட்டில் உள்ள
கோடிக்கணக்கான மக்களையும், பாதிரிகளையும் சிந்திக்க
வைக்கிறான். கதை முடிவுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின்
கொடுமைக்கும் தன்னை வெண்மைபடுத்திக் கொள்ளும்
பாதிரிகளுக்கும் ஒரு சவாலாக அமைகிறது இப்பாத்திரம்.
• சந்தியாப் பிள்ளை உபதேசியார்
கலட்டி மக்களுக்கு வேதம் கற்றுக் கொடுக்கவரும் இவர்
வெளியில் சாதிவேறுபாடு பார்க்காதவர் போல் நடிப்பார்.
வேதம் சொல்லிக் கொடுக்கும் இவர் தாழ்ந்த சாதி வீடுகளில்
தண்ணீர் குடிப்பது கிடையாது. தாழ்த்தப்பட்ட சின்னியின்
தாவணியை உயர்சாதி நயனாத்திகள் இழுத்தபோது எங்கே
கோயில் கட்டுவது நின்றுவிடுமோ என நினைத்தாரே தவிர
அந்தச் சம்பவத்துக்காக எந்த ஒரு வெளிப்பாடும் அவரிடம்
தெரியவில்லை.
இது போன்று இந்நாவலில் பல பாத்திரங்கள்
படைக்கப்பட்டுள்ளன. அவற்றால் மாறுபட்ட பாத்திரங்களைக்
கொண்ட மனிதர்களைக் காணமுடிகிறது.